தீன்குல ஹீரோக்களுக்கு..
இன்றைய நவீன யுகத்தில் சினிமா! தொல்லைக்காட்சிகள்!, இரட்டை வசன மற்றும் ஆபாச பாடல்கள்! அதற்கேற்றவாறு தங்களுடைய ஆடை அழங்காரம், பைக், செல்போன், இளம் ஆண் மற்றும் பெண்களின் மேல் காதல் எனும் கன்ராவி மோகம் போன்ற பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்ட இன்றைய இளைஞர்கள் தங்களை ஹீரோக்களாக பாவித்து பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் துச்சமாக மதித்து உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமானவுடன் பெற்றோரை கவனிக்கத்தவறுவதும், பெற்றோரால் மணமுடித்து வைக்கப்பட்ட மனைவியை கவனிக்கத்தவறுவதும் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான மாறிவிட்டது. இதனால்தான் சில வயதான வசதிவாய்ப்பற்ற பெற்றோர் திக்கற்றவர்களாக 5க்கும் 10-க்கும் மற்றவர்களின் கைகளை பார்த்து ஏங்கித் தவிக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட பெற்றோறின் மகன்களோ 10 ஆயிரம் ருபாய்க்கு கேமரா செல்போன் வாங்கி மூன்றே மாதத்தில் 3-ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஆன்டியாகும் நிலைமைகள்!!!
பெற்றோர் தட்டிக் கேட்டால் என் பணம், என் வருமானத்தில் வாங்குகிறேன் நீ யார் அதை கேட்க? என்ற பதில் தான் அவர்களுடைய முதல் கலிமாவாக உள்ளது.
ஆனால் அல்லாஹ் சொல்வதை சற்று கேட்கவும்; ”மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ‘இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்’ என்று கூறுவான்.” (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவறில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்- அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக!” (உலகப் பொதுமறை திருக்குர்அன் 17:23)
இன்னும் நினைவு கூறுங்கள் நாம்( யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் ”அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது! (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழைகளுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்! ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதிமொழியை வாங்கினோம் ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழிலை நிறைவேற்றாமல் அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்! (உலகப் பொதுமறை திருக்குர்அன் 2:83)
என் அருமைச் சகோதரர்களே! நம் அன்பிற்கினிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைகளை கேளுங்கள்”
”எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். சஹீஹுல் புகாரி Volume:1 Book:2 : Verse 16
(அல்லாஹ்வுக்காக பெற்றோரையும் தத்தமது குடும்பத்தினரையும் நேசிக்கக்கூடாதா!)
”ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாம்விடும்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என அபூ மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (சஹீஹுல் புகாரி Volume:1 Book:2, Verse:55)
மனைவியின் மீது உங்கள் கடமை
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (சஹீஹுல் புகாரி Volume:1 Book:2, Verse:56)
”உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (சஹீஹுல் புகாரி Volume:1 Book:2, Verse:42)
திருந்துவதற்கு வாய்புள்ளது திருந்திக்கொள்ளவும் தங்களது பழக்க வழக்கங்களை திருத்திக்கொள்ளவும். நாளை கூட மரணம் வரலாம் இப்போதே இந்த வினாடியே தங்களை இந்த படுபாதக பாவங்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தங்களது சுவனப்பாதையை எளிதாக்கிக்கொள்ளவும்
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!)