டாக்டர் ஷேக் சையது M.D
விந்து உற்பத்தி
விந்து எங்கிருந்து உற்பத்தியாகி வெளியேறுகிறது என்பதை இந்த தொடரில் பார்ப்போம். விந்துபை விரையில் (Testis) உற்பத்தியாகிறது.
விரை சதாவும் விந்துவினை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். அங்கு உற்பத்தியாகும் விந்து அதன் குழாய்வழியாக கடத்தப்பட்டு விந்துப்பபையில் சேமிக்கப்படுகிறது.
தேவை ஏற்படும் போது அந்த விந்துப்பையிலிருந்து வெளியேறுகிறது. இது இன்றைய மருத்துவ உலகம் கண்டுபிடித்த அறிவியல் தகவலாகும்.
இந்த விரை உடலைவிட்டும் பிரிந்து தனியாக இருக்கிறது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.
விந்து எங்கு உற்பத்தியாகி, வெளியேறுகிறது என்பது குறித்து இறை வேதம் குர்ஆன் என்ன கூறுகிறது என்று சற்று கவனிப்போம்.
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் (மனிதன்) படைக்கப்பட்டான்.
அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. அல் குர்ஆன்: 86: 6,7.
இந்த வசனத்தில் விந்து எங்கிருந்து வெளிப்படுகிறது என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. மேலோட்டமாக இந்த வசனத்தின் பொருளைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு குர்ஆனில் தவறான செய்தி சொல்லப்பட்டிருப்பது போன்று தோன்றலாம். காரணம் விந்து உற்பத்தியாகி சேமிப்பாகும் இடம் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அந்த குறிப்பிட்ட இடத்தில் இல்லை. மாறாக உடலைவிட்டும் தனியாக பிரிந்து இருக்கும் விரையில் உற்பத்தியாகி, விந்துப்பையில் சேமிப்பாகுகிறது. குர்ஆனில் சொல்லப்பட்ட செய்தி அறிவியல் கண்டுபிடிப்புக்கு மாற்றமாக இருக்கிறதே என்று சிந்திக்கலாம்.
உண்மையில் இந்த வசனத்தின் அர்த்தத்தை ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் பல விஞ்ஞான கரு இயல் உண்மைகள் சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.
குழந்தை கருவறையில் வளரும் போது அதனுடைய “ஆரம்ப நிலையில்” இனவிருத்தி செய்யும் உறுப்பான விரை (Testis) தற்போது சிறுநீரகம் இருக்கும் இடத்தையெடுத்து அதாவது முதுகந்தண்டிற்கும், கடைசி நெஞ்செலும்புக்கும் இடையில்தான் இருக்கும். சிறுநீரகம் விரைப்பைக்கு மேலே அடிவயிற்றில் இரு புறத்திலும் இருக்கும்.
கருவில் குழந்தை வளர, வளர சிறுநீரகம் மேல் நோக்கியும், விரை கீழ் நோக்கியும் இடம் மாறி நகர்ந்து செல்லும். இறுதியில் விரை தற்போது இருக்கும் அமைப்பில் ஆணுறுப்பின் இரு பக்கங்களில் வந்து தங்கிவிடும்.
இவ்வாறு இறுதி நிலையில் உடலைவிட்டு பிரிந்து தனித்து இருந்தாலும் இனவிருத்தி செய்யும் இந்த விரைக்குத் தேவையான இரத்தம், அது தொடர்புடைய நரம்பு, நணநீர் போன்றவைகள் அனைத்தும் விரை இருந்த பழைய இடமான முதுகந்தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்துதான் கிடைக்கிறது.
இவ்வாறு விரை இருக்க வேண்டிய இடமும், விரைக்குத் தேவையான அனைத்தும் முதுகந்தண்டிற்கும், கடைசி நெஞ்சலும்புக்கும் இடையில்தான் இருக்கிறது என்பதால் இறைவன் “முதுகந்தண்டிற்கும் கடைசி நெஞ்சலும்புக்கும் இடையிலிருந்து வெளிப்படும் நீரிலிருந்து” என்று கூறியுள்ளான். இதன் மூலம் அந்த விரை இருந்த ஆரம்ப நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இறைவனின் நோக்கமாக இருக்கலாம்.
‘‘விரை” உடலைவிட்டும் பிரிந்திருப்பது ஏன்?
விந்துவினை உற்பத்தி செய்யும் “விரை” உடலின் உட்பகுதியில் இருப்பதுதான் அதனால் உற்பத்தி செய்யப்படும் உயிரணுக்களுக்கு தகுந்த பாதுகாப்பானது என்றிருந்தும் அது இருந்த அந்த பழைய இடத்தைவிட்டு நகர்ந்து ஏன் உடலைவிட்டும் பிரிந்து தனியாக நிற்கிறது? என்பதையும் இந்த வசனத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறான் ரப்புல் ஆலமீன் அல்லாஹ். ஏனெனில் இந்த வசனத்தின் ஆரம்பமே “மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்தித்துப் பார்க்கட்டும்” என்றுதான் உள்ளது.? எனவே ஏன் இந்த இடம் மாற்றம் நிகழ்ந்தது? என்பதையும் நாம் சிந்திக்க தூண்டப்படுகிறோம்.
ஒரு மனித உடலின் சராசரி வெட்ப நிலை 37 டிகிரியாகும். பொதுவாக உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உடலின் வெட்ப நிலை சீராக இருந்து வருகிறது.
இனவிருத்திக்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சுமார் 33 டிகிரி வெட்ப நிலையில்தான் உயிர் வாழ முடியும். அந்த அளவை விட கூடும் போது அதனால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும். 37 டிகிரி வெட்பநிலையில் உள்ள உடலின் உட்பகுதியில் “விரை” இருந்தால் அந்த விரையிலும் 37 டிகிரி வெட்ப நிலைதான் இருக்கும். அதில் உயிரணுக்களால் நிச்சயமாக உயிர் வாழ முடியாது.
இந்த உயிரணுக்கள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக உடலின் வெட்பநிலையை குறைக்க முனைந்தால் உடலில் வேறுபல பாதிப்புகள் ஏற்படும். எனவே அந்த விரையை உடலிலிருந்து தனியாக பிரித்து, அதனுடைய வெட்பநிலையை சரி செய்வதுதான் முறையாகும் என்று கருதிய அல்லாஹ் அதனை உடலைவிட்டும் தனியாக பிரிந்து இருக்கும் அமைப்பில் படைத்து, அதன் வெட்ப நிலை சராசரியாக 33-34 டிகிரி இருக்கும் நிலையில் ஆக்கியுள்ளான்.
இந்த இடம் மாற்றம் கருவளர்ச்சியின் சிறிது காலத்திற்கு பிறகு ஆரம்பித்து குழந்தை பிறப்பதற்குள் பூர்த்தி அடைந்துவிடுகிறது. ஒரு குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே விரையின் இடம் மாற்றம் ஏற்படவில்லையெனில் அவருக்கு ஆண்மை இருக்காது, விரைக் கேன்ஸர் (புற்று நோய்) ஏற்படுவற்கும் அதிக வாய்ப்புகளும் உள்ளன. மேலும் விரை மாற்றம் நடைபெறாத குழந்தைகள் இறந்தே பிறப்பது, அல்லது பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிடுவதுதான் அதிகம் அதிகம் என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும். பெட்டிச் செய்தி பார்க்கவும்.
”விரை” செயல்படும் அதிசயம்
விரைப்பகுதி இரத்த ஓட்டம் அதிகமாக உள்ள பகுதியாக இருந்தும், அதன் வெட்பநிலையை 33-34 டிகிரிக்கு மேல் அதிகரிக்கவிடாமல் வைத்திருப்பதில் அல்லாஹ் காட்டிய அற்புதம் வியக்கத்தக்கதாகும்.
எவ்வாறெனில் அங்கு இரத்த ஓட்டம் Counter Current Exchange என்ற விஞ்ஞான அடிப்படையிலும், Venous Plexus, என்ற பிரத்யோக இரத்தக் குழாய் அமைப்பினாலும், மற்றும் நிணநீர் நாளங்கள் (Lymphatic Plexus) என்ற அமைப்பினாலும் செயல் பட்டுக் கொண்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. Counter Current Exchange என்பது ஒரு திசையில் (விரையை நோக்கி) இரத்தம் வந்து கொண்டும் அதன் எதிர் திசையில் இரத்தம் கடத்தப்பட்டுக் கொண்டுமிருக்கும் போது ஏற்படும் இயற்பியல் மாற்றமாகும்.
அந்த இயற்பியல் மாற்றம் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் விரையின் வெட்ப நிலை ஒரே சீரான கட்டுப்பாட்டில் நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கிறது. “Venous Plexus” முறை என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு விரை படைக்கப்பட்டிருக்கும் அமைப்பினை சற்று நினைவுக்குக் கொண்டுவருவோம். விரை பல மீட்டர் நீளமுள்ள இரத்தக் குழாய்களால் சூழப்பட்டுள்ளது.
அந்த இரத்தக் குழாய்கள் இடியப்பச் சிக்கல் போன்று ஒன்றோடு ஒன்று பின்னி, வளைந்து, மடிந்து, சுருண்டு சிறிய பை வடிவம் பெற்று விரையை தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இருதயத்திலிருந்து விரையை நோக்கி வரும் சுத்திகரிக்கப்பட்ட இரத்தம், அதற்கென உள்ள விரையைச் சுற்றியுள்ள குழாய்களின் வழியாக விரையை கடந்து, மாசடைந்து மீண்டும் இருதயத்தை நோக்கிச் செல்லும்.
அவ்வாறு விரையைக் கடந்து செல்லுவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் அந்த குழாய்களில் எப்போதும் இரத்தம் தேங்கியிருக்கும் நிலை ஏற்படுகிறது. விரையை நோக்கி ஒரு திசையிலிருந்து எந்தளவு இரத்தம் வருகிறதோ அதே அளவு இரத்தம் எதிர் திசையில் அந்த விரையிலிருந்து வெளியேறிவிடுகிறது.
அவ்வாறு வெளியேறும் இரத்தம் ஏற்கனவே இந்த இரத்தக்குழாயில் தேங்கி இருந்த இரத்தம் என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும். இவ்வாறு விரையை சுற்றியுள்ள இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் கடந்து செல்தவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் இரத்தத் தேக்கத்தினை “Venous Plexus” என்று மருத்துவ துறையில் அழைக்கப்படுகிறது.
விரையைச் சுற்றியுள்ள இரத்தக்குழாயில் ஏற்படும் இந்த இரத்தத் தேக்கத்தால் விரையில் “வெட்ப நிலை கட்டுபாட்டுத்தன்மை” ஏற்பட்டு அதன் வெட்ப நிலை ஒரே சீராக இருப்பதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. இந்த விரையைச் சுற்றி நிணநீர் நாளங்கள் (Lymphatic Plexus) பின்னிப் பிணைந்து இருப்பதாலும் விரையின் வெட்ப நிலை சீராக இருப்பதற்கு உறுதுணை புரிகிறது. மிகப்பெரும் அமானிதத்தைச் சுமந்து கொண்டிருக்கும் உயிரணுக்களை இந்த விரை பாதுகாப்பாக உற்பத்தி செய்யவேண்டும் என்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு அற்புத அமைப்பாகும் இது.
இந்த இடத்தில் இறைவன் செய்துள்ள இன்னொரு அற்புதத்தையும் நம்மால் நினைத்துப் பார்க்கமால் இருக்க முடியவில்லை. விரையில் உள்ள இரத்தக்குழாய்களும், விந்து உற்பத்தியாகும் இடமும் அடுத்தடுத்த நெருக்கமாக இருந்தாலும் விந்து, இரத்தத்தில் கலந்து விடமுடியாதபடி மிகப் பெரிய தடுப்பை இறைவன் ஏற்படுத்தி, விந்துக்கென உள்ள அதனுடைய பிரத்யேக குழாயை சென்றடையும் விதத்தில் பாதுகாப்பாக ஆக்கி இருப்பது பிரமிக்கத்தக்க ஒன்றாகும்.
காரணம் தடுப்பு மட்டும் இல்லையெனில், விந்து இரத்தத்துடன் கலந்து மிகப் பெரும் ஆபத்துகளை சந்தித்து, அழிவிற்குள்ளாகி விடும். அதாவது விந்து இரத்தத்துடன் கலந்து விடும்போது, பாக்டீரியாக்கள் (நோய்கிருமிகள்) தன்னுள் புகுந்துவிட்டதாக கருதி இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் எதிர்ப்பு சக்தியை தோற்றுவித்து, விந்துவில் உள்ள எல்லா உயிரணுக்களையும் ஒன்றுவிடாமல் அழித்துவிடும்.
அது மட்டுமல்லாது இந்த எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் நிரந்தரமாகவே தங்கி, உயிரணுக்கள் உற்பத்தியாகும் போதல்லாம் அதனை அழித்துக் கொண்டே இருக்கும். அப்போது அந்த மனிதனுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விடும்.
தான் படைக்க விரும்பிய மனிதப்பிரதிநிதிகள் இந்த உலகில் வந்து சேர்வதற்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்புகள்தான் எத்தனை? எத்தனை? சுப்ஹானல்லாஹ்!
விலா எலும்பில்லாமல் பிறந்த குழந்தை
சவுதி அரபியாவில் புனித மக்காவில் உள்ள அலவி தூனிசி என்ற தனியார் மருத்துவ மனையில் வினோதமான முறையில் விலா எலும்பில்லாத ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும், விரை அதற்குரிய பையை நோக்கி இறங்காமலும், சிறுநீர் வழி அடைபட்ட நிலையிலும் குறையுடன் பிறந்த இந்த குழந்தையை ஆய்வு செய்த குழந்தை சிறப்பு மருத்துவ நிபுணர், முஹம்மது அப்துல் கரீம் அவர்கள், 40 ஆயிரம் குழந்தையில் ஒரு குழந்தை இவ்வாறு பிறக்கிறது, பெண் குழந்தையை விட ஆண் குழந்தைக்குத்தான் அதிகமாக இது ஏற்படுகிறது.
இது எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரைக்கும் மருத்துவ துறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுநீர் வழி அடைக்கப்படுவதால் இது போன்ற பிறவிக்குறைகள் ஏற்பட வாய்ப்பிருக்குமோ என அணுமானிக்கப்படுகிறது என்று கூறுகிறார். இது போன்ற குறையுடைய குழந்தைகள் இறந்தே பிறக்கிறது அல்லது பிறந்த சில மாதங்களில் இறந்து விடுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
நன்றி: அல்பிலாத் அரபி நாழிதள், ஜித்தா பதிப்பு, 23-10-02.
குறிப்பு: கர்ப்பப்பையில் குழந்தை உருவாகும் ஆரம்ப நிலையில் விரை முதுகந்தண்டிற்கும், விலா எலும்களுக்குமிடையில் இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி அடைந்து பிறப்பதற்குள் விரை அதற்குரிய பையில் வந்து தங்கிவிடும். தற்போது இருப்பது போல. இவ்வாறு விரை இறக்கம் நடைபெற வில்லையானால் குழந்தையின் மரணத்திற்கே அது காரணமாக ஆகிவிடுகிறது என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.
source: http://www.islamkalvi.com/portal/?p=4654
இன்ஷா அல்லாஹ் தொடரும்