மீண்டும், சந்தோஷப்பூக்கள் மலரப்போவது எப்போது?!
[ ஐந்து லட்சம் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் முஸ்லிம்கள் தான் செய்து வருகின்றனர். அங்கு சென்று வந்த அனைவரும் அந்த உபசரிப்பில் லயித்து வந்த தங்கள் பயண அனுபவங்களை கூறி வருவதை, பல செய்திகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும்.
கடந்த 50 ஆண்டுகளாக காஷ்மீரில் நடைபெற்று வரும் சூழலை கூர்ந்து கவனித்தால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு மக்களும் இணக்கமான நல்லுறவையே விரும்புகின்றனர். இருநாட்டு எல்லை நெடுகிலும் உள்ள மக்களிடையே பண்பாட்டு ரீதியிலான ஒத்திசைவும் பரிமாற்றமும் இன்றளவும் நிலவுகின்றன. ஆனால் இரு நாட்டு அரசுகளும் இருபுறமும் பதற்றம் நிலைப்பெறவே விரும்புகின்றனர்.
கார்கில் என்றவுடன் இந்திய ராணுவம் வெற்றிக் கொடி நாட்டியதுதான் நம் மனங்களில் வந்து கம்பீரமாய் நிற்கும்! ஆனால், கார்கில் காஷ்மீரில் எங்கு உள்ளது என்பதை நீங்கள் யாராவது வரைபடத்தை எடுத்துப் பார்த்திருக்கின்றீர்களா?
பார்த்தால் பெரும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சும். நம் மனங்களில் பதிந்துள்ள ஜம்மு காஷ்மீர் வரைபடத்தின் எல்லைக் கோடு நெடுகிலும் தேடினாலும் கார்கில் எங்கும் கிடைக்காது.
கார்கில், மிகச்சரியாக காஷ்மீர் வரைபடத்தின் மய்யத்தில் இருக்கிறது. மய்யத்தில் இருக்கும் கார்கிலை ராணுவம் யாருடன் போரிட்டு மீட்டது? ]
உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள 2,943 பிரேதங்களும் தங்களுள் ஒரு மிகப்பெரிய வரலாற்றை சுமக்கின்றன.
அந்த சடலங்களின் பின்புலத்தில் தாய்மார்கள் மாரடித்து அழும் ஓலக்குரல், கேட்கும் எவர் மனதையும் கனக்கச் செய்யும். கடந்த 30 ஆண்டுகளாக இம்மக்கள் சந்தித்து வரும் அலைக்கழிப்பான வாழ்க்கை பெரும் சலிப்பையும், வாழ்வின் மீது பற்றற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எல்லா குடும்பங்களிலும் யாரேனும் ஒருவர் இருவர் இல்லாத ஊனம் பெரும் மவுனமாய் உலவுகிறது. காஷ்மீரில் உள்ள ஒரே ஒரு மனநல மருத்துவமனையில் மட்டும் இதுவரை 68 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக, பொருளாதார, நிலைகளின் சீர்குலைவு, பதற்றம் தரும் மன அழுத்தம் என அன்றாட வாழ்வே பெரும் துன்பம்தான். அரசுகளின் தோல்விக்கு மக்கள் மிகப் பெரும் விலையை கொடுத்து வருகின்றனர். ஒடுக்குமுறை, பலாத்காரம், சித்திரவதை, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குதல், சர்வதேச அழுத்தங்களை மதிக்காத போக்கு என காஷ்மீரில் துயரத்தின் புதிய அத்தியாயத்தை நடைமுறைப்படுத்துவதில் ராணுவமும் அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில், எல்.கே. அத்வானி இங்கு அடிப்படைவாத சூத்திரத்தை மீண்டும் மீண்டும் ஒப்பித்து வருகிறார். அத்வானியின் புனைவுப்படி, ஜம்முவை சேர்ந்த பண்டிதர்கள் தேசபக்தர்கள் என்றும், காஷ்மீர் முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.
அமர்நாத் யாத்திரைக்கு மெல்ல மெல்ல காவிச் சாயம் பூசிவிட்டது இந்த கும்பல். 1989 இல் 20 ஆயிரம் பேர் மட்டுமே அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்றனர். கடந்த ஆண்டு அது 5 லட்சத்தை எட்டி நிற்கிறது.
இந்தப் பயணத்தை அண்மைக் கால இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வழங்கி வருவது கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய ஒரு செய்தி. 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் வாரியத்திற்கு வழங்கி அரசாங்கம் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கு சந்தித்திராத சூழலை உருவாக்கி மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இத்தனை பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடினாலே அந்த லிங்கம் கரைந்து விடும் என திணையியல் அறிஞர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்து லட்சம் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் முஸ்லிம்கள் தான் செய்து வருகின்றனர். அங்கு சென்று வந்த அனைவரும் அந்த உபசரிப்பில் லயித்து வந்த தங்கள் பயண அனுபவங்களை கூறி வருவதை, பல செய்திகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் இந்தப் பயணிகளின் எண்ணிக்கை, அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்குப் பின்னால் பல ரகசிய திட்டங்கள் இருப்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியும்.
இந்த 100 ஏக்கர் நிலம் அமர்நாத் வாரியத்திற்கு சுமூகமாக கைமாற்றப்பட்டு எந்த சர்ச்சையும் ஏற்படாமல் அமைதி நிலவியிருந்தால், மெல்ல மெல்ல அங்கு இஸ்ரேல் பாணியிலான குடியிருப்புகளை நிறுவும் மறைமுகத் திட்டம் ஒன்று இந்து வலதுசாரிகள் வசம் இருந்தது.
இத்தகைய விஷமமான திட்டங்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்தாக்கின் அமை தியை மேலும் சீரழிக்கவே உறுதுணை புரியும். இந்த யாத்திரைகளைப் பின்புலமாக வைத்து அங்கு அமைதி நிலவி வருவதாக அரசு உலக நாடுகளுக்கு அறிவித்து வருகிறது. அண்மைக்கால அறிக்கைகளில் காஷ்மீரை விவரிக்கும் பொழுது, அதனை ‘கலவரம் நடந்து முடிந்த பகுதியாக’ அழைத்து வருகிறது. இது, உலக சுற்றுலா பயணிகளை கவருவதற்கான திட்டமே. இருப்பினும் உலகின் பல முக்கிய நாடுகள் தங்கள் குடிமக்களை காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகின்றன.
கலவரம் நடந்து முடிந்த பகுதி என அரசு அழைக்க விரும்பினால், முதலில் அந்த சமூகத்துடன் உரையாடலைத் தொடங்கி, பதற்றங்களைத் தணித்து, மக்களின் பங்களிப்பை அதிகரித்து, அமைதியை சென்றடையும் வழிமுறைகளை அல்லவா கண்டறிய வேண்டும்!
காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றை அறிந்து கொள்வதுதான் தீர்வை அடைவதற்கான முதல் நடவடிக்கை.
காஷ்மீர், வடகிழக்கு ஆகிய இந்தியாவின் இரு மாநிலங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாக பெரும் பதற்றமும், வன்முறையும் நிலவி வருகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்று தனி நாடாக உருவானது முதல் இன்று வரை, அடுத்தடுத்து ஆட்சியில் உள்ள அரசுகளின் குளறுபடியான முடிவுகள், ஆட்சியாளர்களின் குறுகிய நலன்களின் அடிப்படையிலான செயல்திட்டங்கள், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாம் ஒருங்கிணைந்து, அந்தப் பகுதிகளின் நிரந்தர சீர்குலைவிற்கு வழிவகுத்துள்ளன.
பிரிவினையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் மதவாத சக்திகளும் தங்களின் தீவிர பிரச்சாரத்தால் ஒட்டுமொத்த சூழலை மேலும் இறுக்கமாக்கியுள் ளன.இது அங்கு ஓர் உரையாடலுக்கான சாத்தியத்தை நிராகரித்து, மேலும் தவறான புரிதல்களுக்கே வழிவகுத்துள்ளது.
காஷ்மீர் பற்றி அரசும் ஊடகங்களும் இடையறாது செய்து வரும் அவதூறான பரப்புரையால், காஷ்மீரை தவிர்த்த இந்தியாவிற்கு இவர்களின் புனைவு சார்ந்த சித்திரம்தான் மனதில் தங்கியுள்ளது. இது ஏதோ அப்பாவி காஷ்மீர் பண்டிதர்களுக்கும், எந்நேரமும் ஆயுதம் ஏந்தி நிற்கும் காஷ்மீர் முஸ்லிம்களுக்குமான பகையாகவே சித்தரிக்கப்படுகிறது. இதில் மெய் எது பொய் எது என்பதை எடுத்துக் கூற வேண்டிய ஊடகங்களும், அறிவுஜீவிகளும் தோல்வியை தழுவி நிற்கின்றனர்.
அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் பின்னர் அங்கு ஆளுநராகப் பதவி வகித்த ஜக்மோகன் வரை, தாங்கள் ஏதோ ராஜதந்திரத்தின் மூலம் ஒரு பெரிய சாதனையை செய்யப் போவதாக கற்பனை செய்து கொண்டு, மென்மேலும் காஷ்மீர் மக்களின் வாழ்வை சீர்குலைத்ததுதான் மிச்சம்.
புவி அரசியலில் ஈடுபட்டு அந்தப் பகுதியின் “பெரிய அண்ணனாக’ உருவெடுக்க முயன்ற இந்தியாவுக்கு, இன்று நிரந்தர தலைவலியான காஷ்மீர் பிரச்சனை, அந்தப் பகுதி மக்களின் வாழ்வை மட்டும் சீர்குலைக்க வில்லை; இந்திய அரசின் நிதிநிலையையும் அது ஆண்டுதோறும் கடு மையாக பாதிக்கிறது.
இத்தனை லட்சம் கோடிகள் வீணாக்கப்பட்ட பிறகும் கூட, இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் வரைபடத்தை வெளியிட அரசு இன்று வரை தயாராக இல்லை. காஷ்மீர் வரைபடம் என நாம் நம்பும் ஒரு வரைபடம் முற்றிலும் கற்பனையானது. அதனை கல்விக் கூடங்கள், ஊடகங்களின் வாயிலாக மக்களின் மனங்களில் பதிய வைத்து மொத்த சமூகத்தையும் மூளைச் சலவை செய்கிறது.
காஷ்மீர் பண்டிதர்களை அரசு பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றியது பெரும் முட்டாள்தனம் என்பதை பல்வேறு நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. ஜனநாயக வழியிலான எந்த செயல்பாட்டுக்கும் அங்கு சாத்தியம் இல்லை என உணர்ந்த பிறகுதான் இளைஞர்கள் வேறு வழிகளை நோக்கிச் சென்றனர். சகோதரர்களாக வரலாறு நெடுகிலும் வாழ்ந்து வந்த பண்டிதர்களையும் முஸ்லிம்களையும் எதிர் எதிராக நிறுத்த முடிவு செய்த இந்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது.
பண்டிதர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே அரசு வெளியேற்றியது. காஷ்மீர் பண்டிதர்களின் வீடுகள் அனைத்தையும் இந்திய ராணுவப் படையினர் தங்கள் அலுவலகங்களா கவும், முகாம்களாகவும் மாற்றிக் கொண்டன. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிதர்களின் குடும்பங்களுக்கு, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை யைப் பொறுத்து நிவாரணமும், அவர்களின் வீடுகளுக்கு பெரும் தொகையை வாடகையாகவும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இவர்களைப் போல் இந்திய அரசு வேறு எந்த இனக்குழுவிற்கோ, பாதிக்கப்பட்டவர் களுக்கோ நிவாரணம் வழங்கியதில்லை.
பார்ப்பன அதிகார வர்க்கம்தான் நம்மை ஆண்டு வருகிறது என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா?
உலகின் மிகக் கொடூரமான மனித உரிமை மீறலை அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நிகழ்த்தி வருவது நம் காலத்து வரலாறு. பிற நாடுகளை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா ஈராக்கில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் படையினரையும், ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் அமெரிக்க படையினரையும் நிறுத்தியுள்ளது.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தனது படை பலத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருக்கியுள்ள இந்திய அரசு, இன்றைய தேதியில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியுள்ளது. இது நமக்கு பல உண்மைகளை எடுத்துரைக்கிறது. உலக அளவில் ஒரு நிலப்பரப்பில் மட்டும் இத்தனை அடர்த்தியான ராணுவ இருப்பு எப்பொழுதும் இருந்ததில்லை.
காஷ்மீர் மக்களின் விருப்பமெல்லாம் அவர்களின் இனக்குழு தன்மையைப் பாதுகாப்பதும், இந்திய அரசின் இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவதும்தான். 2000இல் “அவுட்லுக்’ ஆங்கில ஏடு நடத்திய கருத்துக் கணிப்பை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானது. அது இவ்வாறு கூறுகிறது:
74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்;
16 சதவிகித மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்புவேண்டும் என்கின்றனர்;
2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர்.
37 சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்புகின்றனர்.
காஷ்மீரிகளின் உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது.
ஆனால் இந்த 2 சதவிகித பிரிவினை மனநிலை உள்ளவர்களுக்காக இந்திய அரசு மொத்த பள்ளத்தாக்கையே ஆயுதக் கிடங்காக மாற்றி, மக்களை சித்திரவதை செய்வது எப்படி நியாயமாகும்?
அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண்பதைத் தவிர்த்து, காஷ்மீர் மக்களை போருக்கு மத்தியில் வாழ நிர்பந்தித்து வருகிறது இந்திய அரசு.
காஷ்மீர் இந்தியாவின் ராணுவ சோதனைக்கூடமாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல.
அங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம்,
பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்து சுடலாம்,
பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம்,
பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம்,
ஆயுதத்தை சோதித்துப் பார்க்க சிலரை கொல்லலாம். இன்னும், இன்னும்…
எது வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச் சட்டம் 1976, ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் 1978, தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002… “இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா’ என தேசபக்தர்களின் முழக்கங்கள் காதில் கேட்கின்றன.
உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் இந்திய ராணுவத்தின் உடையை அணிந்திருக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்யப்போகும் “தேசபக்த காரிய’ங்களுக்கு ஏற்ப இந்திய அரசியல் சாசனத்தை வளைத்து, நிமிர்த்தி, திருத்தி நாள்தோறும் ஒரு சட்டத்தை உருவாக்கி தேச பக்தராக அறிவித்துக் கொண்டேயிருக்கும். தேசத்தின் பெயரால் அரசு வன்முறையை நியாயப்படுத்தும் ராணுவத்தினருக்கு, ஒவ்வொரு குடியரசு நாள் விழாவிலும் பதக்கங்கள் வழங்கிப் போற்றும் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை, காஷ்மீரில் மாற்றம் என்பதற்கு சாத்தியமில்லை.
காஷ்மீரில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் ராணுவத்தால் அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களின் மனைவிகளுக்கு விதவை ஓய்வூதியத்தை தர மறுக்கிறது அரசு. இவர்கள் “அரை விதவைகள்’. இவர்களின் கணவர்கள் இறந்து விட்டதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம்வழங்க முடியும் என்கிறது அரசு. மறுபுறம் ராணுவ வீரர்களின்தற்கொலை விகிதம் ஏறுமுகத்தில் உள்ளது. 2002 2009க்குள் மட்டுமே 169 ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளாக காஷ்மீரில் நடைபெற்று வரும் சூழலை கூர்ந்து கவனித்தால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு மக்களும் இணக்கமான நல்லுறவையே விரும்புகின்றனர். இருநாட்டு எல்லை நெடுகிலும் உள்ள மக்களிடையே பண்பாட்டு ரீதியிலான ஒத்திசைவும் பரிமாற்றமும் இன்றளவும் நிலவுகின்றன. ஆனால் இரு நாட்டு அரசுகளும் இருபுறமும் பதற்றம் நிலைப்பெறவே விரும்புகின்றனர்.
மக்களின் கோரிக்கைகள் முன்னிலை பெறும்போதும், மக்களுக்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பொழுதும் காஷ்மீர் பிரச்சனை இயல்பாகவே ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுவது, திட்டமிட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.
இந்த மரணப் புதைகுழிகளை, சடலங்களை மேலும் சிதைக்காமல் பாதுகாத்து, வெளிப்படையான ஒரு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு, குற்றம் நிரூபணமாகும் தருணத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்கபட வேண்டும். கொடூரமான இந்த சட்டங்களை அரசு திரும்பப் பெற்றால் தான் அங்கு மக்கள் ஜனநாயக வழியிலான தங்கள் உரிமைகளை முன்வைத்துப் போராடி, தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற இயலும். இல்லை எனில், பாராமுல்லாவில் ஒரு கிராமப் பெரியவர் கூறியது போல்தான் எதிர்காலத்தில் நடக்கும்:
”குழந்தைகள் எங்களிடம் இந்த புதைகுழிகளைப் பற்றி கேட்கிறார்கள். ஏன் இங்கே இத்தனை ராணுவத்தினர் உள்ளனர் என்பதைப் பற்றியும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். வன்முறையில் இறப்பது இயற்கையானது தான் என்கிற புரிதலை அவர்கள் வளரும் போதே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்”
இந்தப் பெரியவரின் வரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த தேசமும் இந்த கணத்தில் தலை குனிந்துதான் நின்றாக வேண்டும்.
எங்கிருக்கிறது கார்கில்?
கார்கில் என்றவுடன் இந்திய ராணுவம் வெற்றிக் கொடி நாட்டியதுதான் நம் மனங்களில் வந்து கம்பீரமாய் நிற்கும்! ஆனால், கார்கில் காஷ்மீரில் எங்கு உள்ளது என்பதை நீங்கள் யாராவது வரைபடத்தை எடுத்துப் பார்த்திருக்கின்றீர்களா? பார்த்தால் பெரும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சும். நம் மனங்களில் பதிந்துள்ள ஜம்மு காஷ்மீர் வரைபடத்தின் எல்லைக் கோடு நெடுகிலும் தேடினாலும் கார்கில் எங்கும் கிடைக்காது.
கார்கில், மிகச்சரியாக காஷ்மீர் வரைபடத்தின் மய்யத்தில் இருக்கிறது. மய்யத்தில் இருக்கும் கார்கிலை ராணுவம் யாருடன் போரிட்டு மீட்டது?
அதன் பிறகு, பல காஷ்மீர் வரைபடங்களை எடுத்துப் பார்த்த போதுதான் உண்மை விளங்கியது.
காஷ்மீரின் ஒரு பகுதி சீனா வசம் உள்ளது. அதனை அக்சாய் சீன் என்று அழைக்கிறார்கள்.
அடுத்து வடக்கே உள்ள காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது. அதனை “பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்’ என்றும் ‘ஆசாத் ஜம்மு காஷ்மீர்’ என்றும் இரு சாரரும் அவர்களது வசதிக்கேற்ப அழைக்கிறார்கள்.
இது தவிர்த்து இரு தேசங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு உள்ளது, அது “ஆசாத் காஷ்மீர்’ (விடுதலையடைந்த காஷ்மீர்) என்று அழைக்கப்படுகிறது.
எஞ்சியுள்ள பகுதி மட்டும்தான் இந்தியா வசம் உள்ளது.
அதனை நாம் ஜம்மு காஷ்மீர் என்றும், பிறர் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றும் அழைக்கின்றனர்.இந்தப் பகுதிகளை எல்லாம் பிணைக்கும் கோடுதான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control) என்று அழைக்கப்படுகிறது.
”உடனடி விசாரணை தேவை” – அம்னஸ்டி – Amnesty
சிறீநகரில் இருந்து செயல்படும் “காணாமல் போனவர் களின் பெற்றோர் அமைப்பு’ மார்ச் 29, 2008 அன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி, உரி மாவட்டத்தின் 18 கிராமங்களில் மட்டும் இதுவரை 940 சடலங்கள் பல கும்பல் புதைகுழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 2006 முதல் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
உலக மனித உரிமைஅமைப்பான “அம்னஸ்டி இன்டர்நேஷனல்’ இந்த தகவல்களின் அடிப்படையில், இந்திய அரசு உடனே விசாரணையை நடத்த வேண்டும் என கண்டிப்பான குரலில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் “அம்னஸ்டி’ கேட்டுக் கொண்டது.
Courtesy: International People’s Tribunal of Human Rights and Justice in India Administered Kashmir. ”Buried Evidence : Unkown, Unmarked, and Mass Graves in India Adminisrered Kashmir” by Angana P.Chatterji, Parvez Imroz, Gautam Navalakha, Zahir Parez Imron, Gauam Navlakha, Zahir Ud-Din, Mithir Desai, Khurram Parvez
மிக்க நன்றி: –அ.முத்துக்கிருஷ்ணன்
(தலித் முரசு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)