MUST READ
பெற்றோரைப் பேணுவோம்
M.A. முஹம்மது அலீ
[ பெற்றோர்கள் இருவரையும் ஒருசேர வைத்து உணவு கொடுத்தால் என்ன? இருவருக்கும் சேர்த்து சமைப்பது கஷ்டமா? பொருள் நஷ்டமாகிவிடுமா என்ன?!
நாளை இவர்களை இவர்களுடைய பிள்ளைகள் சோறு ஒருவீட்டிலும் குழம்பு ஒரு வீட்டிலும் போட்டு கொடுமைப் படுத்தினால் என்ன செய்வார்கள்?
‘எங்களுக்கே தட்டுப்பாடு, இதிலே பெற்றோர்களை எங்கே கவனிப்பது?’ என்று கேட்பவர்களின் காதில் ஒருசெய்தியைப் போடவேண்டியுள்ளது. ஏழெட்டுக் குழந்தைகளுக்கு, தாய், தந்தை இருவருமாகச் சேர்ந்து சோறூட்ட முடிகிறதென்றால் அந்த ஏழெட்டுப்பேர் சேர்ந்து அந்த இருவருக்கும் சோறூட்ட முடியாதா என்ன!
இதிலே நகைப்பிற்குரிய செய்தி, உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு போட்டு பெற்றோரைக் கவனிக்காத சில ஆசாமிகள், அவர்களின் மரணத்திற்குப்பின் ‘ஃபாத்திஹா’ கொடுக்கிறோம் என்னும் பெயரில் பல்வேறு உணவுப்பொருட்களை முன்னால் வைத்து அமர்க்களப்படுத்துவார்கள்.
சிலர் திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு நன்கு உபகாரம் புரிவார்கள். ஆனால் மனைவியின் வருகைக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும். தலையணைமந்திரம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. உடலால் தளர்ச்சியடைந்துவிட்ட பெற்றோரை மனைவியின் சொல்கேட்டு மனத்தளவிலும் தளர்ச்சியடைய வைப்பவன் மனிதாபமுள்ள மகனாக இருக்க முடியாது.]
பெற்றோரைப் பேணுவோம்
ஒரு வீடு என்பது மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும் பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது.
பெற்றோர் அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது. ‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.’ சில இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் – தந்தை உறவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.
தாய்க்கு முதலிடம்: ‘
மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?’ இது நபித்தோழர் ஒருவரின் வினா. ‘தாய்’ என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ‘அடுத்து யார்?’ என மீண்டும் அவர் கேட்க, ‘தாய்’ என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக ‘அடுத்து யார்?’ என்று கேட்டபோதும் ‘தாய்’ என்றே பதில் வந்தது. ‘அடுத்து யார்?’ என நான்காம் முறையாக அவர் கேட்க ‘தந்தை’ என்று பதிலளித்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். (அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, – புகாரீ ஷரீஃப்.)
ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன? திருக்குர்ஆன் கூறுகிறது: ‘அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.’ (அல்குர்ஆன் 46:15).
தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காகஇறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!
குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம் அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: ‘ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை’. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!
தாயன்பு:
ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவள் நேரடியாக சுவனம் செல்வாள்’ என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம் ).
கண்ணியமான உறையாடல்:
தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக (திருக்குர்ஆன் 17:23). பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.
இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. ‘பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று’ என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். (முஸ்லிம்)
உணவளிப்பது:
நடைமுறை வாழ்வில் பெற்றோருக்கு உணவூட்டிப் பராமரிக்கும் விஷயத்தில்கூட கஞ்சத்தனம் செய்யப்படுகிறது. பெற்றோர் வசதியாக இருந்து பூர்வீகச்சொத்துகளில் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தால் உணவு, வசதி எல்லாவற்றிலும் அவர்களுக்கு சகல மரியாதையும் கிடைக்கிறது. இல்லையெனில் சாதாரண அளவுக்குக்கூட இருக்காது. நகை பணம் தந்தால் அம்மா அப்பா இல்லாவிட்டால் டப்பா. இது எந்த வகைக்குணமோ? அம்மா அப்பா உயிரோடிருக்கும்போதே ‘நாற்காலி உனக்கு, கட்டில் எனக்கு, பீரோ உனக்கு கிரைண்டர் எனக்கு’ என்று பொருட்களைப் பங்கு வைத்து, முடிவில் அப்பா உன்னிடம் அம்மா என்னிடம், அப்பாவுக்கு ஒரு வீட்டில் சாப்பாடு அம்மாவுக்கு இன்னொரு வீட்டில் சாப்பாடு என்று ஜடப்பொருட்களாகப் பெற்றோரைப் பங்கு பிரிக்கும் பண்பாட்டுச் சீர்குலைவை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.
பெற்றோர்கள் இருவரையும் ஒருசேர வைத்து உணவு கொடுத்தால் என்ன? இருவருக்கும் சேர்த்து சமைப்பது கஷ்டமா? பொருள் நஷ்டமாகிவிடுமா என்ன? நாளை இவர்களை இவர்களுடைய பிள்ளைகள் சோறு ஒருவீட்டிலும் குழம்பு ஒரு வீட்டிலும் போட்டு கொடுமைப் படுத்தினால் என்ன செய்வார்கள்? ‘எங்களுக்கே தட்டுப்பாடு, இதிலே பெற்றோர்களை எங்கே கவனிப்பது?’ என்று கேட்பவர்களின் காதில் ஒருசெய்தியைப் போடவேண்டியுள்ளது. ஏழெட்டுக் குழந்தைகளுக்கு, தாய், தந்தை இருவருமாகச் சேர்ந்து சோறூட்ட முடிகிறதென்றால் அந்த ஏழெட்டுப்பேர் சேர்ந்து அந்த இருவருக்கும் சோறூட்ட முடியாதா என்ன!
இதிலே நகைப்பிற்குரிய செய்தி, உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு போட்டு பெற்றோரைக் கவனிக்காத சில ஆசாமிகள், அவர்களின் மரணத்திற்குப்பின் ‘ஃபாத்திஹா’ கொடுக்கிறோம் என்னும் பெயரில் பல்வேறு உணவுப்பொருட்களை முன்னால் வைத்து அமர்க்களப்படுத்துவார்கள். சிலர் திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு நன்கு உபகாரம் புரிவார்கள். ஆனால் மனைவியின் வருகைக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும்.தலையணைமந்திரம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. உடலால் தளர்ச்சியடைந்துவிட்ட பெற்றோரை மனைவியின் சொல்கேட்டு மனத்தளவிலும் தளர்ச்சியடைய வைப்பவன் மனிதாபமுள்ள மகனாக இருக்க முடியாது.
சிந்தனைக்கு சில அறிவுரைகள்:
குழந்தைப் பருவத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் உபகாரம் புரிந்தால் முதுமைப் பருவத்தில் உங்களுடைய குழந்கைள் உங்களுக்கு உபகாரம் புரிவார்கள்.(அபூஹுரைரா ரளில்லாஹுஅன்ஹு (ஹாகிம்) இதை இப்படியும் புரட்டிப்போட்டு சொல்லலாம். தம்முடைய பெற்றோரை அவமதிக்கும் ஒவ்வொருவரும் அவர்தம் பிள்ளைகளால் பிற்காலத்தில் அவமதிக் கப்படுவது நிச்சயம்.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி: ‘ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்)
மனப்பதிவுக்கான இன்னொரு செய்தி: ‘
ஒரு நபித்தோழர் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அவைக்கு வந்து, நான் இஸ்லாத்திற்காக நாடுதுறந்து செல்லத்தங்களிடம் உறுதிமொழிஎடுத்திட வந்துள்ளேன்.என் தாய், இதற்கு அனுமதியளிக்காத நிலையில் அவரையழவைத்துவிட்டு இங்கே புறப்பட்டு வந்துள்ளேன்.’ எனக் கூறினார். உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்த வார்த்தை என்ன தெரியுமா? ‘உடனே இங்கிருந்து புறப்பட்டு அழுதுகொண்டிருக்கும் உனது தயைச்சிரிக்க வைத்துவிட்டு பிறகு வந்து என்னைப்பார்.'(அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹுஅன்ஹு-அபூதாவூது).
நம்மில்சிலர் பெற்றோரை அழவைத்துவிட்டு தொழுது அல்லாஹ்வை சந்தோஷப் படுத்திடலாம் என்கிற எண்ணத்தில் இருக்கலாம். அவர்களுக்கான நபிமொழி செய்தி இது: ‘அல்லாஹ்வின்; பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்தில் இருக்கிறது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் இருக்கிறது.’பொதுவாக திருக்குர்ஆன் எல்லா இடங்களிலும் தாயோடு இணைத்து தந்தைக்கும் பணிவிடை செய்வதையே வலியுறுத்துகிறது. திருக்குர்ஆன் தெளிவுரையின் சிறந்தவராக கருதப்படும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் ”மூன்று திருக்குர்ஆன் வசனங்கள் ஒன்றுடன் இன்னொன்று இணைத்து வந்துள்ளன. ஒன்றை விட்டு விட்டு மற்றொன்றை மட்டும் செய்தால் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.’ என்கிறார்கள்.
அது:
1.’அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்'(3:32) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு மட்டும் வழிப்பட்டு அவன் தூதருக்கு வழிப்படாவிட்டால் அவனை அல்லாஹ் ஏற்க மாட்டான். (இங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழிப்படுங்கள் என்பது அவர்கள் சொல்லுக்கு கட்டுப்படுங்கள் என்பதாகும்)
2. ”தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஜகாத்தையும் கொடுங்கள்.” (2:43)
என்கிறது திருக்குர்ஆன். வசதியுள்ள செல்வந்தன் ஜகாத் கொடுக்காமல் தொழுகையை மட்டும் தொழுதால் ஈடேற்றம் கிடைக்குமா?
3. ”எனக்கும் (அதாவது அல்லாஹ்வுக்கும்) உன்னுடைய தாய் தந்தையர்க்கும் நன்றி செலுத்தி வருவாயாக.'(31:14) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தாவிட்டால், அதையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்குகிறார்கள்.
அல்லாஹ்வின் அருள்மறை தெரிவிக்கிறது: ”
அந்த இறைவணைத்தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவரோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்றுக் கூட கூறவேண்டாம். மேலும் அவர்களைக் கடிந்து பேசி விரட்டவும் வேண்டாம். ஆவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக: மேலும், ‘என் இறைவனே நான் குழந்தையாக இருந்தபோது என்னை இவர்கள் எவ்வாறு (அன்போடும் பாசத்தோடும்) வளர்த்தார்களோ, அவ்வாறே, நீயும் இவர்கள் மீது கருணை புரிவாயாக! என்றும் கூறி பிரார்த்திப்பீராக!” (திருக்குர்ஆன் 17:23,24)
அதுமட்டுமின்றி, ‘நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கம் நலம்; செய்ய வேண்டியது) பற்றி அறிவுறுத்திக் கட்டளையிட்டுள்ளோம்.’ (திருக்குர்ஆன் 31:14) என்று பல இடங்களில்அ தாய் தந்தை இருவருக்கும் அடிபணிந்து நன்றி செலுத்தி வருமாறு கூறும் இல்லாஹ், தாயின் தகுதியை தந்தையைவிட ஒருபடி மேலாக உயர்த்திச் சொல்வதற்கான காரணத்தையும் கூறுகிறான்.
”அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக அவனைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள், மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடிக்கின்றன.’ (அல் குர்ஆன் 31:14)என்று தாய் அனுபவிக்கும் துன்பத்தை தெளிவாகக் கூறகிறான். ‘பலவீனத்தின் மேல் பலவீனமாக’ என்ற அல்லாஹ்வின் கூற்றுக்க இன்றைய மருத்துவ வல்லுநர்கள் கூறும் விளக்கத்தை கவனியுங்கள்:
குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான ‘கால்சியம்’ சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அதே போல் தனக்குத் தேவையான இரும்புச்சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.
தாயின் கருப்பைச் சுவர்கள் குழந்தைக்கு வேண்டிய இரத்தத்தை அதிகரிப்பதால் விரிவடைகின்றன. இதனால் தாயின் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. தலை சுற்றல்கூட வரும். தாயின் இதயம் கற்ப காலத்தில் மட்டும் மிக அதிகமாக இயங்குகிறது. இதனால் தாய்க்கு அதிக களைப்பு நெஞ்சுக்கரிப்பு கூட ஏற்படுகிறது.
குழந்தையின் எடை அதிகரிக்கும்போது தாயின் கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. இதன் மூலம் தலைவலி, வயிற்று வலி, கால்வலி, பார்வையில் மந்த நிலை ஏற்படுகிறது.
பொதுவாக குழந்தை பெற்ற பின் தாய்மார்களில் 25 முதல் 50 சதவிகித தாய்மார்கள் மனநலக்குறைவு அடைகிறார்கள் என்கின்றனர் மருத்துவ மேதைகள். மெய் சிலிரக்க வைக்கும் தாயின் தியாகத்தை மறக்கலாமா?
ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை!
சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு: ஒரு ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை செய்ய வேண்டும்?
ஆம்! மரியாதையும் பணிவிடையும் செய்தே ஆக வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிற பாவத்தை விட பெரும்பாவம் எதுவும் இந்த உலகில் இல்லை. அப்பேர்பட்ட பாவம் புரிபவளாக ஒரு தாய் இருப்பினும் அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தே ஆக வேண்டும்.
ஹள்ரத் அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா என்கின்ற பெண்மணியின் தாயார் முஸ்லிமாகாத நிலையில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவராக இருந்து கொண்டு தம் மகளை தேடி வந்த போது ‘யா ரசூலுல்லாஹ், என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார், நான் அவருடன் உறவாடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஆம்! நீ உன் தாயை பேணி இரக்கத்தோடு நடந்து கொள்,’ என்றார்கள். (ஆதாரம்: புகாரி)
முஸ்லிமாகாமல் இணை வைக்கிற பெரும் பாவத்தைச் செய்து வருகிற தாயே ஆனாலும், அவரைப் பேணி வருவது கட்டாயம் என்றால், ஒரு தாய் ராட்சசியாக இருக்கிறார் என்பதற்காக அவரை மதிக்காமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்குமா என்ன? ராட்சசியாக இருந்தாலும் அவரையும் இரக்கத்தோடு அணுகுவதே இஸ்லாத்தின் ஆணை.
‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம். நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
-M.A. முஹம்மது அலீ
Parents are a gift from God. All parents love their children and care for them through out their life.
Therefore, it is also moral duty of their children to look after their parents when they grow old.
We should know the value of our parents and see them happy and smiling.
Allah has also ordered us to be dutiful to our parents.
If they attain old age, we are neither supposed to utter any word of disrespect nor shout at them.
We should always treat them honorably.