9 ஆசிய நாடுகளில் சமீபகாலமாக பணத்துக்காக சிசேரியன் மூலம் மகப்பேறு செய்யும் மனிதநேயமற்ற செயல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை சிசேரியன் மூலமே பிறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சுயப்பிரசவத்தால் கர்ப்பிணிகளுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் உயிருக்கும் ஆபத்து மிக மிகக் குறைவு. இதனால் கூடுமானவரை சுயப்பிரசவத்துக்கே முயற்சிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
ஒருவேளை, தாய் அல்லது சேய் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கேனும் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் சிசேரியன் செய்யவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் செய்துகொள்ளலாம். இதை தவிர்க்க இயலாது. ஆனால் அவசியமே இல்லாமல் சிசேரியன் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் சிசேரியன் பிரசவம் அதிகபட்சம் 15 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால் இந்த அறிவுரையெல்லாம் ஆசிய நாடுகளில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் காற்றில் பறக்கவிட்டு பணத்துக்காக சிசேரியன் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 9 ஆசிய நாடுகளில் 2007-08 ஆண்டில் மட்டும் சிசேரியன் பிரசவம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆசிய நாடுகளில் கம்போடியா, இந்தியா, ஜப்பான், நேபாளம், பிலிப்பின்ஸ், சீனா, இலங்கை, வியத்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிசேரியன் பிரசவம் அதிகமாகவுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை குஜராத், மத்தியப்பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் சிசேரியன் அதிகமாக நடக்கிறது. தில்லி மற்றும் மும்பை நகரில் 65 சதவீத குழந்தைகள் சிசேரியன் மூலம்தான் பிறக்கின்றன.
இவற்றில் பெரும்பாலான சிசேரியன் தேவையானதல்ல; பணத்துக்காகவே நடைபெறு கின்றன என்பதே கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்று மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
9 ஆசிய நாடுகளில் உள்ள 122 மகப்பேறு மருத்துவமனைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதி, இங்கு மகப்பேறு நடைபெற்ற பெண்களின் மருத்துவ ஆவணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரியவந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
-மாற்று மருத்துவம் செய்தியாளர்
M.RISHAN SHAREEF