Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மேலைத்தேய நாசகார நாகரீகம் (2)

Posted on March 3, 2010 by admin

[ இன்றைய அமெரிக்கா தன்னை பண்டைய கிரேக்கத்துடன் ஒப்பிடும் ஒவ்வொரு தடவையும், யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருவதாக அப்பாவி வேஷம் போடுகின்றது. அதாவது தனக்கு ஏகாதிபத்திய ஆதிக்க வெறி ஒரு போதும் இருக்கவில்லை என்பது போல.

இந்த விடயத்தில் கூட நம் காலத்து ஏகாதிபத்தியம், பண்டைய கிரேக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அனேகமாக ”கிரேக்க ஏகாதிபத்தியம்” குறித்து சரித்திர நூல்கள் குறிப்பிடுவதில்லை. ”அலெக்சாண்டர் என்ற தனி மனிதனின் உலகை ஆளும் ஆசை” பற்றி மட்டும் எடுத்துக் கூறுகின்றன.

குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மேற்குலகிடம் இருந்து தமக்கு கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி விட்டன. அவர்கள் மேற்குலக நாகரீகத்தை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற மறுக்கிறார்கள். சிறந்ததை மட்டும் பின்பற்றுவோம், மற்றவற்றை விட்டு விடுவோம் என்று நடந்து கொள்கின்றனர். அதற்கு மாறாக, மேற்குலக குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வரும் நாடுகளும் இருக்கின்றன.]

பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நாட்டிற்கு தெற்கே இருந்த ஸ்பார்ட்டா என்ற தேசத்தின் வீரதீரக் கதை தான் ”300”. ஃபாரசீக ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து, 300 ஸ்பார்ட்டா வீரர்கள் தீரத்துடன் போரிட்டு மடிவது தான் கதை.

ஃபாரசீக நாட்டு வீரர்கள், கறுப்பர்கள் போல, அல்லது அரேபியர் போல தோன்றுகின்றனர். அவர்களின் செயல்கள் காட்டுமிராண்டித் தனமானவை. சுருங்கக் கூறின், மேற்கத்திய நாகரீகத்திற்கும், கிழக்கத்திய காட்டுமிராண்டித் தனத்திற்கும் இடையிலான போர். இன்றைய இளம் தலைமுறைக்கு இன மேலாதிக்க அரசியல் பிரச்சாரம் செய்ய, ஹாலிவுட் கண்டு பிடித்த சரித்திரக் கதை அது.

ஸ்பார்ட்டா மக்கள் எந்த அளவு நாகரீகமடைந்திருந்தனர்? ஏதென்ஸ் இற்கும், ஸ்பார்ட்டாவிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. முரண்பாடுகள் முற்றி இவ்விரு அரசுகளுக்கும் இடையில் சில நேரம் யுத்தம் மூண்டது. ”கிரேக்கர்களின் உள்நாட்டு யுத்தம்” என்று அப்போது அது அழைக்கப்பட்டது. ஏதென்ஸ் நகரமயமாக்கப்பட்ட சமூகமாக இருந்தது. அதற்கு மாறாக ஸ்பார்ட்டா கிராமங்களின் தேசம்.

ஆனால் அதி தீவிர இராணுவமயப்பட்ட பாஸிச சமூகத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தமது ஆண்குழந்தைக்கு பத்து வயதானவுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும். அன்றில் இருந்து இராணுவ முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் இளைஞர்களுக்கு, கடுமையான இராணுவ பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தமது பதின்ம வயதில் சித்தி அடையும் போது, தயக்கத்தைப் போக்குவதற்காக, கண்ணில் படும் அடிமையை கொலை செய்யுமாறு பணிக்கப்படுவர்.

ஸ்பார்ட்டாவில் அடிமைகளின் உரிமை பற்றி யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இராணுவ பயிற்சிக்காக கொல்லப்பட்டும் பலியாடுகள் அவர்கள். இந்த அடிமைகள் முந்தின போர்களில் வெற்றி கொள்ளப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்கள். அதாவது போர்க் கைதிகள். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அடிமைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழக் கூடாது என்பதற்காக, இராணுவ பயிற்சியின் போது வேட்டையாடப் பட்டனர்.

ஒரு முறை ஸ்பார்ட்டாவில் ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி, அடிமைகளை விடுதலை செய்தது. அடிமைகள் ஒன்று திரண்டு, ஸ்பார்ட்டா அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். ஐந்து வருடங்களாக அந்தக் கிளர்ச்சியை அடக்க முடியவில்லை. இறுதியில் ஏதென்ஸின் மத்தியஸ்தத்தின் பின்னர், கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறிய பின்பே, அமைதி திரும்பியது. அந்த கிளர்ச்சிக்குப் பின்னர், ஸ்பார்ட்டா அதிகாரிகள், அடிமைகளை ஓரளவு மனிதத்தன்மையுடன் நடத்தலாயினர்.

இன்றைய மேற்குலக அரசுகளும், அன்றைய கிரேக்க அரசுகளும் பிரச்சாரம் செய்தது போல, கிழக்கில் இருந்த பாரசீக நாட்டில், காட்டுமிராண்டிக் கலாச்சாரம் நிலவவில்லை. பாரசீகப் பொருளாதாரம் அடிமைகளை நம்பி இருக்கவில்லை. சமுதாயத்தில் மிக மிகக் குறைவான அடிமைகளே இருந்தனர்.

மேலும் சீருஸ் சக்கரவர்த்தி போட்ட சட்டம், அடிமை முறையை தடை செய்திருந்தது. கி.மு. 6 ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சீருஸ் சக்கரவர்த்தியின் சட்டம், ”உலகின் முதலாவது மனித உரிமைகள் சாசனம்” என்று புகழப் படுகின்றது. ஐ.நா.மன்றம் அதனை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. ”பிற மதங்கள் மீதான சகிப்புத் தன்மை, அடிமை முறை ஒழிப்பு, விரும்பிய தொழிலை செய்யும் உரிமை….” போன்ற தனி மனித சுதந்திரங்கள் அந்த சாசனத்தில் உறுதிப்படுத்தப் பட்டிருந்தன.

ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் இன்னொரு பேரரசின் தலைநகராக இருந்த பாபிலோன் சீருஸ் சக்கரவர்த்தியின் படைகளால் கைப்பற்றப்பட்டது. அப்போது கூட, பாபிலோன் மக்களுக்கு தாம் ஆக்கிரகிக்கப் பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் எழாதபடி ஆளப்பட்டனர். சக்கரவர்த்தியின் உத்தரவின் பிரகாரம், பாபிலோனியர்கள் தமது சொந்த மதத்தை வழிபட சுதந்திரம் வழங்கப்பட்டது. அத்தோடு எந்தவொரு பாபிலோனியனும் அடிமையாக்கப் படவில்லை.

மேற்குலகம் போதனை செய்வதைப் போல, அவர்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்தவர்களுமல்ல, மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகளும் அல்ல. வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து கற்பதால் தான் இந்த குளறுபடி ஏற்படுகிறது. இன்று ஊடகங்களில் சித்தரிக்கப்படும் ”காட்டுமிராண்டிக் குணாம்சங்கள்” எல்லாம் ஐரோப்பிய வரலாறு கண்டு வந்தவை தான்.

உதாரணத்திற்கு, தற்கொலைத் தாக்குதல்கள். இன்று நீங்கள் சாதாரண ஐரோப்பியனை (அல்லது அமெரிக்கனை) கேட்டால், ”பைத்திக்காரத் தனம்” என்று ஒரு வார்த்தையில் பதிலளிப்பார்கள். 1831 ம் ஆண்டு, நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் பிரிவினைக்காக யுத்தம் செய்த காலத்தில், நடந்த சம்பவமொன்று தற்கொலைப் பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும். யன் வான் ஸ்பைக் என்ற ஒல்லாந்து வணிகன், எதிரிப்படைகளிடம் தனது கப்பல் அகப்படும் தருணத்தில், தனது கப்பலை வெடிக்க வைத்து தானும் மாண்டான். அதிகம் பேசுவானேன், முன்னர் குறிப்பிட்ட 300 ஸ்பார்ட்டா வீரர்கள் மரணத்தை எதிர்நோக்கிச் சென்ற தற்கொலைக் கொலையாளிகள் தான்.

இன்றைய அமெரிக்கா தன்னை பண்டைய கிரேக்கத்துடன் ஒப்பிடும் ஒவ்வொரு தடவையும், யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருவதாக அப்பாவி வேஷம் போடுகின்றது. அதாவது தனக்கு ஏகாதிபத்திய ஆதிக்க வெறி ஒரு போதும் இருக்கவில்லை என்பது போல. இந்த விடயத்தில் கூட நம் காலத்து ஏகாதிபத்தியம், பண்டைய கிரேக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அனேகமாக ”கிரேக்க ஏகாதிபத்தியம்” குறித்து சரித்திர நூல்கள் குறிப்பிடுவதில்லை. ”அலெக்சாண்டர் என்ற தனி மனிதனின் உலகை ஆளும் ஆசை” பற்றி மட்டும் எடுத்துக் கூறுகின்றன.

வட கிரேக்க, மசிடோனியா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர், பாரசீக நாட்டை அடக்குவதாக கூறித் தான் அனைத்து கிரேக்கர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டான். போரில் பாரசீக பேரரசை தோற்கடித்த பின்னர், இளம் வயதில் அலெக்சாண்டர் மாண்டது உண்மை தான். ஆனால் அத்துடன் சரித்திரம் முற்றுப் பெறவில்லை. அலெக்சாண்டரின் பின்னர் அந்தப் பேரரசை நிர்வகித்தவர்கள் அனைவரும் கிரேக்கர்கள்.

இன்றைய ஈரான் முதல் எகிப்து வரை கிரேக்க நகரங்கள் தோன்றியிருந்தன. அங்கெல்லாம் கிரேக்கர்கள் சென்று குடியேறினர். உள்ளூர் மக்கள் தொழிலுக்காக கிரேக்க மொழி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கிரேக்க காலனிகளின் மக்கள், உள்ளூர் மக்களுடன் ஒன்று கலக்காது, உயர்ந்த அந்தஸ்தைப் பேணி வந்தனர்.

கிரேக்க காலனிய காலகட்டத்தில் இருந்து, அதாவது 2500 வருடங்களாக, ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள், மேலைத்தேய நாகரீகத்தை வியப்புடன் நோக்கினர். வேறுவிதமாக கூறினால், மேற்கத்திய மேலாண்மைக்கு அடிபணிந்தனர். தமது சொந்த கலாச்சாரம் பிற்போக்கானது என்றும், மேலைத்தேய கலாச்சாரம் முற்போக்கானது என்று நம்பினார். நமது நாட்டில், தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடும், ஆங்கிலப் பெயர் சூட்டிக் கொள்வதை பெருமையாகக் கருதும், நடுத்தர வர்க்கத்தை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

அப்படியானவர்கள் எல்லா ஆசிய நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அதாவது மேலைத்தேய நாகரீகம், தானே உலகில் உயர்ந்தது, மற்றதெல்லாம் காட்டுமிராண்டிகளின் நாகரீகம், என்பதை நிலை நாட்ட பாடுபடுகின்றது. அந்தக் கருத்துக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் மக்களும் இருந்தனர்/இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த சிந்தனை மாறி வருகின்றது.

குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மேற்குலகிடம் இருந்து தமக்கு கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி விட்டன. அவர்கள் மேற்குலக நாகரீகத்தை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற மறுக்கிறார்கள். சிறந்ததை மட்டும் பின்பற்றுவோம், மற்றவற்றை விட்டு விடுவோம் என்று நடந்து கொள்கின்றனர். (அதற்கு மாறாக, மேற்குலக குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வரும் நாடுகளும் இருக்கின்றன.)

ரஷ்யாவிலும், சீனாவிலும், ஒரு காலத்தில் தமது பிரசைகள், மேற்குலக செல்வாக்கிற்கு உட்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. அதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது அந்த அச்சம் மறைந்து வருகின்றது. ரஷ்ய, சீன அரசுகள் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. ரஷ்யா ஜோர்ஜியா மீது போர் தொடுத்த காலத்தில், சீனா திபெத் கிளர்ச்சியை அடக்கிய நேரமும், மேற்குலக கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பான்மை மக்கள் தமது அரசின் பக்கமே நின்றனர். அந்த நேரம் மேற்குலக கண்டனங்கள் அவர்களுக்கு எரிச்சலையே ஊட்டின.

அதற்குக் காரணம், மேற்குலகின் ”இரட்டை அளவுகோல் கொள்கை.” ”மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழிக்கேற்ப மேற்குலக நாடுகளின் நடத்தைகள் அமைந்துள்ளன. உலக மக்கள் அனைவரும் இந்த இரட்டை வேஷம் குறித்து நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால் ”மேற்குலகின் உயர்ந்த நாகரீகம்” தற்போது, சந்தையில் விலைப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது.

மிக்க நன்றி :http://kalaiy.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

67 − = 62

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb