இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (3)
டாக்டர் ஷேக் சையது M.D
[ மனித சந்ததிகளை விந்துவிலிருந்து படைத்த செய்தியை அல்லாஹ் சுமார் 15 இடங்களில் கூறுகிறான். 12 இடங்களில் நுத்ஃபா என்ற வார்த்தையையும், 3 இடங்களில் மாஉ என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறியுள்ளான்.
நுத்ஃபா என்பதற்கு சுத்தமான நீர் என்பது பொருளாகும். ஆணுடைய விந்து, எந்த வித மாசுகளும் சென்றடைந்திராத பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறுவதால் அதற்கு நுத்ஃபா என்ற பெயர் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆணுறுப்பிலிருந்து குதித்து வெளியாகும் வழுவழுப்பான திரவத்திற்கு விந்து எனப்படும்.
இந்த விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த வித்தையாகும். அற்பமான ஒரு துளி விந்துவில் பல அதிசயங்கள் நிகழ்த்தியிருப்பது அவனுடைய வியத்தகு அத்தாட்சிகளில் ஒன்றாகும்.
குதித்து வெளியாகும் நீர் என்று கூறப்பட்டிருப்பது சிறுநீரிலிருந்து விந்தை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே தெரிவு செய்து போடப்பட்ட வார்த்தை. சிறுநீருக்கு குதித்து வெளியாகும் தன்மையில்லை. விந்து மட்டுமே குதித்து வெளியாகும் தன்மையில் உள்ளதாகும். அந்த தன்மை ஏன் விந்திற்கு மட்டும் உள்ளது என்று சிந்தித்தால் அதிலும் அல்லாஹ் செய்துள்ள அறிவியலின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள முடிகிறது.
பெண்ணிடம் உள்ள கர்பப்பை மிக ஆழத்தில் இருப்பதால் அதனை நோக்கி செலுத்தப்படும் விந்து, சாதாரணமாக வேகமின்றி ஆண் உறுப்பிலிருந்து வெளியாகுமானால் அது கர்ப்பப் பையை சென்றடைவது சாத்தியக்கூறு குறைவு. குதித்த நிலையில் அழுத்தத்துடனும் வீரியத்துடனும் விரைவாக வெளியாகும் போதுதான் அந்த விந்து கர்ப்பப் பையில் சரியான இடத்தை நோக்கி சென்றடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.]
மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்?
கடந்த தொடரில் மண் கலவையிலிருந்து எடுக்கப்பட்ட மூலத்தில் முதல் மனிதர் படைக்கப்பட்டார் என்ற உண்மையைப் புரிந்து கொண்டோம். இந்த தொடரில் அவரது சந்ததிகளான மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் என்ற தகவல் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்வோம்.
முதல் மனிதர் படைக்கப்பட்டது போல அவரது சந்ததிகளையும் மண்ணின் மூலத்திலிருந்து நேரடியாக படைக்கப்பட வில்லை என்பது தெளிவான உண்மை. தொடர்ந்து உற்பத்தியாகும் மரபணுக்கள் வழியாக இனப்பெருக்கம் நடை பெற்றிருக்க வேண்டும்.
ஏனெனில் முதல் மனிதரைப் போலவே அவரது சந்ததிகளும் மண்ணின் மூலத்திலிருந்து படைக்கப்படுகின்றனர் என்றால் ஒவ்வொரு மனிதனின் படைப்பிற்கும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அது நடை முறைக்கு சாத்தியமற்றது.
எனவே மனிதர்களின் மரபணுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, மனிதர்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த மரப்பணுக்களை மனிதர்களிலிருந்தே உற்பத்தி செய்து, மனித சமுதாயத்தை படைத்திருக்க முடியும் என்பது நடைமுறையில் மட்டுமல்லாமல் அறிவியில் உலகிலும் ஒத்துக் கொள்ளப்படும் விஷயமாகும். அந்த மரப்பணுக்களால் மனித சந்ததிகள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் என்பதுதான் இந்த தொடரின் மையப் பொருளாகும்.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى
”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.” அல் குர்ஆன்: 49:13
இந்த வசனத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண், பெண்ணிலிருந்துதான் படைக்கப் பட்டனர் என்ற செய்தியை அறிந்து கொள்கிறோம். அதாவது மனிதர்கள் தொடர்ச்சியாக படைக்கப்படுவதற்கு தேவையான மரப்பணுக்களை ஆண் மற்றும் பெண்ணிடம் உற்பத்தி செய்து அதன் மூலம் மனித சமுதாயம் படைக்கப்படுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.
விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள்
களிமண்ணின் மூலச்சத்திலிருந்து முதல் மனிதரை படைத்த அல்லாஹ் அந்த முதல் மனிதரின் சந்ததிகளை அவரது விந்துவின் மூலத்திலிருந்து படைத்தான்.
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
”பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.” அல் குர்ஆன்: 32:8
மனித சந்ததிகளை விந்துவிலிருந்து படைத்த செய்தியை அல்லாஹ் சுமார் 15 இடங்களில் கூறுகிறான். 12 இடங்களில் நுத்ஃபா என்ற வார்த்தையையும், 3 இடங்களில் மாஉ என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறியுள்ளான்.
நுத்ஃபா என்பதற்கு சுத்தமான நீர் என்பது பொருளாகும். ஆணுடைய விந்து, எந்த வித மாசுகளும் சென்றடைந்திராத பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறுவதால் அதற்கு நுத்ஃபா என்ற பெயர் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆணுறுப்பிலிருந்து குதித்து வெளியாகும் வழுவழுப்பான திரவத்திற்கு விந்து எனப்படும்.
இந்த விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த வித்தையாகும். அற்பமான ஒரு துளி விந்துவில் பல அதிசயங்கள் நிகழ்த்தியிருப்பது அவனுடைய வியத்தகு அத்தாட்சிகளில் ஒன்றாகும்.
பல நூறு அறிவியல் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் முதன்முதலாக இயந்திர மனிதன் செய்யப்பட்ட போது, உலகமே வியப்பில் ஆழ்ந்து அது பற்றிய செய்திகள், ஊடகங்களில் பல மாதங்களாக தலைப்பு செய்திகளாக வெளி வந்து கொண்டிருந்தன. இயந்திர மனிதன் ஆற்றும் செயல்பாடுகள் குறித்து அதிசயங்களாக நாம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இயந்திர மனிதனை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு தனிமங்களும், கனிமப் பொருட்களும், முன் மாதிரியும் தேவைப்பட்டன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
ஆனால் அந்த இயந்திர மனிதனையும் உருவாக்கும் ஆற்றல்கள் உள்ள நிஜ மனிதனை எந்த முன் மாதிரியும் இல்லாமல் ஒரு துளி இந்திரியத்தில் படைத்திருப்பது பேசித்தீராத அதிசயமாக உள்ளது. விந்துவிலிருந்துதான் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும், அந்த விந்து எங்கிருந்து எவ்வாறு உற்பத்தியாகிறது, அதன் தன்மைகள் எவ்வாறு உள்ளது என்றும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு குர்ஆனில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பது அதிலும் பேரதிசயமாக உள்ளது. காரணம் மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் அதற்கான மூல விதை என்ன? என்பது பற்றிய அறிவு 18 ம் நூற்றாண்டு வரை அறிவியல் உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதியிதில்தான் இந்த உண்மை அறிவியல் அறிஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டு, அறிவியல் உலகிற்கு விளக்கப்பட்டுள்ளது.
குழந்தை உருவாகுவதற்கு ஆண் மற்றும் பெண்ணின் விந்து அவசியமானதாகும் என்ற அறிவையும் அதன் வெவ்வேறு நிலைகள் பற்றிய விளக்கத்தையும் 1940 ஆண்டுவாக்கில்தான் அந்த அறிவியல் அறிஞர்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் குர்ஆன் இந்த தகவலை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது. 49 வது அத்தியாத்தில் 13 வது வசனத்தில் ”மனிதர்களே! உங்களை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்” என்று கூறும் இறைவேதமான குர்ஆன், 76 வது அத்தியாயம் 2வது வசனத்தில் ”(ஆண், பெண் ஆகியோரின்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாம் படைத்தோம்” என்றும் கூறுகிறது. இதன் மூலம் குழந்தையின் உற்பத்திக்கு ஆண், பெண் ஆகிய இருவருக்கும் பெரும் பங்கு உள்ளது என்ற உண்மையை தெளிவு படுத்தியுள்ளது.
இந்த உண்மையை ஒரு சாதாரண மனிதனால் நிச்சயமாக சொல்லியிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அறிவியல் வாடையே இல்லாத 1400 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற செய்தியை ஒரு மனிதர் சொல்லியிருக்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. அனைத்தையும் அறிந்த அல்லாஹ் ஒருவனால்தான் சொல்லியிருக்க முடியும் என்பதை யாரும் மறுக்க இயலாது.
விந்து எவ்வாறு வெளிப்படுகிறது
فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ – خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ – يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
”ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.” (அல் குர்ஆன்: 86:5-7)
இந்த வசனத்தின் மூலம் மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்ற தகவலை சிந்தனையோடு பார்க்க வேண்டும் என்று மனிதனை இறைவன் தூண்டுகிறான். அவ்வாறு சிந்திக்கும் போது அற்பமான ஒரு துளி விந்துவில் அல்லாஹ் நிகழ்த்திய அற்புத ஆற்றல்களை புரிந்து கொண்டு, அந்த அல்லாஹ்வை ஏற்று, அவனை அஞ்சி வாழ்வதற்கு அது பெரிதும் துணை புரியும்.
மனிதன் மமதை கொண்டு, படைத்தவனை நம்ப மறுத்து கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என தான்தோன்றித்தனமாக நடந்து, அநியாயமும், அக்கிரமங்களும் செய்து கொண்டிருந்த போதுதான் இறைத்தூதர்களை அனுப்பி வைத்து, மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு தேவையான இது போன்ற தகவல்களை அவர்களுக்கு நினைவு படுத்தி, அந்த மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு சிறந்த வழியினை ஏற்படுத்தி தந்துள்ளான். இது போன்ற தகவலை ஒருவன் சிந்திக்கும் போது, தான் அற்பமானவன், தன்னை இந்த அழகிய தோற்றத்தில் வடிவமைத்து படைத்தவன் மிக சக்தி உள்ளவன் என்ற உண்மையை புரிந்துகொண்டு, தன்னைப்படைத்த அல்லாஹ்வை அஞ்சி வாழ்வான். அதுவே அல்லாஹ்வின் விருப்பமாகும்.
குதித்து வெளியாகும் நீர் என இறைவன் கூறியிருப்பது ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது ஆணிடமிருந்து வெளியாகும் திரவப் பொருளான விந்துவைத்தான் இங்கு குறிப்பிடுகிறான். சிலர் ஆண், பெண் இருவரிடமிருந்து வெளியாகும் நீர் என்று பொருள் கொள்கிறார்கள். அது தவறாகும். காரணம் பெண்ணினிடம் உற்பத்தியாகும் விந்து, குதித்து வெளியாகும் தன்மையுள்ளதல்ல, அவளிடம் உற்பத்தியாகும் விந்து வெளிக்கு வருவதில்லை. குதித்து, உடலை விட்டும் வெளியாகும் தன்மை ஆணுடைய விந்துவிற்கு மட்டும் உள்ள பண்பாகும். எனவே இந்த வசனத்தில் குதித்து வெளியாகும் நீர் என்பதற்கு ஆணின் விந்து என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
அதிசயப்பிறவியான ஆறறிவு மனிதனைப் படைப்பதற்கு காரணமாக அமைந்துள்ள விந்தை உற்பத்தி செய்து, அதனை முறையாக வெளிப்படுத்தி, உரிய இடத்தில் (கர்பப் பையில்) சேர்த்து வைப்பதில் இறைவன் காட்டும் அதிசயங்கள் தான் எத்தனை? எத்தனை?
சிறுநீர் வெளியாகும் வழியும், விந்து வெளியாகும் வழியும் ஒன்றாக இருந்தாலும் அந்த இரண்டும் கலந்து விடாமல் இருக்க அவன் ஏற்படுத்தியுள்ள தடைகள்தான் எத்தகையது?
சிறுநீர் வெளியாகும் போது விந்து வெளிப்படாத படியும், விந்து வெளியாகும் போது சிறுநீர் வெளிப்படாத படியும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் இரகசியத்தை அதனை படைத்த இறைவனே நன்கு அறிந்தவன். காரணம் மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டு, அமைக்கப்படும் பாதுகாப்பான குடிநீர் குழாய், சாக்கடையின் ஓரத்தில் இருக்கம் போது அந்த குழாயின் வழியாக கடத்தப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை மனித கச்திகளால் தடுக்க முடிவதில்லை. ஆனால் ஒரே உடலில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகும் திரவங்கள், ஒரே வழியாக வெளிப்பட்டாலும் எந்த காலத்திலும் அந்த இரண்டு திரவங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விடமுடியாத படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது இறை சக்தியல்லவா?.
குதித்து வெளியாகும் நீர் என்று கூறப்பட்டிருப்பது சிறுநீரிலிருந்து விந்தை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே தெரிவு செய்து போடப்பட்ட வார்த்தை. சிறுநீருக்கு குதித்து வெளியாகும் தன்மையில்லை. விந்து மட்டுமே குதித்து வெளியாகும் தன்மையில் உள்ளதாகும். அந்த தன்மை ஏன் விந்திற்கு மட்டும் உள்ளது என்று சிந்தித்தால் அதிலும் அல்லாஹ் செய்துள்ள அறிவியலின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள முடிகிறது.
பெண்ணிடம் உள்ள கர்பப்பை மிக ஆழத்தில் இருப்பதால் அதனை நோக்கி செலுத்தப்படும் விந்து, சாதாரணமாக வேகமின்றி ஆண் உறுப்பிலிருந்து வெளியாகுமானால் அது கர்ப்பப் பையை சென்றடைவது சாத்தியக்கூறு குறைவு. குதித்த நிலையில் அழுத்தத்துடனும் வீரியத்துடனும் விரைவாக வெளியாகும் போதுதான் அந்த விந்து கர்ப்பப் பையில் சரியான இடத்தை நோக்கி சென்றடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும், இந்த விந்தில் பல கோடி உயிரணுக்கள் உள்ளன. அவைகள் சுயமாக நகர்ந்து முன்னேறும் தன்மை உள்ளவை. எனினும் நகர்ந்து செல்லும் அதன் வேகம் மிகக் குறைவானதே. மேலும் சுமார் 15 நிமிடம் மட்டுமே உயிர் வாழும் தன்மையுடைது. மேலும் உற்பத்தியாகும் உயிரணுக்களில் 20-30 வீத உயிரணுக்கள் மட்டும்தான் முழு வளர்ச்சியடைந்ததாகவும், நகர்ந்து செல்லும் வீரியமும் உடையதாகும்.
இந்த குறுகிய கால அவகாசத்திற்குள் கர்பப்பை குழாயை (Fallopian Tube) சென்றடைய வில்லையானால் அந்த உயிரணுக்கள் செத்துப் போய்விடும். விந்து குதித்து வெளியாகுவதால் அது சுமந்து வரும் பெரிய அமானிதமான மனித உயிரணுக்களை விரைவாக உள்ளே தள்ளி, அந்த உயிரணுக்கள் செல்ல வேண்டிய இலக்கான கர்ப்பப்பை குழாயை (Fallopian Tube) விரைவில் சென்றடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. வீரியமின்றி, சாதாரணமாக விந்து வெளியாகுமேயானால் உயிரணுக்கள் சேர வேண்டிய இலக்கை சென்றடையும் வாய்ப்புகள் குறைந்து, செல்லும் வழியிலேயே செத்து மடிந்து விடும்.
மேலும் ஓரு மனித உடலின் சராசரி வெட்ப நிலையில் 37 டிகிரியாகும். ஆணுறுப்பிற்கு கீழே இருக்கும் இனவிருத்தி உயிரணுக்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் விதையின் வெட்ப நிலை, உடலின் வெட்ப நிலையை விட சுமார் 3-4 டிகிரி குறைவாகவே இருக்கும். காரணம் விந்தில் இருக்கும் பல கோடி உயிரணுக்கள் (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்.) 34 டிகிரி வெட்ப நிலையில் தான் உயிர் வாழ முடியும். வெட்ப நிலை அந்த அளவைவிட சற்று அதிகரிக்கும் போது அந்த உயிரணுக்களால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும்.
விந்து சிறுநீரைப் போல சாதாரணமாக வெளிப்படுமேயானால் ஆணுறுப்பில் உள்ள கூடுதல் வெப்ப நிலையாலும், சிறுநீரின் வேதிய பொருட்களாலும் அந்த விந்தில் உள்ள உயிரணுக்கள் வரும் வழியிலேயே செத்துபோய்விடும். அதனை கருத்தில் கொண்டுதான் பல கோடி உயிரணுக்களை சுமந்து வரும் விந்தை குதித்து விரைவாக வீரியத்துடன் தனித்து வெளியேறும் தன்மையில் படைத்துள்ளான் இறைவன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
”Jazaakallaahu khairan”