அபூமுஹம்மத்
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ஒட்டகம் சண்டித்தனம் செய்து (மற்றவர்களை விட) என்னைப் பின் தள்ளியது.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்து ‘ஜாபிரா’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘(பின் தங்கி வருவதற்கு) என்ன காரணம்?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர்.
என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின் தள்ளி விட்டது. அதனால் பின் தங்கி விட்டேன் என்று நான் கூறினேன். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள்.
தமது வளைந்த குச்சியால் என் ஒட்டகத்தைக் குத்தி விட்டு ‘ஏறுவீராக’ என்றனர். நான் ஏறிக் கொண்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட முந்தி விடாதவாறு அதை இழுத்துப் பிடிக்க ஆரம்பித்தேன்.
“மணமுடித்து விட்டீரா?” என்று கேட்டனர். நான் ‘ஆம்’ என்றேன். ‘கன்னியா? விதவையா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர். விதவையைத்தான் என்று நான் கூறினேன். ‘கன்னியை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடனும் அவள் உம்முடனும் இன்பமாக இருக்கலாமே’ என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரித்துத் தலைவாரி, நிர்வகிக்கும் ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன் எனக் கூறினேன். ‘நீர் இப்போது ஊர் திரும்பப் போகிறீர்! ஊர் சென்றால் ஒரே இன்பம் தான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, ‘உமது ஒட்டகத்தை எனக்கு விற்கிறீரா?’ என்று கேட்டார்கள். நான் சரி எனக் கூறியதும் என்னிடமிருந்து ஒரு ஊகியா (தங்க நாணயத்தில் சிறிதள)வுக்கு விலைக்கு வாங்கிக் கொண்டனர். பின்னர் எனக்கு முன் அவர்கள் சென்று விட்டனர்.
நான் காலை நேரத்தில் (மதீனாவை) அடைந்தேன். நாங்கள் பள்ளிக்கு வந்ததும் பள்ளியில் வாசலில் நின்று கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இப்போது தான் வருகிறீரா’ என்று கேட்டனர். ஆம் என்றேன். ‘உமது ஒட்டகத்தை விட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும் உள்ளே சென்று தொழுதேன். எனக்குறிய ஊகியாவை எடைபோட்டுத் தருமாறு பிலாலிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பிலால் (ரளியல்லாஹு அன்ஹு) எனக்கு எடை போட்டுத் தந்ததுடன் சற்று அதிகமாக தந்தார். நான் திரும்பிய போது ‘ஜாபிரைக் கூப்பிடுங்கள்’ என்றனர். அதற்குள் என் ஒட்டகத்தைத் திருப்பித் தரப் போகிறார்களோ! என்று நினைத்தேன். அவ்வாறு அவர்கள் திருப்பித் தந்தால் அதைவிட எனக்குப் பிடிக்காதது வேறெதுவும் இராது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உமது ஒட்டகத்தைப் பிடித்துக் கொள்வீராக! இதன் விலையும் உமக்குரியதே என்றார்கள்”. (நூல்: புஹாரி 2097, அத்தியாயம்: வியாபாரம், பாடம்: வாகனங்களை வாங்குதல்.)
விளக்கம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்று ஆட்சித் தலைவரான பின் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. ‘போரிலிருந்து திரும்பி வரும்போது’ என்ற வாசகத்திலிருந்து இதை நாம் விளங்க முடியும்.
போர் செய்து விட்டு நபித்தோழர்கள் திரும்பி வரும்போது அனைவரையும் விடக் கடைசியாக ஜாபிர் (ரளியல்லாஹு அன்ஹு) வருகிறார். அவருக்கும் பின்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகின்றனர். அதனால் கடைசியாகப் பின் தங்கி வந்த ஜாபிரை அவர்களால் சந்திக்க முடிந்தது.
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்கள் – போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் – களத்திலிருந்து எப்படித் திரும்பினார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். யானை மேல் ஆரோகணித்து, படைவீரர்கள் பராக் கூற, வழியெங்கும் அட்டகாசங்கள் செய்து ஆணவத்துடனும் திமிருடனும் செருக்குடனும் திரும்பியதை அறிந்திருக்கிறோம்.
ஆட்சித்தலைவரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – படை நடத்திச் சென்று வெற்றி வீரராகத் திரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – அனைவரையும் அனுப்பி விட்டுத் தன்னந்தனியாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டு கடைசியாக வருகிறார்கள்.
ஆட்சித்தலைவர் என்ற மமதையில்லை! போரில் வென்று விட்டோம் என்ற செருக்கு இல்லை! மதத்தலைவர் என்ற ஆணவம் இல்லை! எதிரிகள் பின்தொடர்ந்து வந்து தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இல்லை!
கருப்புப் பூனைகளின் பாதுகாப்புடன் – சிறுநீர் கழிக்கக்கூட பாதுகாவலர்கள் துணையுடன் – உலாவரும் வீரர்களையும் வீராங்கணைகளையும் பார்த்துப் பழகியவர்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்.
உலகவரலாற்றில் இப்படி ஒரே ஒரு தலைவர், இவர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று கூறத்தக்க அளவில் அந்த மாமனிதரின் அற்புத வாழ்க்கை அமைந்திருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்து ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றார்கள். உலகில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் பெற்றவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்திருப்பார்கள். சாதாரணமானவர்களை அறிந்திருக்க மாட்டார்கள். அறிந்திருந்தாலும் அதைக் காட்டி கொள்வது தம் கௌரவத்துக்கு இழுக்கு என்று நடந்து கொள்வார்கள்.
பல்லாயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சாதாரண நபித்தோழரைப் பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்து வைத்திருந்ததால் – அவருடனும் நெருக்கமாகப் பழகியதால் ஜாபிரா? என்று கேட்கிறார்கள்.
இந்த ஜாபிர் (ரளியல்லாஹு அன்ஹு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமவயதினரோ, நீண்ட காலம் அவர்களுடன் பழகியவரோ அல்லர். உமக்குத் திருமணமாகி விட்டதா என்று அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதிலிருந்து திருமணம் செய்யக்கூடிய இளவயதுப் பருவத்தில் அவர் இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஐம்பது வயதுக்கு மேல். ஐம்பது வயதைக் கடந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுமார் இருபது வயதுடையவரைப் பெயர் சொல்லி அழைத்தது மக்களுடன் அவர்கள் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பதற்குச் சான்று.
மந்திரிகள்கூட சந்திக்க முடியாத தலைவர்களைப் பார்த்துப் பழகிய மக்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்!
பதவியும் அந்தஸ்தும் வந்த பின், நன்கு பழகியவர்களையே யாரெனக் கேட்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்டும் காணாதது போல் நடக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம்.
தம்மைவிட வயதில் குறைந்த நெடுநாள் பழக்கமில்லாத ஒரு தொண்டரைக் கண்டு அக்கறையுடன் அவரை விசாரித்து, அவருக்காகத் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி, சண்டித்தனம் செய்த அவரது ஒட்டகத்தை எழுப்பி, அவரை ஒட்டகத்தில் ஏற்றிவிட்டு .. இப்படி ஒரு தலைவரை உலகம் இன்றுவரை கண்டதில்லை, இனியும் காணப்போவதில்லை.
உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா? கன்னியை மணந்தீரா? விதவையையா? இளைஞரான நீர் கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே என்றெல்லாம் அக்கறையுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விசாரித்ததையும் ஊர் சென்றால் ஜாலிதான் என்று அவர்கள் கூறியதையும் சிந்தித்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கென எந்த ஒரு தனிப்பட்ட மதிப்பையும் விரும்பவில்லை, ஆட்சியாளர் என்ற முறையிலும் தனிமரியாதையைத் தேடவில்லை, மதத்தலைவர் என்ற முறையிலும் தனி மதிப்பை நாடவில்லை என்பதை ஐயமற அறிந்து கொள்ளலாம்.
சண்டித்தனம் செய்த ஒட்டகத்தை விலை பேசி வாங்கியதும் வாங்கிய பின் விற்றவரை அதில் ஏறிவர அனுமதித்ததும் முடிவில் அவரிடமே ஒட்டகத்தை இலவசமாக வழங்கியதும் அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்று.
இறைவனின் தூதராக மட்டுமே தம்மை அவர்கள் கருதியதால் – தாம் உட்பட அனைவரும் இறைவனின் அடிமைகள் தாம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் – எந்த அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு அவர்கள் போதித்தார்களோ அந்த இறைவனை அதிகமதிகம் அஞ்சிய காரணத்தால் தான் அவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது.
அந்த மாமனிதரின் அதிசய வாழ்க்கையை இன்னும் பார்ப்போம்.
”Jazaakallaahu khairan” http://www.islamiyadawa.com/women/angry_woman.htm