இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம், அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சடலமும் தன் கதையை இந்த உலகுக்கு அறிவிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.
“தாயின் முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த ராணுவ வீரனின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் ராணுவ வீரனின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது, என்னை வேறு அறைக்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர்.
அந்த ராணுவ வீரன் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, உன் ஆசைப்படியே நடக்கட்டும் என அவருடைய நெற்றியில் தானியங்கி துப்பாக்கியை வைத்து சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தை தொடர்கிறான்.” இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன.
இந்த சம்பவம் கொடுங்கோல் ஆட்சி நடக்கின்ற தேசத்திலோ, ராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கின்ற நாட்டிலோ நடைபெறவில்லை. மாறாக, வளர்ந்து வரும் வல்லரசு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என செல்லமாய் உலக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் இந்தியாவில்நடைபெற்ற ஒரு நிகழ்வே.
இந்திய ராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரிலும், வடகிழக்கிலும் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றே. 1989 2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70 ஆயிரம் பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கை கூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமாகக் கொல்லப்படுபவர்களை ராணுவம், துணை ராணுவப் படைகள், ஜம்மு காஷ்மீர் காவல் துறை என அனைவரும் ஒரே முறையில்தான் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்களின் சடலங்களை ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் உடனே புதைத்து விடுவது என்பதை வழக்கமாக மாற்றிவிட்டிருக்கின்றனர். அண்மையில் காஷ்மீரில் (இந்தியா நிர்வகித்து வரும் காஷ்மீர் பகுதியில்) பல கும்பல் புதைகுழிகளை “உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்’ கண்டுபிடித்துள்ளது.
இந்த அமைப்பைச் சேர்ந்த அங்கனா சாட்டர்ஜி, பர்வேஸ் இம்ரோஸ், கவுதம் நவ்லகா, ஜாஹிருத்தீன், மீகிர் தேசாய், குர்ரம் பர்வேஸ் ஆகியோர் மேற்கொண்ட மிகத் தீவிரமான ஆய்வுப் பணிகளின் விளைவாக “புதையுண்ட சாட்சியம்’ என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை நவம்பர் 2009இல் வெளியிடப்பட்டது. உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுடன், “காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பும்’ இந்த ஆய்வை மேற்கொள்வதில் உறுதுணையாக இருந்தது. பாந்திபூரா, பாராமுல்லா, குப்வாரா பகுதி மக்களும் இந்த ஆய்வறிக்கை முழு வடிவம் பெற ஊக்கமளித்தனர்.
காஷ்மீரின் குப்வாரா, பாராமுல்லா, பாந்திபூரா மாவட்டங்களில் மட்டும் 2,700 கும்பல் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை எல்லாம் எங்கோ ரகசியமாக உள்ள புதைகுழிகள் அல்ல. பள்ளிக் கூடங்கள், நகர சதுக்கங்கள், வழிபாட்டு மைதானங்கள், காடுகள், வயல்வெளிகள் என மக்களின் வாழ்விடங்களெங்கும் இது போன்ற திடீர்புதை குழிகள் அரும்பியுள்ளன.
அலங்கரிக்கப்படாத, பெயரிடப்படாத, குறிக்கப்படாத மயானங்களாக இவை அங்கே முளைத்துள்ளன. இவற்றை மக்கள் தங்களின் அன்றாட பணிகளின் ஊடாக கவனித்து வருகின்றனர். அவர்களின் நினைவுகளில் இந்தப் புதை குழிகள் அசைக்க முடியாத இடத்தை ஆக்கிரமித்துள்ளன. ஆனால், இதைப் பற்றி அங்கு யாரும் அடுத்தவர்களிடமோ, தங்கள் குடும்பத்தாரிடமோ கூட பகிர்ந்து கொள்வதில்லை. உள்ளிருந்தே கொதிக்கும் நினைவு களாக, அடக்குமுறையின் உறைந்த படிமங்களாக அவை உள்ளன.
அடையாளம் காணப்பட்ட 2,700 புதைகுழிகளில் 2,943 சடலங்கள் இருந்தன. இதில் பெரும் பகுதியானவை ஆண் சடலங்கள். 154 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் இருந்தன. இந்த சடலங்கள் எல்லாம் பெரும்பாலும் இரவு நேரங்களில் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இங்குள்ள கிராமப் பெரியவர்களுக்கு மாலையில் பிணங்கள் வருகின்றன என்ற தகவல் மட்டுமே ராணுவத்தினரிடமிருந்து வரும். இந்த சட்ட விரோதமான காரியத்தை செய்ய மறுத்தால், அடுத்த நாளே நீங்கள் எங்காவது அருகில் உள்ள மாவட்டத்தில் புதைக்கப்படும் பிணங்களின் குவியலில் இடம் பெறக்கூடும்.
பிறகு ஊர் பெரியவர்கள் ஆட்களை தயார் செய்து, குழிகளை வெட்டிவிட்டு கடும் குளிரில் காத்திருக்க வேண்டும். ராணுவ வாகனம் இரவில் மரண ஊர்தியாக வந்து சேரும். பெரும் பகுதியான சடலங்களில் வன்கொடுமைக்கான தடயங்கள், தீக்காயங்கள், தோட்டாக்கள் துளைத்த அடையாளங்கள் தான் இருக்கும் என புதைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை. பொதுவாக, புதைக்கப்படுபவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும் நடைமுறைகள் எதுவும்பின்பற்றப்படுவதில்லை.
இருப்பினும் ராணுவத்தின் வாய்மொழியான அல்லது எழுதப்படாத ஒரே விளக்கம் இதுவே: ”இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள். இவர்கள் நம் நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்றனர் அல்லது வெளியே தப்பிக்க முயன்றனர். –இத்தனை அடக்குமுறைகளையும் கடந்து மக்களிடையே இந்த சடலங்களைப் பற்றி துல்லியமான விவரணைகள் நாட்டார் வழக்காறு போல, இந்த கிராமங்களில் இருளில் மிதக்கும் இரவு பனி மீது ஏறி தன் பயணத்தைத் தொடங்கும்.
இந்த அடையாளங்களை பெண்கள், ஆண்கள் தங்கள் சங்கேதக் குறியீடுகளின் மூலம் பகிர்ந்து கொள்வர். பல நேரங்களில் மாவட்டங்களை கடந்தும் கூட தொலைவிலிருந்து முதியவர்கள், பெண்கள் இங்கு வந்து இன்னும் தெளிவாகக் குறிப்புகளை கேட்டுச் செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களின் பிள்ளையை, கணவரை மீட்டும் சென்றுள்ளனர். மீண்டும் தோண்டி எடுத்து அடையாளத்தை தக்க சான்றுகள் மூலம் நிரூபித்து, தங்களின் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம்செய்துள்ளனர்.
பாராமுல்லா மாவட்டத்தில் மட்டும் 1,122 புதைகுழிகள் காணப்பட்டுள்ளன. குப்வாரா மாவட்டத்தில் 1,453 புதைகுழிகளும், பாந்திபோரா மாவட்டத்தில்125 புதைகுழிகளும் இருக்கின்றன. மூன்று மாவட்டங்களில் மட்டும் 2,943 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. “உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாய’த்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அங்கனா சாட்டர்ஜி, ”இத்தகைய மரணக் குழிகள், இனப்படுகொலை அல்லது போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து அரசு தப்பிக்க முடியாது. இந்திய ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தண்டனை மற்றும் விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளவே, இத்தகைய மரணக் குழிகளை உருவாக்கி இருக்கலாம்” என்கிறார்.
பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா கிராமத்தில் இரு மரணப் புதைகுழிகள் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டன. முதல் பகுதியில் 105 மரணக் குழிகள் இருந்தன. அதன் அருகில் 60 மரணக் குழிகள் இருந்தன. அந்தக் கிராமத்தில் உள்ள சமூகப் பெரியவர், தாங்கள் இது வரை 230 சடலங்களை அடக்கம் செய்ததாகத் தெரிவிக்கிறார். கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டுத் தீவிரவாதிகள் தான் இவர்கள் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சில மரணக் குழிகளின் மீது மண்ணை குவியலாக குவித்தும், கற்களை குவித்தும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது, ”ஒரு முறை மூன்று பேருடைய எலும்புகள் மட்டுமே இங்கு கொண்டு வரப்பட்டன. தீவிரவாதிகளாகக் கருதப்பட்ட இந்த மூவரின் உடல்களும் முற்றாக எரிக்கப்பட்டிருந்தன. பாராமுல்லா வில் நடந்த தாக்குதல்களில் ஒரு வீட்டில் வைத்து இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். நாங்கள் ஒரே புதைகுழியில் அந்த மூவரின் எலும்புகளையும் புதைத்தோம். அவர்களின் உடைகளை அருகில் இருந்த மரத்தில் கட்டினோம். அந்த உடைகளில் இருந்த லேபிள்கள் அகற்றப்பட்டிருந்தன. அவர்களின் உடைமைகளிலிருந்த தாயத்துகளையும் மரத்தில் கட்டிவிட்டோம்” என்கிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவர் திடுக்கிடும் மற்றொரு செய்தியை தெரிவிக்கிறார்: ”பல சமயங்களில் இந்திய ராணுவம் என்னை கைது செய்து சித்திரவதை செய்துள்ளது. நான் தீவிரவாதத்திற்கு உடன்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இங்குள்ள பல மரணப் புதைகுழிகளை நான் பாகிஸ்தானியர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புதைத்ததாக அவர்கள் கூறினார்கள். அதுவும் சடலத்திற்கு 35,000 ரூபாயை நான் பெற்றதாகக் குற்றம் சாட்டினர். என்னைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் பலரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்று சித்திரவதை செய்தனர்.
அதன் பிறகு எங்கள் கிராமமே கூட இனி, இது போல் பெயரிடப்படாத அடையாளமற்ற பிரேதங்களைப் புதைப்பதில்லை என முடிவெடுத்தோம். ஏறக்குறைய 2002 முதல் எங்கள் கிராமத்தில் யார் இறந்தாலும் இங்கு புதைக்காமல் அருகில் இருக்கும் சேஹால் கிராமத்தில்தான் புதைத்து வருகிறோம்” என்கிறார்.
தொடரும்…