அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும் (2)
மௌலவி M.J.M.ரிஸ்வான் மதனி
”அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தி முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விளக்கமளிக்கும் இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
وَأَمَّا الذَّبْح لِغَيْرِ اللَّه فَالْمُرَاد بِهِ أَنْ يَذْبَح بِاسْمِ غَيْر اللَّه تَعَالَى كَمَنْ ذَبَحَ لِلصَّنَمِ أَوْ الصَّلِيب أَوْ لِمُوسَى أَوْ لِعِيسَى صَلَّى اللَّه عَلَيْهِمَا أَوْ لِلْكَعْبَةِ وَنَحْو ذَلِكَ ، فَكُلّ هَذَا حَرَام ، وَلَا تَحِلّ هَذِهِ الذَّبِيحَة ، سَوَاء كَانَ الذَّابِح مُسْلِمًا أَوْ نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا ، نَصَّ عَلَيْهِ الشَّافِعِيّ ، وَاتَّفَقَ عَلَيْهِ أَصْحَابنَا ، فَإِنْ قَصَدَ مَعَ ذَلِكَ تَعْظِيم الْمَذْبُوح لَهُ غَيْر اللَّه تَعَالَى وَالْعِبَادَة لَهُ كَانَ ذَلِكَ كُفْرًا ، فَإِنْ كَانَ الذَّابِح مُسْلِمًا قَبْل ذَلِكَ صَارَ بِالذَّبْحِ مُرْتَدًّا
شرح النووي على مسلم
”அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்தல் என்பதன் நோக்கம் என்னவெனில் சிலைக்காக, அல்லது சிலுவைக்காக, அல்லது மூஸா அலைஹிஸ்ஸலாம், அல்லது ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்காக, அல்லது கஃபாவிற்காக, அல்லது அதல்லாதவற்றிற்காக அறுத்துப்பலியிடுபவன் (செயல்) போன்றதாகும்.
இவை அனைத்தும் ஹராமாகும். அறுப்பவன் முஸ்லிமாகவோ, அல்லது கிறிஸ்தவனாகவோ, அல்லது யூதனாகவோ இருந்தாலும் அந்தப்பலிப்பிராணி ஹலாலாகாது.
இதையே ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்கள், இக்கருத்திலேயே நமது தோழர்களும் ஏகமனதாக இருக்கின்றனர்.
அத்துடன் அல்லாஹ் அல்லாது யாருக்காக அறுக்கப்படுப்படுகின்றதோ அவரை கண்ணியப்படுத்துவதையும், அவருக்கு வழிப்படுவதையும் அவர் நோக்கமாகக் கொள்வாரானால் அது ”குஃப்ர்” எனும் நிராகரிப்பாகிவிடும், அறுப்பவன் முஸ்லிமாக இருப்பின் அறுத்த காரணத்தால் அவன் ”முர்தத்” எனும் மதம் மாறியவனாக மாறிவிடுகின்றான். (பார்க்க: ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்: பாகம் -6 பக்கம்: 475)
இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தமது மத்ஹபின் தீர்ப்பை முதுகுக்குப்பின் தூக்கி எறிந்த ஷாஃபி மத்ஹப் ஆலிம்கள் என்ன நினைப்பில் பெரியார்கள்,மற்றும் அவ்லியாக்கள் பேரில் இவ்வாறான அனாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனரோ தெரியவில்லை.
கனவின் வெளிப்பாடு மார்க்கமாகுமா?
பெரியார்கள், மகான்கள் என்போர் பேரில் கோவில்களில் நடை பெறும் எட்சவமும் தோற்றுவிடும் அளவு மங்களகரமான முறையில் கந்தூரி நடத்தும் இவர்கள் எல்லா கந்தூரிக்கும் கனவை ஒரு துரும்பாக வைக்கின்றார்கள். புர்தாக் கந்தூரியாகட்டும், மற்ற நிகழ்வுகளாகட்டும் கனவே முதலிடம் வகிக்கும் கனவைப் பிரதானப் படுத்தி மார்க்க சட்டம் பெறலாமா என்றால் முடியாது என்பதே மார்க்கத்தின் தீர்ப்பும், அவர்கள் சார்ந்து நிற்கின்ற மத்ஹபின் தீர்ப்பும்
பெரியார்கள் பேரில் கட்டப்பட்டுள்ள தர்ஹாக்கள் தீய கனவின் வெளிப்பாடாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்த இது ஒரு சாத்வீக வழியிலான அணுமுறை என்றே கூற வேண்டும். இது திவாலாகிப் போன பணவைப்பு முறை போன்றதாகும். இதில் இடப்படும் பணத்திற்கு தர்ஹாக் காவலர்களே நிர்வாகிகளாகும்.
மரணித்த எங்கள் தந்தை கப்று, தர்ஹாக் கட்டச் சொன்னார், சந்தனக் கூடு எடுக்கச் சொன்னார், விழா கொண்டாடச் சொன்னார் என்றால் உடனே அதை நிறைவேற்றி தயாராகிவிடும் இவர்கள் இது தீய கனவு என முடிவு செய்வதில்லை.
எனது அத்தா அல்லது தந்தை என்னைக் கிணற்றில் விழச் சொன்னார் என்றால் அவர்கள் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை. ஏன் இது கெட்ட கனவு என்று முடிவு செய்யும் திறன் இருக்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தின் பின்னால் கனவில் கண்டோம் என்பதற்காக அதன் மூலம் மார்க்கத்தை உறுதி செய்ய முடியுமா என்றால் முடியாது என ஷாபி மத்ஹபின் அறிஞரான இமாம் நவவி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளார்கள்.
قال النووي رحمه الله: … لَا يَجُوز إِثْبَات حُكْم شَرْعِيّ بِهِ لِأَنَّ حَالَة النَّوْم لَيْسَتْ حَالَةَ ضَبْطٍ وَتَحْقِيقٍ لِمَا يَسْمَعُهُ الرَّائِي ، وَقَدْ اِتَّفَقُوا عَلَى أَنَّ مِنْ شَرْطِ مَنْ تُقْبَلُ رِوَايَتُهُ وَشَهَادَتُهُ أَنْ يَكُون مُتَيَقِّظًا لَا مُغَفَّلًا وَلَا سَيِّئَ الْحِفْظِ وَلَا كَثِيرَ الْخَطَأِ وَلَا مُخْتَلَّ الضَّبْطِ ، وَالنَّائِم لَيْسَ بِهَذِهِ الصِّفَة فَلَمْ تُقْبَلْ رِوَايَتُهُ لِاخْتِلَالِ ضَبْطِهِ
مقدمة شرح النووي على مسلم
உறக்கத்தின் நிலையில் கனவு காண்பவர் அதனை உறுதி செய்து, சரியான முறைப்படி கூறமுடியாததால் கனவால் மார்க்க சட்டத்தை நிலைப்படுத்த முடியாது. ஒருவரின் சாட்சியம் ஏற்கப்பட அவர், விழிப்புணர்வுள்ளவராகவும், அபார மறதிக்கு உட்படாதவராகவும், மனனத்தில் குறைவில்லாதவராகவும், அதிமதிகம் தவறிழைக்காதவராகவும், ஞாபகம் குன்றிடாதவராகவும் இருத்தல் வேண்டும். (அப்போதுதான் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்) இதில் அறிஞர்கள் ஒருதித்தி கருத்தில் உள்ளனர். உறக்கத்தில் இருப்பவன் இந்த நிலையில் கிடையாது. அவனது ஞாகபத்தன்மையில் குறைவு இருக்கும். ஆகவே அவனது அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஷரஹ் முஸ்லிம்).
அப்படியானால் உத்பி என்ற விலாசமற்ற கிராமவாசி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையில் மன்றாடியதற்காக தனது பாவம் மன்னிக்கப்பட்டதாகக் குறிப்பிடும் கனவை இந்த அடிப்படையிலாவது ஏற்றுக் கொள்ள முடியுமா என நீங்களே சிந்தியுங்கள். இந்த அடிப்படையை புர்தாவிற்கும் பொருந்தும் அது பற்றியும் கவனியுங்கள்.
புர்தா என்றால் என்ன?
”புர்தா” என்றால் மேல்போர்வை என்று பொருள்படும். பூஸரி என்ற எகிப்து நாட்டுக் கவிஞர் நோய்ப்பட்டிருந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து பாடிய கவிதைகளைச் செவிமடுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதனை சரிகண்டதால் அவர்களின் மேனியில் இருந்து அவர்களது போர்வையை இவர்மீது போர்த்திவிட்டதாகவும், அதனால் அவரது தீராத பிணி நீங்கியதாகவும் பொய்யான சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டதே இந்த புர்தா.
அரபுப் பாடல்கள் குர்ஆனைப் போன்றதா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் ஒட்டகத்தை விரைந்தோடச் செய்ய, காஃபிர்களுக்கு மறுக்கூற, போர்களத்தில் உட்சாகத்துடன் செயல்பட திருமண நிகழ்வுகள் எனப் பல சந்தர்ப்பங்களில் பாடல்கள் பாடி மகிழந்திருக்கின்றார்கள். அதை பள்ளியில் அமர்ந்து, குறித்த நாளொன்றை ஏற்படுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தி பின் ஓதி பரகத் வேண்டியதில்லை.
மட்டுமின்றி, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகில் இருபத்திமூன்று வருடங்கள் நபியாக இருந்து, தனது பணியில் எவ்வித குறைவும் செய்யாது மரணித்தார்கள், அவர்கள் கனவில் தோன்றி மார்க்கத்தைச் சொல்லிக்கொடுத்தார் என்றோ, அல்லது அவர்களின் போதiயில் இன்னும் மீதி இருக்கிறதோ நம்புபவன் முஸ்லிமாக இருக்கவே முடியாது.
தனது தோழர்களை அரபா வெளியில் ஒன்று சேர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”மறுமையில் என்னைப் பற்றி அல்லாஹ்வினால் வினப்படுவீர்கள். அதற்கு என்ன பதில் அளிப்பீர்கள் எனக்கேட்டார்கள். அங்கு சமூகம்தந்த அனைத்து மக்களும் நீங்கள் தூதுத்துவத்தை சரியாக எடுத்துவைத்தீர்கள் எனக் கூறுவோம் எனக் கூறினர்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை சாட்சியாக்கும் முகமாக தனது ஆட்காட்டி விரலை நீட்டி, பின்னர் அதை மக்கள் பக்கமாகக்காட்டி ”அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! ”அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! ”அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
புர்தாவில் காணப்படுபவை என்ன?
நாகூர் ஹனீஃபா என்பவர் பாடி உள்ள தமிழில் பாடிய இஸ்லாமிய கீதங்களில் மார்க்கத்தில் ஹரமாக்கப்பட்ட இசையும், ஷிர்க்கும் இணைந்துள்ளது போன்று இதில் இணைவைப்பும், பொய்யும் கலந்திருக்கின்றது. மக்கள் இவற்றை பரகத் வேண்டி ஓதித் தமாம் செய்யும் வழக்கம் சவக்குழிக்குச் செல்லும் நிலையை எட்டியுள்ள நிலையில், அதை வலிந்து உயிர்ப்பிக்கும் ஊர்களும், வெட்கம் கெட்ட மௌலவிகளும், மக்களும் இல்லாமல் இல்லை.
ஷிர்க்குடன் தொடர்புடைய ஓரிரு வரிகளை அதிலிருந்து இங்கு மாதிரிக்காக எடுத்தெழுகின்றோம். எனவே பரவசம் கொள்ளாது படியுங்கள். சிந்தியுங்கள், திருந்துங்கள். சீர்பெறுங்கள். அதை ஓதுவதால் பரகத் அதிகரிக்கும் என குருட்டுத்தத்துவம் பேசி மக்களை வழிகெடுக்காதீர்கள்.
1- يا أكرم الخلق ما لي من ألوذ به
سواك عند حلول الحادث العَمِمِ
பொருள்: படைப்புக்களில் சங்கையானவரே! பெரும் துன்பமான நிகழ்வுகள் ஏற்படும் போது, பாதுகாப்புத் தேட உங்களைத் தவிர வேறு யாரிடமும் செல்ல எனக்கென்ன நேர்ந்ததது!
மறுப்பு: இருபத்தி மூன்று ஆண்டுகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த போதனையை அப்படியே தகர்த்தெறியும் வரிகளா இல்லையா என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.
நிர்க்கதியான நிலையில் இருப்பவன் தன்னை அழைக்கின்ற போது அவனுக்கு பதில் அளித்து, கஷ்டத்தை அகற்றி, உங்களை பூமியின் வழித்தோன்றல்களாக ஆக்குபவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளர் உண்டா? நீங்கள் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள். (அத்:அந்நம்ல். வசனம்:62) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கும், இன்னும் பல அல்குர்ஆனிய வசனங்களுக்கும் இது நேர்முரணானதாக இல்லையா?
2-فإن من جودك الدنيا وضرتها + ومن علومك علم اللوح والقلم
(நபியே!) இந்த உலகும், மறுமையும் உமது கொடையில் உள்ளதாகும். லவ்ஹுல் மஹ்பூழினதும், எழுதுகோலான போனாவினதும் அறிவு உமது ஞானங்களில் இருந்தும் உள்ளதாகும்.
மறுப்பு: ”லவ்ஹுல் மஹ்பூழ்” என்றால் பாதுகாக்கப்பட்ட பலகை என்பது பொருள். இதில் உலகில் நடக்கும் சகல நிகழ்வுகளையும் அல்லாஹ் பதிவு செய்து வைத்துள்ளான். இது அவனது அபரிமிதமான அறிவின் வெளிப்பாட்டால் அவன் ஏற்படுத்தியாகும்.
இதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவு ஞானத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதை சிறுபிள்ளைக்கும் கூட தெரியும். இந்தப் பாடல்களை ஏதோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் தோன்றி அங்கீரத்திதாக நினைத்துக் கொண்டு அவைகளைத் தமாமும் செய்து கந்தூரியும் நடத்தும் மார்க்க அறிவற்ற மௌலவிகள் இது பற்றி கொஞ்சம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
-அபூநதா