ரசிக்கும் உரிமை கணவனுக்கே
ஃபாத்திமா ஜொஹ்ரா
[ பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
ஒரு ஆண் குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.]
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ‘ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
”ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!’ என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
”ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.
ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம் ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.
”ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்’ என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.
ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.
பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். ‘இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்’ என்றெல்லாம் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?
பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.
ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது
– ஃபாத்திமா ஜொஹ்ரா