ஆண் பெண் இருவரும் மல்யுத்த வீரர்களாய் நின்றால் வாழ்க்கை குத்துப்பட்டே செத்துப்போகும். வீரத்தால் சாதிப்பது எதுவும் நிலைக்காது. அன்பால் சாதிப்பது மட்டுமே என்றென்றும் தொடரும்.
ஆண் பெண்ணைச் சார்ந்து இருத்தலும் பெண் ஆணைச் சார்ந்து இருத்தலுமே இல்லறம். சார்ந்திருப்பதே காதல். சார்ந்திருத்தலே தாய் பிள்ளை பாசம். சார்ந்திருத்தலே உலக உறவுகளின் ஆணிவேர். சார்ந்திருப்பது அடிமைத்தனமல்ல தூய்மையான அன்பு.
தன் வலிமையையெல்லாம் மீறி நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன் என்று சொல்லுமிடத்து வெள்ளைக்கொடி பறக்குமே!தொட்டதற்கெல்லாம் நீ உயர்வா நான் உயர்வா? என்று வீரம் பேசினால் வாழ்க்கை வாடி வதங்கி விடும்.
கல்யாண வாழ்க்கையைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள்;
காரில் தன் மனைவியுடன் வந்திறங்கும் ஒருவன் ஓடிப்போய் தன் மனைவிக்காக கார் கதவை பவ்யமாகத் திறக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் ஒன்று, அவள் மனைவி புதுசு என்று அர்த்தமாம் அல்லது அவன் கார் புதுசு என்று அர்த்தமாம்.
”கல்யாணம்” என்பது ஒரு சொல் அல்லவாம். வாக்கியமாம். ”Marriage is not a word. It is a sentence” என்று நண்பன் ஆங்கிலத்தில் சொன்னபோதுதான் ”Sentence” என்பதற்கு தண்டனை என்ற மற்றொரு பொருள் உண்டென்பது புரிந்தது.
”கல்யாணத்தின் போது ஒருத்தன் தன் Bachelor’s பட்டத்தை இழக்க, வந்தவளோ Master’s பட்டத்தை பெற்று விடுகிறாள்” என்கிறார்கள். உண்மைதான். ஏகப்பட்ட இல்லத்தில் தாய்க்குலம்தானே மாஸ்டர்களாக இருக்கிறார்கள். உங்க வீட்லே எப்படிங்க? என்று நண்பர் ஒருவரிடம் கேட்டால் ”I am in total control, but don’t tell my wife” என்கிறார்.
சாக்ரடீஸ் சொல்கிறார், ”தாராளமாக கல்யாணம் பண்ணிக் கொள். நல்ல மனைவி கிடைத்தால் சந்தோஷக் கடலில் நீந்துவாய். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவவாதி ஆகி விடுவாய்”. சாக்ரடீஸ் தத்துவவாதி என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்தி.