Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தேனீக்கள் (2)

Posted on February 22, 2010 by admin

தேனீயின் இனப்பெருக்கம்

லார்வாக்களுக்கு ஒரு நாளைக்கு 1200 முறைகளுக்கு மேல் உணவளிக்கப்படுகின்றது. இராணித் தேனீயின் மூலம் அறைக் கூடுகளில் அறைக்கு ஒன்று வீதம் இடப்படும் முட்டைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு பொறித்து லார்வாக்கள் வெளிவருகின்றன. இராணித் தேனீக்கென்று வித்தியாசமான வடிவில் நிலகடலை வடிவத்தில் கூடு கட்டப்படுகின்றன.

லார்வா நிலையில் அவற்றிற்கு வேலைக்காரத் தேனீக்களினால் ஒருநாளைக்கு 1200 முறைக்கு மேல் உணவு அளிக்கப்படுகின்றது. தங்களது சுய நலத்திற்கல்லாமல் தங்கள் காலனியின் நலனையே கருத்தில் கொண்டு புதிய சந்ததிகளை உருவாக்க வெறித்தனமாக செயல்படும் இந்த செயல் உண்மையில் சிந்திக்கத் தக்க விஷயமாகும். முதல் இரண்டு நாட்களுக்கு வேலைக்கார லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி என்னும் உயர் தர புரத உணவு அளிக்கப்படுகின்றது.

இது வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. அதன் பிறகு மகரந்தத் தூள் மற்றும் தேன் ஆகியவை உணவாக அளிக்கப் படுகின்றது. ஆனால் இராணித் தேனீயின் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி மாத்திரமே உணவாக முழு வளர்சி அடையும் வரை அளிக்கப்படுகின்றது. இத்தகைய வேற்றுமை லார்வா பருவத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இத்தகைய உயர் தர உணவு தொடர்ந்து கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. அதன் பிறகு லார்வா முழு வளர்சி நிலையை அடைகின்றது. பின் அறை கூட்டின் மேல் பகுதி மெழுகினால் சீல் வைக்கப்பட்டு மூடப்படுகிறது. அதன் பிறகு அவை PuPa என்னும் கூட்டுப் புழு நிலையை அடைந்து பிறகு முழு வளர்ச்சி அடைந்த நிலையில் அறைக் கூட்டின் மேல் பகுதியை உடைத்து வெளி வருக்கின்றன.

இராணித் தேனீ முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் ஆகின்றன. பொதுவாக எல்லா நாட்களிலும் சில நூறு அறைகளிலாவது லார்வா நிலையில் உள்ளவைகளுக்கு உணவு அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

புதிய வரவுகள்

தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது. இவ்வளவு வேகத்தில் சிறகை அசைப்பதனால் ஏற்படும் சப்தம்தான் ஈக்களின் ரீங்காரம்.

வெளி வந்தவுடன் புதிய தேனீக்கள் மூன்று வாரங்கள் வரை கூட்டிற்குள்ளேயே வேலையில் அமர்த்தப்படுகின்றன. கூடுகளைப் பராமரிக்கவும், பழைய லார்வா அறைகளைத் தூய்மைப்படுத்தி அடுத்து முட்டையிட ஏதுவாக்கி வைக்கவும், லார்வாக்களுக்கு உணவளித்து பராமரிக்கவும், வேலைக்காரத் தேனீக்களினால் கொண்டுவரப்படும் தேனை இவை தங்கள் வாயில் பெற்று அதை அதற்கென்று இருக்கும் பிரத்யேகமான அறையில் நிரம்பியதன் பின்னர் அதில் காற்று புகா வண்ணம் இறுக்கமாக (airtight) சீல் வைக்கின்றன. மேலும் இவை கூட்டின் வெப்பம் மிகைத்து விடும் போது நீரை விட்டு சிறகை தொடர்ந்து அசைப்பதன் மூலம் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வெப்ப நிலையை குறைக்கின்றன. கடுமையான குளிர் காலங்களில் இவை ஒன்றுடன் இறுக்கமாக இணைந்து கூட்டில் இருக்கும் லார்வாக்கள் முறையாக வளர்சியடைய வகை செய்கின்றன. இறுதியாக மூன்று வாரங்ககளுக்குப் பிறகு இவை வெளியே சென்று தேனைச் சேகரிக்க அனுப்பப்படுகின்றன.

தேன் சேகரிப்பு

 

தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரைப் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.

தேனீக்கள் ஏன் தேனை சேமித்து வைக்கின்றன? என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்றால் நமக்கு கிடைக்கும் பதில் மலர்கள் பூக்காத உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத குளிர் காலத்திற்காக இவைகளால் முன் கூட்டியே சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான் தேன் சேகரிப்பு ஆகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்படுகின்றன என்று சொன்னால் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடிகின்றது.

சில வகைத் தேனீக்கள் தங்கள் உணவிற்காக செல்லும் தொலைவை நாம் அறிந்தால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஏன் என்று சொன்னால் தேனீக்கள் சற்றேறக் குறைய ஒரு லட்சம் கி.மீ வரை பயணித்து இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து குளுகோஸை எடுத்துப் பிறகு சரியாக தங்கள் கூடு திரும்புகின்றன என்று சொன்னால்

இறைவா! உன்னுடைய அற்புதம் தான் என்ன அற்புதம். இவ்வளவு தொலைவான தூரங்களிலிருந்து மிகச் சரியாக கூடு திரும்பும் இந்த ஆற்றல் எங்ஙனம் இவற்றிற்கு சாத்தியம் ஆயிற்று? இதோ நம் இறைமறை பதில் அளிக்கின்றது..

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனி வர்கத்திலும் சாப்பிடு! உன் இறைவனின் பாதையில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயறுகளிலிருந்த மாறபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)

தேனீக்கள் சரியான பாதையில் திரும்பி கூட்டிற்கு வர எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதை மேற்கண்ட இறை வசனம் தெளிவுபடுத்துகின்றது. இதை மறுக்கக் கூடியவர்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு பதில் சொல்லட்டும். இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நிறைய அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் நம் இறைவன்.

இவை இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும். நம் இறைவன் மகா தூய்மையானவன். நம் இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை மிகைப்படுத்தக் கூடியவன் என்பது மீண்டும் இங்கே நிரூபனமாகின்றது. இவை முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை(nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்து திரும்பி கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு சீல் வைக்கின்றன. இந்த மகரந்தத் தூள் நிறைய புரதம் மற்றும் தாதுத் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும் இவற்றில் 10 க்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனை கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன. இவை வெளியில் ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.

நடன அசைவில் அசாதாரண மொழி

 

தேனீக்கள் ஆடும் கூத்திற்கு ஒரு அர்த்தம் உண்டு.

தேனீக்கள் தங்கள் உணவிற்காக வெளியில் சென்று ஏதேனும் புதிய உணவாதாரத்தைக் கண்டறிந்தால் கூட்டிற்குத் திரும்பி அந்த இடத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களை வித்தியாசமான உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றன. உதாரணமாக உணவின் இருப்பிடம் 100 கஜத்திற்கு(yards) உட்பட்ட இடத்தில் ஒரு தேனீயால் கண்டுபிடிக்கப்பட்டால் அது முதலில் அந்த மலரின் குளுகோஸை உறுஞ்சி தன் தேன் பையில் சேகரித்து கூடு திரும்புகின்றன. திரும்பியவுடன் கூட்டில் முதலில் இரண்டு செ.மீ அளவிற்கு சிறிய வட்டமாக (round dance) சுற்றுகின்றது. பின்னர் படிபடியாக சுற்றை பெரிதாக்கி சுற்றுகின்றது. பின்னர் அந்த சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றுகின்றது. இப்போது அதனுடன் இணைந்து மற்ற ஈக்களும் அந்த நடனத்தில் இணைந்துக் கொள்கின்றன.

பின்னர் புதிய இடத்தை கண்டறிந்த தேனீயால் கொண்டு வரப்பட்ட மலரின் மகரந்தம் மற்றும் மலரின் குளுகோஸ் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து அது எத்தகைய தாவரம் என்பதை உறுதி செய்து கொள்கின்றன. பின்னர் கூட்டை விட்டு வெளியேறி 100 கஜத்திற்க்குள் பெரிய வட்டம் அடித்து உணவின் இருப்பிடத்தைக் கண்டறிகின்றன. இதே நேரத்தில் 100 கஜத்திற்கு அப்பால் உணவாதாரம் இருக்குமேயானால் தற்போது வேறுவிதமாக நடனத்தை அரங்கேற்றுகின்றன. தங்கள் பின்புறத்தை அசைத்தபடி(waggle dance) மையத்திலிருந்து நேராக சென்று பின்னர் அறைவட்டம் அடித்து அதற்கு எதிர் திசையில் அதைப் போன்றே சுற்றுகின்றன. மேலும் மிக அதிக தொலைவு என்றால் இவை சூரியனின் இருக்கும் திசையையும் உணவு இருக்கும் திசையையும் ஒரு காம்பசின் அமைப்பில் திசையை துல்லியமாக தெரிவிக்கின்றன. இவை கணிதம் அறிந்த ஈக்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். எல்லாம் நம் இறைவன் ஜீன்களைக் கொண்டு நடத்தும் ஜால வித்தைகள்தான் இவைகள்.

இந்த முறையில் 10 கிலோ மீட்டர் தொலைவின் இருப்பிடத்தை கூட இவைகளினால் இந்த அதிசய முறையினால் மற்றவற்றிற்கு தெளிவுபடுத்த இயலுகின்றது. யார் இவைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது? என்ன ஒரு திட்டமிட்ட பிரமிக்க வைக்கும் செயல்பாடுகள். இத்தகைய நடன அசைவுகளை வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளிலும் அவைகளினால் எப்படி அறிந்துக் கொள்ள முடிகின்றது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

தவறுதலின் பலன்தான் கில்லர் தேனீக்கள் (KILLER BEE)

1950 ஆண்டு பிரேசில் விஞ்ஞானிகளுக்கு அதிக தேன் கொடுக்கக் கூடிய ஐரோப்பிய தேனீக்களையும் அதிக வெப்பத்தைத் தாங்கி தேனை உற்பத்தி செய்யும் ஆப்ரிக்கத் தேனீயையும் சேர்த்து கலப்பினம் செய்தால் தங்கள் நாடான பிரேசில் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஒரு ரகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக புதிய ரகம் உருவாக்க ஆப்பிரிக்க இராணித் தேனீக்கள் சிலவற்றை பிடித்து பிரேசில் கொண்டு சென்றார்கள். ஆனால் அவற்றில் சில ஈக்கள் தப்பித்து காட்டுக்குள் சென்றுவிட்டன.

இந்த ஆப்ரிக்க தேனீக்கள் மிக அதிக அளவிற்கு பாதுகாப்பு உணர்வுக் கொண்டதாகும். மற்ற வகை தேனீக்களைக் காட்டிலும் மிக வேகமாக இவை பறக்கக் கூடியவை. இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது. இவை தங்கள் கூட்டை தாக்க வரும் எதிரிகளை மாத்திரம் அல்லாது அதன் சுற்று புறத்தில் வந்தால் கூட கொத்த ஆரம்பித்துவிடும். மற்ற தேனீக்களை விட எதிரி மூன்று மடங்கு தொலைவில் வரும் போதே இவை தாக்கும் தொழிலில் இறங்கி விடுகின்றன. ஆப்ரிக்காவின் அதிக வெப்ப நிலையைத் தாங்கிய இவைகளுக்கு தென் அமெரிக்கா கண்டத்தின் மிதமான வெப்ப நிலையை தாங்கி பரவிச் செல்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இவற்றின் இராஜ்ஜியம் தங்கு தடையின்றி பரவிச் சென்றது. இவை வருடத்திற்கு 500 சதுர மைல்கள் வீதம் தங்கள் பரப்பளவை விஸ்திகரித்துக் கொண்டே செல்கின்றன.

இதன் விளைவாக 1950ல் ஆரம்பித்த இவற்றின் பரவல் 1990ம் ஆண்டு அமெரிக்காவை எட்டிவிட்டது. 40 ஆண்டு காலத்தில் தென் அமெரிக்காவை கடந்து வட அமெரிக்காவை எட்டிவிட்டன. மேலும் இவை பரவிக்கொண்டே செல்கின்றன. இவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். இவை 1990 ஆண்டு முதன்முதலாக அமெரிக்காவில் காணப்பட்டது. அவை டெக்ஸாஸிலிருந்து மெக்ஸிகோவிற்கும் பிறகு 1994ம் கலிஃபோர்னியா மகாணத்திற்கும் பரவின. உலக நாடுகளை அச்சுறுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்கவில் இவை சப்தமின்றி தங்கள் ஆக்ரமிப்பைத் தொடர்கின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் முழு அமெரிக்காவும் ஆக்கிரமிக்கக் கூடிய அபாயம் இருக்கின்றது. மெக்ஸிகோவிலும் அர்ஜெண்டினாவிலும் இவைகளினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை உயிர்இழப்பு ஏற்படாவிடினும் 1990 ஆண்டு அதிகபடியான நபர்கள் இவற்றால் கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டனர்.

தேன்

தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சல் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும்.

ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது.

குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேனைக் கொண்டு மனிதர்கள் பயன் பெறவே எல்லாம் வல்ல நம் இறைவன் இவற்றை நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். அவன் கருணையாளன். உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது.

நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும்.

இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன.

இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.

தேனின் இதர பயன்கள்

இந்த பூமிக் கோளின் தாவரப் பரவலுக்கு தேனீக்களின் பங்கு மிக இன்றியமையாததாகும். அமெரிக்காவில் மாத்திரம் நான்கில் ஒரு பங்கு தாவரம் தேனீக்களினால் இனப்பெருக்கம் அடைகின்றன. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் உள்ள பொதுவான பயனாகும். இவற்றினால் ஏற்படும் பயன்பாட்டின் மதிப்பு அமெரிக்காவில் மாத்திரம் 200 பில்லியன் டாலர் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாக குறிப்பிடுவதை குறையாக எண்ணுபவர்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். ஏன் என்று சொன்னால் இத்தகைய புள்ளி விபரங்களை சேகரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவர்களுக்கே போதிய கால அவகாசமும் பொருளாதாரமும் இடம் தருவதனால் இத்தகைய புள்ளி விபரங்கள் இவர்களிடமிருந்து கிடைக்கப்பெருகின்றன என்பதல்லாமல் வேறு ஒரு காரணமும் இல்லை.

இறைவனின் ஒப்பற்ற ஏற்பாட்டின்படி இவை நமக்கு இனிய தேனை மருத்துவப் பயன்பாட்டிற்கு நல்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல அவசியத்தையும் இவற்றில் வைத்த நம் இறைவன் போற்றுதலுக்குறியவன்! புகழுக்குறியவன்! பகுத்தறிவு என்பது இறைவன் மனிதனுக்கு பிரத்யேகமாகக் கொடுத்துள்ளது போன்றே மற்ற சில உயிரினங்களுக்கும் இறைவன் தன் அருட்கொடையின் மூலம் வியக்கத்தக்க அம்சங்களை வைத்துப் படைத்துள்ளான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தன்னை மிகப் பெரியதாக நினைக்கின்றான். இருப்பினும் தன்னை விட மிகத் தாழ்ந்த உயிரினமாக கருதப்படும் பல உயிரினங்கள் பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றல்கள் பல இவனைக் கொண்டு சாத்தியமற்றதாக இருப்பதை நடுநிலையோடு உணர்ந்து இறைவனின் வல்லமையை ஏற்று அவனுக்கு கட்டுப்பட்டு வாழ கல்வி ஞானத்தை வேண்டுவோம். நேர் வழி செல்வோம்.

(நபியே)கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும் அவர்களது உள்ளங்கள் அவனுக்கு பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்) நம்பிக்கைக் கொண்டோருக்கு அல்லாஹ் நேர் வழியைக் காட்டுகின்றான்”. (அல்குர்ஆன் 22:54)

அற்புதத்தையே இறக்கியிருக்கின்றது வல்லவனின் வான்மறை திருகுர்ஆன். அல்லாஹ் மகா தூய்மையானவன். உண்மையை அறியும் நோக்குடன் அல்லாஹ்வுடைய திருவேதத்தை ஒருவர் நாடுவாரேயானால் அங்கு நிச்சயமாக நிறைய சான்றுகளையும் அவனுடைய வல்லமையையும் அவர் காண்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ”எவருடைய இதயத்தில் நோய் உள்ளதோ அவர்களோ இது பொய்யே தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக் கட்டிக் கொண்டார். மற்ற சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும் பாவத்தையுமே கொண்டு வந்துள்ளார்கள். (அல்குர்ஆன் 25:04)

source: http://www.islamkalvi.com/science/honey_bee.htm

Courtesy: Encarta Encyclopedia for images

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

94 − = 90

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb