நுஃமான் இப்னு பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”நிச்சயமாக அனுமதிக்கப்பட்டது, தெளிவாக உள்ளது. நிச்சயமாக தடுக்கப்பட்டவையும் தெளிவாக உள்ளது. இவ்விரண்டுக்குமிடையே சந்தேகமானவைகளும் உள்ளன. இவற்றை மக்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
சந்தேகமானவற்றை விட்டு ஒருவன் தவிர்ந்து கொண்டால், அவன் தன் மார்க்கத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொண்டவராவார். சந்தேகமானவற்றில் ஒருவன் மூழ்கிவிட்டால், அவன் தடுக்கப்பட்டவற்றிலும் மூழ்கி விடுவான்.
அவன்; வேலியைச் சுற்றி (ஆடுகளை) மேய்க்கும் மேய்ப்பாளன் போலாவான். அந்த வேலியையே அவை மேய்ந்து விடவும் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு வேலி உண்டு.
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வேலி என்பது, அவனது தடை செய்யப்பட்டவைகளாகும். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுதும் கெட்டுவிடும்.
அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் ‘இதயம்’ என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”உங்களில் ஒருவர் மரணத்தை விரும்ப வேண்டாம். அவர் நல்லவராக இருந்தால், (நற்செயலை) அவர் அதிகமாக்கிக் கொள்ளக்கூடும். தீயவராக இருந்தால் (தவறுக்காக) பிழை பொறுக்கத் தேடக்கூடும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது:
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”உங்களில் ஒருவர் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வேண்டி அதைக் கேட்டு பிரார்த்திக்க வேண்டாம். அவர் மரணித்து விட்டால், அவரின் செயல் அறுந்து விடும். நிச்சயமாக மூஃமினுக்கு அவனது வயது நல்லதையே அதிகப்படுத்தும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”உங்களில் ஒருவர், தனக்கு ஏற்பட்ட துன்பம் காரணமாக மரணத்தை விரும்ப வேண்டாம். அவருக்கு (மரணத்தை விரும்பும்) அவசியம் ஏற்பட்டால், ‘இறைவா! உயிர் வாழ்வது, எனக்கு சிறப்பாக இருந்தால், என்னை உயிர் வாழச் செய்வாயாக! மரணம் எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்!” என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)