அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும் (1)
மௌலவி M.J.M.ரிஸ்வான் மதனி
அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள்,
சத்தியத்தை அசத்தியமாக்கி,
பித்அத் (மார்க்கத்தில் புதியவை) களை நபிவழியாக்கி,
உண்மையை மறைத்து,
அபூலஹப் கொள்கையை அஹ்லுஸ்ஸுன்னாவினறது கொள்கை எனப்பிரகடணப்படுத்தி, மண்ணறைகளில் மண்டியிட்டுப் பிரார்த்தித்து, வயிறு வளர்த்தவர்கள் அல்லர் அந்த உத்தமர்கள். இதற்கு அவர்கள் எழுதிய நூல்களும், போதித்த போதனைகளும் காலத்தால் அழியாச் சான்றுகளாகும்.
கந்தூரி என்பது என்ன? மரணித்தவர்களை கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று, பள்ளிவாயில்களை உட்சவம், திருவிழாக்கள் கொண்டாடி, பொதுமக்களை வருடத்தில் ஒரு முறை இஸ்லாத்தின் பெயரால் இவைக்கத் தூண்டும் செயலே கந்தூரி.
இதனை இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் என்றும் ஆதரிக்கவில்லை. ஷீஆக்களில் வழித்தோன்றல்களே செத்துப்போகும் இந்த மூடப்பழக்கத்தை உயிர்ப்பிக்க களம் இறங்கி காப்பாற்றத் துடிக்கின்றனர்.
கந்தூரி பலவிதம்
இந்தக் கந்தூரி பலவிதம். புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை அரபியில் குறிப்பிட்ட மாதங்கள் வாசித்து அதை விளங்காது, மக்களுக்கு விளக்காது தமாம் செய்து ஆடு, மாடுகளை அறுத்து மக்களை அழைத்து கந்தூரி கொடுத்தல், புர்தா, மௌலிது, ராதிபுகள் போன்ற அரபுப் பாடல்கள்பாடி, அதை தமாம் செய்து, அதற்காக கந்தூரி நடத்துதல், அல்லது குறிப்பிட்ட சில மகான்களின் புகழ் மலையைப்பாடி கொடிகள் ஏற்றி, அவர்கள் பேரில் கால்நடைகளை அறுத்துப்பலியிட்டு நார்ஸா விநியோகித்தல்,
இப்படி பல வடிவங்களில் அரங்கேற்றப்படும் இந்தக்கந்தூரிகள் மொத்தத்தில் அவை அனைத்தும் அல்லாஹ் அல்லாதவர்களைப் புகழ்ந்தும், பாடியும், அவனது தன்மைகைளை மரணித்து மண்ணோடு மண்ணாவிட்ட மகான்களுக்கு வழங்கியும்தான் அவை நடத்தேறுகின்றன.
சில வேளை கந்தூரி கொடுப்பவர் யார் பேரில், எதன் பேரில் கொடுக்கின்றாரோ அந்தக் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழிகள் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்காது என்பதை இவர்கள் அறியாதவர்களாக இருப்பதுதான் இவர்களின் அறிவின் உச்ச நிலை!
புகாரியையும், முஸ்லிமையும் அரபியில் வாசித்து தமாம் செய்வார்கள், அவற்றை ஓதிமுடித்து, கந்தூரி கொடுப்பவர்களிடம் மரணித்தவர் பெயரில் மண்ணறைகள் கட்டுவதையும், அவற்றில் விழாக்கல் நடாத்துவதையும் எச்சரிக்கின்ற, தடை செய்கின்ற பல நபிமொழிகள் வந்துள்ளனவே என்றால் மேலும், கீழுமாக விழிப்பார்கள்,
இது நமது பரம்பரையான பழக்கம், வழக்கம், இதை நாம் தொன்று தொட்டு செய்து வருகின்றோம், புதிதாக நீங்கள்தான் சொல்கின்றீர்கள் என்று மக்கா காபிர்களின் வழிநின்று உளரும் இந்தக் கூட்டம் 1400 வருடங்களுக்கு முன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தடை செய்யப்பட்ட இது போன்ற ஷிர்க்கான காரியங்கைள தவ்ஹீத்வாதிகள்தான் உலகில் முதலாவது தடை செய்வது போல போர்கொடி தொடுப்பார்கள்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் மகான்கள் என்று இவர்களாக எண்ணிக் கொண்டிருக்கும் சில மனிதர்களை அரபியில் புகழ்வதால் மழை வருமாம்! பலாய், முஸீபத்துக்கள்தான் நீங்குமாம் என்றெல்லாம் கதை அளக்கும் இந்தக் கும்பலுக்கும் அறியாமையால் தலதாவில் புத்தரின் பல்லை காட்சிப்படுத்துவதால் மழை பெய்யும், சுபீட்சம் பெறும் என்று நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கும், இடையில் என்ன வித்தியாசம் என்று யோசித்துப் பாருங்கள்.
ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் புத்த பெருமானின் பேரில் நேர்ச்சையை அனுமதிக்காத இந்த புத்தி ஜீவிகள்(?) மரணித்த மகான்கள் பெயரில் இந்த அனாச்சாரங்களை அரங்கேற்றி அதனால் பலாய், முஸீபத்துக்களும் நீங்கும் என மக்களுக்கு தத்துவமும் போதிக்கின்றனர்.
மதகுருமார்களா ? அல்லது கூலிப்படைகளா?
இந்த அனாச்சாரங்களை அல்லாஹ்வின் மாளிகைகளில் அரங்கேற்றும் இவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்ற அமைப்பின் அடையாள அட்டைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!!!
ஏழு ஆண்டுகள் கம்யூனிஸத்தை அரபி மத்ரஸாவில் படிப்பவனுக்கும் உலமா சபை இனிவரும் காலங்களில் ஆள் அடையாள அட்டை வழங்கும் சிந்தனையை விஸ்தரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனக் கூறும் அளவு அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் நமக்கு கட்டியம் கூறுகின்றன.
அவ்வாறான ஒரு நிலையை அ.இ.ஜ.உ. சபை அண்மைக்காலமாக எட்டி விட்டதாகவே அதன் ”பகிரங்க அறிவித்தல்” என்ற பழைய தமிழில் எழுதப்பட்டுள்ள அந்த அறிவித்தல் இதற்கு ஒரு சான்றாகும்.
அதில், யாமுஹ்யுத்தீன் எனக் கூறி அழைப்பவனுக்கும், யாஅல்லாஹ் என்று கூறி அழைப்பபவனுக்கும் சமத்துவமான அந்தஸ்தை வழங்கி கௌரவித்திருக்கின்றது. சபாஷ் பாரட்டப்பட வேண்டிய பரஸ்பரமான அணுகுமுறை, நம்மைப் பொறுத்தவரை அவ்வறிவித்தல் ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் பல்லின மக்களின் உரிமைகள் பற்றி விபரிக்கும் உறுப்புரிமை போன்றே தெரிகின்றது.
அல்குர்ஆனில் அல்லாஹ் கல்விமான்கள் பற்றி புகழ்ந்து கூறுகின்றான்.
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
”அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுபவர்கள் ஆலிம்கள்தாம்.” (பாதிர்: வச: 28),
கற்றவர்களும், கல்லாதவர்களும் சமமாகுவார்களா ? (ஸுமர்: 09), என மற்றுமோர் இடத்தில் கேள்வி எழுப்புகின்றான். இது வெல்லாம் கற்றவர்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்களாக இருப்பார்கள் என்பதற்காகே இவ்வாறு கூறியுள்ளான்.
உண்மையான அறிஞர்களின் தகைமை பற்றிக் குறிப்பிடுகின்ற போது ஒரு சட்டத்தை அகழ்ந்தெடுக்கும் திறைமை உடையவர்கள் என்று (பார்க்க: அந்நிஸா. வச: 82 ல் ) பிரஸ்தாபித்துள்ளான்.
உங்களுக்கு முன்சென்ற சமூகத்தவரில் அறிஞர்கள் இருந்து அவர்கள் (மக்களை) தீமையில் இருந்தும் தடுத்திருக்க வேண்டாமா? அவர்களில் நாம் காப்பாற்றிய ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் (அவ்வாறு செய்யவில்லை). (ஹுத்:116) என்று குறப்பிட்டு தீமைகளைத் தடுக்கின்றவர்களாக அறிஞர்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றான்.
இது போன்ற இன்னும் பல வசனங்கள் உண்மையான அறிஞர்களின் பண்புகள் பற்றிக் குறிப்பிடும் எதனையும் நமது நாட்டில் வாழும் மௌலவிகளில் (விதிவிலக்காக உள்ளவர்களைத் தவிர) ஏனெய ஒருவருக்குக் கூட எந்தக் காலத்திலும் பொருந்தும் எனக் கூற முடியாத அளவு இவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
இதனால் ஆலிம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை விட இவர்களுக்கு மௌலவி என்ற சொற்பிரயோகம் பொருத்தமின்றிப் பொருத்தமாகத் தெரிகின்றது.
இவர்கள் பலரின் நிலை யூத, கிரிஸ்தவ மதத்தில் உள்ள பாதிரிகளின் நிலையை ஒத்தே இருக்கின்றது. அவர்கள் என்ன அடிப்படையைக் கொண்டு மக்களை வழி கெடுத்தார்களோ அதே நிலைதான் நம்மைப் பொறுத்தவரை இவர்களிடமும் தெரிகின்றது.
சத்தியத்தைச் சொல்லாது மறைப்பது, மக்களின் சொத்துக்களை தவறான வழியில் உண்பது, மார்க்கத்தைத் திரித்துக் கூறுவது, பெரியார்கள் பெயரில் அளவு கடந்த பாசம் போன்ற இன்னோரென் பண்புகள்தான் யூத, கிரிஸ்தவர்களை வழி புரளச் செய்தது. அந்தக்காரணிகள் அனைத்தும் இவர்களிடமும் காணப்படுகின்றது.
சுருக்கமாகச் சொன்னால் மார்க்கம் பற்றி சாதாரண பொது மக்களிடம் காணப்படும் அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த மௌலவிகள் சில வேளை கியாமத் நாளின் அடையாளங்களாக கூட இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது.
ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மறுமைக்கு முன்னர் நிகழவிருக்கும் பல நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். ஒரு சந்தர்ப்பத்தில்,
…. وينطق فِيهَا ஃ الرويبضة . قيل : وَمَا الرويبضة ؟ قَالَ : الْمَرْء التافه يتَكَلَّم فِي أَمر الْعَامَّة
ابن ماجه، المعجم الطبراني، مسند أحمد
”ருவைபிழா பேசும்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் ருவைபிழா என்றால் என்ன என்று கேட்டார்கள். ”மார்க்க விபரம் பற்றி தெளிவான அறிவில்லாத ஒருவன் பாரிய விடயங்கள் பற்றிப் பேசுவது” என விளக்கினார்கள். (நூல்: இப்னுமாஜா, முஃஜம் தபரானி, முஸ்னத் அஹ்மத்).
இது எவ்வளவு உண்மை என்று பாருங்கள். இமாம்களின் நூற்களைச் சரியாகப்படிக்காத, மார்க்கத்தில் ஆளமான அறிவில்லாத உலமா சபையின் அடையாள அட்டை மௌலவிகளால் சமூகம் எவ்வளவு பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றது என்பதை சிந்தியுங்கள்.
இவர்கள் நல்லடியார்கள் பெயரில் அரங்கேற்றும் அநாச்சாரங்களுக்கு அளவுதான் உண்டுமா? இவர்கள் வார்த்தையில் சுன்னிக்களாக நம்பிக்கையிலும், நடத்தையிலும் ஷீஆக்களாகவும், அபூஜஹ்ல், உத்பாக்களாகவும் இருக்கின்றனர்.
மத்ஹபு, மத்ஹபு என்று சொல்லக்கூடியவர்கள் ஷாஃபி மத்ஹபையாவது கொஞ்சம் அணுகி ஃபத்வாக்களைப் படிக்கலாம் அல்லவா?
அதனையாவது ஒரு முன்னுதாரணமாக இவர்கள் எடுத்திருந்தால் நிச்சயம் விமோசனம் பெற்றிருப்பர், அதுதான் இல்லையே! அதில் கூறப்பட்டுள்ள ஃபத்வாவைப் பாருங்கள்.
( தொடரும்…)