டெல்லி: கல்யாணமாகி இரண்டு நாட்களிலேயே விவாகரத்து கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தததுடன் இந்த மனுவைத் தாக்கல் செய்த தம்பதியையும், அவர்களுக்காக ஆஜரான வக்கீல்களையும் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
டெல்லியை சேர்ந்த சுமித், பூனம் ஆகியோருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் கல்யாணமான அடுத்த 2 நாளிலேயே அவர்கள் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டை அணுகி மனு தாக்கல் செய்தனர்.
ஆனால், இந்த மனுவை குடும்ப நலக் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பூனம். அதில், அரசியல் சட்டத்தின் 32வது பிரிவை சுட்டிக் காட்டி, குடும்ப நலக் கோர்ட் அந்தப் பிரிவை மீறி செயல்பட்டதாகக் கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், பூனத்தின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், தம்பதியினர், ஆறு மாத திருமண வாழ்க்கையை முடித்திருக்க வேண்டும். அதனால், இன்னும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னரே தம்பதியினர் குடும்ப நலக் கோர்ட்டை அணுகலாம்.
குடும்ப நலக் கோர்ட், அடிப்படை உரிமைகளை எவ்விதம் மீறியது என்று பூனத்தின் வக்கீல்கள் சரியாகச் சுட்டிக்காட்டவில்லை. மேலும் தம்பதியினர் மற்றும் அவர்களின் வக்கீல்களின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. சிறிதும் பொறுப்புணர்வில்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் நீதி நிர்வாகத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கடுமையாக கண்டித்தனர் நீதிபதிகள்.
source: www.thatstamil.com