Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.(rd)
பயங்கரவாதம் என்பது தன்னுடைய கொள்கைக்காக பயமுறுத்துதலில் ஈடுபட்டு பொதுமக்களின் உடலுக்கும், உடமைக்கும் ஊறு செய்து வன்முறையில் ஈடுபடுவதாகும். பயங்கரவாதத்தினை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
1) தனிப்பட்டவர் செயல்
2) ஒரு குழுமத்தின் செயல்
3) ஒரு நாட்டின் செயல்
4) பல நாடுகளின் செயல்
1) தனிப்பட்டவர் செயலுக்கு முன் உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பல்கலைகழகத்தில் தன் சக மாணவர்கள் மீது வெறுப்புக் கொண்டு அந்த மாணவர்களை மிரட்டிப் பாடம் புகுத்தும் நோக்குடன் முன்னேற்பாடாக வீடியோவில் தனது செயலைப் பதிவு செய்து முக்கிய பத்திரிக்கை செய்தி நிறுவனத்திற்கு அதை அனுப்பி விட்டு கையில் இரண்டு நவீன துப்பாக்கியுடன் அந்த பல்கலைக் கழகத்தில் நுழைந்து சக மாணவ, மாணவியர் என்று நிதானம் பாராது சுட்டுத்தள்ளி தன்னையும் மாய்த்துக் கொண்ட நிகழ்ச்சி தான் தனிப்பட்டவர் பயங்கர வாதமாகும்.
அதேபோன்று ஒரு பேராசிரியையும் சமீபத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உரிய மதிப்புத்; தரவில்லையென்று இந்திய பேராசிரியர் உள்பட நான்கு பேர்களை சுட்டுக்கொன்றும் உள்ளார் அதுவும் தனிப்பட்ட செயலே ஆகும்
2) ஒரு குழுமம், ஒரு வகுப்பினர் ஈடுபடும் செயல்: ஜாதி, மத, இன, மொழி, இடம் சம்பந்தமான பயங்கரவாதத்திற்கு நாகாலந்து, மணிப்பூர், அஸ்ஸாம் விடுதலை முன்னணிகள், நக்சலைட் வன்முறைகள், இந்து முன்னணியினர், பாபரி மஸ்ஜித் இடிப்புப் போன்ற செயல், முஸ்லிம் முகாஜியினர் அதற்கு பதிலடியாகக் கொடுக்கும் வன்முறை, ஆர்,எஸ்,எஸ், ஸமதா சான்ஸ்தா அமைப்பின் மலேகான் போன்ற குண்டு வெடிப்புகள், சிவசேனா அதன் பிரிவான ராஜ்தாக்கரே வடஇந்தியர்களுக்கான வன்முறைகள், மங்களூர் பண்பாடு காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் தடியெடுத்துத் தாக்கும் செயல் பாடுகள் ஆகியவை தான் ஒரு குழுமம் ஈடுபடும் வன்முறைகள்.
இது போன்ற பயங்கரவாதத்தால் சொந்த நாட்டிலே இந்திய குடிமக்கள் அன்னியராக சித்தரிக்கப்படுவது தான் அவர்கள் கொள்கை என்றால் அது மிகையாகாது. ராஜா ரவி வர்மா, மைக்கேல் ஆஞ்சலோ போன்ற சிறந்த ஓவியர் வரிசையில் நவீன உலகத்தில் கொடிகட்டிப் பறந்த மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட, மீசை, தாடி நரைத்தாலும் ஆசை மறையாது என்று 85 வயதிலும் பாலிவுட் பிரபலம் மாதிரி திக்ஷிட்டோடு இணைந்து பேசபட்ட எப்.எம்.ஹூசைன் இன்று தன் சொந்த நாட்டில் வசிக்க இடமில்லாது நாடோடிபோல 95 வயதானாலும் இந்துத்துவா பயங்கரவாதத்திற்குப் பயந்து கத்தார் பிரஜா உரிமையினை பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
காரணம் ஹிந்துக் கடவுள்களை கேலியாக தனது ஓவியத்தில் சித்தரித்தார் என்றக் குற்றச்சாட்டு தானே. ஆனால் அதே மதத்தவர் மட்டும் கிரேசி மோகன் நாடக நடிகர், ‘சாக்லேட்கிருஷ்ணா’ என்ற சிரிப்பு நாடகம் நடத்துகின்றனர், கவுண்டமணி-செந்தில் ஜோடி எமதர்மன்-சித்திரகுப்தன் பூலோக விஜயம் என்ற கேலி சினிமாவும், கமல் சிவன் வேடத்தில் பூம்-பூம் மாடு மேல் உட்கார்ந்து நகைச்சுவை சினிமா நிகழ்ச்சி கண்டு சிரிக்கிறார்கள். அவர்கள் மேல் எந்தக் கண்டனமும் எழுப்புவதில்லை. அது ஏன்? சற்றே யோசிக்க வேண்டாமா? போதை பொருள் கடத்தல் குழுக்கள் கொலம்பியா நாட்டில் ஒரு அரசினையே நடுங்க வைக்கும் அளவிற்கு நடத்தும் கொலைகள் பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஜப்பான் நாட்டில் சின்-பின் என்ற மத தீவிரவாதக்கும்பல் நச்சுக்கெமிக்கல் புகையினை ஜப்பான் பாதாள ரயில் நிலையத்தில் பரவவிட்டு பலரைக் கொலை செய்த சம்பவமும் மத குழுவின் பயங்கரத்திற்கு எடுத்துக் காட்டாகும். ஆப்பிரிக்கா ருவாண்டா நாட்டில் டூட்சி இனத்தவர் நடத்திய தாக்குதல் இன பயங்கரவாதத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
3) ஒரு நாட்டின் பயங்கரவாதம்: இஸ்ரேயில் நாட்டினர் ஃபாலஸ்தீனர் மீதும் மற்றும் செர்பியர,; போஸ்னியன் முஸ்லிம் மக்கள்; மீது நடத்திய தாக்குதலை சிறந்த உதாரணங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்:இரண்டாம் உலகப் போரில் வெற்றிகண்ட களிப்பில் கூட்டுப்படையினரின் தயவில் உருவாக்க்ப்பட்ட நாடு இஸ்ரேயில் ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியினை விரட்டிய’ கதையாக அப்பாவி ஃபாலஸ்தீன மக்களின் நிலங்களை அபகரித்ததோடு மட்டுமல்லாது. அவர்களை எதிர்க்கும் மக்கள் மீது உடலில் பட்டதுடன் பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸ் குணடுகளையும் வீசி உயிர் சேதம் விளைவிக்கும் செயல்தான் ஒரு நாடு உpளைவிக்கும் பயங்கரவாத செயலாகும்.
இதில் என்ன வேடிக்கையென்றால் அந்த நாட்டினரின் பயங்கரவாத செயல் ஃபாலஸ்தீன நாட்டோடு மட்டும் நின்று விடவில்லை மாறாக துபாய் நாட்டிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற காசா நகரைச்சார்ந்த ஹமாம் அமைப்பின் முக்கியத்தலைவர் மெகமூதை இங்கிலாந்து, ஆஸ்ரியா, ஆஸ்திரேலியா, ஸவிட்சர்லாந்து, ஜெர்மனி, இட்டாலி நாட்டினரின் போலி பாஸ்போர்ட்டுகளில் சென்ற இஸ்ரேயிலின் ‘மொசாத்’ உளவுப்படையினர் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மூச்சுத்திணர சாகடித்தது விட்டு துபாயிலிருந்து தப்பியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பயங்கரமான செயல்களில் அடுத்த நாட்டில் நரிதந்திரத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அறியலாம்.
செர்பியா நாட்டில் அர்மேனிய முஸ்லிம் மக்களை வெறிநாய்கள் போல வேட்டையாடியதோடு மட்டுமல்லமால் அவர்கள் வீடுகளையும் தீக்கிரையாக்கினர். ஆதற்காக அதன் தலைவர்கள் ஜெனீவா பன்னாட்டு நீதிமன்ற சிறைச்சாலையில் வாடுகின்றனர்.
4) பல நாடுகளின் கூட்டு பயங்கரவாதம்: 2001ஆண்டு இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்டதிற்குக் காரணம் என்று ஆப்கானிஸ்தான் மீதும், உயிர்கொல்லி ஆயுதம் வைத்திருந்ததாகச் சொல்லி இராக் மீதும் உலக நாடுகள் சபை ஒப்புதல் இல்லாமல் படையெடுத்து தாலிபான்களை ஒழிக்கிறோமென்று அப்பாவி மக்கள் மீது ஆளில்லா குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் போடுவது தான் பல நாடுகள் சேர்ந்த நேட்டோ படை என்ற ஐரோப்பிய நாடுகள் அமைப்பு அமெரிக்கா. இங்கிலாந்து நாடுகளுடன் சேர்ந்து ஈடுபடும் பயங்கரவாதம் செயல்களாகும்.
அப்பாவி மக்கள் வாகனத்தில் செல்லும் போதும், திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபட்டபோதும், இறந்த வீட்டில் அனுதாபத்திற்காக கூடியிந்த மக்கள் மீதும் குண்டு வீசிக் கொன்ற பின்பு கூட்டுப்படை தலைவர் ‘மன்னிப்புக்கேட்டார்’; என்றால் போன உயிர் வந்துவிடுமா நண்பர்களே? கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘கொலை பாதகம் சும்மா விடாது’, என்று அதே போன்ற நிலைதான் அமெரிக்கா நாட்டில் ஜார்ஜ் புஷ் கட்சியான ரெபப்ளிகன் கட்சி ஜனாதிபதித்தேர்தலில் அமெரிக்கா நாட்டில் மண்ணைக் கவ்வியது.
இங்திலாந்து நாட்டில் பிரதமர் பதவியிழந்ததோடு மட்டுமல்லாது இன்றைய(1. 3. 2010 பக்கம் 13 ல்) இந்து ஆங்கிலப்பத்திரிக்கையில், ‘ஈராக் யுத்தத்திற்குப் பின்பு முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரின் உடல், மன நிலை மிகவும் பாதித்தவர் போல காட்சி தருகிறார். கடுங்குளிரிலும் தூக்கம் வராது நடுராத்திரியிலும் எழுந்து உட்கார்ந்து கொள்கிறார’;, என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தான் கிராம பழமொழியான ‘கொலை பாவம் சும்மாவிடாது’ என்பது எவ்வளவு உண்மையானது என்பதிற்கு டோனி பிளேயர் கதை ஒரு காரண கதையாகுமல்லவா?
இன்றைய சூழ்நிலையில் சர்வதேச நாடுகள் ஒத்துக் கொள்ளக்கூடிய குற்றவியல் சட்டம் பயங்கரவாதத்திற்கு இல்லை. ஆனால் குர்ஆனின் போதனையில் அப்பாவி மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக் கூடாது என்று ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹுதைபியா’ கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு வீரர்க்ள் வெற்றிக்களிப்பில் வேட்டையாடாது மிகுந்த தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சிறந்த எடுத்துக்காட்டாகும். அதற்கு பின்பு வந்த கலிபாக்கள், அவர்கள் தளபதிகள் மற்ற நாடுகள் மீது படையெடுத்தபோது உயிர் பிராணிகளுக்கும், பயிர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயது முதிந்தோருக்கும் கடுகளவு கொடுந்துண்பம் விளைவிக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
பயங்கரவாதமென்று உலகில் முதன் முதலில் 1795 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த புரட்சியில் புரட்சியாளர் மீது ஆளுங்கட்சியான ஜேக்கோபினர் நடத்திய பயங்கர தாக்குதலே முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் ஐ.நா. என்ற உலக நாடுகள் சபை தீவிரவாதம் பற்றி விளக்கம் அளிக்கையில், ‘ வேண்டுமென்றே பொது மக்களுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல் என்று அறிவித்துள்ளது. ஆனால் படையெடுக்கும் நாடு மீது உணர்வுப் பூர்வமான எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவது தீவிரமாகாது’ என்றும்; விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறென்றால் அமெரிக்காவும்-இங்கிலாந்தும் பொய்யானக் காரணத்தினைத்தின் பேரில் வேண்டுமென்றே உலக நாடுகள் சபை அனுமதி பெறாமல் போர் தொடுத்தது குற்றவியல் சட்டப்படி சர்வதேசக் குற்றம் தானே! அதன்பின்பு உயிர் கொல்லி ஆயுதம் ஈராக்கிலில்லை, எதிரியாக சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி ஸதாம் ஹூசைனையும் தூக்கிலிட்ட பின்பு அமெரிக்க-இங்கிலாந்து படைக்கு அங்கு என்ன வேலை? அவர்களை வெளியேற்ற உலகநாடுகள் சபை நடவடிக்கை எடுக்காது வேடிக்கைப் பார்ப்பது பக்கவாத நடவடிக்கை என்றால் சரிதானே தானே!
அதன் பின்பு ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினால் அதனை தீவிரவாத நடவடிக்கை என்றும் அவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதும் பக்கவாத நடவடிக்கையாகாதா? நீதி தேவதை போன்று இருக்கின்ற உலக நாடுகள் சபை வல்லரசு நாடுகளாக அமெரிக்காவும், இங்;கிலாந்தும், நேட்டோ நாடுகளும் இருப்பதால் உலக நாடுகள் சபை வாய் பொத்தி-கைகட்டி மவுனியாக இருக்கலாமா?
உலக நாடுகள் சபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்தால் உலக மக்கள் எள்ளி நகையாடி பக்கவாத நோயால் உலக நாடுகள் சபை செயலிழந்து விட்டதோ என்று சந்தேகப்படலாமெல்லவா?
1) ஆகவே உலக நாடுகள் சபை பயங்கரவாதத்திற்கான குற்றவியல் சட்டத்தினை கூடிய சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டும்.
2) உலக நாடுகள் சபையின் அங்கீகாரமில்லாது எந்த நாடும் அடுத்தநாட்டின் மீது படையெடுக்கக்கூடாது. என்ற தீர்மானத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். எந்த வல்லரசு நாடும் தனது வீட்டோ என்ற தனி உரிமையினை பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக உபயோகிக்க முடியாது என்ற சட்டம் இயற்ற வேண்டும்.
3) உறுப்பு நாடுகளில் மதம், மொழி, இனம், இடம் சம்பந்தமாக பயங்கரவாத தாக்குதல் எந்த பிரிவினைவாத சக்திகள் நடத்தினாலும் கண்டனம் தெரிவிப்பதோடு, அந்த உறுப்பு நாடுகளை அப்படிப்பட்ட பிரிவினை பயங்கரவாத அமைப்பினை தடை செய்ய சட்டமியற்ற வற்புறுத்த வேண்டும்.
4) இஸ்லாமிய பெற்றோர் தங்கள் குழந்தைகளை தீவிரவாத அமைப்பில் சேராமலும், அந்த அமைப்புகளுக்குப் பலியாகாமலும் கண்காணிக்க வேண்டும்.
5) சுனாமி பேரலை 2004 டிசம்பர் 24ந்தேதி தமிழகத்தினைத் தாக்கியபோது கடலூர், பரங்கிப்பேட்டை, நாகை போன்ற ஊர்களில் எப்படி முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மதம் பாராது உதவி செய்தார்களோ அதேபோன்று கூப்பிட்ட குரலுக்கு இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிற்கு ரத்ததானம், உடலுலைப்பு, மற்றும் பொருள் உதவி செய்கின்ற இளைஞர்கள் பதிவேடு தயார்நிலையில் வைத்து உதவுவது மூலம் மக்கள் சேவைக்கு தங்களை தயார் படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
posted by: By: Muduvai Hidayath