Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.(rtd)
[தமிழக்தில், 234 எம்.எல்.ஏக்கள் உள்ள சட்டமன்றத்தில் 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக ஜீனத் சர்புதீன் எம்.எல்.ஏவாக இருந்தார். அதன் பின்பு அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏவாக பதர் செய்யது 2006 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரா மாநிலம் இதை விட மோசம். 34 பெண் எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட முஸ்லிம் பெண்ணல்ல. ஆகவே முஸ்லிம் பெண்கள் அத்திப்பூத்தது போன்று பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சாதாரண தமிழக சட்டமன்றத்திலே முஸ்லிம் பெண்கள் இடம் பெற்ற இடைவெளி 15 ஆண்டுகள் ஆனது என்றால் பாராளுமன்றத்தில் இடம் பிடிக்க குதிரைக்கு கொம்பு முளைக்கும் என்று பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் தான். அதுவும் இந்த இட ஒதுக்கீடு மசோதா 15 ஆண்டுகளுக்கு பின்பு காலாவதியாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பின்பு எங்கே சில தலைவர்கள் சொல்லுவது போல பின்பு பார்க்க முடியும்?
முன்னாள் மண்டல் ஆதரவாளர், வி.பி.சிங்கிற்கு சங்கடமான நேரத்தில் ஆதரவு கொடுத்த சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், ”இப்போது பெண்கள் ஒதுக்கீடு நிறைவேற்றுவோம், பின்பு முஸ்லிம்களுக்கும், பிற்பட்டோர் உள் ஒதுக்கீடு பற்றி யோசிப்போம்” எனக் கூறுகிறார்கள். ”பார்க்கலாம்”, ”யோசிக்கலாம்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே ஐயப்பாடு எழுப்புவதுதானே என்று அறியாதவர்களல்ல முஸ்லிம்களும், பிற்பட்ட மக்களும்.
ஆந்திர மாநிலத்தினைச்சார்ந்த மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவாசி மசோதாவை எதிர்க்கிறார். முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என குரல் கொடுக்கிறார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு எம்.பிக்களும், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி எம்.பியும் மௌனம் சாதிப்பது ஏன்?
ஓரு வேளை எதிர்ப்புக்களிடையே மகளிர் மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம் பெண்களினை அரசியல் விளிப்புணர்வு ஊட்ட தயாராக வேண்டாமா?]
நேற்று (8.3.2010) அகிலம் முழுவதும் உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது அனைவரும் அறிந்ததே! 1857 ஆம் ஆண்டு இந்திய முதல் விடுதலைப் போர் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்தபோது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெண் தொழிலாளர் குறைந்த ஊதியத்தினை எதிர்த்து முதல் குரல் எழுப்பி காவல் துறையினரின் குண்டாந்தடிக்கு ரத்தம் சிந்திய தினம் இன்று.
ஆனால் அந்த உரிமை கலப்பின இஸ்லாமிய வம்சாவழியில் வந்த பாரக் உபாமா ஜனாதிபதியான பின்பு தான் 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக ஆண்களுக்கு சமமான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட்டது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் இஸ்லாமிய பெண்கள் சம உரிமை பெற்று ஆண்களுக்கு பெண்கள் ஆடையாகவும், பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும் வாழ்க்கையில் திகழ வேண்டிய நெறி முறைகளை அல்லாஹ் குர்ஆனிலே ஆணித்தரமாக எடுத்துச் சொல்லியுள்ளான் என்பதினை அனைவரும் அறிவர்.
1996ஆம் ஆண்டு முதன் முதலில் தேவே கௌடா பிரதமராக இருந்த போது பெண்களுக்கான ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்து மசோதாவில் முஸ்லிம்கள் மற்றுமுள்ள பிற்பட்டோருக்கு ஒதுக்கீடு இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின்பு 1998, 1999, 2002,. 2003, 2008 ஆகிய ஆண்டுகளிலும் மசோதா கொண்டு வரப்பட்டு அதே காரணத்திற்காக நிறைவேற்றப்படவில்லை. இப்போது யு.பி.ஏ மத்தியில் 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக பலத்துடன் வந்ததால் ப.ஜ.க துணையோடு எப்படியாவது மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்று இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
மகளிர் ஒதுக்கீடு மசோதா அரசியல் சட்டப் பிரிவு 81 படி கொண்டு வரப்படுகிறது. சட்டப்பிரிவு என்ன சொல்கிறது. பாராளுமன்றத்தில் மக்களவையிலும், மாநிலத்தில் சட்டசபையிலும் மகளிர் ஒதுக்கீடு அரசியல் சட்டப்பிரிவு 15(3) படி கொண்டு வரலாம். ஆனால் பாராளுமன்ற ராஜ்ய சபாவிலோ, மாநில மேல் சபையிலோ ஒதுக்கீடு கொண்டு வர முடியாது.
சரி, மகளிர் மசோதாவிற்கு என்ன அவசரம் என்று கேட்கலாம். அரசியல் சட்டம் இயற்றப்பெற்ற பிறகு நடத்தப்பட்ட 1952 முதல் மக்களவைத் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு 4.4 விழுக்காடு தான். 1977 ஆம் ஆண்டு நடந்த மக்களவைக்கு நடந்த தேர்தலில் வெறும் 3.5 விழுக்காடு தான். 2004 ஆம் நடந்த மக்களவைக்கு நடந்த தேர்தலில் பெண்களின் பங்கேற்பு மொத்தம் உள்ள 543 இடங்களில் 10 சதவீதத்தினை எட்டியது. 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்கள் 59 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில் என்ன வேடிக்கையென்றால் 59பெண் எம்.பிக்களில் 36 பெண்கள் மந்திரிகள், மற்றும் அரசியல் தலைவர்கள் வீட்டுப் பெண்கள் ஆவர். ஆகவே தான் யு.பி.ஏ விலுள்ள தலைவர்களும், பி.ஜே.பியில் உள்ள தலைவர்களும் பெண்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுத்தால் வாழ்க்கையின் மேலோட்டத்தில் இருக்கும் பெண்களும், மெஜாரிட்டியாக உள்ள இந்து மத பெண்களும் பலன் பெற முடியுமென என எண்ணி முண்டியடித்துக் கொண்டு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டுமெனத் துடிக்கின்றன.
மகளிர் ஒதுக்கீடு தேவைதான் அதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. ஆனால் சமுதாயத்தில் கல்வியிலும், பொருளாதாரம், அரசியலிலும் தலித் மக்களைவிட பின் தங்கியுள்ளார்கள் என்று நீதிபதி சச்சார் அறிவித்த பின்பும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலன் கருதி அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கைப்படி 27 சதவீத ஒதுக்கீடு கல்வியிலும், வேலையிலும் அவர்களுக்கு சலுகை கொடுத்த பின்பும் முஸ்லிம் மகளிர்களுக்கும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு மகளிர் மசோதாவில் இல்லை என்பது தான் அந்த மகளிரை ஏமாற்றும் மசோதாவாக கருத வேண்டியுள்ளது.
முன்னாள் மண்டல் கமிஷன் அமல்படுத்திய தலைவர் வி.பி. சிங் நம்மிடையேயில்லை. அவர் இருந்திருந்தால் நிச்சயமாக முஸ்லிம் பெண்களுக்கும், பிற்பட்ட சமுதாயத்திற்கும் குரல் கொடுத்திருப்பார். ஆனால் அவர் சார்பாக சமஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கும், ஆர.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஜே.டி.(யு) கட்சித் தலைவர் சரத் யாதவும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாம் உள் ஒதுக்கீடுக்காக போராடுகிறார்கள். தங்கள் எம்.பி. பதவி போனாலும் பரவாயில்லை நாங்கள் உள் ஒதுக்கீடு பெறாமல் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் செய்வோம் என உறுதியுடன் உள்ளனர்.
ஆனால் முன்னாள் மண்டல் ஆதரவாளர், வி.பி.சிங்கிற்கு சங்கடமான நேரத்தில் ஆதரவு கொடுத்த சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘இப்போது பெண்கள் ஒதுக்கீடு நிறைவேற்றுவோம், பின்பு முஸ்லிம்களுக்கும், பிற்பட்டோர் உள் ஒதுக்கீடு பற்றி யோசிப்போம்’ எனக் கூறுகிறார்கள். ‘பார்க்கலாம்’, ‘யோசிக்கலாம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தமே ஐயப்பாடு எழுப்புவதுதானே என்று அறியாதவர்களல்ல முஸ்லிம்களும், பிற்பட்ட மக்களும்.
ஆந்திர மாநிலத்தினைச்சார்ந்த மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவாசி மசோதாவை எதிர்க்கிறார். முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என குரல் கொடுக்கிறார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு எம்.பிக்களும், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி எம்.பியும் மௌனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளதல்லவா?
1952 தேர்தலுக்கு முன்பு மாகாண-பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் 15 விழுக்காடு பெற்றிருந்தனர். ஆனால் இன்று 543 எம்.பிக்கள் கொண்ட மக்களவையில் வெறும் 30 முஸ்லிம் எம்.பிக்கள் தான் உள்ளனர். அது 5.5. விழுக்காடுதானே. அதில் பெண்கள் இருவர் உள்ளனர். அவர்களில் பி.எஸ்.பி.யினைச்சார்ந்த தமசிம் பேகமும், காங்கிரஸைச்சார்ந்த மௌசம் நூரும் ஆவர். 543 எம்.பிக்கள் கொண்ட மக்களவையில 5..5 விழுக்காடு தான் முஸ்லிம் எம்.பிக்கள் இடம் பெற்றிருக்கின்ற நிலையில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் மூன்று விழுக்காடு எம்.பிக்கள் கூட அடுத்த மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படுவது சந்தேகமே!
ராஜீவ் பிரதமராக இருந்தபோது ”பஞ்சாயத்து ராஜ்” என்ற பஞ்சாயத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு கொண்டு வந்தார். அதன் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பஞ்சாhயத்துகளிலும், நகரசபையிலும் முஸ்ல்pமம் பெண்கள் தலைவர்களாக உள்ளனர். ஆனால் மாநகராட்சிகளான சென்னை, கோவை, பெண்கள் மாநகராட்சிகளான திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகியவைகளில் முஸ்லிம் பெண்கள் மேயராக தேர்ந்தெடுக்க முடியுமா?
அரசியல் கட்சித் தலைவர்களும் மெஜாரிட்டி ஜாதி பெண்களைத்தான் அந்தப்பதவிக்கு போட்டிபோட தேர்ந்தெடுப்பர். அது தான் மேற்குறிப்பிட்ட மாநகரங்களில் நடந்து கொண்டுமுள்ளது என்பது கண்கூடாகத் தெரியும் போது பிற்பட்ட மைனாரிட்டி சமூகத்தினைச்சார்ந்த பெண்கள் அந்த 33 விழுக்காடு ஒதுக்கீடில் போட்டிப் போட்டு வெற்றிபெற முடியுமா? நிச்சயமாக முடியாது.
உதாரணத்திற்கு 1962 ஆம் ஆண்டு எங்களூர் இளையாங்குடியினை உள்ளடக்கிய மானாமதுரை சட்டமன்றத்தேர்தலுக்கு எங்களூரைச்சார்ந்த அமீன் நைனார் ஹவுத் அவர்களை காங்கிரஸ் சார்பாக நிறுத்தியிருந்தது. தேவர் இனத்தினைச்சார்ந்த, சுதந்திராக் கட்சியினைச் சார்ந்த சீமைச்சாமியினை அந்தக்கட்சி நிறுத்தியிருந்தது. முஸ்லிம்களும், தலித் யாதவ மக்கள் அமீன் நைனார் ஹவுத் அவர்களுக்கு ஓட்டுப் போட்டிருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பார். ஆனால் அமீன் நைனார் ஹவுத் தோற்கடிக்கப்பட்டார்.
அதன் பின்பு இளையாங்குடி தொகுதியாக 1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் வரை முஸ்லிம் அல்லாதவர்கள் தான் அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏக்களாக இருந்து உள்ளனர். இவ்வளவிற்கும் அந்த எம். எல். ஏக்கள், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இளையாங்குடியினையோ அல்லது ஆர்.எஸ்.மங்களத்தினயோ சார்ந்தவர்களல்லர். அதே போன்று தான் கீழக்கரை கடலாடித் தொகுதியிலிருந்தபோது எந்த முஸ்லிமும் எம்..எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. முஸ்லிம் ஆண்களுக்கே முஸ்லிம் சார்ந்த ஊர்களில் எம்.எல்.ஏ கனவு எட்டாக்கனியாக இருக்கும்போது முஸ்லிம் பெண்கள் நிலை பரிதாபமாகத் தெரியவில்லையா?
தமிழக்தில், 234 எம்.எல்.ஏக்கள் உள்ள சட்டமன்றத்தில் 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக ஜீனத் சர்புதீன் எம்.எல்.ஏவாக இருந்தார். அதன் பின்பு அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏவாக பதர் செய்யது 2006 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரா மாநிலம் இதை விட மோசம். 34 பெண் எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட முஸ்லிம் பெண்ணல்ல. ஆகவே முஸ்லிம் பெண்கள் அத்திப்பூத்தது போன்று பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சாதாரண தமிழக சட்டமன்றத்திலே முஸ்லிம் பெண்கள் இடம் பெற்ற இடைவெளி 15 ஆண்டுகள் ஆனது என்றால் பாராளுமன்றத்தில் இடம் பிடிக்க குதிரைக்கு கொம்பு முளைக்கும் என்று பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் தான். அதுவும் இந்த இட ஒதுக்கீடு மசோதா 15 ஆண்டுகளுக்கு பின்பு காலாவதியாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பின்பு எங்கே சில தலைவர்கள் சொல்லுவது போல பின்பு பார்க்க முடியும்?
பாரதப்பிரதமர் 7.3.2010 ஒரு மகளிர் நிகழ்ச்சியில் டெல்லியில் பேசும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாலினபாகுபாடு எதிரொளிக்கிறது என்று சொல்லி விட்டு ஆண்களில் 51. சதவீதம் பயனடைந்துள்ளனர். ஆனால் பெண்கள் 25.7 சதவீதம் தான் பயனடைந்துள்ளனர் என்ற புள்ளி விபரத்தினையும் சொல்லியிருக்கிறார். அந்த 25.7 சதவீத பெண்களில் எந்தனை சதவீதம் முஸ்லிம் பெண்களென்றால் விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கும். பொருளாதாரத்திலே மொத்தப் பெண்களும் பின்தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லும்போது நீதிபதி சச்சார் சொன்னது போல அரசியலில் இன்று முஸ்லிம் பெண்கள் படு பாதாளத்தில் உள்ளார்கள் என்றால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதற்கு தமிழக, ஆந்திர சட்டமன்ற, மக்களவை முஸ்லிம் பெண்கள் பங்கேற்பினை ஏற்கனவே தெரிவித்துள்ளதை உதாரணமாக வைத்து தெரிந்து கொள்ளலாம்.
ஓரு வேளை எதிர்ப்புக்களிடையே மகளிர் மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம் பெண்களினை அரசியல் விளிப்புணர்வு ஊட்ட தயாராக வேண்டாமா? அவர்களுக்கு பொதுக்கல்வியுடன் அரசியல் கல்வியும் பொது நிறுவனங்கள்- அரசியல் கட்சிகள்-சமூக அமைப்புகள் புகட்ட வேண்டும். அவையாவன எனப்பார்க்கலாம்:
மக்களவை-சட்டமன்றங்களில் உறுப்பினர் ஆவதிற்கு என்னன்ன தகுதி வேண்டும்.
சட்டமன்ற-மக்களவை அமைப்பு எவ்வாறு இருக்கிறது.
மந்திரிகள்-சபாநாயர்கள்-முதல்வர்-பிரதமர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் ஊதியம்-வேலை என்னன்ன.
மக்கள் பிரதிநித்துவச்சட்டம் என்னன்ன சொல்கிறது.
அரசியலைமைப்புச்சட்டம் என்னன்ன முக்கியமான பிரிவுகள் மைனாரிட்டிகள் சம்மந்தப்பட்டது
எவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்வது. அதற்குத் தேவையானது என்னன்ன பத்திரங்கள்-உறுதிமொழிகள்.
வாக்காளர் பட்டியலில் எவ்வாறு பெயர்களைச் சேர்ப்பது.
வார்டு-பூத் வாரியாக எப்படி அமைத்து ஆதரவு தேடுவது.
மக்களவை-சட்டமன்ற தேர்தல் செலவு வரம்புகள் என்னன்ன, தேர்தல் முடிந்ததும் செலவினங்களை எவ்வாறு தேர்தல் அதிகாரயிடம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் விதி முறைகள் என்னென்ன?.
மேற்கூறியவைகள் சில அறிவுரைதான். அனுபவத்தில் தெரிந்து கொள்ளவேண்டியது ஏராளமாக உள்ளது. அவைகளைத் தெரிந்து கொள்வது மூலம் முஸ்லிம் பெண்கள் நாட்டின் கண்களாக மட்டுமல்லாது, சமூதாயத்தினை நிலை நிறுத்தும் தூண்களாக மாறமுடியுமல்லவா என் சொந்தங்களே!
Posted by: Muduvai Hidayath