[ ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற முறையில் இருவரும் சமமானவர்களே. இருபாலாருடைய உயிரும் சமமானவையே.
ஒழுக்கக் கேடாக நடப்பதற்கும் சாராயம் விற்பதற்கும் ஆடைகள் அணிவதற்கும் சமத்துவம் தேடுவோர் முதலில் உயிர்களைச் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நவீன யுகத்தில் கூட ஆண்களின் உயிரும் பெண்களின் உயிரும் சமமாகக் கருதப்படுவதில்லை.
கொலை செய்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனுச் செய்கிறார்கள். பெண்கள் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் பொன்றவற்றின் சார்பாக இத்தகைய மனு அளிக்கப்பட்ட செய்தியை காண்கிறோம்.
ஒரு பக்கம் சமத்துவம் எனக் கூறிக்கொண்டு மறுபக்கம் பெண் என்பதற்காக கொலைகாரப் பெண்ணுக்காக சலுகைகள் கேட்கின்ற கேலிக் கூத்தைப் பார்க்கிறோம். 20 ஆம் நூற்றாண்டில் கூட உயிர்கள் அனைத்தும் சமம் எனக் கருதப்படாத போது ஆறாம் நூற்றாண்டிலேயே இருபாலாரின் உயிர்களும் சமமானவையே என்று இஸ்லாம் பிரகடனம் செய்தது.]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى
”நம்பிக்கையாளர்களே! கொல்லப்பட்டவர்களுக்கு (கொலையாளிகளின் மீது) கொலைத் தண்டனையளிப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவருக்காக (அவரைக் கொன்ற) சுதந்திரமானவனும், அடிமைக்காக (அவரைக் கொன்ற) அடிமையும், பெண்ணுக்காக (அவளைக் கொன்ற) பெண்ணும் (என்ற அடிப்படையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்)”. (அல்குர்ஆன் 2:178) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் காலத்திற்கு முன்னால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அநீதியான ஒரு சட்டத்துக்கு எதிராக இந்த வசனம் அருளப்பட்டது.
அடிமையாக இருக்கும் ஒருவன் அடிமையல்லாத ஒருவனைக் கொலை செய்தால் கொலை செய்த அடிமையைத் தண்டிக்க மாட்டார்கள். மாறாக கொலை செய்த அடிமையின் உரிமையாளனைத் தான் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருதிவந்தனர். அடிமையல்லாதவனின் உயிருக்கு அடிமையின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.
அதே போல் அடிமையாக இல்லதவன் அடிமையைக் கொன்றால் கொலையாளியை அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். மாறாக அந்த அடிமையின் விலையை உரிமையாளரிடம் கொடுத்து விடுவது போதுமானது என்று செயல்பட்டு வந்தனர். மேலே நாம் சுட்டிக் காட்டிய அதே நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
அதே போல் ஒரு பெண் ஒரு ஆணைக் கொன்றால் கொலை செய்த பெண்ணுக்குத் தண்டனை வழங்காமல் அப்பெண்ணின் உறவினரான ஒரு ஆண் மகனைக் கொல்ல வேண்டும் என்று கருதி வந்தனர். ஆணுடைய உயிருக்குப் பெண்ணின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணமாகும்.
இதே போல் ஒரு பெண்ணை ஒரு ஆண் கொன்று விட்டால் கொலை செய்த ஆணுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படாது பெண்ணின் குடும்பத்துக்கு ஏதாவது தொகைளைக் கொடுத்தால் போதுமானது என்பது அன்றிருந்த நிலை. ஆண்கள் உயிரும் பெண்கள் உயிரும் சமமானவை அல்ல என்று அவர்கள் உறுதியாக நம்பியதே இதற்குக் காரணம்.
அடிமைகளை அடிமையும், பெண்ணைப் பெண்ணும் கொலை செய்தால் அதற்கும் கொலை தண்டனை வழங்கமாட்டார்கள். பெண்களும் அடிமைகளும் ஆண்களின் உடமைகளாகக் கருதப்பட்டதால் தேவையான நஷ்டஈட்டை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அன்றைய நிலை.
இந்த அநீதியான சட்டத்தை ரத்துச் செய்வதற்குத் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற முறையில் இருவரும் சமமானவர்களே. இருபாலாருடைய உயிரும் சமமானவையே என்ற பிரகடனம் தான் இது.
இவ்வசனத்தின் துவக்கமே ‘கொல்லப்பட்டவர்களுக்காக கொலைத் தண்டனை அளிப்பது உங்கள் கடமை‘ என்று பொதுவாக அறிவிக்கின்றது. கொல்லப்பட்டவர்கள் ஆணா? பெண்ணா? அடிமையா? எஜமானனா? என்றெல்லாம் பேதம் கிடையாது. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தான். இதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ளலாகாது எனக் கூறுகிறது.
பொதுவாகக் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் விரிவாகவும் விளக்கமாகவும் தொடர்ந்து இவ்வசனம் கூறுகிறது.
அடிமையாக இல்லாதவனை அடிமையாக இல்லாதவன் கொலை செய்தாலும், அடிமையை மற்றொரு அடிமை கொலை செய்தாலும் பெண்ணைப் பெண் கொலை செய்தாலும் கொலையாளிக்கு கண்டிப்பாக கொலைத் தண்டனை தரப்பட வேண்டும். கொலையாளிக்கத்தான் அந்தத் தண்டனை தரப்பட வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இதை தமது ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர். ஒரு யூதர் இரண்டு கற்களுக்கிடையே ஒரு பெண்ணின் தலையை நசுக்கினார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அப்பெண்ணிடம், ‘யார் உன்னைத் தாக்கியவர்? என்று கேட்கப்பட்டது. இவரா? அவரா? என்று கேட்டு வரும் போது அந்த யூதனின் பெயரைக் கூறியதும் ‘ஆம்‘ என்பது போல் சைகை செய்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளைப்படி அந்த யூதர் பிடிக்கப்பட்டு இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி
யாரேனும் தனது அடிமையைக் கொன்றால் அவரை நாம் கொல்வோம். யாரேனும் தனது அடிமையின் காதை வெட்டினால் அவரது காதை வெட்டுவோம். மூக்கை வெட்டினால் அவரது மூக்கை நாம் வெட்டுவோம் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: சமுரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
இந்த நவீன யுகத்தில் கூட ஆண்களின் உயிர்களும் பெண்களின் உயிர்களும் சமமாகக் கருதப்படுவதில்லை. கொலை செய்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனுச் செய்கிறார்கள். பெண்கள் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் பொன்றவற்றின் சார்பாக இத்தகைய மனு அளிக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் கண்டோம்.
ஒரு பக்கம் சமத்துவம் எனக் கூறிக்கொண்டு மறுபக்கம் பெண் என்பதற்காக கொலைகாரப் பெண்ணுக்காக சலுகைகள் கேட்கின்ற கேலிக் கூத்தைப் பார்க்கிறோம். 20 ஆம் நூற்றாண்டில் கூட உயிர்கள் அனைத்தும் சமம் எனக் கருதப்படாத போது ஆறாம் நூற்றாண்டிலேயே இருபாலாரின் உயிர்களும் சமமானவையே என்று இஸ்லாம் பிரகடனம் செய்தது.
இதே போல் கணவர்களாலும் இளம் மனைவிகள் கொல்லப்படுகின்றனர். ஸ்டவ் வெடித்துச் செத்ததாக பைல்கள் குளோஸ் செய்யப்படுகின்றன. குடும்ப விஷயத்தில் தலையிடக் கூடாது என்ற கோட்பாட்டின் படி அக்கொலையாளிகள் மீது பெரும்பாலும் வழக்குப் பதிவதில்லை. கணவனின் உயிர், மனைவியின் உயிரை விடச் சிறந்தது என்று கருதுகிறார்கள். இத்தகைய போக்கையும் இவ்வசனம் கண்டிக்கிறது.
ஒழுக்கக் கேடாக நடப்பதற்கும் சாராயம் விற்பதற்கும் ஆடைகள் அணிவதற்கும் சமத்துவம் தேடுவோர் முதலில் உயிர்களைச் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனின் இவ்வசனத்தை அவர்கள் சிந்திக்க வேண்டும்.