விமான நிலைய ஸ்கேனர் இஸ்லாமுக்கு எதிரானது: அமெரிக்க முஸ்லிம் அமைப்பு
வாஷிங்டன் :விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள முழு உடலை பரிசோதிக்கும் ஸ்கேனர் கருவி இஸ்லாமுக்கு எதிரானது, என அமெரிக்க முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரத்துக்கு வந்த விமானத்தை நைஜீரிய வாலிபர் ஒருவர் தன் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்தில் ஊசி மூலம் ரசாயனத்தை செலுத்திய போது புகை வந்தது. இவர் இந்த விமானத்தை தகர்க்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் உஷாரடைந்த அமெரிக்க நிர்வாகம், அனைத்து விமான நிலையங்களிலும் உடல் முழுக்க சோதனையிடும் ஸ்கேனர் கருவியை வைக்க ஏற்பாடு செய்தது. இதன் மூலம் பயணிகள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருக்கும் ஆயுதத்தையோ, போதை பொருளையோ எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
இந்த ஸ்கேனர் கருவி இஸ்லாம் கொள்கைக்கு எதிரானது, என அமெரிக்க இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது. “ஒரு ஆணின் அந்தரங்க உறுப்பை பெண்ணோ, அல்லது பெண்ணின் அந்தரங்க உடல்பாகங்களை ஆணோ பார்ப்பது இஸ்லாமுக்கு விரோதமானது. இந்த ஸ்கேன் கருவி ஆண், பெண் உடல் பாகங்களை தெளிவாக காட்டவல்லது. எனவே, இந்த கருவி இஸ்லாத்துக்கு எதிரானது’ என, இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
8 லட்சம் பேருக்கு வேலை இல்லை அமெரிக்காவில் பரிதாப நிலை
வாஷிங்டன் :பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட பாதிப்பு, இன்னும் அமெரிக்காவை ஆட்டிப் படைக்கிறது. நடப்பு நிதியாண்டில் மட்டும், எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, அமெரிக்காவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல பெரிய நிறுவனங்கள் கூட, நிதிச் சிக்கலால் மூடப்பட்டன. இதனால், ஏராளமானோர் வேலை இழந்தனர். இந்த பாதிப்பு இன்னும் தொடர்கிறது. பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக, தொழில் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு நிதி ஊக்கச் சலுகைகளை அமெரிக்க அரசு அறிவித்தது.இந்த சலுகை அறிவிப்பு, சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக் கல் செய்த பட்ஜெட்டில் எதிரொலித்தது. இதில், 80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, வேலை இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என்ற கவலையான தகவலும் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சகம் தாக்கல் செய்த வேலை வாய்ப்பு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதார மந்த நிலை இன்னும் நீடிக்கிறது. இதனால், நடப்பு நிதி ஆண்டின் முடிவில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் இத்தனை பேர் வேலை இழப்பது என்பது மிகவும் கவலை அளிக்கிறது. இந்தாண்டில் பத்து லட்சம் முதல் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. இருந்தாலும், வேலை இழப்பு நிலை, முழுவதும் சீரடைவதற்கு இன்னும், நான்கு ஆண்டுகளாவது ஆகும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், “புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. “இதனால், குறுகிய காலத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது நீண்ட கால நடவடிக்கைகள் தேவை. “ஏனெனில், வேலைவாய்ப்பின்மை 10.1 சதவீதமாக அதிகரிக்கும் என, அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.
கற்பழிப்புக்கு பெண்களே காரணம்: ஆய்வு தகவல்
லண்டன் :கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு பெண்களே காரணம், என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
லண்டனில் சமீபத்தில் கற்பழிப்பு குற்றம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆயிரம் பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிக அளவில் கற்பழிக்கப்படுகின்றனர். இந்த சம்பவம் நடப்பதற்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக உள்ளனர் என பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.இளம் பெண்கள் குட்டை பாவடை போன்ற தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சிகரமாக உடை அணிவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும் இவர்களே வம்பை விலைக்கு வாங்குவதாக உள்ளது. இன்னும் சிலர், ஆண் நண்பர்களின் வீட்டில் தங்குவதும், விருந்து நிகழ்ச்சிகளில் மேலாடை விலகுவது கூட தெரியாமல் நடனமாடுவதும் ஆண்களை சபலத்துக்குள்ளாகி விடுகிறது.
இதனால், தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கின்றன.கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடும் மூன்றில் ஒரு ஆண், தான் கற்பழித்ததை ஒப்பு கொள்வதில்லை. இதே போல கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த சம்பவத்தை போலீசில் சொல்ல முன்வருவதில்லை. இந்த விஷயம் கோர்ட் வரை செல்வதற்கு தயங்குகின்றனர். 42 சதவீத பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டதை போலீசில் புகார் செய்கின்றனர். இவ்வாறு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.