கருக்கலைப்பு செய்வது குற்றமா?
முஹம்மது இன்ஃபாஸ்
திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது.
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (திருக்குர்ஆன்6:140)
வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அது, நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே.
பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந் தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப் படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (திருக்குர்ஆன்6:151)
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (திருக்குர்ஆன்17:31)
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து;அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன்60:12)
என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (திருக்குர்ஆன்81:8,9)
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்ற வசனம் அருளப்பட்ட காலத்தில் கருவில் வைத்து அழிக்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை. குழந்தையைப் பெற்ற பின்னர் கொல்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த வசனங்கள் இதைத் தான் நேரடியாகக் குறிக்கின்றன.
ஆனால் குழந்தையாக உருவாவதற்கு முன் அதை அழிப்பது குழந்தையைக் கொல்வதில் அடங்குமா? என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டும்.
இஸ்லாத்தின் பார்வையில் உயிர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
உயிரினத்தின் இயக்கத்துக்கான உயிர் ஒரு வகை. மனிதன் என்பதற்கான உயிர் இன்னொரு வகை.
மனிதன் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஒரு வகையான் உயிர் மட்டுமே உள்ளது. ஆனால் மனிதனிடம் மேற்கண்ட இரண்டு வகை உயிர்களும் உள்ளன.
…உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 39:42)
அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (திருக்குர்ஆன் 6:60)
மரணிக்கும் போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் தூக்கத்தின் போது உயிர்களைக் கைப்பற்றுவது நமக்கு புரியவில்லை.
தூக்கத்தின் போது உயிர்கள் கைப்பற்றினால்
எப்படி மூச்சுவிட முடிகின்றது?
எப்படி புரண்டு படுக்க முடிகிறது?
எறும்பு கடித்தால் எப்படி நம்மை அறியாமல் எப்படி தட்டி விட முடிகிறது?
உண்ட உணவு எப்படி ஜீரணமாகிறது?
இது போல் உடலில் பல இயக்கங்கள் நடை பெறுவதை நாம் பார்க்கிறோம்.
இந்த வகையில் பார்க்கும் போத் தூங்குபவரின் உயிர் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.
அதே நேரத்தில் தூக்கத்தில் நாம் சிந்திப்பதில்லை. கவலைப்படுவதில்லை. திட்டமிடுவதில்லை. மனனம் செய்வதில்லை. இது போல் பல காரியங்கள தூக்கத்தில் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும் போது உயிர் இல்லை என்பது போல் இருக்கிறது.
மனித உயிர்களில் இரு வகைகள் உள்ளன என்பதை இந்த வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நாம் தூங்கும் போது கால்நடைகளைப் போன்ற உயிர் நமக்கு இருப்பதையும் மனிதனைப் போன்ற உயிர் நமக்கு இல்லாமல் போவதையும் நாமே உணர்கிறோம்.
நபி மொழிகளிலும் இரு வகையான் உயிர்கள் மனிதனுக்கு உள்ளன என்பது கூறப்பட்டுள்ளது.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது :
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங் கிணைக்கப்படுகின்றது.18பிறகு அதே போன்ற காலத்தில் (40நாட்களில் அட்டை போன்று) ஒரு கருக் கட்டியாக மாறுகின்றது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகின்றது.
பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகின்றான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்கு என் னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும்.
பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத் திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக் கொண்டு விடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்.)
ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத் திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) (புகாரி 3208, 3332, 6594, 7454)
நாற்பது நாட்களாக மூன்று கட்டங்கள் அதாவது 120 நாட்கள் கடந்த பின்னர் தான் உயிர் ஊதப்படுகிறது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்னரே உயிர் இருந்ததால் தான் அது மூன்று நிலைகளை அடைய முடிந்தது. வளர முடிந்தது. மனிதன் என்பதைப் பிரித்துக் காட்டும் உயிர் 120வது நாளில் தான் ஊதப்படுகிறது என்பதும் அதற்கு முன் இருந்தது வேறு வகையான் உயிர் என்பதும் இதில் இருந்து தெரிகிறது.
பின் வரும் திருக்குர்ஆன் வசனமும் இதைத் தெளிவாகக் கூறுகிறது.
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாகஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (23:14திருக்குர்ஆன்)
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்ப டுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (திருக்குர்ஆன்22:5)
குழந்தையைக் கொல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறினால் அது எப்போது முதல் குழந்தையாக ஆகிறது என்பதை நாம் சிந்திக்கும் கடமை உள்ளது.
120 நாட்களுக்கு முன் கருவை கலைத்தால் அது குழந்தையை கொன்றதாக ஆகாது என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
காண்டம் போன்றவற்றைப் பயன்படுத்தும் அதில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் குழந்தையாக் உருவாகாமல் நாம் தடுக்கிறோம். இதனால் குழந்தையை கொன்றதாக ஆகாது. அது போல் அடுத்த மூன்று நிலைகளில் வளர்ச்சியடையும் போதும் ஆகாது.
ஆனால் மனிதர்கள தனக்குக் கேடு விளைவிப்பவற்றைச் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர். உருவான குழந்தையைக் கலைப்பது பெண்ணுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள். அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்னுள்ள கருவை அழிப்பதும் தடுக்கப்பட்டதாகும். குழந்தையைக் கொல்வது என்ற அடிப்படையில் அல்ல.
உயிருக்கு ஆபத்து அல்லது தாயின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.
அவ்வாறு ஏற்கத்தக்க காரணம் இல்லாமல் இதைச் செய்திருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேட வேண்டும். அல்லாஹ் எத்தகைய பாவத்தையும் மன்னிப்பவனாக இருக்கிறான்.
…அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (திருக்குர்ஆன் 4:17,18)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (திருக்குர்ஆன் 39:53)
”Jazaakallaahu khairan” source: http://kadayanalluraqsha.com/?p=2873 onlinepj.com