Dr. ஜெயராஜா, MD., DM.,
பெண்களுக்கு மாரடைப்பு நோய் 45 வயதிற்கு முன் வரை பெரும்பாலும் வருவதில்லை. ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார் மோன் அவர்களது இருதயத்தை பாதுகாக்கிறது. ஆண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். அது போலவே பெண்களுக்கும் மாதவிலக்கு நின்ற பிறகும் 45 வயதிற்கு மேலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
இருதய வால்வுகளில் ஏற்படும் நோய் பற்றி சொல்லுங்கள் டாக்டர்?
இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு இரத்தம் செல்ல மூடி மூடித் திறக்கும் வகையில் உள்ள வழிதான் வால்வு எனப்படும். 5 வயது முதல் 15 வயது வரை வயது வரை உள்ளவர்களை கீல் வாதக் காய்ச்சல் தாக்குவதால் இதய வால்வுகளில் நோய் ஏற்படுகிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகளை எப்படி தெரிந்துகொள்வது?
கை, கால் போன்ற அங்கங்களில் உள்ள முக்கியமான பெரிய மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். தொடர்ந்து பலத்த வலி உண்டாகும். மூட்டுவலி ஏற்படும். அதே சமயத் தில் இதய வால்வுகளும் தாக்கப்பட்டு பழுதுபடும். கீல்வாதக் காய்ச்சல் (ருமாட்டிக் பீவர்) என்று குறிப்பிடப்படும் இந்த நோயானது நம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது.
இருதய இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மூலம் உண்டாகும் நோய் பற்றிய விபரம் சொல்ல முடியுமா?
நமது இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து ஓர் அளவிற்கு மேல் மிகுதியாகும் போது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். இதனால் இரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்படும். இரத்தக் குழாயில் கொழுப்புச் சத்தானது படிகின்றபோது மேற்கொண்டு செல்ல இயலாமல் இரத்த ஓட்டம் முழுமையாகத் தடைபட்டு மாரடைப்பு ஏற்படும்.
பிறவியிலேயே எவ்வாறு இருதய நோய் உண்டாகிறது?
ஒரு பெண் கருத்தரித்து 55-வது நாளுக்குள் ஏற்படும் கருவில் உள்ள இதயம் முழு வளர்ச்சி பெற்று விடுகிறது. ஒரு பெண்ணின் கருப்பையில், நுண்ணிய குழந்தையின் இதயம் வளர்ச்சியடையும் முதல் இரண்டு மாத கர்ப்ப காலத்தில் தாய்க்கு கடுமையான (வீரியம் அதிகமுள்ள) மருந்துகள், கதிர்வீச்சு மூலமாக சிகிச்சை போன்றவைகளை தவிர்த்தல் அவசியம்.
பொன்னுக்கு வீங்கி, வைரஸ் நோய் ஆகியவைகள் தாய்க்கு ஏற்படாதிருக்குமானால் நல்லது. கர்ப்பிணிப் பெண்ணானவள் இதற்கெல்லாம் ஆளாகும் பட்சத்தில் அவளுக்குப் பிறக்கின்ற குழந்தை இதயம் தொடர்பான பிறவி கோளாறுகளுடன் பிறந்துவிடக் கூடும்.
இருதய நோய்க்கான அறிகுறிகள் என்ன டாக்டர்?
மூச்சிரைத்தல், மார்பு படபடப்பு, கால் வீக்கம், பாதம், கணுக்கால் வீங்குதல், அபூர்வமாக மயக்கம் கூட வரலாம். தலைச்சுற்றலும் வரலாம்.
இருதயத்தை சுற்றி படர்ந்திருக்கும் ஜவ்வில் உருவாகும் நோய் பற்றி?
பாக்டீரியா, வைரஸ் எனப்படும் நுண்ணிய கிருமிகளால் இதயத்தைச் சுற்றி பாதுகாப்பாக படர்ந்திருக்கும் ஜவ்வு சில வேளைகளில் பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக நோய் கிருமிகளினாலேயே பெரிதும் இந்த துன்பம் நேரிடும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஜவ்வை அடியோட நீக்கினாலும்கூட இருதயம் பாதிக்கப்படுவதில்லை. இதனால் பெரிதாக எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடும் என்று சொல்ல முடியாது.
இருதய தசைகளில் என்னென்ன நோய்கள் வரும்?
இருதயம் மிக மிக மென்மையான தசையினால் அமைந்திருக்கிறது. இந்த தசையானது பலவீனம் அடையும்போதும், வீக்கம் ஏற்பட்டு கெடுகின்றபோதும், இருதய நோய் உண்டாகிறது. நம் இருதய தசையானது எதனால் எப்படி கெடுகிறது என்பதற்கான சரியான மருத்துவ காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இரத்த அழுத்த பாதிப்பு எப்படி உண்டாகிறது? இந்த பாதிப்பு பெண்களுக்கும் வருமா?
இரத்த அழுத்தம் ஒருவருக்கு 140 / 90-க்கு மேல் போனால்தான் இரத்த அழுத்தம் கூடுதலாக உள்ளது என்று அர்த்தம். இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுமானால் இருதயம் பாதிக்கப்படலாம்.
தலை சுற்றல் வந்தவுடனேயே ஒருவருக்கு பிளட் பிரஷ்ஷர்தான் என்று நீங்களே முடிவு செய்துவிடக் கூடாது. அதற்கு வேறு காரணமாகவும் இருக்கலாம். பெண் களுக்கு இரத்த சோகையினாலும், சத்து குறைவினாலும் தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம்.
பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் கண்ணிற்கு தெரியாத இரத்த இழப்பு நேரிடலாம். இதுபோன்ற சமயத்திலும் தலை சுற்றலாம். பெண்களுக்கும் இரத்த அழுத்த பாதிப்பு வரலாம். இதற்கு அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு, பிறவி இருதய குறைபாடு போன்றவை காரணமாக இருக்கலாம்.
இருதய நோய் இளம் வயதினரை தாக்குமா?
ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற ஒரு வகை பாக்டீரியா கிருமி இருக்கிறது. 5 வயது முதல் 15 வயது வரையிலுள்ள சிறுவர், சிறுமியரை எளிதாக இந்த கிருமி தொற்ற லாம். இதனால் தொண்டையில் ஏற்படும் நோய் தொற்று மூலமே அவர்களுக்கு எளிதாக ருமாடிக் பீவர் எனப்படும் கீல்வாத காய்ச்சல் நோய் வரக்கூடும்.
இந் நோயால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்குத் தொண்டைப் புண், தொண்டைக் கட்டு போன்றவை ஏற்படும். சில நாட்கள் சென்றபின் கால், கைகளில் உள்ள மூட்டுகளின் உட்புறம் பாதிக்கப்படும். பிறகு இதன் காரணமாக மூட்டுகள் மாறி, மாறி வலித்து வீங்கும். அதையொட்டி கடுமையான ஜுரம் வரும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.
மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?
இருதயத்தில் இரண்டு முக்கிய இரத்தக் குழாய்களிலோ அல்லது அவற்றின் கிளை இரத்தக் குழாய்களிலோ சிறுக, சிறுக கொழுப்புச் சத்து அதிக அளவில் சேர்ந்து இரத்த ஓட்டம் அடியோடு நின்று விடும் போதுதான் மாரடைப்பு உண்டாகிறது.
ஒருவருக்கு இரத்தக் குழாயில் 75 சதவீதம் அடைப்பு ஏற்படும் வரை ஒருவரால் அதை உணர்ந்து கொள்ள முடியாது.
அதற்குமேல் அடைப்பு உண்டாகின்றபோதுதான் மூச்சுத் திணறல், வாந்தி, வியர்வைப் பெருக்கு, நெஞ்சு வலி போன்றவை நேரிடும். அப்போதுதான் அவரால் உணர முடியும். இரத்தக்குழாய் முழு வதுமாக அடைபட்டுப் போகும் போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. ஏறக்குறைய 45 வயது வரையில் பெண்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வருவதில்லை.
பெண்களுக்கு 40 அல்லது 45 வயதுகளில் தான் மாரடைப்பு வருகிறது. இது எதனால்?
பெண்களுக்கு மாரடைப்பு நோய் 45 வயதிற்கு முன் வரை பெரும்பாலும் வருவதில்லை. ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார் மோன் அவர்களது இருதயத்தை பாதுகாக்கிறது. எப்படியென்றால் இது இரத்தத்திலே எச்.டி.எல். அளவை கூட்டுவதால் இரத்தக் குழாய்களில் அடைப்பு வராமல் பாதுகாக்கப்படுகிறது. ஆண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். அது போலவே பெண்களுக்கும் மாதவிலக்கு நின்ற பிறகும் 45 வயதிற்கு மேலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
இருதயத்தில் ஓட்டை இருப்பதை எப்படி அறிவீர்கள்?
இருதய ஒலியின் சப்தத்தை வைத்தும் இதயக் கோளாறுகளை கவனிக்க முடியும். இதயத்தின் நான்கு அறைகளைப் பிரிக்கின்ற சதைச் சுவர்களில் நுண்ணிய அல்லது பெரிய துவாரம் சிலருக்கு பிறக்கும்போதே அதாவது பிறவியிலேயே ஏற்பட்டு விடு வது உண்டு. இதயத்தில் ஓட்டை இருந்தால்தான் சப்தம் வரும் என்பதில்லை. இதய வால்வுகளின் கோளாறினாலும் இதயத் தின் ஓசை மாறுபடும்.
1. பிறவியிலேயே இதயத்தில் அமைந்து விடுகின்ற துவாரம்.
2. மாரடைப்பின்போது வென்ட்ரிகிள் சதைச் சுவரில் உண்டாகும் விரிசல் காரணமாக ஏற்படும் துவாரம்.
3. நுரையீரல் தமனிக்கும், மகாதமனிக்கும் இடையில் உண்டாகிவிடும் துவாரம்– இவற் றினாலும் ஓட்டை விழும். ஸ்டெதாஸ் கோப் மூலம் பரிசோதிக்கிற போதும், ஈ.ஸி.ஜி. மூலம் கவனிக்கிறபோதும் எக்கோ டெஸ்ட் எடுக்கிற போதும் ஒருவரின் இதயத்தில் ஓட்டை விழுந்திருப்பதை மிகவும் எளிதாகவே கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக எக்கோ கார்டியோகிராம் ஒளிப்படத்தில் இதயத்தின் ஓட்டையை மட்டு மின்றி பெரும்பாலான இதயம் தொடர்பான சிக்கல்களை எல்லாம்கூட துல்லியமாக கண்டறிய முடியும்.
பெரிய துவாரமுள்ள இதய ஓட்டை உள்ளவர்களுக்கு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யச் சொன்னால் உடன் செய்துகொள்வது நல்லது. இல்லையெனில் நோயாளியின் உயிருக்கு ஆபத்து நேரிடும்.
மாரடைப்பு ஏற்பட்டவருக்கு எந்த மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும்?
உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாகனத்தில் மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் செல்ல வேண்டும். உட்கார்ந்த நிலையிலோ, சாய்ந்த நிலையிலோதான் அழைத்துவர வேண்டும். ஒருவேளை நோயாளி வாந்தியெடுத்தால் (முக்கியமாக திட உணவு) மேன்மேலும் உணவு கொடுக்கக் கூடாது