அபூமுஹம்மத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) தண்ணீர்ப்பந்தலுக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது (தண்ணீர்ப்பந்தலின் பொறுப்பாளர்) அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு (தமது மகனிடம்) ‘ஃபழ்லே! உனது தாயாரிடம் சென்று நல்ல குடிநீர் வாங்கி வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடு!’ என்றார்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் கைகளை இதில் விடுகின்றனரே’ என்று அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுகூறினார்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘(பரவாயில்லை) இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்’ எனக் கூறிவிட்டு அதை அருந்தினார்கள். பின்னர் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தனர்.
அங்கே மக்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டும் அது சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தப் பணிகளில் ஈடுபட்டிருங்கள்! நீங்கள் நல்ல பணியையே செய்கிறீர்கள்’ என்றார்கள்.
பின்னர் அவர்களிடம் ‘உங்களுக்கு (இந்தப்பணி செய்வதில்) பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றில்லா விட்டால்’ நானும் கிணற்றில் இறங்கி எனது தோள் புஜத்தில் தண்ணீர் துருத்தியைச் சுமந்திருப்பேன்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1635)
விளக்கம்:
தகுதி, செல்வம், செல்வாக்கு அதிகமாகும் போது மற்றவர்களை விடத் தன்னைத் தனித்துக் காட்ட மனிதன் விரும்புகிறான். மிகப்பெரும் பதவியையும் செல்வாக்கையும் பெற்றவர்கள் சாதாரண மனிதர்களுடன் கலந்து அவர்களைப் போலவே நடந்து கொள்வதை விரும்புவதில்லை. இதனால் தங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணுகின்றனர்.
தலைவர்கள் தமது இல்லத் திருமணங்களுக்குத் தொண்டர்களை அழைப்பார்கள். அங்கே பரிமாறப்படும் விருந்தில் பிரமுகர்களுக்குத் தனியாகவும், சாதாரண மக்களுக்குத் தனியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். பொதுவான நிகழ்ச்சியில் பரிமாறப்படும் உணவில்கூட இப்படிப் பேதம் பார்க்கப்படுகின்றது.
சாதாரண நிலையிலுள்ளோரின் வீடுகளில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடிய மதகுருமார்கள், பிரபல்யங்கள் தனியாகக் கவனிக்கப்படுவதையும் நாம் காண்கிறோம்.
இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்றபோது அவருக்கான உணவுகள் விசேஷமாகத் தயாரிக்கப்பட்டுத் தனிவிமானத்தில் கொண்டு செல்லப்பட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தலைவர்கள் பயன்படுத்தும் படுக்கைகள், பயன்படுத்தும் பாத்திரங்கள், அமரும் ஆசனங்கள் கூட அவர்களுடன் பயணம் செய்யும் காட்சியை நாம் கண்டு வருகிறோம்.
எல்லா வகையிலும் மக்களைவிட்டு விலகி, எல்லா வகையிலும் தங்களைத் தனியாகக் காட்டிக் கொள்ளும் தலைவர்களைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு நபிகள் நாயகத்தின் இந்த அற்புத வாழ்க்கையில் ஆறுதல் கிடைக்கின்றது.
இந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால் நடந்ததாகும். அப்போதுதான் அவர்கள் ஹஜ்ஜு எனும் புனிதப் பயணமாக மக்காவுக்குச் சென்றிருந்தனர்.
இந்தக் காலகட்டத்தில் அவர்களின் மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உலக அரங்கில் உச்சத்தில் இருந்தன. ஏராளமான நாடுகள் வெற்றி கொள்ளப்பட்;டு அவர்களின் ஆட்சியின் கீழ் வந்திருந்தன. அவர்களின் பெயரைக் கேட்டால் உலகத்துக்கு பயங்கலந்த மரியாதை ஏற்பட்டிருந்தது. இன்றைய உலகில் எந்த ஆட்சியாளரும் பெற்றிருக்காத செல்வாக்கு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் போது இருந்தது.
ஒரு மதத்தின் நிறுவனராகவும், வழிகாட்டியாகவும், ஆத்மீகத் தலைவராகவும் – அதே சமயத்தில் மாபெரும் வல்லரசின் அதிபராகவும் இருந்த போதுதான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதைக் கவனத்தில் கொண்டு இந்த வரலாற்றுத் துணுக்கை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
‘ஹஜ்’ எனும் கடமையை நிறைவேற்ற மக்கா நகரில் மக்கள குழுமியுள்ளனர். அவர்களுக்குத் தாகம் தீர்பபதற்காக தண்ணீர்ப்பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் வரிசையாக நின்று அங்கே நீரருந்திச் செல்கின்றனர். அந்த இடத்திற்குத்தான் மாமன்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தண்ணீர் அருந்த வருகின்றனர்.
நபிகள் நாயகத்தின் உறவினர்கள் அந்த ஊரில் நிறைந்துள்ளனர். அந்த ஊர் மக்கள் அனைவருமே நபிகள் நாயகத்தை ஆன்மீகத் தலைவராக ஏற்றிருந்தனர். அவர்களில் யாருடைய வீட்டுக்காவது சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம். அங்கேகூட செல்லத் தேவையில்லை. தமது தோழர்களில் யாரையேனும் அனுப்பித் தண்ணீர் எடுத்து வரச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் எல்லா மக்களும் எங்கே தண்ணீர் அருந்தச் செல்கிறார்களோ அங்கேயே செல்கிறார்கள்.
அந்தத் தண்ணீரை அருந்துவதற்காகக் கூட நெரிசலில் இடிபட்டு அவர்கள் சென்றிருக்கத் தேவையில்லை. யாரையேனும் அனுப்பித் தண்ணீர்ப் பந்தலில் நீர் எடுத்துவரச் சொல்லியிருக்கலாம். அவ்வாறுகூட செய்யாமல் தாமே நேரடியாக அங்கே செல்கிறார்கள்.
தண்ணீர்ப் பந்தலை நபிகள் நாயகத்தின் சிறிய தந்தை அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு தாம் நிர்வகிக்கிறார். அவர் தமது வீட்டிலிருந்து நல்ல தண்ணீர் எடுத்து வருமாறு தம் மகனிடம் கூறுகிறார்.
இந்தத் தண்ணீர் நம்மைப் போன்றவர்கள் குடிக்கத்தக்கதாக இருக்காது என்று இந்த நேரத்திலும நபிகள் நாயகத்துக்குத் தோன்றவில்லை. பரவாயில்லை இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்! என்று கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் வாழ்ந்த மக்கள் நாகரீகம் தெரியாதவர்களாக இருந்தனர். தண்ணீhப்பந்தலில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் தம் கைகளைப் போட்டு அருந்திக் கொண்டிருந்தனர். இதையும் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவிக்கிறார். பரவாயில்லை, இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள் என்பதே நபிகள் நாயகத்தின் பதிலாக இருந்தது.
மிகப் பெரிய தகுதியில் உள்ளவர்களைவிட்டு விடுவோம். சாதாரண மனிதன்கூட மற்றவர்கள் கைகளைப் போடும் தண்ணீரை அருந்தத் தயங்குவான். இந்த நிலையில் எல்லா மனிதர்களும் எந்தத் தண்ணிரை அருந்துகின்றார்களோ அந்தத் தண்ணீரையே தாமும் அருந்தி, தாம் மன்னர் என்பதாலோ, ஆத்மீகத் தலைவர் என்பதாலோ மற்றவர்களைவிட கூடுதலான உபசரிப்புத் தேவையில்லை என்று அந்த மாமனிதர் நிராகரித்து விடுகிறார்.
எவரும் அடைய முடியாத உயர்வை அடைந்தும், இவ்வளவு எளிமையாகவும் சாதாரணமாகவும் நடந்து கொண்ட தலைவரை உலக வரலாறு இன்று வரை கண்டதில்லை.
ஸம்ஸம் என்பது இஸ்லாமிய நம்பிக்கைப்படி புனிதமான கிணறாகும். அந்தத் தண்ணீரை அருந்துவதற்காக அங்கே நபிகள் நாயகம் (ஸல்) செல்கிறார்கள். மக்களில் சிலர் கிணற்றில் இறங்கித் தண்ணீரை மேலே கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார்;கள். தாமும் கிணற்றில் இறங்கித் தண்ணீர் சுமந்து வந்தால் ஆர்வத்துடன் அந்த மக்கள் செய்யும் சேவை பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள். இவ்வாறு பாதிப்பு ஏற்பாடது என்றால் நானும் உங்களைப் போல் கிணற்றில் இறங்கித் தண்ணீரை என் தோள் மீது சுமந்து மேலே கொண்டு வந்து மக்களுக்கு விநியோகித்திருப்பேன் என்று கூறுகிறார்கள்.
கிணற்றில் இறங்குவதோ, தண்ணீரைத்தம் தோளில் சுமப்பதோ, அதை மக்களுக்கு விநியோகம் செய்வதோ அந்த மாமனிதருக்குக் கௌரவக் குறைவானதாகத் தோன்றவில்லை. தாமும் விநியோகிக்க ஆரம்பித்தால் மக்கள் தம்மிடம் வந்து குழுமி விடுவார்கள். மற்றவர்கள் விநியோகிக்கும் தண்ணீரை யாரும் வாங்க மாட்டார்கள். இதனால் ஆர்வத்துடன் பணிபுரிந்த மக்களுக்கு மனக் கவலை ஏற்படும் என்பதால் இதைத் தவிர்த்துக் கொள்வதாகக் கூறிவிடுகின்றனர்.
அவர்களின் எளிமைக்கு மட்டும் எடுத்துக் காட்டாக இதை நாம் கருதக்கூடாது. மக்கள் கூடுமிடங்களில் – மத நிகழ்ச்சிகளில் – கலந்து கொள்ளும் தலைவர்களால் மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதையும் தெளிவு படுத்துகிறார்கள்.
எத்தனையோ மதநிகழ்ச்சிகளில் முதல்வரிலிருந்து பிரதமர் வரை கலந்து கொள்கின்றனர் அதனால் சாதாரண மக்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். காரணம் அவர்களுக்காக செய்யப்படும் கெடுபிடிகள், விசேஷ ஏற்பாடுகள் தாம். இதனால் பல நூறு பேர் செத்து மடிந்ததையும் நாம் மறக்க முடியாது.
இந்த மாமனிதரும் தமது மார்க்கக் கடமைகளில் ஒன்றை நிறைவேற்றச் செல்கிறார். அவர் அதில் கலந்து கொண்டதால் கடை நிலையில் உள்ள ஒரு தொண்டனுக்குக் கூட எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள்.
இந்த மாமனிதர் தம்மைக் கடவுள் என்று கூறினாலும் மக்கள் நம்பக் கூடிய அளவுக்கு அந்தஸ்து அவருக்கு இருந்தது. இந்த மாமனிதர் தமக்கென விசேஷச் சலுகைகளை உருவாக்கிக் கொண்டாலும் முகம் சுளிக்காமல் அதை ஏற்கக் கூடிய – அதில் மகிழ்ச்சியடையக் கூடிய மக்கள் கூட்டம் அவருக்குப் பின்னே இருந்தது. அவரை அழிப்பதற்காக பகீரதப் பிரயத்தனம் செய்து வந்த எதிரிகள் உலகம் முழுவதும் இருந்ததால் எந்நேரமும் ஆபத்து அவர்களைச் சூழ்ந்திருந்தது. அவருக்கோ எதைப் பற்றியும் கவலையில்லை. எந்தக் காரணத்துக்காகவும் மக்களை விட்டு விலகிட அவர் எண்ணவில்லை.
ஆட்சியாளரும், ஆன்மீகத் தலைவரும் எப்படி நடக்க வேண்டும் என்று அவர் வழிகாட்ட வந்தவர் என்பதால் – அதில் மட்டும் தான் அவரது கவனம் இருந்தது.
அதனால் தான் உலகில் தோன்றிய மனிதர்களில் எல்லாம் அவர் மாமனிதராகத் திகழ்ந்தார் என்று நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.