”அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்”
”அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.” (திருக்குர்ஆன் 3:103)
தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
”அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்” என்று தான் இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
”குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்” என்று இவர்கள் நேர்மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.