அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”ஒரு மனிதன் கண்கவர் ஆடையை அணிந்து கொண்டு, தன் தலையை சீவி, பெருமையான நடையுடன் நடந்து சென்றான். அவனை அல்லாஹ் பூமிக்குள் இழுக்கும்படி செய்துவிட்டான். அவன் மறுமை நாள்வரை பூமிக்குள் அழுந்தி சென்று கொண்டே இருக்கிறான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக இருந்தார்கள். (புகாரி,முஸ்லிம்)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
உள்ளங்கையை விட மென்மையானதாக பட்டையோ, பட்டு ஆடையையோ, நான் தொட்டதில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாடையை விட மிக நறுமணமான வாடையை அறவே நான் நுகர்ந்ததில்லை.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பத்து ஆண்டுகள் ஊழியம் செய்துள்ளேன். ”சீ‘‘ என எப்போதும் அவர்கள் என்னிடம் கூறியதில்லை.
நான் செய்த எதையும் ஏன் இப்படிச் செய்தாய்? என அவர்கள் கேட்டதும் இல்லை.
நான் செய்யாத ஒன்றிற்காக ”ஏன் இப்படி செய்யவில்லை?” என்று கேட்டதுமில்லை. (புகாரி, முஸ்லிம்)
நவாஸ் இப்னு ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”நன்மை பற்றியும், தீமை பற்றியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன். ”நல்லது என்பது, நற்குணம்தான். தீமை என்பது உன் உள்ளத்தை உறுத்துவதும், மக்கள் அதைப் பார்த்து விடுவதை நீ வெறுப்பதும் ஆகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்)
அபுதர்தா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”மறுமை நாளில் ஒரு மூஃமினின் தராசில் அதிக கனம் ஏற்படுத்துவது நற்குணம் தான். நிச்சயமாக அல்லாஹ், கெட்டப் பேச்சுக்களை பேசுபவனை, தீய செயல்கள் செய்பவனை (க் கண்டு) கோபப்படுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
அப்துல்லா இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்‘ என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், ”ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும், தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)” என்று கேட்டார். ”நிச்சயமாக அல்லாஹ், அழகானவன், அழகை விரும்புகிறான். ”பெருமை கொள்வது, சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை கேவலமாக எண்ணுவதுமாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹாரிஸா இப்னு வஹ்பு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”நரக வாசிகள் பற்றி உங்களுக்கு கூறட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டுவிட்டு, கடின இதயமுடையவரும், கஞ்சத்தனம் செய்பவரும், பெருமை கொள்வோர் ஆகிய அனைவருமாவர் என்றும் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”தன் வேட்டியை பெருமையாக, (கீழிறக்கிக்கட்டி) இழுத்துச் செல்பவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு கடும் வேதனை உண்டு. 1) விபச்சாரம் செய்யும் வயோதிகன் 2) பொய் கூறும் அரசன் 3) பெருமை கொள்ளும் ஏழை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”கண்ணியம் என் வேட்டியாகும். பெருமை என் மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் என்னிடம் ஒருவன் தர்க்கம் செய்தால், அவனை நான் தண்டிப்பேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)