Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பொது சிவில் சட்டம் – PJ (1)

Posted on March 28, 2010 by admin

MUST READ

1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995ஜூலை இதழில் பீஜே எழுதிய கட்டுரை.

ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும் அரசியல் சாசனத்தின் மேற்கோள்கள், அ.ச. நடராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு, பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள, இந்திய அரசியல் சாசனம்’ (மூன்றாம் பதிப்பு) எனும் நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

நாட்டின் உயர்ந்த அதிகார பீடமான உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய உத்தரவு சிறுபான்மை மக்களுக்கு அச்ச உணர்வையும் நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது.

பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலும்,அரசியல் சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைக் கண்டு கொள்ளாமலும் தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட நிலையிலும் மேலோட்டமான பார்வையில் கூறப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

வரம்பு ஏதுமில்லாத அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது. அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத் தான் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’ என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

‘அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்’ என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

‘குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப் படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்’ என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படை.

நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட இந்து, முஸ்லிமாக மாறினால், அது பற்றிய வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், ‘இனி மேல் இஸ்லாத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்குவது எவ்வளவு கேலிக்குரியதோ அந்த அளவு கேலிக்குரியதாகவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பதையெல்லாம் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.

1. இந்தியாவின் எல்லைகள்

2. குடியுரிமை 

3. பொதுவானவை

4. கொள்கை விளக்கம்

5. அடிப்படைக் கடமைகள்

ஆகிய ஐந்து தலைப்புகள் அரசியல் சாசனத்தில் உள்ளன.

கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் 36முதல் 51முடிய உள்ள பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. நீதிமன்றம் சுட்டிக்காட்டக் கூடிய 44வது பிரிவும் இந்தத் தலைப்பின் கீழ் தான் வருகின்றது.

கொள்கை விளக்கம் என்ற இந்தத் தலைப்பு ஏனைய தலைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஏனைய தலைப்புக்களில் கூறப்பட்டவைகளை அமல் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். அமல் செய்யாதவர்கள் அரசியல் சாசனத்தை அவமதித்தவர்களாகக் கருதப்படலாம். ஆனால் கொள்கை விளக்கம்’ என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. செயல்படுத்துமாறு நீதிமன்றமும் கட்டளை ஏதும் வழங்க முடியாது. ஏறக்குறைய இந்த வகையில் இது அரசுக்கு சொல்லப்பட்ட ஆலோசனைகள் எனலாம். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

‘இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது‘ என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.

கொள்கை விளக்கத்தில் கூறப்பட்டவற்றை உச்ச நீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றமும் வலியுறுத்த முடியாது; அதற்கான அதிகாரமும் எந்த நீதிமன்றத்துக்கும் கிடையாது என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்பு அந்தப் பகுதியில் கூறப்பட்ட 44வது பிரிவை மட்டும் அமல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

பொதுவாகவே கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் கூறப்பட்டவற்றை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது. இந்த 44வது பிரிவு, அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைக்கு ”கட்டாயம் வழங்க வேண்டிய உரிமைக்கு” முரணாகவும் இருக்கும் போது இதை எப்படி வலியுறுத்த முடியும்?

கட்டாயம் அமல்படுத்த வேண்டியவைகளுக்கு ஏற்ப, கொள்கை விளக்கத்தில் உள்ள ஆலோசனைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, கட்டாயம் அமல்படுத்த வேண்டியவைகளுக்கு முரணாகக் கொள்கை விளக்கம் இருந்தால் அதை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எடுத்துக் கொள்ளக் கூடாது.

பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றுக்கும் இந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ள மற்றவற்றுக்கும் ஆட்பட்டும், எல்லோரும் தம் மனசாட்சிப்படி செயல்படுவதற்குரிய சுதந்திரம் உடையவர்கள் ஆவார்கள். தத்தம் மதத்தைத் தழுவ, மேற்கொள்ள, மற்றும் பரப்புவதற்கு உரிமை உடையவர்கள் ஆவர்.

அரசியல் சாசனம் 25 (1)வது பிரிவு

விருப்பமான மதத்தில் குடிமக்கள் நம்பிக்கை கொள்ளலாம்; ஏற்கலாம்; பின்பற்றலாம்; பிரச்சாரம் செய்யலாம் என்று 25 (1) பிரிவு உரிமை வழங்கியுள்ளது.

எப்படித் திருமணம் செய்யலாம்? யாரைத் திருமணம் செய்யலாம்? என்பன போன்ற விஷயங்களும், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற சட்டங்களும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மார்க்கம் சம்பந்தப்பட்டவை ஆகும். தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் எவ்வாறு மார்க்கம் சம்பந்தப்பட்டதாக உள்ளனவோ அவ்வாறே இந்தக் காரியங்களும் மார்க்கம் சம்பந்தப்பட்டவையாகும். இதற்கான கட்டளையும் வழிகாட்டுதல்களும் முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களை இஸ்லாம் கூறக்கூடிய முறையில் நடைமுறைப் படுத்துவதற்குத் தடுக்கப்பட்டால், அவர்களின் மதச் சுதந்திரமும், வழிபாட்டுச் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது என்பதே பொருள்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமையை – அவசியம் வழங்கியே தீர வேண்டிய இந்த உரிமையை – மறுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கு முரணாக அமைந்துள்ள கொள்கை விளக்கத்தைத் தான் விட்டு விட வேண்டுமே தவிர அடிப்படை உரிமையை மறுக்க முடியாது.

அரசியல் சாசனத்தில் கூறப்படும் கொள்கை விளக்கம் எனும் தலைப்பில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்தாததால் நாடு சீரழிந்து வருகின்றது. அந்தப் பிரிவுகள் பற்றியெல்லாம் எந்த உத்தரவும் வழங்காத நீதிமன்றம், இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான விஷயத்தில் மட்டும் கொள்கை விளக்கத்தை மேற்கோள் காட்டி அரசுக்கு உத்தரவிடுவது நமக்கு வியப்பாக உள்ளது.

அரசியல் சாசனத்தின் கொள்கை விளக்கப் பிரிவில் கூறப்பட்டுள்ள பல பிரிவுகள் இந்த நாட்டில் எந்த லட்சணத்தில் பின்பற்றப்படுகின்றன என்பதையும், அவை சம்பந்தமாக நீதிமன்றங்களின் போக்கையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள், குழந்தைகள் அனைவருக்கும் 14வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

அரசியல் சாசனம் 45வது பிரிவு

14வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது.

கல்வியறிவு இல்லாத காரணத்தால் ஏமாற்றப்பட்டவர்களும், சுரண்டப்பட்டவர்களும் நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பங்களில் திட்டவட்டமான எந்தக் கட்டளையையும் நீதிமன்றங்கள் அரசுக்குப் பிறப்பிக்கவில்லை.

இவ்வாறு கட்டளை பிறப்பிப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதும் இல்லை. இவ்வாறு கட்டளை பிறப்பிப்பதால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படப் போவதுமில்லை. இதை நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் 44வது பிரிவை மட்டும் நிறைவேற்றத் துடிப்பது நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு வேளை அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு இன்னும் பத்து ஆண்டுகள் நிறைவடையவில்லையோ என்னவோ? தெரியவில்லை.

உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமையாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாக, போதையூட்டும் மது வகைகளையும் உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும் மருந்துக்காக அன்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

கொள்கை விளக்கம், 47வது பிரிவு

பொது சிவில் சட்டம் சம்பந்தமான கொள்கை விளக்கம் 44வது பிரிவு, அடிப்படை மத சுதந்திரத்துடன் முரண்படுகின்றது. மது விலக்கு சம்பந்தமான இந்தக் கொள்கை, அரசியல் சாசனத்தின் அடிப்படையுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை.

இன்று வரை இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இந்தக் கொள்கையை, மது விலக்கை இவ்வளவு நாட்களுக்குள் பின்பற்றியாக வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவும் இட்டதில்லை.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாது. பெரும்பாலான மக்கள், குறிப்பாகப் பெண்கள் முழுமையாக இதை வரவேற்பார்கள். இதை உடனே செயல்படுத்துமாறு கட்டளையிடாத நீதிமன்றம் பொது சிவில் சட்டம் பற்றி மட்டும் கட்டளையிடுவது ஏன்?

நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு வந்து விட்டதால், அந்த வழக்கில் பொது சிவில் சட்டம் பற்றிக் கட்டளையிட வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு ஏற்பட்டு விட்டது’ என்று கூறப்படும் சமாதானம் ஏற்க முடியாததாகும். ஏனெனில் மது விலக்கை உடனே அமல் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதற்குரிய ஆயிரக் கணக்கான வழக்குகளை நீதிமன்றம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. மேலும் விஷச் சாராயம் அருந்தி நூற்றுக்கணக்கானோர் அடிக்கடி மரணிப்பது தொடர்பான வழக்குகளையும் நீதிமன்றம் விசாரித்துள்ளது.

கொலை, கற்பழிப்பு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் பலர் மது அருந்தி விட்டுப் போதையில் தான் அதைச் செய்துள்ளனர். மது அருந்தியது தான் அதற்குக் காரணம் என்று தெளிவாகத் தெரிந்த பின்பும், கொள்கை விளக்கம் 47வது பிரிவு மதுவிலக்கை அமல்படுத்தக் கூறிய பின்பும், அவ்வாறு அமல்படுத்தக் கட்டளையிடுவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்று தெரிந்த பின்பும் அது தொடர்பாகத் தெளிவான கட்டளை பிறப்பிக்காத நீதிமன்றம் 44வது பிரிவில் மட்டும் அக்கறை செலுத்துவது ஏன்?

குடிமக்கள் தமது வயதுக்கும், சக்திக்கும் தகுதியற்ற ஒரு வேலைக்கு, பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படக் கூடாது என்று அரசியல் சாசனம் கூறும் போது, குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி, குறிப்பிட்ட நாட்களுக்குள் அமல்படுத்தும் உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. மனித உரிமைக் கமிஷன் கண்டுபிடித்துச் சொன்ன பிறகும், மனிதாபிமானத்துக்கு எதிராக, குழந்தைத் தொழிலாளர்களைச் சுரண்டுவதை நிறுத்த எந்தக் கால வரம்பையும் நீதிமன்றம் கூறவில்லை.

தனது பொருளாதார சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும், வேலை இல்லாத போதும் வயது முதிர்ந்தோருக்கும் ஊனமுற்றோருக்கும் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு உற்ற துணை புரிவதற்கேற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.

அரசியல் சாசனம் 41வது பிரிவு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக் கூடாது வேலையில்லாதோருக்கும் முதியோருக்கும், நோயாளிக்கும், பொது நிதியிலிருந்து உதவ வேண்டும் என்றெல்லாம் இந்தப் பிரிவு கூறுகின்றது.

வேலை வாய்ப்பு இல்லாததால் தான் கொள்ளையடித்தோம்; திருடினோம்; கொலை செய்தோம் என்று எத்தனையோ வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்துள்ளனர். அப்படியிருந்தும், இவ்வளவு நாட்களுக்குள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; வேலை இல்லாதோருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை ஆட்சியாளர்கள் செயல்படுத்தினால் நாட்டு மக்கள் கொந்தளித்துப் போக மாட்டார்கள். மாறாக மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு உத்தரவிடுவது யாருடைய அடிப்படை உரிமையையும் பறித்து விடாது.

தேவையான, அவசியமான இந்தக் கொள்கைகள் யாவும் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள தீய விளைவுகளைக் கண்ட பின்பும் காலக்கெடு நிர்ணயித்து அதை அமல்படுத்துமாறு நீதிமன்றங்கள் கட்டளையிடவில்லை.

கொள்கை விளக்கம் பகுதியில் உள்ளவற்றைச் செயல்படுத்துமாறு அரசுக்கு நீதிமன்றங்கள் கட்டளையிட முடியாது என்றே அதற்குப் பதில் கூறுவார்கள்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய இந்தப் பிரிவுகளைச் செயல்படுத்துமாறு கட்டளையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்றால் மக்களுக்குப் பயன் தராத, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய, தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோமோ என்ற சந்தேகத்தை சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தக் கூடிய, இனிமேல் இந்த நாட்டில் முஸ்லிம்களாக வாழ முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான மதச் சுதந்திரத்துக்கு எதிராக அமைந்துள்ள 44வது பிரிவை அமல்படுத்துமாறு கட்டளையிடும் அதிகாரம் மட்டும் எங்கிருந்து முளைத்தது?

அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளையே பறிக்கக் கூடிய வகையில் பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. இவர்கள் கொண்டு வர விரும்புகின்ற பொது சிவில் சட்டம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு குடிமகன், தான் விரும்பிய மதத்தைப் பின்பற்ற அரசியல் சாசனம் உரிமை வழங்கியிருப்பதை முன்னர் குறிப்பிட்டோம். இந்த உரிமையை அப்பட்டமாகப் பறிக்கக் கூடிய வகையில் பல மாநில அரசுகள் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளன.

சிந்தித்து, விரும்பிய வழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்ட பின் ஜனநாயகம் என்பதற்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் எந்த அர்த்தமும் இருக்காது. இத்தகைய காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு எதிராக அறிவுஜீவிகளும், மத்திய ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் என்ன செய்தனர்? அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் இத்தகைய கருப்புச் சட்டங்களை அமல்படுத்தும் மாநில அரசுகள் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றன? இத்தகைய அரசுகளை உடனே பதவி இழக்கச் செய்யும் நடவடிக்கைகள் ஏதும் உண்டா? நிச்சயமாக இல்லை.

ஒரு குடிமகன் தனக்குச் சொந்தமான பொருளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் பசுவை இறைச்சிக்காகக் கொல்லக் கூடாது என்று பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. ஒருவனுக்குச் சொந்தமான, உணவாகப் பயன்படும் பொருளை அவன் சாப்பிடக் கூடாது என்று சட்டம் இருக்கும் நாட்டில் சுதந்திரம் எங்கே இருக்கிறது? ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளாகக் கூறப்பட்ட உரிமைகளுக்கே இந்தக் கதி! இந்த அக்கிரமத்துக்கு எதிராகக் கடுமையான எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காத நீதிமன்றம், கொள்கை விளக்கத்தில் கூறப்படும் 44வது பிரிவை மட்டும் நிறைவேற்றத் துடிப்பது ஏன்? என்பது தான் நமது கேள்வி.

பொது சிவில் சட்டத்தை யார் உருவாக்குவார்கள்? பெரும்பான்மை மக்கள் தாம். பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தவர்கள். அவர்கள் உருவாக்கும் சட்டம் இந்து மத நம்பிக்கைகளுக்கு ஆதரவாகவே உருவாக்கப்படும். அதற்கு இந்தக் காட்டுமிராண்டித்தனமான மதமாற்றத் தடைச் சட்டமும், பசுவதைத் தடைச் சட்டமும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும்.

இந்து மதச் சட்டங்களை முஸ்லிம்கள் மேல் திணித்த பிறகு இந்து மத வழிபாட்டு முறைகள், பொது வழிபாட்டு முறை’ என்ற பெயரில் நாளை அறிமுகமாகும். அதற்கு முன்னோடியாகத் தான் பொது சிவில் சட்டம் பற்றிப் பேசப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், நீதித்துறையினரில் பலர் ஆகிய அனைவரும் இந்த நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்றுவதற்குக் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்பது இதிலிருந்து தெரிய வரும்.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 44வது பிரிவை நினைவூட்டிப் பொது சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இன்னொரு வகையிலும் தவறாகும்.

ஒரு வாதத்துக்காக, 44வது பிரிவு அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு வருடத்துக்குள்’ என்று நீதிமன்றம் எந்த அடிப்படையில் முடிவு செய்தது? அரசியல் சாசனத்தை உருவாக்கியோர் எந்தக் கால வரம்பையும் கூறாதிருக்கும் போது, ஒரு வருடத்துக்குள்’ என்று வரம்பு கட்டிக் கூறியிருப்பதும் நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

தேவநாகரி வடிவத்தில் (லிபி) உள்ள ஹிந்தி, இந்தியாவில் அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்க வேண்டும்.

அரசியல் சாசனம் 343 (1)

அரசியல் சாசனத்தில், மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்படுகின்றது.

மத்திய அரசு, இனி மேல் மாநில அரசுகளுடன் இந்தியிலேயே தொடர்பு கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் இந்தி மொழியில் தான் மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

இதை உடனே அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடுமா? உத்தரவிட்டால் அதை மத்திய அரசு செயல்படுத்துமா? செயல்படுத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகளை நாம் கூற வேண்டுமா?

சட்டத்தை அமல்படுத்துவதை விட நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே முக்கியமாகும். இதை உணர்ந்த காரணத்தினால் தான், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கும் என்று நேரு உறுதியளித்தார். இந்த உறுதி மொழி அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றாலும் மொழிவழிச் சிறுபான்மை மக்களின் கொந்தளிப்பைக் கவனத்தில் கொண்டு, நாடு பிளவுபட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தி திணிக்கப்படாமல் உள்ளது.

சிறுபான்மை மொழியினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கருதி, வேண்டாத விபரீதங்களைத் தடுக்க எண்ணி, நாடு முழுவதும் இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க முடியவில்லை எனும் போது, சிறுபான்மை மதத்தவர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடிய விஷயத்தில் மட்டும் தேவையற்ற உத்தரவை, நீதிமன்றம் தமது அதிகார வரம்பின் கீழ் வராத விஷயத்தில் ஏன் வழங்க வேண்டும்?

இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இனிமேல் உத்தரவு பிறப்பிக்க இந்தத் தீர்ப்பு வெள்ளோட்டமாகக் கூட அமையலாம். மொழிப் பற்றாளர்களும், மொழிக்காகப் போராடுபவர்களும், பொது சிவில் சட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தவறினால், நாளை மொழியைக் காக்க அவர்கள் போராட வேண்டியிருக்கும். அப்போது போராடுவதில் பயனில்லாமல் போகலாம்.

குடிமக்கள் அனைவரும் சமமான உரிமை பெற்றவர்கள் என்று அரசியல் சாசனம் கூறுவதால், இனிமேல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, தேர்தல் தொகுதி ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு அறவே கூடாது என்று நாளை தீர்ப்பு வழங்கப்படலாம். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் நோக்கம் என்று அப்போதும் நியாயம் கூறப்படலாம். அதற்கான வெள்ளோட்டமாகவும் இத்தீர்ப்பு அமையக் கூடும். எனவே பொது சிவில் சட்டத்துக்கு எதிராக அவர்களும் சேர்ந்து போராடக் கடமைப்பட்டுள்ளனர்.

தனியார் சிவில் சட்டம், சிறுபான்மை மொழிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சேர்க்கப்படுவதற்குப் போராட வேண்டிய நேரம் இது! இது போன்ற தீர்ப்புக்கள் வழங்கப்படுவதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் 44வது பிரிவு போன்றவை நீக்கப்படுவதற்கு அவர்களும் போராடியாக வேண்டும்.

அறிவு ஜீவிகள் என்று தங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போர், பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு கொடுப்பது தான் அறிவின் வெளிப்பாடு’ என்பதைப் போல் நடந்து கொள்கின்றனர். இதையொட்டி அரிய தத்துவங்களை எல்லாம் அள்ளித் தெளித்து வருகின்றனர். அவர்களின் உளறல்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்? அறிவு சீவி(?)களின், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கேள்வி இது!

இந்தக் கேள்வியிலேயே அவர்களது மேதாவிலாசம் நமக்குத் தெரிந்து விடுகின்றது. இந்த அபத்தமான கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் விளக்கியாக வேண்டும்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb