அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார்.
”நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு ‘இன்னாருக்கு இவ்வளவு‘ என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”விபச்சாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது”. (நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”அதிகம் சொத்து உள்ளதால், செல்வம் என்பதில்லை. எனினும் (இருப்பதைப் போதுமாக்கும்) மனதளவில் உள்ள செல்வம் தான் செல்வமாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து, அவருக்குப் போதுமான அளவுக்கு செல்வம் வழங்கப்பட்டு, அவருக்கு தான் தந்துள்ளதை போதுமாக்கிக் கொள்ளும் குணத்தையும் அல்லாஹ் வழங்கி விட்டால், அவர் வெற்றி அடைந்து விட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (முஸ்லிம்)
ஹகீம் இப்னு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”(கொடுக்கும்) உயர்ந்த கை, (வாங்கும்)தாழ்ந்த கையை விட சிறந்ததாகும். உன் பொறுப்பில் உள்ளவர்களிடம் (உன் உதவியை) ஆரம்பிப்பீராக! தர்மத்தில் சிறந்தது, தேவைக்குப் போக உள்ளதில் ஆகும். ஒருவர் பேணுதலாக நடக்க விரும்பினால், அல்லாஹ் அவரை பேணுதலாக்கி வைப்பான். ஒருவர் பிறரின் தேவை இல்லாமல் வாழ விரும்பனால் அல்லாஹ் அவரை செல்வந்தராக்குவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்”.(புகாரி)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரில் இருந்த நிலையில் தர்மம் செய்தல் பற்றியும் யாசகம் கேட்பதை விட்டும் பேணுதலாக இருப்பது பற்றியும் நினைவூட்டியவர்களாக, ”மேலே உள்ள கை, கீழே உள்ள கையை விட சிறந்ததாகும். மேலே உள்ள கை, கொடுக்கும் கையாகும். கீழே உள்ள கை, யாசகம் பெறும் கையாகும்;” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)