இஸ்லாத்தைத் தகர்க்க முயலும் ஸூஃபித்துவம்
ஏ.சீ முஹம்மது ஜலீல் மதனீ
[ சூஃபித்துவ இப்னு அரபியின் கவிதையில்;’ ‘மனிதனே கடவுள். கடவுளே மனிதன் இப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது?”
”நீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும் இரண்டுமே ஒன்றுதான் இப்படியிருக்க யார் யாரை வணங்குவது.?” (அல்புதூஹாத்துல் மக்கிய்யா213 )
”என் மதமும் என் மாற்றுமத நன்பனின் மதமும் ஒரே மதமே என்றில்லாவிட்டால் என்னால் தூங்க முடியாது. என்னுள்ளம் எல்லா மதங்களையும் ஒன்றாகவே நோக்கும் நிலைக்கு வந்து விட்டது. அதிலே கிறிஸ்தவப் பாதிரிகளுக்கும் இடமுண்டு. சிலை வணங்கிகளுக்கும் இடமுண்டு.கஃபாவுக்கும் இடமுண்டு. அது ஒரே நேரத்தில் தௌராத்தாகவும் குர்ஆனாகவும் இருக்கின்றது
ஒரு மனிதன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதும் அல்லாஹ்வுடனேயே உறவு கொள்கின்றான் … நான் அவனை அல்லாஹ்வை வணங்குகின்றேன் அவன் என்னை வணங்குகின்றான். ( ஸூஃபிய்யா 17 )
இக்கொள்கையில் வீழ்ந்து கிடக்கும் சில ஆலிம்கள் செல்லாத பயணச்சீட்டை வைத்துக்கொண்டு மறுமை என்னும் மகத்தான ஊருக்கு பயணிக்கும்முயற்சியை காணும்பொழுது, பரிதாபம்தான் உண்டாகிறது.
அதே சமயம் இவர்களால் அநியாயமாக வழி கெடுக்கப்படும் அப்பாவி பொது மக்களுக்கு உண்மையை ஓங்கி எடுத்துரைத்து நேர்வழிப்படுத்துவது ஒவ்வொரு முஃமீனின் கடமையாகவும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.]
மக்களை ஆத்மீகப் பாதையில் பயிற்றுவிக்கும் பள்ளி எனும் போலி பெயரில் மக்களிடையே அறிமுகமாகியிருக்கும் இந்த சூபித்துவ அத்வைத தத்துவம் எந்தளவுக்கு இஸ்லாத்தைத் தகர்க்கும் விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது .
எந்தளவுக்கு சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதபடி மிக்க தந்திரமாக இந்த நச்சுக் கருத்துக்களை மக்கள் இதயங்களில் புகுத்தியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.
எல்லாம் இறைவனே .. என்று கூறும் சூஃபித்துவம்
எல்லாம் அவனே எனும் தத்துவமே சூஃபித்துவத்தின் அடிநாதமாகும். சூபித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த விடயத்தில் உடன்பட்டுக் காணப்படுகின்றன. ஆனால் இதை ஆரம்பப் படித்தர மக்களுக்குச் சொல்வது கிடையாது. காதிரிய்யா, ஷாதுலிய்யா, ஜிஸ்திய்யா இது போன்ற அனைத்துத் தரீக்காக்களுமே இவ்வத்வைதத்தை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அத்தரீக்காக்களின் மௌலீது நூல்களில் கூட இவை மலிந்து காணப்படுகின்றன.
இந்த அனைத்துத் தரீக்காக்களும் முன்னைய சூஃபித்துவவாதிகளால் எழுதப்பட்ட ஒரே வித நூல்களிலிருந்தே தமது சரக்குகளை எடுத்திருக்கின்றன.இப்போதும் எடுக்கின்றன. இந்த தரீக்காக்களில் பெயர்கள் சமீபத்திய சூஃபித்துவ வாதிகளினாலேயே தோற்றுவிக்கப்பட்டன.
எல்லாம் அவனே எனும் கருத்தில் சில முற்கால சூஃபிகள் சொல்லி வைத்த தத்துவங்கள்? இல்லை! வழிகேடுகள் சிலதைப் பார்ப்போம் .
பிரபலசூஃபியான கஸ்ஸாலி இமாம் அவர்கள் திருவுளமாகின்றார்கள்??..
தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களாக வகைப்படுத்தலாம். முதலாவது நாவினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது,
இரண்டாவது அதன் அர்த்தத்தை கல்பால் இதயத்தால் உண்மைப் படுத்துவது, இது பாமரமக்களின் படிநிலையாகும்,
மூன்றாவது இறை ஒளியினால் கஷ்புடைய ஞானத்தைக் காண்பதாகும் . இது இறைநெருக்கம் பெற்றவர்களின் நிலையாகம்,
நான்காவது பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத்தவிர எதையுமே காணாத நிலையாகும். தன்னையும் அவர் கடவுளாகவே காண்பார். இந்நிலைக்கு சூஃபியாக்களிடத்தில் பனாஃ — இறைவனுடன் சங்கமித்து விடுதல் என்று கூறப்படும் .
இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான தவ்ஹீத் வாதியாவார். (இஹ்யா உலூமுத்தீன் . 245-4 ம்பாகம் )
இவ்வாறு இமாம்கஸ்ஸாலி கூறி விட்டு பின்வருமாறு வினாவெழுப்புகின்றார். ஒருவன் வானம் பூமி கடல், கரை ,பறவை, மிருகம் இப்படிப் பல்வேறு படைப்புக்களைக் காணும் நிலையில் எங்ஙனம் அனைத்தையும் ஒன்றாக ஒரே கடவுளாகக் காண்பது சாத்தியமாகுமென நீ வினவலாம் . எனினும் இது கஸ்புடைய ஞானத்தின் உச்ச கட்ட நிலையால் ஏற்படுவதாகும் இந்த ஞானத்தின் ரகசியத்தை எழுத்துக்களால் வடிக்க முடியாது.ரப்பின் இந்த ரகசியத்தை பகிரங்கப்படுத்துவது குஃப்ராகுமென ஆரிபீன்கள் கூறுவார்கள் . (அதே நூல் அதே பக்கம்)
மன்ஸூர் அல் ஹல்லாஜி என்பவன் வழி கெட்ட சூஃபிகளில் ஒருவன் இவனது காலத்தில் தீனூர் எனும் ஊரில் ஒருவர் மடமொன்றில் தனிமையில் இருந்து வந்தார் . இவரது மடத்தைச் சிலர் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்ட போது அங்கிருந்து கடிதமொன்றைக் கண்டெடுத்தனர்.
அக்கடிதத்தில் ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான மன்ஸூர் அல்ஹல்லாஜியிடமிருந்து இன்னாருக்கு.’ என்று எழுதப்பட்டிருந்தது. இக்கடிதம் அரசரிடம் சமர்ப்பிக்கப்பட அவர் ஹல்லாஜியை வரவழைத்து இதுவரை நீ நபியென்றுதான் வாதாடி வந்தாய்.இப்போது நீதான் கடவுள் என்று கூறத் துணிந்து விட்டாயா? எனக் கேட்க நான் அப்படிக் கூறவில்லை. எனினும் அனைவரும் கடவுள் என்பதே எங்கள் தத்துவம். இக்கடிதம் எனக்குரியதே… அதே வேளை இதை எழுதியவனும் அல்லாஹ்வே என்றான். (இக்கொள்கை காரணமாகவே அவனுக்கு இஸ்லாமிய அரசால் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ( தல்பீஸூ இப்லீஸ் பக்கம் 171)
மற்றுமொரு சூஃபித்துவ வழிகேடனாகிய இப்னு அரபி என்பவன் ஒரு கவிதையில் கூறுகின்றான் .
மனிதனே கடவுள். கடவுளே மனிதன் இப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது?
நீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும் இரண்டுமே ஒன்றுதான் இப்படியிருக்க யார் யாரை வணங்குவது.? (அல்புதூஹாத்துல் மக்கிய்யா213 )
இப்னு அரபியின் மற்றுமொரு உளறலைப் பாருங்கள் ….
ஒரு மனிதன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதும் அல்லாஹ்வுடனேயே உறவு கொள்கின்றான் … நான் அவனை அல்லாஹ்வை வணங்குகின்றேன் அவன் என்னை வணங்குகின்றான். ( ஸூஃபிய்யா 17 )
அபூ யஸித் அல் புஸ்தாமி எனும் மூடச் சூஃபி பின்வருமாறு பிரார்த்திக்கின்றான்.. ‘உனது வஹ்தானியத்தை எனக்கும் தருவாயாக. உனது ரப்பு எனும் கிரீடத்தை எனக்கும் அணிவிப்பாயாக . என்னையும் உனது ஒருமைத்துவத்துடன் சேர்த்துக் கொள்வாயாக . என்னை மக்கள் கண்டால் உன்னைக் கண்டதாகவே சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்கின்றான்…
இது போன்ற நச்சுக் கருத்துள்ள சிந்தனைகள் விடயத்தில் அனைத்து சூபிகளுமே ஒருமித்த கருத்தில் இருக்கின்றனர் . சூஃபித்துவ நூல்களில் இவை நிறைந்து காணப்படுகின்றன .
எம்மதமும் சம்மதமே என்பதே சூபித்துவ . இலச்சினை!
மேலே கூறியதற்கேற்ப காண்பதெல்லாம் கடவுளே எனும் சித்தாந்தத்தின்படி ஒருவன் எந்த மதத்திலிருந்தாலும் எந்தச் சிலையை வணங்கினாலும் அவன் அல்லாஹ்வையே வணங்குகின்றான் என்பதே இவர்களின் கருத்தாகும். இதற்கேற்ப இஸ்லாத்தின் வைரியான ஃபிர்அவ்னும் மிகப் பெரிய தவ்ஹீத் வாதியாவான். இன்னும் சொல்லப் போனால் ‘நான்தான் உங்களுக்கெல்லாம் மிகப் பெரிய கடவுள்’ என்று கூறி உண்மையான கடவுள் தத்துவத்தை அவன் நிலை நிறுத்தினான் என்று கூறுகின்றனர். அன்றைய மக்கத்துக் காஃபிர்களை அல்லாஹ் ‘யாஅய்யுஹல் காபிரூன் காபிர்களே’ என்று விழித்ததற்குக் காரணம் அவர்கள் எல்லாமே கடவுள்தான் எனும் சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு 313 விக்ரஹங்கள் மாத்திமே கடவுள் என்று நம்பி காண்பெதெல்லாம் கடவுளே; என்பதை மறுத்தனர். இதனாலேயே அவர்கள் காஃபிர்கள் என அழைக்கப்பட்டனர் என்று இவ் வழிகேடர்கள் கூறுகின்றனர்.
ஜலாலுத்தீன் ரூமி என்பவன் கூறுகின்றான் …
நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் நான் கிறிஸ்தவனும்தான், பிராமணனும்தான் நான் பள்ளியிலும் தொழுவேன் கோயிலிலும் கும்பிடுவேன், சிலைகளையும் வணங்குவேன் ஏனெனில் எல்லாமே ஒன்றுதான் ( ஸூபிய்யா பக்கம் : 45)
இப்னு அரபியின் மற்றுமொரு உளறல்….
”என் மதமும் என் மாற்றுமத நன்பனின் மதமும் ஒரே மதமே என்றில்லாவிட்டால் என்னால் தூங்க முடியாது. என்னுள்ளம் எல்லா மதங்களையும் ஒன்றாகவே நோக்கும் நிலைக்கு வந்து விட்டது. அதிலே கிருஷ்த்தவப் பாதிரிகளுக்கும் இடமுண்டு. சிலை வணங்கிகளுக்கும் இடமுண்டு. கஃபாவுக்கும் இடமுண்டு. அது ஒரே நேரத்தில் தௌராத்தாகவும் குர்ஆனாகவும் இருக்கின்றது . (ஸூஃபிய்யா 17)
ஸூஃபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள்
குரு வணக்கம் புரிதலும் குருவை அல்லாஹ்வை விட மேம்படுத்தி ஷிர்க் வைத்தலும்
கஸ்ஸாலி , அபூ தாலிப் மக்கி போன்றோர் கூறுவது .. ஒரு முறை அபூ துராப் எனும் ஸூபி தனது சீடர்களில் ஒருவரைக் கண்டார் .அவர் சதா நேரமும் இறை நினைவில் ஸ்தம்பித்துப் போயிருப்பதைக் கண்ணுற்று ஆச்சரியப்பட்டு அவரிடம் சென்று பேசினார்.
பின்னர் அவரிடம் ‘இப்படியே இருக்காமல் பிரபல சூபியான அபூ யஸீதையும் போய்ச் சந்தித்து வரலாமே’ .. எனக் கூற சீடர் சற்று ஆத்திரப்பட்டு ‘என்ன ஷேக் சொல்லுகிறீர்கள்? நான் இங்கிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன், அப்படியிருக்க நான் எதற்காக அவரிடம் செல்ல வேண்டும்’ என்றார்.
அதற்கு அந்த ஷேக் ஆத்திரப்பட்ட வராக நீ நாசமாய்ப் போக .. அல்லாஹ்வைக் கண்டவுடன் அனைவரையும் மறந்துவிட்டாயா ? மகான் அபூ யஸீத் அவர்களை ஒரு தடவை நீ சந்தித்தால் அல்லாஹ்வை எழுவது தடவைகள் சந்திப்பதை விட அது உனக்கு மிகச் சிறந்தது என்றார்.
இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அச்சீடர் அது எப்படியென வினவ நீ உன்னிடத்தில் அல்லாஹ்வைக் காணும் போது உனது நிலைக்கேற்ற அளவிலேயே உன்னிடம் வெளிப்படுகின்றான். ஆனால் அவரைக் காணும் போது அவரிடத்தில் அவரது நிலைக்கேற்ப முழுமையாகத் தோன்றுகின்றான் என்றார். ( இஹ்யா 34 ௩05)
இந்த வழிகேட்டை என்னவென்று விபரிப்பது? நபி மூஸா அவர்கள் அல்லாஹ்வைக் காண வேண்டுமென அவனிடம் கேட்ட போது ‘நிச்சயமாக உன்னால் என்னைக் காண முடியாது ‘ என்று கூறினான் (அல்குர்ஆன்) நபியவர்கள் தனது ஸஹாபாக்களுக்கு’ அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் மரணிக்கும் வரை உங்களால் அல்லாஹ்வைக் காண முடியாது என்று கூறினார்கள். (இப்னு மாஜா 4067 )இப்படியிருக்க சூஃபிகள் எப்படி அதுவும் சதா நேரமும் அல்லாஹ்வைக் காண்பது? சைத்தான்தான் இவர்களின் கண்களில் தோன்றுகின்றான் என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு புறமிருக்க அபூ யஸீத் எனும் ஸூபியைக் காண்பது அல்லாஹ்வை எழுபது தடவைகள் காண்பதை விடச் சிறந்ததென்றால் இவர்கள் எந்தளவுக்கு வழிகெட்டுப் போயுள்ளனர் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
அபூதாலிப் மக்கி கூறும் மற்றுமொரு பிதற்றல்
ஒரு முறை பஸரா நகரத்துக்குள் எதிரிப் படைகள் புகுந்து அட்டகாசம் செய்த போது மக்கள் ‘ஸஹ்ல் எனும் சூபியொருவரிடம் சென்று தம்மைக் காக்குமாறு முறையிட்டனர்.
நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் அவன் உடனே அதை அங்கீகரிப்பான் எனக் கூறினர்.அதற்கவர் மௌனமாயிருந்து விட்டு இவ்வூரில் சில நல்லடியார்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள் உலகிலுள்ள அனைத்து அநியாயக்காரர்களையும் அழிக்க வேண்டுமனப் பிரார்த்தித்தாலும் அதே இரவிலேயே அனைவரும் அழிக்கப்பட்டு விடுவார்கள்.
அவர்கள் ‘மறுமை நாள் இடம் பெறக் கூடாதென்று கேட்டாலும் அல்லாஹ் மறுமை நாளை ஒரு போதும் ஏற்படுத்த மாட்டான் என்றார். (இஹ்யா 4- 305 கூத்துல் குலூப் 2 – 71 )
அல்லாஹ்வையே மிஞ்சி விட்ட வல்லமை பெற்றதாக வாதிடும் இவர்கள் இறை நேசர்களா? ஷைத்தானின்பங்காளிகளா? மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஷிர்க் – இணை வைப்பை இபாதத் என்று கூறும் ஸூபித்துவம்
அப்துல் கனி அந்நாபிலிஸி எனும் சூபிப் பெரியார்?? ஷிர்க் சம்பந்தமாக எப்பபடி விளக்குகின்றார் பாருங்கள்!
”ஷிர்க் என்பது இரு வகைப்படும் தெளிவான ஷிர்க், மறைவான ஷிர்க். தெளிவான ஷிர்க் என்பது அல்லாஹ்வுடன் வேறொருவர் இருப்பதாக எண்ணுவதாகும். அல்லாஹ் பார்ப்பவன் கேட்பவன் . மனிதனும் பார்ப்பவன் கேட்பவன். எனவே ஒருவன் அல்லாஹ்வும் மனிதனும் வேறு வேறு என்று நினைத்தால் அவன் பார்த்தல், கேட்டல் போன்ற பண்புகளில் அல்லாஹ்வுக்கு இணையான இன்னொன்றை ஆக்கிவிட்டார். . ( றிஸாலத்து அர்ஸலான் 75 ,76 )
இது தான் சூஃபித்துவ சிந்தனையின் அச்சாணி, எல்லாம் ஒன்றே என்பதே சூஃபித்துவவாதிகளின் தௌஹீத் முழக்கமாகும் . மூளையுள்ளவர்கள் – பாமரர்களாயினும் இது சுத்தப் பிதற்றல் போதையில் ஏற்படும் உளரல்கள் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும் . தம் மூளையினை சூபிகளுக்கு காணிக்கையாகச் செலுத்தி காலில் விழுந்து சாஷ்ட்டாங்கம் செய்தவர்கள் பல்லறிவு மேதைகளாயினும் இது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை .(அல்லாஹ் வழி கெட விரும்பியவர்களுக்கு நேர்வழிகாட்ட யாரால் முடியும் ??)
பாலியல் அராஜகம், காம லீலைகள் புரியும் ஸூஃபிகள்!
அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி எனும் சூபித்துவப் பித்தன் தனது தபகாதுஸ்ஷஃரானீ எனும்நூலில் எழுதியிருப்பதாவது …
”எனது தலைவர் குருநாதர் அலீ வஹீஸ் என்பவர்கள் மிகப் பெரும் சூபி மகானாவார்கள். அவர்களுக்கு மிகப் பெரும் கராமத்துகள் நடந்துள்ளன. அவருக்கு ஒரு கடையிருந்தது. அக்கடை மக்கள் எவரும் அருகே நெருங்க முடியாதபடி துர்வாடை வீசிக் கொண்டிருந்தது . காரணம் தெருவில் கிடக்கும் செத்த நாய், ஆடு போன்றவற்றையெல்லாம் இழுத்துக் கொண்டு வந்து இவர் தனது கடைக்குள் போட்டு விடுவார் . எவருமே அவரை நெருங்க முடியாதவாறு அவரிடமும் துர்நாற்றம் வீசும். ஒரு முறை அவர் மஸ்ஜிதுக்குச் செல்ல விரும்பினார். செல்லும் வழியில் நாய்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்ட நீர்ப்பாத்திரத்தைக் கண்டு அதிலேயே ஒழுச் செய்தார். பின்னர் கிழட்டுக் கழுதையொன்றுடன் பாலியல் புணர்ச்சி செய்தார்.
மேற்படி மகானவர்கள் பெண்களையோ விடலைச் சிறுவர்களையோ கண்டால் அவர்களது பின்புறத்திலே கையால் தடவி கூச்சங்காட்டி தனது காமப் பசியைச் தீர்க்க வருமாறு அழைப்பார். அவர்கள் அவ்வூர்த் தலைவர், அமைச்சருடைய மனைவியாகிலும் சரியே. அப்பெண்ணின் தந்தையின் முன்னிலையிலேயும் இப்படிச் செய்யத் தவற மாட்டார். மற்ற மக்கள் பார்ப்பார்களே என்பதைக் கண்டு கொள்ளவே மாட்டார்.
மேற்படி ஷேக் ஊர்த் தலைவரையோ முக்கிய பிரமுகர்களையா கண்டால் அவர்களைக் கழுதையிலிருந்து இறக்கி ‘ நீ கடிவாளத்தைப் பிடித்துக் கொள்’; என்று கூறிக் கழுதையுடன் பாலியல் லீலையில் ஈடுபடுவார் . அவர்கள் இவரது ஆசைக்கு இணங்க மறுத்தால் அதே இடத்திலேயே சபித்து தரையுடன் சேர்த்து ஆணியறைந்து விடுவார் .அதன் பின் அவர்களால் அவ்விடத்தை விட்டும் நகரவும் முடியாது.” ( ஹகீக்கதுஸ் ஸூபிய்யா ப 439)
இபாதத்களைக் கொச்சைப் படுத்தும் ஸூஃபிகள்
புஸ்தாம் நகரில் மக்கள் மத்தியில் நன் மதிப்புப் பெற்ற ஒரு வணக்கவாளி இருந்தார். இவர் அபூ யஸீத் அல் புஸ்தாமியின் மஜ்லிஸில் தவறாமல் கலந்து கொள்பவராக இருந்தார் . ஒரு நாள் இவர் அபூ யஸீதிடம் ஷேக் அவர்களே .. நான் முப்பது வருடங்களாகத் தினமும் விடாமல் நோன்பு நோற்று வருகின்றேன். இரவு முழுக்க தூங்காமல் நின்று இறை வணக்கம் செய்கின்றேன். அப்படியிருந்தும் உங்களிடமுள்ள மெஞ்ஞான அறிவு எனக்குக் கிடைக்கவில்லையே! என்று ஆதங்கப்பட்டார் அதற்கு அபூ யஸீத் ‘நீ முன்னூறு வருடங்கள் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கினாலும் இந்த மெஞ்ஞானம் உனக்குக் கிடைக்காது என்று கூற அவர் ஏன்? என வினவினார்.
அதற்கவர் உன்னைச் சுற்றி சுயநலம் எனும் திரை இருக்கின்றது (அதாவது வணக்க வழிபாடுகளை உனக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்ற தன்னலம் கருதும் எண்ணத்துடன் செய்கின்றாய். நன்மையும் வேண்டாம் சுவனமும் வேண்டாம் இறைக்காதலே வேண்டும் எனும் எண்ணம் உன்னிடமில்லை என்றார். அதற்கு அவர் அப்படியாயின் அதனை நீக்க ஏதேனும் மருந்துண்டா? என வினவ,
உண்டு . ஆனால் நீ அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாய் என்றார். இல்லை ஏற்றுக் கொள்வேனென அவர் அடம்பிடிக்க இவர் இவ்வாறு கூறுகின்றார்.. … நீ இப்படியே சவரக் கடைக்குச் சென்று உன் தலை முடியையும் தாடியையும் மழித்துக் கொள். உனது இந்த உடையைக் களைந்து விட்டு ஒரு போர்வையை உடுத்திக் கொள். உன் கழுத்தில் ஒரு தோல்ப் பையைத் தொங்க விட்டு அதனுள் தானியங்களைப் போட்டுக் கொண்டு சந்தைக்குச் சென்று சிறுவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு ‘எனக்கு நீங்கள் ஒரு முறை முகத்தில் அறைந்தால், கல்லால் எறிந்தால் ஒரு பருப்புத் தருவேன் என்று கூறிக் கொண்டு அவர்கள் கற்களினால் எறியும் நிலையிலேயே உனக்குத் தெரிந்தவர்கள் இருக்குமிடமெல்லாம் செல் என்றார் .
இதனைக் கேட்ட அவர் ‘ ஸூப்ஹானல்லாஹ் இதெப்படி முடியுமென்றார்.அதற்கவர். நீ ஸூப்ஹானல்லாஹ் என்று கூறியது ஷிர்க்காகும். ஏனெனில் உன்னையே நீ தூய்மைப்படுத்தினாய் அல்லாஹ்வையல்ல என்றார் .
இச்சம்பவத்தைத் தனது நூலில் கூறும் கஸ்ஸாலி ‘தான் செய்த அமலினால் தற்பெருமை கொள்வோருக்கு இப்படியான மருந்துகளே பயன் தரும் . இந்த மருந்தைப் பாவிக்க முடியாதவன் இது மருந்தல்ல என்று எங்ஙனம் மறுக்க முடியும்? என வினாவெழுப்புகின்றார். (இஹ்யா உலூமுத்தீன்2-456 )
இச்சம்பவத்திலுள்ள மார்க்க முரண்பாடுகளை வரிவரியாக விளக்க ஆரம்பித்தால் பல பக்கங்கள் வீணாகிவிடும் என்பதால் விமர்சனத்தை வாசகர்களுக்கே விட்டு விடுகின்றேன் .
சூபித்துவக் கிறுக்கன் ஷஃரானி மேலும் கூறுவதாவது .. இப்றாஹீம் உஸைபீர் என்பவரும் பிரபல சூபிமகானாவார்கள். அன்னாருக்கு கஷ்ப் எனும் ஞானம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் சீறுநீர் கழித்தால் அது பால்ப்போல் வெண்மையாயிருக்கும். அவர்களுக்கு சிலவேளை ஞானம் முற்றி விட்டால் முகத்தில் மொய்த்திருக்கும் கொசுவுடனும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
பள்ளியில் முஅத்தினின் அதானோசையைக் கேட்டால் அவருக்குக் கல்லால் எறிந்து ‘நாயே.. நாங்களென்ன காபிர்களா? எங்களுக்கு அதான் சொல்கின்றாயே’ .. என்பார்கள். என்னைப் பொறுத்த வரைக்கும் கிறிஷ்த்தவர்களைப் போன்று ஆட்டிறைச்சி வகைகள் உண்ணாமலிருப்பவனே உண்மையில் நோன்பு நோற்றவனாவான்.ஆடு,கோழி இறைச்சி வகையறாக்களை உண்பவன் நோக்கும் நோன்பு நோன்பேயில்லை என்று கூறுவார்கள்.குதிரையின் சாணத்தைக் குவித்து வைத்து அதன் மீதே தினமும் அவர்கள் உறங்குவார்கள் . . (தபகாத்துஸ் ஷஃரானிய் 2-140 )
– ”சூபித்துவத் தரீக்காக்கள்… அன்றும் இன்றும்”