MUST READ
எரிமலை சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்….
[ தனது கணவனைத் திருப்திப்படுத்துவதற்கான பெண்களின் இயல்பான ஆர்வத்தை ஆண்கள் துஷ்பிரயோகம் செய்து மேலும் தமது திணிப்பை மேற்கொள்கின்றனர்.
தான் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத பெண். தன் இயல்பு நிலைக்கேற்ப வாழமுற்படும் இன்னொரு பெண்ணை “பொம்பிளை இப்பிடித்தான் நடக்கிறது” என விமர்சிக்க முற்படுவது அவளின் ஆதங்கத்தின் இயலாமையின், ஏக்கத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவருக்காவவே வாழ்ந்து வெளியிட முடியாப் பல ஏக்கங்களுடனேயே இறந்து போகும் பெண்கள் தங்களுக்காகவும் சிறிது வாழ முற்பட்டால் என்ன? தனக்காகவும் உண்டு, தனக்காகவும் உயிர் வாழ்ந்து, தனக்காகவும் சிந்தித்து பெண் வாழப்போவது எப்போது? ]
இரு மனங்கள் இணைந்து நடைபெறும் திருமணங்கள் மூலம் அமையப்பெறும் குடும்பங்கள் கணவன், மனைவி இருவராலுமே கொண்டு நடத்தப்பட வேண்டும். அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் புரிந்துணர்வின் அடிப்படையில் இருவராலும் மேற்கொள்ளப்படுவதாகவே அமைய வேண்டும். இருவரும் சமமே மதிக்கப்படவேண்டும்.
ஆணையே தலைவனாகக் கொண்டியங்கும் குடும்ப அமைப்பைக் கொண்டது எமது சமூகம். ஒரு வீட்டில் ஆணே சகலதையும் தீர்மானிப்பவனாகிறான். அவனே சகலதுமாகிறான். சிறு வயதிலிருந்து தனது தந்தையே உணவிலிருந்து எதையும் தீர்மானிப்பவனாக இருப்பதைப் பார்த்து வரும் ஒரு பெண், தன்னியல்பாகவே தீர்மானங்களுக்காக ஆணை எதிர்பார்க்கும் மனநிலைக்கு உள்ளாகிறாள்.
தந்தையும் பின்னர் தமையனும், பின்னர் கணவனும், பின்னர் தனயனும் கூட அவளுக்கான முடிவுகளை எடுக்க அப்பெண்ணும் அது தொடர்பான எவ்வித மறுப்புணர்வுமின்றி அவர்களின் ஆளுகைக்குள் உட்படுகின்றாள். தாமே சிந்தித்து சுயமே முடிவெடுக்கும் ஒரு சில பெண்கள் கூட ஆண் தன்மை கொண்டவர்களாகவே வர்ணிக்கப்படுகின்றனர்.
ஒரு வீட்டில் ஆணின் ஆதிக்கம் உணவு விடயத்தில் ஆரம்பமாகிறது. “என்னப்பா சமையல் செய்யிறது?” எனும் மனைவியின் அங்கீகாரத்துடன் இது ஆரம்பமாகும். ஒரு சில குடும்பங்களில் பிள்ளைகளின் விருப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் கணவனின் விருப்பு புூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அவை மேலதிகமாகவே அமையும். பிள்ளைகளில் கூட ஆண் பிள்ளைகளின் விருப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். வீட்டில் கணவனில்லாத சந்தர்ப்பங்களில் “அவரில்லைத்தானே இருக்கிறதைச் சாப்பிடுவோம்” என்ற முடிவு பெண்ணின் மனோபாவத்தைத் துல்லியமாகக் காட்டி நிற்கிறது.
மதியம் ஒரு மணிக்கு அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரிடம் “என்னன்ரி இப்ப நெல்பொறுக்கி எப்ப சமைச்சுச் சாப்பாடு கொடுக்கப் போகிறீர்கள்” என்று கேட்ட போது “தம்பி இரண்டு மணிக்கு வந்திடுவான். அதுக்கிடையிலே நான் சமைச்சிடுவேன்” என்ற பதிலில் வீட்டிலிருந்த மகள் கருத்திலெடுக்கப்படவில்லை என்பது புரிந்தது. அந்தத் தம்பி எத்தனை வயதுடையவனாக இருந்தபோதும் அவனது பசியே கருத்தில் கொள்ளப்படுவது வேதனையான உண்மை.
மாதம் மாதம் இயற்கையான குருதியிழப்பிற்குள்ளாகும் இளம் பெண் எதிர்காலத்தில் தாயாகவும் பொறுப்புக்களைச் சுமப்பதற்கும் பிள்ளைப்பேறு மூலம் ஏற்படும் குருதி இழப்பு, உடற்பல இழப்பு என்பவற்றை ஈடுசெய்யவும் அவள் சிறந்த உடல் நலம் உள்ளவளாகப் போசிக்கப்பட வேண்டும் என்பதைப் பெரும்பாலான தாய்மார் உணரத் தலைப்படவில்லை.
தனது தாய், தனது தந்தையினதும், தமையனினதும், தம்பியினதும் உணவு தொடர்பான விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் வீட்டிலுள்ள ஆண்களே முதலில் உண்ண வேண்டும் எனும் எழுதப்படாத சட்டம் ஒன்று பேணப்படுவதையும் சிறு வயதிலிருந்தே அறிந்து வரும் பெண் அவ்வழியிலேயே தானும் செயற்படுவாள்.
கணவனே முதலில் உண்ண வேண்டும். அவனுக்கே சிறந்தது அனைத்தும் படைக்க வேண்டும் எனும் பெண்ணின் மனப்போக்கும், வீட்டில் என்ன இருக்கிறது இல்லை என அறியாமலேயே தான் உணவருந்திவிட்டுச் செல்லும் கணவனின் மனப்போக்கும் மாற்றப்பட வேண்டும். சேர்ந்திருந்து இருப்பதைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் பெரும்பாலான நமது குடும்பங்களில் இல்லாதிருப்பதும் இம்மனப்போக்கிற்கு ஒரு காரணமே.
உடை என்பதும் பெரும்பாலான பெண்களின் மீது திணிக்கப்பட்ட ஆணின் தீர்மானமாகவே காணப்படுகிறது. தனது உடல்நிலை, மனநிலைக்கேற்ப தான் எவ்வாறு உடையணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு மறுக்கப்படுகிறது. பெரும்பாலும் கணவனும் சிலவேளைகளில் சகோதரர்களுமே அதைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். “அண்ணாவுக்குப் பிடிக்காது, அவருக்குப் பிடிக்காது” என்ற வாசகங்களின் பின் தமது ஆற்றாமையை மறைத்துக் கொண்டு உலாவருகிறார்கள் பல பெண்கள்.
அவ்வாற்றாமை இயலாமையாக, பொறாமையாக, ஏக்கமாகப் பல பெண்களில் உருவெடுப்பதையும் அவதானிக்கலாம். “பொம்பிளை இப்படித்தான் இருக்க வேண்டும்” எனும் பண்பாட்டுக்கோலம் ஒன்றை வரைந்து உடும்புப்பபிடியாக பற்றிக் கொண்டிருக்கும் ஆணின் விருப்பிற்கேற்ப, தனது இயல்பு நிலைக்கு மாறாக, “இவருக்கு நான் இப்பிடி உடுப்புப் போடுவதுதான் விருப்பம். இவருக்கு நான் இப்படி பொட்டு வைக்கிறதுதான் விருப்பம்” என்று பெருமையாக வெளியில் கூறிக் கொள்ளும் பெண்களின் உள்மன ஏக்கங்கள் ஆழங்காணமுடியாதவை.
தனது கணவனைத் திருப்திப்படுத்துவதற்கான இவ்வியல்பான ஆர்வத்தை ஆண்கள் மேலும் துஷ்பிரயோகம் செய்து மேலும் தமது திணிப்பை மேற்கொள்கின்றனர். தான் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத பெண். தன் இயல்பு நிலைக்கேற்ப வாழமுற்படும் இன்னொரு பெண்ணை “பொம்பிளை இப்பிடித்தான் நடக்கிறது” என விமர்சிக்க முற்படுவது அவளின் ஆதங்கத்தின் இயலாமையின், ஏக்கத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனது உடல்நலக் குறைபாடுகளுக்கான சிகிச்சைக்குக் கூட ஒரு பெண் முடிவெடுக்கத் தயங்கி கணவனது அல்லது மகனது முடிவுக்காகக் காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு.
“கர்ப்பப்பை இறக்கம்” எனும் உடல்நலக்குறைபாட்டுடன் வந்த இருபெண்கள் கூறிய வார்த்தைகள் என்னை வேதனைப்பட வைத்தன.
அப்பெண்கள் இருவருமே நடுத்தர வயதைத் தாண்டியவர்கள்.
இருவருமே இவ உடல்நலக் குறைபாட்டினால் பல உடல் உபாதைகளை அனுபவிப்பவர்கள்.
உடன் தீர்க்கப்படவேண்டிய அவ்வுபாதைகளுக்காகவே மருத்துவரை நாடிவந்திருந்தார்கள். மேற்கொள்ளப்படக்கூடிய ஒரேயொரு இலகுவான சிகிச்சை முறையை வைத்தியர் கூறியபோது இருவரது தயக்கமும் பதிலும் திகைப்பையே அளித்தது.
ஒரு பெண் “இவரைக் கேட்கவேணும். பேசுவாரா” என்றார்.
அடுத்த பெண் – “மகன் வெளியூருக்குப் போயிருக்கிறார். வந்த பிறகு கதைச்சிட்டுத்தான் சொல்லுவன்” என்றார்.
ஆணின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதில் ஏற்படும் விளைவுகள் உயர்த்தப்பட்டபோதும் கூட அவர்களின் தயக்கம் ஒன்றையே உணர்த்தியது.
இதுவரை காலமும் தங்களுக்கான எந்த முடிவையும் தீர்மானித்து அப்பெண்களுக்குப் பழக்கமில்லையென்பதே.
கணவன் மனைவி இருவராலுமே இணைந்து தீர்மானிக்கப்பட வேண்டிய குழந்தைப்பேறு கூட ஏதேச்சதிகாரமாய் ஆணாலேயே தீர்மானிக்கப்படுவதே உண்மை.
பல உடல்நலக்குறைபாடுகள் உபாதைகளும், சிரமங்களுமாய் பத்துமாதம் சுமப்பவளும், வலி, வேதனை, கருதியிழப்பு எனப் பிரசவத்தில் நொந்து போகிறவளும், இரவிரவாய் கண்விழித்து குழந்தையை வளர்ப்பவளும் பெண்ணாய் இருக்க, பிள்ளைகளைத் தீர்மானிப்பது மட்டும் ஆணின் கையில் இருக்கிறது.
இதயமும் நுரையீரலும் எப்படி அவளுக்காகச் செயற்படுகின்றனவோ, அதே போன்ற உறுப்பான கர்ப்பப்பைக்கு மட்டும் அவளுக்காகச் செயற்படும் உரிமையில்லை.
அவளது கருவறையின் பொறுப்பாளனாகக் கணவனே உள்ளான்.
பல பிள்ளைகளைப் பெற்றுக் களைத்து, நிரந்தரமாக கருத்தடை செய்ய ஆர்வத்துடன் விபரம் கேட்கும் பெண், “அவருக்கு விருப்பமில்லை” என முகத்தை தொங்கப்போட்டவாறே கூறும் சம்பவங்கள் பல.
அவருக்காவவே வாழ்ந்து வெளியிட முடியாப் பல ஏக்கங்களுடனேயே இறந்து போகும் பெண்கள் தங்களுக்காகவும் சிறிது வாழ முற்பட்டால் என்ன? தனக்காகவும் உண்டு, தனக்காகவும் உயிர் வாழ்ந்து, தனக்காகவும் சிந்தித்து பெண் வாழப்போவது எப்போது?
தந்தையும் கணவனும் தமையனும் தனையனும் தனக்காகச் சிந்திப்பதும் தன்னை கீழானவளாக மதிப்பதுமே இயல்பு என்ற நிலையில் வாழும் பெண்ணைத் தட்டியெழுப்பி “விழி! எழு! இதோ பார்! ஒரு ஆணைப்போன்றே நீயும் ஆறறிவு படைத்தவள், சிந்திக்கும் திறன்மிக்கவள், ஆணைவிடவும் பெண்ணே சிந்திக்கும், முடிவெடுக்கும் ஆற்றல்மிக்கவள்” என்று கூறி அவளை அவள் கூட்டிலிருந்து வெளிக்கொணர்தல் ஒரு தலையாய பணியே!
நன்றி: யாழ்.காம்