வாஸந்தி
இந்தியாவின் பல மாநிலங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தனித்தன்மையும் அழகும் கலாச்சாரப் பின்புலமும் இருப்பது கண்டு பரவசம் ஏற்படும். ஆனால் நான் இதுவரைப் பார்த்திருக்கும் மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம்தான் சொக்கவைக்கும் அழகு கொண்டதாக எனக்குப் படுகிறது.
அதன் தண்ணென்ற சீதோஷணம் , மலைகள், மலர்கள் ஏரிகள் என்று எங்கு திரும்பினாலும் அபிரிமிதமான சௌந்தர்யம் மனத்தை அள்ளும். அந்த சௌந்தர்யப் பிரதேசத்து மக்களும் அதி சௌந்தர்யமானவர்கள்.
புல் கட்டை சுமந்து செல்லும் ஒரு நங்கையைப் பார்த்து நான் சொக்கிப் போனேன். பார்த்த ஆண்கள் மேலெல்லாம் மையல் கொண்டேன். பளீரென்ற ரோஜா நிறமும் தீர்க்கமான மூக்கும் விழியும் , இறைவன் வஞ்சனை இல்லாமல் இயற்கை அழகை அம்மண்ணுக்கு அள்ளிக் கொடுத்ததுபோல அங்கு வாழும் மக்களுக்கும்– ஏழை பணக்காரர் என்று பேதமில்லாமல் அள்ளிக் கொடுத்திருப்பது காஷ்மீரத்தில்தான்.
எல்லோர் முகத்திலும் தெய்வீக அருள் சுரப்பதாக எனக்குத் தோன்றிற்று. அந்த தெய்வீக அருளாலேயே பல ஆண்டுகளாக அரசியல் வாதிகள் ஆடிவரும் சொக்கட்டான் ஆட்டத்தில் ரணகளமாகிப் போன பூமியில் அவர்களால் தொடர்ந்து பொறுமை காக்கமுடிகிறது என்று நினைக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த காஷ்மிர் இன்னமும் கண்ணெதிரில் நிற்கிறது.
அழகிய தால் ஏரியின் முன் நின்றிருந்தேன். அங்கங்கே கரை ஓரங்களில் படகு வீடுகள். அந்த வீடுகளில் வசிப்பது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் கற்பனையில் ஆழ்கிறேன். தில்லியில் நம் வீட்டில் இருக்கும் எந்த நவீன சௌகர்யமும் அங்கு இருக்காது என்று எனது கனவைக் கலைக்கிறார் என் கனவர் சுந்தரம். அங்கு அமர்ந்திருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் ஊழியர் அருணாச்சலம் என்ற தமிழர் எங்கள் பேச்சைக்கேட்டு சிரிக்கிறார்.
“உண்மைதாங்க.ரொம்பப் பணக்காரங்களுடைய படகு வீடுகள்ளெதான் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனா கோடை காலத்துலேதான் இருக்கமுடியும். குளிர்காலத்திலே ஏரி உறைஞ்சுடும். அப்ப ஜாகை மாத்தணும்.” தால் ஏரியின் முன் தான் அவரது அலுவலகம். ” தினமும் ஏரியைப் பாத்துகிட்டு வேலை செய்யறது எத்தனை அழகான அனுபவம்?” என்றேன் நான். “அதெல்லாம் இல்லீங்க” என்று மறுத்தார் அவர். ” தினமும் பார்த்தா அலுத்துடும்.”
எனக்கு வேடிக்கையாக இருந்தது. இயற்கை எழில்கூட அலுக்குமா என்றிருந்தது. நான் பேசாமல் இருப்பது கண்டு அவர் தொடர்ந்தார். ” நா கிறுக்கன்னு நீங்க நினைப்பீங்க. இந்த ஏரியையே பாத்துக்கிட்டு இருந்தா பித்து புடிச்சமாரி ஆயிடுது. மூளை மந்தமாயிடுது. ”
”ஸ்டார் கேசிங்‘ என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. ஆகாசத்தையும் நட்சத்திரங்களையும் மணிக்கணக்கில் பார்த்தபடி உட்காருபவர்களுக்கு அப்படி ஆகும் என்பார்கள். இப்போது டிவி எதிரில் உட்காருபவர்களுக்கும் இப்படித்தான் ஆவதாகத் தோன்றுகிறது.
எனது பார்வைக்கு ”தால் ஏரி” அற்புத அழகாக இருந்தது. டூரிஸ்ட்டுகள் ஏக உற்சாகத்துடன் அழகாக அலங்கரிக்கப்பட்ட படகுகளில் ஏரியைச் சுற்றியவண்னம் இருந்தார்கள். ஷிக்காரிகள் என்று அழைக்கப்பட்ட படகோட்டிகள் சிலர் காஷ்மீரி பாட்டைப் பாடியபடி படகைச் செலுத்தினார்கள். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் நீரும் அதற்கப்பால் பைன் காடுகளும் பனி போர்த்திய இமயமலைச் சிகரங்களும்… ஏரிக்கரையோரம் வண்ன வண்ண மலர்களும்… சாதாரண அழகு இல்லை அது. சொர்க்க வாசல் அது.
College girls in a pro-freedom rally
சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில் காஷ்மிர் இப்போதைய பதற்றமில்லாமல் இருந்தது. பயங்கரவாதம் தலையெடுத்திருக்கவில்லை. ஆனால் பிரிவினைவாதக் குழுக்கள் நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே, இந்திய–பாக் ப்ரிவினையின்போதே கிளம்பிவிட்டதால் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவு இறுக்கமாக இருப்பது இந்துக்களுடன் பேசும்போது தெரிந்தது.
முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட காஷ்மிர் பிரதேசத்தை முன்பு இந்து ராஜாக்கள் ஆண்டுவந்தார்கள். அது முரண்பாடாகத் தோன்றாததற்குக் காரணம் இஸ்லாமிய மதம் அங்கு முகலாய ஆக்கிரமிப்பினால் பரவ வில்லை. சகிப்புத்தன்மையும் மென்மையும் கொண்ட சூ·பீ ஞானிகளின் நேசம் மிகுந்த உபதேசங்களால் மெல்ல மெல்ல நுழைந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்த நிஜமான அற்புத காலம் இருந்தது. இந்தியா–பாக் பிரிவினையுடன் காஷ்மீரின் காற்றே மாறிவிட்டது. அதற்கு இரு தரப்பு அரசியல்வாதிகளின் செயல்பாடே காரணம். ஆனால் அவர்களது செயலுக்கு அரசியல் நிர்பந்தங்களும் காரணம்.
சற்றே சரித்திரத்தின் ஏடுகளைப் பின்னோக்கிப் பார்த்தால் காஷ்மீரின் இன்றைய குளறுபடிக்கான விவரம் விளங்கும். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்டபின் அதற்கான ஏற்பாடுகள்
நடக்கும்போது மன்னராட்சியின் கீழ் இருந்த மாநிலங்கள் தகராறு செய்ய ஆரம்பித்தன. ஜம்மு –காஷ்மிர் மாநிலம் தான் அதிக பட்ச சவாலாக இருந்தது. இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பெரிய ராஜ்யம் அதுதான். பூகோளரீதியாக இந்திய பாகிஸ்தானின் இரு எல்லைகளையும் தொட்டபடி இருந்தது. அதன் எல்லை திபெத் மற்றும் சீனாவின் சின்கியாங் மாகாணத்தையும் தொட்டது. ராஜா இந்துவானாலும் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் என்பதும் மாநிலத்தின் போக்குவரத்து இணைப்புகள் பாகிஸ்தான் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்து அப்பிரதேசத்தின் ஊடாகச் செல்பவை என்பதும் அதன் நதிகள் அங்கே பாய்வதும் , காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதற்குப் போதுமான காரணங்களாக இருந்தன.
காஷ்மிர் கைநழுவிப் போனால் இந்தியாவின் எல்லைப்பாதுகாப்பு மிகப் பெரிய ஆபத்தாகி விடும் என்று இந்திய அரசியல் தலைவர்கள் பயந்தார்கள். நல்ல வேளையாக, ஜின்னா ஆரம்பத்தில் முஸ்லிம் பெரும்பான்மைகொண்ட மாநிலங்களின் மன்னர்களே இந்தியாவுடன் இணைவதா பாகிஸ்தானுடன் இணைவதா என்று முடிவு செய்யட்டும் என்று சொல்லியிருந்தார். அவரது மனசில் இருந்த சமஸ்தானங்கள் இந்து மக்கள் தொகையும் முஸ்லிம் அரசரும் கொண்ட ஹைதராபாத், போபால், ஜூனாகாட் போன்றவை.
இந்திய சுதந்திர நாளாகக் குறிக்கப்பட்ட ஆகஸ்ட் 15க்கு முன்பாக ஆங்கிலேய அரசு காஷ்மிர் மகாராஜா ஹரி சிங்கிடம் பாகிஸ்தானுடன் இணைய விருப்பமா இந்தியாவுடன் இணைய விருப்பமா என்று திட்டவட்டமாக முடிவெடுக்கச்சொன்னது.
காஷ்மிர் அரசியலில் அப்போது ஷேக் அப்துல்லா பிரபலமாகி வந்தார். நேஷனல் கான்பரென்ஸ் என்ற மத சார்பற்ற கட்சியை ஆரம்பித்து மக்கள் தலைவராக உருவாகி வந்தார். நேருவுக்கு நெருக்கமானவர். காங்ரெஸ் கட்சியுடன் இணக்கமாக இருந்தார்.
ஜின்னா அவருக்கு அழைப்பு விடுத்தபோது ஏற்கமறுத்து காஷ்மீர் இந்திய சாஸனத்தின் கீழ் இருப்பதே நன்மை தரும் என்ற தீவிரத்துடன் இருந்ததால் நேருவின் அபிமானத்தைப் பெற்றார்.
ஹரி சிங் இரண்டு நாடுகளுடனும் இணையாமல் காஷ்மிர் தனது ஆட்சியில் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
மன்னருக்கு எதிராக ஷேக் அப்துல்லா கோஷம் எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடைசியில் இந்திய ஆங்கிலேய அரசுகளின் நிர்பந்தத்தினால் ஹரி சிங் தனது ஆசையைக் கைவிட்டு இந்தியாவுடன் இணைய சம்மதித்தார். அவரை ஆளுனராக்கி ஜனநாயக அரசு நிறுவப்பட்டது.
மற்ற மாநிலங்களைவிட அதிக அதிகாரம் வழங்கும் சுயாட்சி முறை ஏற்கப்பட்டது.
குடியரசுப் பிரகடனம் ஆனபின் மன்னர்கள் ஜனநாயக அமைப்புக்கு அடிபணிய வேண்டிய நிலையில் காஷ்மீரில் இனப் பிரச்சினையும் ஆரம்பமயிற்று. ஜம்மு பகுதியில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். காஷ்மீரை ஒட்டிய லடாக்கில் பௌத்தர்கள்.
ஜவஹர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய சொந்த சென்டிமென்டினாலேயே காஷ்மீரை இந்தியா விடாமல் பிடிவாதத்துடன் பற்றிக்கொண்டது என்று விமர்சகர்கள் சொல்வார்கள். ஆனால் பாரதத்தின் எல்லைப் பாதுகாப்பே முக்கிய காரணம்.
காஷ்மிர் மக்கள் யாருடன் தாங்கள் சேர வேண்டும் என்பதை சுய நிர்ணயம் செய்து கொள்ளட்டும் என்றார் ஜின்னா. அதற்கு நேரு சம்மதிக்கவில்லை. அன்றைய சூழலில் தேசிய உணர்வை விட மக்களுக்கு மத உணர்வு அதிக வலுவானதாகியிருக்கும் என்பதால் காஷ்மிர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைகிறோம் என்று சொல்லிவிடுவார்கள் என்று அவர் பயந்தார். காஷ்மிரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் ராணுவம் கைபற்றி தனது பிரதேசம் என்று சொன்னது. அதைப்பற்றி கேள்வி எழுப்பும்போதெல்லாம் பாகிஸ்தான் காஷ்மிர் மக்கள் சுயநிர்ணயம் செய்துகொள்ளட்டும் என்றது.
இந்தியா செய்த மிகப் பெரிய தவறு– பிரச்சினையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றதுதான். பிரச்சினைத் தீரவே தீராமல் வளர்ந்தது மட்டுமல்ல பாகிஸ்தானின் அயராத தூண்டுதலால் பிரிவினை வாதத்துக்கு அது அச்சாரமிட்டது. ஆயுதம் ஏந்திப் போராடத்துணிந்த மனநிலையில் இருந்த பிரிவினைவாத கோஷ்டிகள் பாகிஸ்தானிலிருந்து எல்லைதாண்டி வந்த பயங்கர வாதக் குழுக்களிடம் வகையாக சரண் புகுந்தன. பாகிஸ்தான் தொடர்ந்து பிரிவினைவாதக் குழுக்களுக்கு ஆதரவு தந்து ராணுவ பயிற்சியும் அளித்து வருவது வெட்ட வெளிச்சமாகியிருக்கும் உண்மை. இப்போது தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக, ஓரடி நகர்ந்தால் முழம் சறுக்கும் கதையாக உலைகளமாக இருக்கிறது காஷ்மீர். சம்பந்தப்பட்ட நாடுகளும் மக்களும் களைத்து விட்டார்கள்.
Beauitiful Kashmir
முன்னாள் ராஜா ஹரி சிங்கின் மகனும் முன்னாள் பட்டத்து இளவரசருமான டாக்டர் கரன் சிங்குடன் தில்லியில் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. ஆத்தர்ஸ் கில்ட் என்ற எழுத்தாளர் அமைப்பின் செயற்குழு கூட்டத்து உறுப்பினராக நான் இருந்தபோது கரன் சிங் அதன் தலைவராக இருந்தார். மாதம் ஒரு கூட்டம் தில்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் நடை பெறும். தப்பித் தவறி கூட அவர் காஷ்மிர் பிரச்சினையைப் பற்றி பேச விரும்பியதில்லை. மிகக் கசப்பான நினைவுகளாக அவை இருக்கும் என்று நான் நினைப்பேன். ஏராளமான இந்து குடும்பங்கள் அவர்களது நிலத்திலிருந்தும் வீடுகளிருந்து விரட்டப்பட்டு இந்தியாவின் பல இடங்களில் குடியேறியிருந்தார்கள். மத்திய காங்கிரெஸ் அரசால் எதுவும் செய்யமுடியவில்லை.
எங்கள் டாக்சியை ஓட்டி வந்தவர் ஒரு ஹிந்து என்று அறிந்து அவரிடம் நான் பேச்சுக் கொடுத்தேன்.ஆங்கிலமும் ஹிந்தியும் சரளமாகப் பேசினார். அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ” நிலைமை இங்கு மிகவும் மோசம்” என்றார் அவர். “இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தாலத்திலிருந்து சாப்பிட்ட காலம் முன்பு உண்டு. இப்போது இந்துக்களைப் போட்டியாளர்களாகப் பார்க்கிறார்கள். எத்தனை பெரிய படிப்பு படித்தாலும் இந்துக்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிவிட்டது” என்றார். அவரது கண்களில் கவலையும் சோகமும் நிழலாடின. “இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிப்பேன் என்று தெரியவில்லை.”
நாங்கள் அங்கு சென்றபோது நேஷனல் கான்பரென்ஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. காஷ்மிர் சிங்கம் என்று புகழ் பெற்றிருந்த ஷேக் அப்துல்லா முதலமைச்சராக இருந்தார். அப்போது நோய்வாய்பட்டிருந்தார். அதற்கு முந்தைய மாதம்தான் அவரது மகன் ·பாரூக் அப்துல்லாவை தனது தேசிய கான்பரென்ஸ் கட்சிக்கு தலைவராக ஆக்கினார் பட்டம் சூட்டுவதுபோல. வாரிசு அரசியல் என்ற முணுமுணுப்பை பொருட்படுத்தாமல். எனது சுபாவமான பத்திரிக்கையாள அரசியல் ஆர்வம் காரணமாக யாரையாவது பேட்டி காணவேண்டும் என்று நினைத்தேன்.
அன்றைய கால கட்டத்தில் நான் மணியனின் ‘இதயம் பேசுகிறது‘ இதழுக்காகத் தொடர்ச்சியாகப் பல பிரபலங்களை பேட்டிகண்டு எழுதிக்கொண்டிருந்தேன். ஷேக் அப்துல்லா பேட்டி கொடுக்கும் உடல்நிலையில் இல்லை என்றார்கள். தமிழ் பத்திரிக்கைக்கு என்றதும் ·பாரூக் அப்துல்லா பேட்டி அளிக்க இசைந்தது எனக்கு வியப்பாக இருந்தது.ஆனால் அரைமணிநேரம் மட்டுமே பேசமுடியும் அன்று ஒரு உறவினரின் திருமணத்துக்குப் போகவேண்டியிருப்பதால் என்றார்கள். ·பாரூக் அதிகம் வெளிநாட்டில் வாழ்ந்தவர். அவருக்கு வேர்ப் பற்று இருக்கமுடியாது , உருது மொழிகூட சரியாகப் பேச வராது என்று அவரது விமர்சகர்கள் அப்போது சொல்வார்கள். அவரது தாய் ஒரு ஆங்கிலேயர்.
குறித்த நேரத்திற்கு நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். வீடு வெளியிலிருந்து மிக அடக்கமாக இருந்தது. காஷ்மீருக்குப் பிரத்யேகமான குலுங்கும் பூந்தோட்டம். நான் உள்ளே நுழையும் அரவம் கேட்டே உள்கூடம் ஒன்றிலிருந்து அமர்க்கள உற்சாகத்துடன் குரல் கேட்டது. “ஆயியே! தஷ்ரீ·ப் லாயியே!” என்று மிகுந்த மரியாதையுடன் வரவேற்பு. அழைத்துக்கொண்டே வெளியில் வந்தவரை நான் வியப்புடன் பார்த்தேன். நல்ல உயரம் . சிவந்த நிறம். ஆணழகன் இல்லை. ஆனால் ஒரு இளைஞனின் உற்சாகமும் சிநேகிதச் சிரிப்பும் மிகக் கவர்ச்சியாக இருந்தது. வெகு நாள் பழகிய நண்பரைப் போல வாருங்கள் வாஸந்திஜி என்று தோளை அணைத்து உள்ளே நடத்திச் சென்றார்.
உள்ளே அமர்ந்ததும் அவரது உபசாரத்தில் திக்குமுக்காடிப் போனேன். நான் பத்திரிக்கையாளர் என்பதால் இப்படியோ என்று நினைத்தேன். “இது எங்கள் காஷ்மீரக் கலாச்சாரம்“ என்று ஒரு தாம்பாளம் நிறைய தின்பண்டங்களை என்முன்னால் அவரது உதவியாளர் வைத்து காஷ்மீரின் பிரசித்தமான ‘காவா‘ தேநீரை நீட்டினார். ·பாரூக் பேச ஆரம்பித்ததும் அவர் பேச்சில் கில்லாடி என்று புரிந்தது. மிக அழகிய ஆங்கிலத்தில் உணர்ச்சி பொங்க நாடக பாணியில் பேசியது அசத்தலாக இருந்தது. தான் அந்த மண்ணின் மைந்தர் என்று நிரூபிக்கும் ஆர்வத்தில் இருந்தது தெரிந்தது.
கட்சியின் பொதுக்குழுவை ஆலோசிக்காமல் ஷேக் அப்துல்லா தன் மகனுக்குத் தலைமைப் பதவி அளித்ததற்கு இன்னமும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. நான் அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். உடனே உணர்ச்சி வசப்பட்டவர் போல ·பாரூக் பேச ஆரம்பித்தார்.
“என்னை நம்புங்கள் வாஸந்தி, என் அப்பா நான் தான் அடுத்த தலைவர் என்று சொன்னதும் கதிகலங்கிப் போனேன். என்னால் அவரது வார்த்தைகளை நம்பமுடியவில்லை. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. பழமை வாய்ந்த ஹஜரத்பல் மசூதியில் நடந்த கூட்டம் அது. என்னைச் சுற்றிலும் ஏக மக்கள் . எனது கால் சராய்க்குள் கால்கள் வெட வெடவென்று நடுங்கின. நெற்றியிலிருந்து ஆறாய் வியர்வை வழிந்தது. என் தந்தை எனக்கு எந்த சலுகையையும் காட்டவில்லை. என் மீது பொறுப்பை ஏற்றி பரீட்சிப்பது புரிந்தது. ஏ அல்லா அதற்கு என்னை அருகதை ஆக்கு என்று நான் விம்மினேன்“.
·பாரூக்கின் பேச்சு எனக்கு ஒரு பக்கம் சிரிப்பைத் தந்தது. எத்தனை சாமர்த்தியம் என்று பிரமிப்பும் ஏற்பட்டது.
அதே வித உணர்ச்சிப்பெருக்குடன் அழகிய காஷ்மீர் எப்படி மத்திய காங்ரெஸ் அரசின் பிடிவாதக் கொள்கைகளினால் பந்தாடப் படுகிறது என்று அங்கலாய்த்தார். “மாநிலத்திலும் காங்ரெஸ் ஆட்சி இருந்தால் தான் நிதி உதவி கிடைக்கும். இங்கு நேஷனல் கான்பரென்ஸின் ஆட்சி என்பதால் நிதி உதவி கிடைப்பதில்லை. காஷ்மிரில் வளர்ச்சி எப்படி இருக்கும்? டூரிஸம் ஒன்றை மட்டுமே நம்பவேண்டியிருக்கிறது. எங்கள் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் விற்றுக்கொண்டிருக்கிறோம். காஷ்மீருக்கு நேஷனல் கான்பரென்ஸ் என்ன செய்துவிட்டது என்று காங்க்ரெஸ் மூட்டிவிடுகிறது.”
“இந்து முஸ்லிம் பேதமில்லாமல் வாழ்ந்த மண் இது. இங்கு பேதம் ஏற்பட்டதென்றால் அதற்குப் அரசியல் தான் காரணம். அப்பட்ட சுயநல அரசியல். அதில் தடுமாறிப் போவது அப்பாவி மக்கள். இந்துவும் முஸ்லிமும் ஒரே ப்ளேட்டிலிருந்து சாப்பாட்டைப் பகிர்ந்து உண்பார்கள். அது உண்மையா இல்லையா என்று யாரை வேண்டுமானாலும் கேளுங்கள். எப்பவும் அப்படித்தான் வாழ எங்களுக்கு விருப்பம்.”
அவரது பேச்சை நிறுத்த முடியாது போலிருந்தது. அரை மணி நேரம் என்று சொன்னது இரண்டு மணி நேரத்துக்கு பேட்டி நீண்டது. ” வாருங்களேன் என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் திருமணத்துக்கு? ” என்று அழைத்தார் ·பாரூக். ” உங்களுக்குத் தனியாகச் சைவச்சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று உபசரித்தார்.
எனக்கு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விடை பெற்றேன்.
வெறும் வாய்ப்பந்தல் போடும் வீரர்களாக எல்லா அரசியல்வாதிகளும் ஆனதன் விளைவு என்ன என்ற யோசனை என்னை காஷ்மீரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் வாட்டுகிறது.
Thanks regards: source: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712062&format=html&edition_id=20071206