[ அரபு நாடோடிக் குழு (அல்லது குலம்) ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயருண்டு. அவர்களின் மூதாதையர் ஒருவரின் பெயரை தமது குழுவுக்கு சூட்டியிருப்பார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர் யாவரும், பொதுவான மூதாதையர் ஒருவரின் வம்சாவழி எனக் கூறிக் கொள்வார்கள். குலத் தலைவர் ஒரு பரம்பரைப் பதவி, அல்லது உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அவர்கள் தமது தலைவரை “ஷெரீஃப்” (பன்மை: அஷ்ரஃப்) என்று அழைத்தனர்.
பெதூயின் குழுக்கள் எந்த நகரத்தையும் கட்டவில்லை. எந்த சரித்திரத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர்களின் இலக்கியம் முழுவதும் கர்ண பரம்பரைக் கதைகளாகவும் செய்யுள்களாகவும் இருந்தன. அவையெல்லாம் பரம்பரையாக கடத்தப்படும் வாய்வழி இலக்கியங்கள். செய்யுள்கள் பெரும்பாலும் குலத் தலைவரின் வீர தீர பராக்கிரமங்களை பறைசாற்றின.
இஸ்லாம் “அறியாமையின் காலகட்டம்” எனக் குறிப்பிடும் காலத்து அரபி செய்யுள்கள் பலவற்றில் காமரசம் ததும்பி வழிந்தன. இன்று சில அரபு புத்திஜீவிகள், அந்த செய்யுள்களை இஸ்லாமுக்கு முந்திய அரேபியரின் பாலியல் சுதந்திரத்திற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.
பெதூயின்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். தமது பிரதேசத்திற்குள் ஒரு அந்நியன் வந்தாலும், உபசரித்து வழி அனுப்பி வைப்பார்கள். தொடர்பூடகம் எதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில், அந்நிய விருந்தாளிகள் செய்தி பரிமாறும் தூதுவர்களாக விளங்கினர்.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர், அரேபியர்கள் அனைவரும் நாகரீகமடையாத நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது அறியாமை. யேமன் தேச அரேபியர்கள் மூவாயிரம் வருட நாகரீகத்தை கொண்டவர்கள். அணை கட்டி நீர்ப்பாசனம் செய்யுமளவிற்கு தொழிநுட்ப தேர்ச்சி பெற்றிருந்தனர்.]
இலங்கையில் முதன்முதலாக இஸ்லாம் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே காலத்தில் இந்தியாவிலும் கேரளா கரையோரம் இஸ்லாத்தை கண்டுகொண்டது. உண்மையில் இஸ்லாத்தின்தோற்றத்திற்கு முன்னரே, அரேபிய வணிகர்கள் இந்திய உப கண்டத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். பண்டைய காலத்தில் வருடக்கணக்கான கடல் போக்குவரத்தின் ஆயாசம் காரணமாக, புலம்பெயர்ந்த நாட்டில் தங்கி விட்டவர்களும் உண்டு. இவையெல்லாம் இந்திய உபகண்டத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சங்கதிகள்.
நெடுந்தீவு, மன்னார் கரையோரங்களில் பிரமாண்டமாக நிற்கும் பவோபப் மரங்களை இன்றும் காணலாம். கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆலமர இனத்தை சேர்ந்த பவோபப் மரங்கள், அரேபிய வணிகர்களால் கொண்டு வரப்பட்டன. பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் மரங்களை, இஸ்லாமுக்கு முந்திய அரேபியர்கள் தெய்வமாக வழிபட்டனர். இந்தக் காலத்தில் மத நம்பிக்கையாளர்கள் சாமிப் படங்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
அது போல, பண்டைய அரேபியர்கள் பவோபப் மரங்களை இலங்கையில் நட்டு வணங்கியிருக்க வாய்ப்புண்டு. இவர்களை விட, முத்துக் குளிக்கும் அரேபிய சுழியோடிகள் ஆயிரம் ஆண்டுகளாக மரிச்சுக்கட்டி (மன்னார்) வந்து சென்றனர். ஈழத்து முத்துக்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி இருந்த காலம் அது. பண்டைய துறைமுகமான சிலாபத்துறையில் இருந்து முத்துகள் மூட்டை மூட்டையாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. நிச்சயமாக, ஏற்றுமதி வாணிபத்திலும் அரேபியர் ஆதிக்கம் செலுத்தினார்கள். 16 ஆம் நூற்றாண்டில், போர்த்துக்கேயர் வரும் வரையில் அரேபிய ஏகபோகம் தொடர்ந்தது.
இந்த விபரங்களை எல்லாம் இங்கே கொடுக்கக் காரணம், எவ்வாறு பக்கச் சார்பான கருத்துகள் தகவல் சுதந்திரத்தை தடுக்கின்றன என்பதைக் காட்டத்தான். அரேபியர் என்ற இனத்தை, இஸ்லாம் என்ற மதத்தின் பிரிக்கவியலாத அம்சமாக கருதப்படுகின்றது.
மேற்குலகில் இருந்து கிழக்குலகம் வரையில், இந்த கருத்தியல் பொதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஈழத்துடன் வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள், ஓமான் அல்லது யேமன் நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமியராக இருந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி. 500 ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய இஸ்லாம் என்ற புதிய மதம், அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவ நீண்ட காலம் எடுத்தது. லெபனான் முதல் ஓமான் வரையிலான நிலப்பரப்பு சுமார் இரண்டாயிரம் கி.மி. தூரம் கொண்டது. ஒட்டகத்தின் துணை கொண்டு கடப்பதற்கு மாதக்கணக்காகும். இந்தியாவை போல, அரேபிய தீபகற்பமும் ஒரு துணைக் கண்டம்.
துபாய், அபுதாபி ஆகிய வளைகுடா செல்வந்த நாடுகள், தமது கலாச்சார பாரம்பரியத்தை அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கின்றனர். அங்கே அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் எனப் பார்க்க முடியும். அதே கலாச்சாரத்துடன், அரபு மொழியில் “பெதூயின்” என அழைக்கப்படும் நாடோடிகள் இன்று அருகி வரும் பழங்குடியினராவர்.
எந்தப் பயிரும் முளைக்காத கட்டாந்தரையில் (பாலைவனம் என்பதற்கு அரபியில் பல சொற்கள் உள்ளன) ஆடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மட்டுமே வளர்க்க முடியும். பெதூயின்கள் ஒரு இனக்குழுச் சமுதாயம். அவர்களுக்கென்று ஒரு அரசனோ, தேசமோ கிடையாது. “நமக்கென்று ஒரு நாடு இல்லையே” என்று கவலையும் இல்லை. ஒவ்வொரு நாடோடிக் குழுவுக்கும் ஒரு மூத்தோர் தலைவராக இருப்பார். மூத்தோர் வாய் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். எந்த இடத்தில் கூடாரம் அடிக்க வேண்டும்? எந்த தரை கால்நடைகளுக்கு உகந்தது? எங்கே நிலத்தடி நீர் உண்டு? இதையெல்லாம் குழுத் தலைவர் தீர்மானிப்பார்.
அரபு நாடோடிக் குழு (அல்லது குலம்) ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயருண்டு. அவர்களின் மூதாதையர் ஒருவரின் பெயரை தமது குழுவுக்கு சூட்டியிருப்பார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர் யாவரும், பொதுவான மூதாதையர் ஒருவரின் வம்சாவழி எனக் கூறிக் கொள்வார்கள். குலத் தலைவர் ஒரு பரம்பரைப் பதவி, அல்லது உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அவர்கள் தமது தலைவரை “ஷெரீஃப்” (பன்மை: அஷ்ரஃப்) என்று அழைத்தனர்.
பெதூயின் குழுக்கள் எந்த நகரத்தையும் கட்டவில்லை. எந்த சரித்திரத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர்களின் இலக்கியம் முழுவதும் கர்ண பரம்பரைக் கதைகளாகவும் செய்யுள்களாகவும் இருந்தன. அவையெல்லாம் பரம்பரையாக கடத்தப்படும் வாய்வழி இலக்கியங்கள். செய்யுள்கள் பெரும்பாலும் குலத் தலைவரின் வீர தீர பராக்கிரமங்களை பறைசாற்றின. இஸ்லாம் “அறியாமையின் காலகட்டம்” எனக் குறிப்பிடும் காலத்து அரபி செய்யுள்கள் பலவற்றில் காமரசம் ததும்பி வழிந்தன. இன்று சில அரபு புத்திஜீவிகள், அந்த செய்யுள்களை இஸ்லாமுக்கு முந்திய அரேபியரின் பாலியல் சுதந்திரத்திற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.
அரபு பெதூயின் குலங்கள் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வது சர்வ சாதாரணம். கால்நடைகளை பிறிதொரு குலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையிட்டு செல்வார்கள். அல்லாதுவிடின் ஒரு கிணறு தமதே என்று ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் யுத்தங்களை தோற்றுவிக்கும். சாதாரண பெதூயின் இளைஞன் சிறு வயதில் இருந்தே யுத்தத்திற்கும், கடுமையான பாலைவன வாழ்க்கைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறான்.
பெதூயின்களின் போர்க்குனாம்சமும், நாடோடி வாழ்க்கை முறையும் பிற்காலத்தில் இஸ்லாமிய படையெடுப்புகளின் வெற்றிக்கு காரணமாகின. அப்போது கூட அவர்கள் தனித்தனி குலங்களாக தான் போரிட்டார்கள். அவர்களுக்கு உலகில் வேறெதையும் விட குலப்பெருமையே முக்கியமானது. உயிரை விட மானம் பெரிதென்று கருதுபவர்கள். ஒன்றுக்கொன்று ஜென்ம விரோதிகளான அரபு குழுக்களை இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.
எந்த ஒரு அரேபியனும் தான் சார்ந்த குலத்தை விட்டு பிரிந்து செல்ல மாட்டான். அப்படி சென்றால், ஆளரவமற்ற பாலைவனப் பூமியில் தனித்து வாழ முடியாது. அரசாங்கமோ, வேறெந்த நிர்வாகமோ இல்லாத ஒரு சமூகத்தில், குல உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். இஸ்லாம் இந்த சவாலை செயலூக்கத்துடன் எதிர்கொண்டது. “உம்மா” என்ற அமைப்பை ஸ்தாபித்தது.
ஒரு குலச் சமுதாயம் வழங்கிய பாதுகாப்பை உம்மா வழங்கியது. ஏற்கனவே இருந்த குலக் கட்டமைப்பை உடைத்து, முஸ்லீம் என்ற புதிய சமூகத்தினுள் உள்வாங்கியது. பெதூயின்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். தமது பிரதேசத்திற்குள் ஒரு அந்நியன் வந்தாலும், உபசரித்து வழி அனுப்பி வைப்பார்கள். தொடர்பூடகம் எதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில், அந்நிய விருந்தாளிகள் செய்தி பரிமாறும் தூதுவர்களாக விளங்கினர். புதிய மார்க்கமான இஸ்லாம், இந்த “ஊடகத்தை” திறமையாக கையாண்டது. “இஸ்லாம் என்ற புதிய மார்க்கம்” பற்றிய செய்தியை அரேபிய தீபகற்பம் முழுவதும் காவிச் சென்று பரப்பினார்கள்.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர், அரேபியர்கள் அனைவரும் நாகரீகமடையாத நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது அறியாமை. யேமன் தேச அரேபியர்கள் மூவாயிரம் வருட நாகரீகத்தை கொண்டவர்கள். அணை கட்டி நீர்ப்பாசனம் செய்யுமளவிற்கு தொழிநுட்ப தேர்ச்சி பெற்றிருந்தனர்.
சிரியா அரேபியர்கள் கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்திருந்தார்கள். மாளிகைகளில் வாழ்ந்த மேட்டுக்குடியினர் கிரேக்க மொழியில் அரசகருமமாற்றினர். செங்கடல் கரையோர ஜெத்தா போன்ற நகர மக்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் சிறந்து விளங்கினர். மெக்கா நகரில் முகமது தலைமையிலான சிறு குழு, இஸ்லாம் என்ற புதிய மதத்தை பிரச்சாரம் செய்தது. மாற்று உலகிற்காக போராடிக் கொண்டிருந்த முஸ்லிம்களை, அரேபியர்கள் தேடித்தேடி அழிக்கத் துடித்தார்கள்.
source: http://kalaiy.blogspot.com/2010/01/blog-post_20.html
இன்ஷா அல்லாஹ் தொடரும்.