”தன் கையால் உழைத்து ஒருவர் உண்பதை விட, வேறு சிறந்த உணவை எவரும் சாப்பிடமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்வின் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் கையால் உழைத்து உண்பவர்களாக இருந்தார்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (அறிவிப்பாளர்: மிக்தாத் இப்னு மஹ்தீ கர்ப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
”நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் கரத்தின் உழைப்பின் மூலமே தவிர சாப்பிட்டதில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
”நபி ஸக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரவேலை செய்யும் தச்சராக இருந்தார்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
”உங்களில்; ஒருவர் தன் கயிற்றை எடுத்துக் கொண்டு, மலைக்கு அவர் வந்து, தன் முதுகில் ஒரு கட்டு விறகைச் சுமந்து, அதை விற்று, அதன் மூலம் தன் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்பது, அவர் மக்களிடம் யாசகம் கேட்டு, அவர்கள் தருவது அல்லது மறுத்து விடுவது என்பதை விடச் சிறந்ததாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஅப்துல்லா என்ற சுபைர் இப்னு அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
”தன் முதுகில் ஒரு கட்டு விறகை உங்களில் ஒருவர் சுமப்பது, ஒருவரிடம் யாசகம் கேட்டும் அவர் கொடுத்தோ அல்லது மறுத்தோ விடுவதை விடச் சிறந்தது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வை நம்பியோருக்கு அச்சமில்லை
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை கஅபாவின் நிழலில் தமது போர்வையை தலைக்குக் கீழே வைத்துப் படுத்துக் கொண்டிருந்தார்கள். (அந்தக் காலகட்டத்தில் மக்கா வாசிகள் முஸ்லிம்கள் மீது எல்லையற்ற கொடுமைகளை இழைத்துக் கொண்டிருந்தனர்) நாங்கள் அண்ணலாரிடம் வினவினோம்: “நபியவர்களே! தாங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் உதவி கேட்க மாட்டீர்களா? இந்த அநீதி ஒழிந்திட இறைஞ்ச மாட்டீர்களா? (எதுவரை இந்தக் கொடுமைகள் தொடரும்? எப்போது இந்தத் துன்பப்படலம் நீங்கும்?)” அண்ணலார் இதனைக் கேட்டு விட்டுக் கூறினார்கள்:
“உங்களுக்கு முன்னர் எப்படிப்பட்டவர்களெல்லாம் (இஸ்லாமியப் போராட்ட வரலாற்றில்) சென்றிருக்கிறார்கள் என்றால்,
அவர்களில் சிலருக்குக் குழி தோண்டப்பட்டு, அதில் அவர்கள் நிற்க வைக்கப்படுவார்கள். பிறகு ரம்பம் கொண்டு வரப்பட்டு அவர்களது உடல் இருகூறுகளாகப் பிளக்கப்படும்!
இவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்ட பின்னரும் அவர்கள், தம் தீனை விட்டு மாறிடவில்லை.
அவர்களின் உடலில் இரும்புச் சீப்புகளால் குத்தப்படும்! அவை சதையைக் கடந்து எலும்புகளையும் நரம்புகளையும் சென்று தாக்கும்! ஆனாலும், அந்த இறை நம்பிக்கையாளர்கள் சத்தியத்தை விட்டுப் பிறழ மாட்டார்கள்.
இறைவன் மீது ஆணையாக, இந்த மார்க்கம் ஓங்கியே தீரும். எந்த அளவுக்கெனில், ஒருவன் (யமன் நாட்டின் நகரான) “ஸன்ஆ’ விலிருந்து “ஹலரமவ்த்’ வரை பயணம் செய்வான்- பாதையில் அல்லாஹ்வைத் தவிர, வேறெவருடைய அச்சமும் இருக்காது. ஆடு மேய்ப்பவனுக்கு- தன் ஆடுகளை ஓநாய் கவ்விச் சென்றுவிடுமே – என்ற ஓநாய் பற்றிய அச்சம் மட்டுமே இருக்கும்.
ஆனால், நீங்கள்தான் (அந்தக் காலம் வருவதற்கு முன்) பொறுமையிழந்து அவசரப்படுகின்றீர்கள்.” (அறிவிப்பாளர்: கப்பாப் பின் அல்அரத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)