M. அன்வர்தீன்
முஸ்லிம் என்ற பதத்திற்குக்கு, எந்த வித மொழி, இன, தேசிய வேறுபாடின்றி ஒருவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்துக்கு அர்ப்பணித்தல் என்று பொருள்படும்.
எனவே ஒருவர் தன் விருப்பு வெறுப்புக்களை அனைத்துலகையும் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு இணங்க மாற்றியமைத்துக் கொள்வாராயின் அவர் முஸ்லிம் என்றழைக்கப்படுகிறார்.
முஸ்லிம் ஆக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் முஸ்லிம்மாக மாறுவது என்பது மிகவும் இலகுவான செயலாகும். பிற மதங்களிலுள்ளது போல இதற்கு எந்த முன் தேவைகளோ அல்லது சடங்கு சம்பிரதாயங்களோ தேவை இல்லை. ஒருவர் தனியாகவோ, மற்றவர்கள் முன்னிலையிலோ தன்னை முஸ்லிமாக மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவர் முஸ்லிமாக மாறவேண்டும் என்ற உண்மையான ஆசை இருக்கிறது எனில், அவர் இறைவனின் உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்ற உறுதியான நம்பிக்கையோடு, தாமதப் படுத்தாமல் ‘ஷஹாதா’ அதாவது சாட்சி சொல்லவேண்டும். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில், சாட்சி சொல்வது (கலிமா) முதலாவதும், மிக முக்கியமானதும் ஆகும்.
மனப்பூர்வமான மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் ஒருவர் சாட்சி சொன்ன உடன் அவர் இஸ்லாம் என்ற வட்டத்துக்குள் நுழைந்து விடுகிறார்.
இறைவனின் திருப்திக்காக என்ற குறிக்கோளுடன் ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்த உடன், அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுவதுடன், இறை பக்தியுடன் கூடிய, நேரான புதிய வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதனால் ஏற்படும் நன்மைகள்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தான் இஸ்லாத்தில் இணைந்தால் என்னுடைய பாவங்களை இறைவன் மன்னிக்க வேண்டும் என்று நிபந்தனை இட்ட போது, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஒருவர் இஸ்லாத்தில் இணையும் போது, அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகிறது என்று உனக்கு தெரியுமா?” என்று கூறினார்கள். (ஆதார நூல் : முஸ்லிம்)
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் போது, முந்தய வாழ்க்கையின் தவறுகளுக்காக பச்சாதாபப்பட்டுக் கொள்ள வேண்டும், மேலும் முன் செய்த பாவங்களை பற்றி அதிகமாக கவலை கொள்ளத் தேவையில்லை. அவருடைய குறிப்பேடுகள் சுத்தமாகவும், தன்னுடைய தாயின் வயிற்றில் இருந்து அன்று பிறந்த பாலகனைப் போலவும் கருதப்படுகிறார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”இறைவனின் திருப் பொருத்தத்திற்காக, வணங்குவதற்கு தகுதியானவன், இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை என்று ஒருவர் மொழிந்து விட்டால், இறைவன் அவரை நிரந்தரமாக நரக நெருப்பில் தங்குவதை தடை செய்து விடுகிறான்” (புகாரி)
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதன் அவசியம்
குர் ஆனும், ஹதிஸீம் இஸ்லாத்தை மட்டும் பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: –
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்-குர்ஆன் அத்தியாயம் 3, வசனம் 19)
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்-குர்ஆன் அத்தியாயம் 3, வசனம் 85)
முஸ்லிமாக மாறுவது எப்படி?
இஸ்லாத்தை தழுவி முஸ்லிமாவதற்கு ஒருவர்,
”இறைவன் ஒருவன் என்றும்,முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவனின் தூதர் என்றும், நான் சாட்சி சொல்கிறேன்” என்று உறுதியாக, பொருள் உணர்த்து சொல்ல வேண்டும். மனமுவந்து ஒருவர் சாட்சி சொன்ன உடன் அவர் முஸ்லிமாகி விடுகிறார்.
ஒருவர் இதை தனியாகவும் செய்யலாம்.
சாட்சி சொல்லும் போது, சரியாக உச்சரிப்பதற்காக மற்றவர்கள் முன்னிலையில் செய்வது நன்மையாக கருதப்படுகிறது.
மேலே கூறப்பட்ட சத்திய பிரமானத்திற்கு, உறுதி மொழிக்கு ”ஷஹாதா” கலிமா என்று பெயர்.
இதன் முதல் பகுதியான இறைவன் ஒருவன் என்று சாட்சி பகர்வது, வணங்குவதற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற முக்கியமான உண்மையை கொண்டுள்ளது.
இறைவன் மனித குலத்திற்கு நேர்வழி காட்ட தாம் இறக்கியருளிய தன்னுடைய திருக் குர்ஆனில் கூறுகின்றான்: –
”(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும், ”நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை, எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (அல்-குர்ஆன் அத்தியாயம் 21, வசனம் 25)
இறைவனின் இந்த திரு வசனம் மூலம் அனைத்து வகையான வணக்கங்களும், அதாவது இஸ்லாத்தின் மற்ற கடமைகளான தொழுகை, நோன்பு, பிறரை உதவிக்கு அழைத்தல், அடைகலம் தேடுதல், அறுத்துப் பலியிடல் போன்ற அனைத்து வணக்க வழிபாடுகளையும் இறைவன் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துகின்றான்.
இறைவனை விட்டு விட்டு பிறருக்கு செய்யும் வணக்கங்கள் அதாவது அவனுடைய படைப்பினங்களான மலக்குகள், தூதர்கள், ஈசா (அலை), முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முனிவர்கள், சிலைகள், சூரியன், நிலவு, மரம், விலங்குகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு செய்யும் வணக்கங்கள் யாவும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையான ”இறைவன் ஒருவனே, அவனே வணங்குவதற்கு முழு தகுதியானவன், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது” என்ற இஸ்லாத்தின் மூல மந்திரக் கொள்கையான அடிப்படை ஷஹாதாக் கலிமாவிற்கு முரண்படுகிறது.
இவ்வாறு செய்த ஒருவர், இறப்பதற்கு முன் பாவமன்னிப்பு தேடவில்லை எனில், அது மன்னிக்கப்படாத குற்றமாக கருதப்படுகிறது.
வணக்கம் என்பது இறைவனை சந்தோசப்படுத்துகிற சொல், செயல்களை நிறைவேற்றுதல் ஆகும் அது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை நிறைவேற்றுவதுடன் மட்டுமல்லால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ளதாகும் குடும்பத்தினரின் உணவு தேவைகளை நிறைவேற்றுவது, இறைவனின் திருப்பொருத்தத்திற்காக நலவானவற்றை சொல்லி மற்றவர்களை சந்தோசப் படுத்துவதும் வணக்கமாகும். நம்முடைய வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனில், அது மனப்பூர்வமாக இறைவன் ஒருவனுக்காக செய்யப்பட வேண்டும்.
ஷஹாதா கலிமாவின் இரண்டாம் பகுதி ”முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவனின் அடியாராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரும் ஆவார்” என்று நம்புவதாகும். இது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இட்ட கட்டளைகளை பின்பற்றுவதுடன், அவர்களின் ஏவல்களை ஏற்று, விலக்கல்களை விட்டு நீங்குவதாகும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகள் அனைத்தும், இறைவனிடமிருந்து வஹி மூலம் அறிவிக்கப்பட்டதாகும்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு மனித இனத்துக்கும் வாழும் முன் மாதிரியாக உள்ளதால், ஒருவர் தன் வாழ்க்கை வழிமுறைகளில் எல்லாவற்றிலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்ற வேண்டும்.
இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்:
”மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்” (அல்-குர்ஆன் 68:4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்-குர்ஆன் 33:21)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்களிடம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணத்தைப் பற்றி கேட்டபோது, அவர்களின் குண நலன்கள் குர்ஆனைப் போன்று உள்ளது என்பார்கள்.
ஷஹாதா கலிமாவின் இரண்டாவது பாகத்தை நிறைவேற்ற வேண்டும் எனில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பின்பற்ற வேண்டும்.
”(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன் 3:31)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைசி தூதராவார்கள். அவர்களுக்குப் பிறகு வேறு யாரும் தூதராக அனுப்பப்பட மாட்டார்கள்:
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை, ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (அல்-குர்ஆன் 33:40)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு யார் ஒருவர் தனக்கு வஹி வருகிறது என்று கூறுகிறாரோ அவர் பொய்யராவார். மேலும் அவரை நம்புவது இறை நிராகரிப்புக்கு இட்டுசெல்லும்.
இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கும் சகோதர சகோதரிகளுக்கு; ”உங்களை வாழ்த்துவதுடன் நாங்கள் உங்களை உண்மையான இஸ்லாம் மார்கத்திற்குள் அன்புடன் அழைக்கின்றோம்.”
‘‘Jazaakallaahu khairan” source: http://suvanathendral.blogspot.com