[ கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. அக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடத்தில் தான் தங்கி இருக்கிறது. அக்கல்வியை “எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே – அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே…” என்கிறது ஒரு கவிஞரின் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை.
கருவுற்ற நாளிலிருந்து அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை கணவன்; மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும்.
பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும்.
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி” என்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும். அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும். எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.]
பிள்ளைகளின் ஆளுமையும் பெற்றோர்களின் முழுமையும்
“எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே – அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே – அது அன்னை வளர்ப்பினிலே…” என்கிறது ஒரு கவிஞரின் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை.
குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்கும், நாட்டுக்கும், ஏன் முழு உலகுக்கும் சிறந்த குடிமகனாகஉருவாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு முழுப் பொறுப்பாக பெற்றோர்களின் தலைகளில் தான் சுமத்தப்பட்டிருக்கிறது.
ஆகவே தான் தாய் மாத்திரம் அன்றி அக்குழந்தையின் தந்தையும் அதனது ஆளுமை வளர்ச்சிகளிலே அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. அக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களில்த் தான் தங்கி இருக்கிறது.
ஆக, கருவிலே இடம் பெறும் இக்கல்விக்குக் குருவாகத் தாயும், தந்தையும் தான் தலைமை வகிக்கின்றார்கள். இந்த இரு குருமாரின் வழி நடத்தல்களும் வழி தவறிப்போனால் “கருக்கல்வி” பாழாகி விடும். கருக்கல்வி பாழாகிப் போனால் பிள்ளையின் காலம் முழுதுமான வாழ்வும் பாழாகிப் போகும். இது அத்தலைமுறையையே தாக்கும்.
எனவே தான் ஒரு குழந்தை கருவாகும் போது தாயும் தந்தையும் குருவாக உருவாக வேண்டும். எத்தனை தாய் தந்தையர்கள் இப்படி உருவாகிறார்கள் என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது. அக்கேள்விக்குறி தான் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது.
கருவுற்ற நாளிலிருந்து அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை கணவன்; மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும்.
பிள்ளை கருவுற்று இருக்கும் போது பெற்றோர் மிகவும் நிதானமாகவும், புத்தி சாதூரியத்துடனும், சண்டை சச்சரவுகள் எதுவும் அற்ற வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். அன்பும், அகிம்சையும், ஐக்கியப்பாடும், நல்லெண்ணங்களும், நன்னடத்தைப் போக்குகளுமே குடும்பத்தில் நிலைத்திருக்க வேண்டும். இப்படியாக குறிப்பிட்ட தாயும், தந்தையும் செயற்படுவார்களாக இருந்தால் இருவருமே சிறந்த குருமாராக விளங்குவார்கள். அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தை அறிவொளி பெற்றுத் துலங்கும். சுருங்கச் சொல்லப் போனால் கருவறை காத்திரமான படிப்பறையாக இருந்து குழந்தையை வளர்த்தெடுக்கும்.
இவை அனைத்தும் குழந்தை கருவாக இருக்கும் போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடப்பாடுகளாகும். இதனுடன் நின்று விட்டால் போதுமா? நிச்சயமாக இல்லை.
குழந்தை பிறந்த பின்பு தான் பெற்றோர் கூடிய கட்டுப் பாட்டுக்கும், பொறுப்புக்கும் உள்ளாக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். குழந்தை தவழும் வரை கருவில் இருக்கும் போது மேற்கொண்ட கற்பித்தல் நெறி முறைச் செயற்பாடுகளை இருவரும் மேற்கொள்ளலாம்.
பின்பு அது தத்தி தத்தி நடக்க முற்படும் போது, மழலை மொழி பேசத் தொடங்கும் போது இலகுவான மொழிப் பாவனைகளை பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும். மழலையோடு மழலையாக மழலை மொழி பேச வேண்டும். ஆடிப்பாடி அக்குழந்தையை மகிழ்விக்க வேண்டும். பல் திறப்பட்ட நற் சிந்தனைகளை குழந்தையின் நெஞ்சிலே விதைக்க வேண்டும்.
குழந்தை படிப்படியாக பேசக் கற்றுக் கொள்ளும் போது பெற்றோரும், மற்றோரும் உற்றார் உறவினரும் குழந்தைக்கு முன்பாக வேண்டத் தகாத வார்த்தைகளையும், கெட்ட கதை பேச்சுக்களையும் கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றையே பிள்ளை மனதிலே அழியாது பதித்துக் கொள்ளும். அது பின்பு ‘தொட்டிற்பழக்கம் சுடுகாடு வரை’ என்பது போல அப்பிள்ளையின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும்.
எனவே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களையும், தான்தோன்றித் தனங்களையும் தவிர்த்து நல்ல கதை பேச்சுக்களையும், நன்னடத்தை நெறிமுறைகளையும் கடைப்படிக்க முடியும். இதன் மூலம் தான் அக்குழந்தை சிறந்த குழந்தையாக வளப்படவும், வளரவும், வாழவும் முடியும்.
மண் விளையாட்டிலே நாட்டம் கொள்ளும் பருவம் வந்ததும் அனேகமான பெற்றோர்கள் அப்பிள்ளையை திட்டித் தீர்ப்பதும், அடிப்பதுமாகத் தான் இருப்பார்கள். இது தவறாகும், தண்டனைக்குரிய குற்றமுமாகும்.
மண் விளையாட்டிலும் எவ்வளவோ கற்க வேண்டிய விடயங்கள் அடங்கி இருக்கின்றன. அவற்றைப் பிள்ளை கற்றுக் கொள்ளும். இதனாலே தான் ‘வளரும் பயிரை முளையிலே தெரியும்’. வாழும் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும்’ என்பார்கள். ஏன் சும்மாவா? இல்லை.
பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும்.
அக்கம் பக்கம் பிள்ளை விளையாடச் செல்கிறது என்றால் அதற்கும் விட வேண்டும். அதன் மூலம் பிள்ளை பலவித புதுமுகங்களை, புதிய நண்பர்களைக் கண்டு கொள்ளும். சமூக மயப்படுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் இந்த இடத்திலே பெற்றோர் மிகவும் கண்ணும், கருத்துமாக இருக்கவும் வேண்டும். பிள்ளை விளையாடச் செல்கின்ற இடம் சூழல் பொருத்தமற்றதாயின் அங்கே செல்வதை புத்திசாலித்தனமாக தவிர்க்கச் செய்ய வேண்டும். நல்ல இடத்தில், நல்ல சூழலில் நல்ல பிள்ளைகளுடன் சேர்வதற்கே சந்தர்ப்பம் அதிகம் கொடுக்க வேண்டும்.
பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் பருவம் வந்ததும் பெற்றோர் தமது கவனத்தையும், கடப்பாட்டையும் மேலும் கூட்டிக் கொள்ள வேண்டும். பிள்ளை ஒழுங்காக பாடசாலை செல்கிறதா? படிக்கிறதா? எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேர்கிறது? என்பது போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தி இருந்து பிள்ளைகளை வழி நடத்துவது இன்றியமையாததாகும். “ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி” என்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும். அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும். எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.
பிள்ளையை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். ஒழுக்க நெறிமுறைகளை கடவுள் சிந்தனைகளை, அன்பை, பண்பை, மனித நேயத்தை, இரக்க சிந்தனைகளை கடைப்பிடிக்கப் பழக்க வேண்டும். நல்லவர்களாக, வல்லவர்களாக, வீட்டுக்கும், நாட்டுக்கும், வெளி உலகுக்கும் உகந்தவர்களாக நானிலத்திலே நற்பிரஜையாக தமது பிள்ளைகளை உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோருக்குமான உரிய கட்டுப்பாடுகளாகும்.
பிள்ளையின் அறிவும், ஆளுமைச் செயற்பாடுகளும் சிறப்புற அமைந்து செழுமையும், மகிமையும் பெறுவதற்குப் பெற்றோர்கள் முழுமை பெற்றவர்களாக, நாலும் அறிந்தவர்களாக, நற்பெற்றோராக இருக்க வேண்டும். பானையிலே முழுமையாக இருந்தால் தானே அகப்பையிலும் முழுமையாக வரும். ஆகவே முழுமை பெற்றவர்களாக பெற்றோர்கள் மாற வேண்டும். அந்த மாற்றமே ஆளுமை படைத்த அதிசிறந்த சந்ததியை உலகினுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.
மிக்க நன்றி: கன்னிமுத்து வெல்லபதியான், மட்டக்களப்பு ஈழநாதம்
source: www.yarl.com