ஆபிதா பானு
بِسْمِ اللهِ الرَّحْمن الرَّحِيمِ
وَأَعِدُّواْ لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ (صدق الله العظيم
புகழ்யாவும் வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே உரியது. சாந்தியும், சமாதானமும் இறைதூதர் மீதும் அவர்களின் குடும்பத்தினர், நல்லறத்தோழர்கள், உலகமுஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
அறிவுக்கேற்ற மார்க்கமாம் நம் உயிரினும் மேலான இஸ்லாம் இன்று உலகெல்லாம் வளர்ந்து ஓங்கி நிற்பதற்கு பெண்களின் பங்கும் மகத்தானது என்பதை எவரும் மறுக்க முடியாது.
அரவணைப்பும், பொருளார உதவியும்
ஹிரா மலைக்குகையிலிருந்து வல்லான் இறைவனிடமிருந்து இறைச் செய்தியைப் பெற்று நடுங்கிய வண்ணம்
”ஸம்மிலூனீ” ”ஸம்மிலூனீ… ” زملوني زملوني
என்னைப் போர்த்துங்கள் என்னைப் பேர்ர்த்துங்கள்
என்னைப் போர்த்துங்கள் என்னைப் பேர்ர்த்துங்கள் எனவேண்டி நின்ற நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு,
”பயப்படாதீர்! தைரியத்துடன் இருங்;கள்!உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாது. .உங்களைப் படைத்த நாயன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான்! நீங்களோ உண்மையாளர். உறவினரை ஆதரிப்பவர்! இன்னா செய்தாருக்கும் இனியவை செய்பவர். வாய்மையும் ஈகையும் மிக்கவர்! அப்படிப்பட்ட உங்களுக்கு அல்லாஹ் ஒரு தீமையும் செய்யமாட்டான். உங்களை ஒரு மாபெரும் காரியத்தை சாதிப்பதற்காகவே அந்த நாயன் தேர்ந்தெடுத் துள்ளான்.” என்று ஆறுதல் கூறித் தேற்றியவர் ஒரு பெண்மணி!
அதுவும் அவரது அன்புத் துணைவியாரான கதீஜா ரளியல்லாஹு அன்ஹாஅம்மையார்! அது மட்டுமா? அரபு நாட்டிலே தமது வாணிபத்தின் மூலம் திரட்டிய கோடிக்கான சொத்துகளை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்கி பெருமானாரின் முதுகெலும்பாக நின்று அரவணைத்து நிழலாக நின்றவர் ஒரு பெண்மணி என நினைக்கும் போது நம் நெஞ்சமெல்லாம் நிறைகிறது.
அன்று மட்டும் அவரது நெஞ்சுரம் மிக்க எஃகு போன்ற ஆறுதல் வார்த்தைகளும், பெருஞ்செல்வமும் இல்லையென்றால் பெருமானாரின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.
உம்மு ஷரீக் அல்-அன்ஸாரிய்யா! மிகப்பெரும் செல்வச்சீமாட்டியான இவர் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அள்ளி அள்ளி வழங்கியவரில் குறிப்பிடத்தக்கவர்.இவரது இல்லத்தை ஏழைகளும்,ஆதரவற்றோரும், தேவையுடையோரும் மொய்த்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் இல்லம் விருந்தினருக்கும்,பசித்தோருக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
போர்களத்தில் பாதுகாப்புப் பணி
உஹதுப் பொர்க்களத்திலே பெருமானாரின் தலையை குறிவைத்து எதிரிகளின் அம்புகளும், வாட்களும் வீசப்பட்ட வேளையில் அரணாகக் காத்து நின்றவர்களில் முன்னணியில் நின்றவர் ஒரு பெண்!
அவரே நுஸைபா என்னும் உம்மு உமாரா ரளியல்லாஹு அன்ஹா என்பவர்! பெருமானாரைக்காக்க உயிரையே துச்சமாக மதித்துப் போராடியவர் களில் குறிப்பிடத் தக்கவர். அப்போது அவருக்கு வயது 43..
இப்போரில் இவருக்கு 12 காயங்கள் ஏற்பட்டன.
தமது மகனை காயப்படுத்தியவனை ஒரே பாய்ச்சலில் வீழ்த்தினார்.
தமது 52 வது வயதில் யமாமா போரில் கலந்து கொண்டு தாம் சபதம் செய்தவாறு முஸைலமத்துல் கத்தாபை வெட்டிச்சாய்த்தார்.
இவரது வீரச்செயலைப் பாராட்டிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவரது வேண்டுதலை ஏற்று தம்முடன் சுவர்க்கத்திலி ருப்பதற்கு துஆ செய்தார்கள்.
எதிரிகளை வீழ்த்திய வீராங்கனைகள்
அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி உம்மு ஃபள்லு ரளியல்லாஹு அன்ஹா என்பவர், முஸ்லிமான தமது அடிமையை கொடுமைப்படுத்தியதற்காக அபூ லஹபின் தலையில் கட்டையால் அடித்த மரண அடி அவனது சாவுக்கே காரணமாயிற்று. இந்த மாபெரும் வீராங்கனையின் தீரத்தையும், வீரத்தையும் மறக்க முடியுமா?
அன்னை ஸபிய்யா ரளியல்லாஹு அன்ஹா: பெருமானாரின் மாமியான இவர் தமது 60 வது வயதில் அகழ் போரில் கலந்து கொண்டார்;. அப்போது பெண்கள் இருந்த பாதுகாப்பான இடத்திற்கே உளவு பார்க்க வந்த எதிரிப்படைத் தளபதியின் தலையை வெட்டி, எதிரிகளின் கண் முன்னே தூக்கி வீசுய அபாரச்செயல் எதிகளை கதிகலங்கச்செய்து ஓடவைத்தது.ஒரு முஷ;ரிக்கை-இணைவைத்தவனை முதன் முதலாகக் கொன்ற பெருமையைப் பெற்ற இந்த பெண்மணியின் துணிவுமிக்க செயலை மறக்கமுடியுமா?
உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா
அவர்கள் உஹத் போர்க்களத்தில் பங்கு கொண்ட பதினான்கு பெண்களில் ஒருவர். கர்ப்பிணியாக இருந்தும் ஹுனைன் போரிலே பங்கேற்றபோது தமது இடுப்பிலே ஒரு கத்தியை வைத்திருந்தார்கள்.இதற்கான காரணத்தை நபிகளார் கேட்டபோது இணைவைக்கும் எவனாவது என்னை நெருங்கினால் அவனது வயிற்றை கிழிப்பதற்காகத்தான் என்றார்கள். இவர்களின் தீரத்தை வரலாறு மறக்க முடியுமா?
கவ்லா பின்த் அல்அஸ்வர் அல்கந்தீ ரளியல்லாஹு அன்ஹா
அரேபியர்களுக்கும் ரோமர்களுக்கும் நடந்த போரில் தளபதி காலித் பின் வலீதின் தலைமையில் அவருக்கே தெரியாது கறுப்பு உடை தரித்து பச்சைத்தலைப்பாகை அணிந்து வாளும் வேலும் ஏந்திஎதிரிப்படையிலே புயலெனப் பாய்ந்து எதிரிகளை வெட்டிச் சாய்த்தவண்ணமிருந்தார். இவர் ஒரு பெண் என்பது போரின் வெற்றிக்குப்பிறகே தெரியவந்தது. இவரது அபார ஆற்றலை வரலாறு மறக்க முடியுமா?
பெண் கவிஞர் கன்ஸா பின்த் அம்ர் ரளியல்லாஹு அன்ஹா: இவர் தமது நான்கு ஆண் மக்களுடன் காதிஸிய்யா போரிலே கலந்து கொண்டார்கள். இவரது பொறி பறக்கும் வீர உரைகளைக் கேட்ட இவரின் நான்கு ஆண் மக்களும் களத்திலே குதித்து வீரப்போராடி ஷஹீதுகளானார்கள் என்ற செய்தியை அறிந்ததும், அல்ஹம்துலில்லாஹ்! என் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது. ”யாஅல்லாஹ! உனது வீர சுவர்க்கத்திலே எங்களை ஒன்று சேர்ப்பாயாக” என்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்து துஆ செய்தது நமது இதயங்களையெல்லாம் உருகச் செய்கிறது.
அஃப்ரா பின்த் உபைத் அந்நஜ்ஜாரிய்யா ரளியல்லாஹு அன்ஹா
தமது ஏழு மக்களுடன் பத்ருக்களத்திலே குதித்து மாபெரும் வரலாற்றுச்சிறப்பு மிக்க பத்ரு வெற்றிக்கு உறுதுணையாக நின்றது வரலாற்றிலே அழியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இவர்களின் பங்களிப்புகளை நாம் மறக்க முடியுமா? போராட இயலாதவர்கள், போர் வீரரகளுக்கு உணவு தயாரித்தல்,தண்ணீர் வினியோகித்தல்,காயங்களுக்கு கட்டுப்போட்டு மருத்துவ உதவி செய்தல்,போர் வீரரர்களை வீரப்பாடல்கள் பாடி உற்சாகப்படுத்துதல் போன்ற அரும் பணிகளையும் செய்து வந்தார்கள்.
தீரம் தியாகமும்
அன்னை உம்மு ஸலாமாவின் தியாகத் துடிப்பைப் பாருங்கள்! தம் கணவருடன் ஹிஜ்ரத் புறப்பட்டுச் சென்ற வேளை, தம்மைத்தடுத்து தமது பிஞ்சுக் குழந்தையையும் குரைஷpகளும்,உறவினர்களும் பறித்து வைத்துக்கொண்ட நிகழ்ச்சி உள்ளத்தை உருகச்செய்கிறது.தமது கணவருடன் பெருமானாரின் பாசறைக்குப் போக முடியவில்லையே! தம்மை அழைத்துச் செல்ல யாரேனும் முன் வரமாட்டார்களா? என ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து வந்து ”தன்யீம்” என்ற இடத்iதிலே காலை முதல் மாலை வரை காத்துக் காத்துக் கிடப்பார்கள் அன்னையவர்கள்.
எத்தனை நாட்கள் தெரியுமா? ஒரு நாளல்ல! ஒரு வாரமல்ல! ஒருமாதமல்ல! ஒரு ஆண்டு முழுவதும் இப்படியே வந்து போவார்கள். இறுதியாக அவர்மீது இரக்கப்பட்ட சில உறவினர்கள் பரிதாபப்பட்டு அவர்களின் பிஞ்சுக் குழந்தையையும் வாங்கிக் கொடுத்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இது போன்ற வரலாறைக் கண்டிருக்கிறோமா?
உத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி உம்மு குல்தூம் பின்த் உக்பா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், தனித்தனியாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு கால் நடையாக ஹிஜ்ரத் சென்றார்கள். அதைப்போல் உம்மு ஹக்கீம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் தன்னந்தனியாக மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற தீரமிக்க வீர வரலாற்றுகளை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இது மட்டுமா?
அன்னை அஸ்மா பின்த் அபீ பக்ர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நிறை மாதக் கர்ப்பிணியாக இருக்கும் போது 400 கிலோ மீட்டர் தொலை தூரமுள்ள மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது நம்மையெல்லாம் மயிர்கூச்செரியச் செய்யவில்லையா?அதைவிடவும் ஒரு படி மேலே சென்றவர் அன்னை அஸ்மா பின்த் உமைஸ்
ரளியல்லாஹு அன்ஹா! பிரசவம் ஒருபெண்ணுக்கு மறு பிறவி என்பார்கள். தமக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பிரசவம் நடக்கும் என்பதைத் தெரிந்தே உயிரினுமினிய நபி பெருமானாருடனும் தமது அன்புக்கணவருடனும் 400 கி.மீட்டர் தொலைவுள்ள மக்காவுக்கு புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதும் சில நாட்களில் துல்ஹுலைபாவில் பிரசவம் நடந்ததும், அடுத்த சில நாட்களில் பிள்ளை பெற்ற உடம்புடன் புனித ஹஜ்ஜுக்குப் புறப் பட்டுச் சென்றதும் வரலாற்றிலே காணமுடியாத அதிசய நிகழ்ச்சியாகும். இது போன்றதோர் நிகழ்ச்சியை வரலாற்றிலே நாம் கேள்விப்பட்டிருப்போமா? இது மட்டுமா?
இதைப் போன்ற வீர தீர வரலாறுகளை உலகம் வேறு எங்காவது கண்டிருக்குமா? கேட்டிருக்குமா?இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான உத்தமிகள் இஸ்லாத்திற்காக தங்களின் பங்களிப்புகளை வழங்கிய வரலாறுகள் வரலாறு நெடுகிலும் மின்னி மிளிர்வதைப் பார்க்கலாம்.
பெண்களிலே சொல்லாற்றல் மிக்க நாவலர்
அஸ்மா பின்த் யஸீத் ரளியல்லாஹு அன்ஹா அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் மிக்க இவர்; ”பெண்களிலே நாவலர்” (கத்தீபத்துன்னிஸா) எனப் போற்றப்படுபவர். இவரது துணிவு மிக்க உரையைக் கேட்டு பெருமானாரே அசந்து விட்டார்கள். யர்மூக் போரிலே பங்கேற்று ஒன்பது ரோமர்களை கொன்றொழித்ததும்,மக்கா வெற்றியிலே பங்கேற்று சாதனை படைத்ததும் வரலாறு மறக்க முடியுமா?
இலக்கியம் :
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருஉருவத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டுவது போல் இலக்கிய நயத்தோடு பெருமானாரின் வர்ணனையைக் கூறும் உம்மு மஃபத் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இலக்கியச் சேவையை மறக்க முடியுமா?
கல்வி
கல்விக்கு அரும் பணியாற்றிய அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை,
சீரிய ஆலோசனைகள் வழங்கிய அன்னை உம்மு ஸலமாவின் அறிவுக்கூர்மையை,
குர்ஆனை போதனைசெய்து இமாமத்தும் நடத்தி வந்த உம்மு வரகாவின் ஆர்வத்தை,
ஹதீஸ் கலையில் சிறந்த ஸைனப் பின்த் அபீ ஸலமாமாவின் ஹதீஸ் புலமையை,
மதப்பிரச்சாரமும் போதனையும் செய்த ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா
ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹா,
உம்மு ஷரீக் அல் குரஷிய்யா ரளியல்லாஹு அன்ஹா
ஆகியோரின் அறிவுப்பணி களையும் இஸ்லாத்திற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்புகளையும் நாம் மறக்க முடியுமா?
அடுத்து பாத்திமா பின்த் அஸத், உம்மு ஃபள்லு,உம்மு ரூமான்,உம்மு ஐமன்,போன்ற தன்னலமற்றவர்களின் சமுதாயச் சேவைகளை நாம் மறக்க முடியமா?
லைலா பின்த் அஸத்,பாத்திமா பின்த் கைஸ் போன்ற பெண் மேதைகள் அரசியலுக்கும், ஆட்சி அதிகாரங்களுக்கும் வழங்கி வந்த அரிய ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் நாம் மறந்து விடமுடியுமா?
எளிதில் சுவர்க்கம் சென்று விட முடியுமா?
இது போன்ற எந்த ஒரு தியாகமும், சேவையும்,பங்களிப்பும் இஸ்லாத்திற்குச் செய்யாது வெறுமனே சுவர்க்கம் சென்று விட முடியுமா? அதை நினைத்துக்கூட பார்க்க முடியுமா?
அதனால் தான் இறைவன் நம்மை நோக்கிக் கேட்கிறான்:
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّهُ الَّذِينَ جَاهَدُواْ مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ
(இறை நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் உங்களில் அறப் போர் செய்தவர்கள் யார்? (தியாகம் செய்தவர்கள் யார்?) உங்களில் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு, சோதனைகளை வென்றவர்கள் யார்? என்பவற்றை அல்லாஹ் சோதித்துப் பார்க்காமலே நீங்களெல்லாம் (எளிதில்) சுவர்க்கம் சென்று விடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? (3:142)
أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
மேலும், நாங்கள்; ஈமான் கொண்டு விட்டோம் என்று (பெயரளவில்) கூறுவதால் (மட்டும்)அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? (29:2) என்றும் கேட்கிறான இறைவன்;.
நாங்கள்; ஈமான் கொண்டு விட்டோம் என்று (பெயரளவில்) கூறுவதால் (மட்டும்)அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? (29:2) என்றும் கேட்கிறான இறைவன்;.
இவர்கள் சேதிக்கப்படாமல் மட்டுமல்ல, சும்மாவும்; விட்டு விடப்படமாட்டார்கள். அல்லாஹ் மேலும் கூறுகிறான்:
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
மனிதன் வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக் கொள்கின்றானா? (75:36) என்று இறைவன் நம்மைப் பார்த்துக் கேட்பது நமது காதுகளில் விழவில்லையா ?
நாம் உண்டு சுகித்து இஸ்லாத்திற்காக எந்த தியாகமும் பங்களிப்பும் செய்யாது உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே!நாம் இறைவனிடம் என்ன பதில் சொல்வது? அப்படியானால் நாம் போலியான நரகத்திற்குரிய ஒரு வாழ்க்கையை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?
இரத்தம் சிந்த வேண்டியதில்லை!போர்க்களம் சென்று போராட வேண்டியதில்லை.உடலை அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை. நம்மால் இயன்றவரை சிறுசிறு பங்குகள்,சேவைகள், தொண்டுகள் செய்யலாமல்லவா?
சிறு சிறு தியாகங்கள்
சிறு சிறு தியாகங்கள் செய்து மார்க்கத்தைப் படிப்பது, பிறருக்குச் சத்தியத்தைப் போதிப்பது, அதற்காக உழைப்பது, நாயகத் தோழியர் தியாகம் செய்து இரத்தம் சிந்திய இடங்களைப் போய் பார்ப்பது, அதற்காக சிறிது நேரம் செலவு செய்வது, வீண்கேளிக் கைகளை விடுவது, நேரங்களை பயனுள்ளதாகக் கழிப்பது, குர்ஆன் ஓதுவது, நேரம் தவறாது தொழுவது, குழந்தைகளுக்கு இஸ்லாமிய ஒழுக்களைப் போதிப்பது, நமது தோழியர்,உறவினர்களை மார்க்கம் பயில அழைத்து வருவது, தேவையுடையோருக்கும், ஆதரவற்றோருக்கும் உதவுவது, நன்மையை ஏவித் தீமையை தடுப்பது, இஸ்லாமிய ஒழுக்கங்கள், மாண்புகளைப் பேணுவது,குர்ஆன் சுன்னா வழியில் தவறாது வாழ்வது இவற்றைத்தான் அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.
நாம் இஸ்லாத்திற்காக இது கூட செய்யவேண்டாமா? யோசித்துப்பாருங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் இது போன்ற சிறு சிறு பணிகளையாவது செய்ய நமக்கு அருள் புரிவானாக.ஆமீன்.
‘‘Jazaakallaahu khairan” source: http://albaqavi.com/home/?p=247