சுகமான சுமைகள்
மௌலவி லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
கடமை மறந்த மானிடா!
உன் – மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார்.
அடித்தளத்தை இடித்துவிட்டா
அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?!
சரிந்து கொண்டிருக்கிறது உன் எதிர்காலம்!
அதை சரிக்கட்டினால் உனக்குப் பொற்காலம்.
வாழ்வதும் வீழ்வதும் உன் முடிவிலே..
முடிவெடு,இன்றே இனியதோர் விடைகொடு!
உன் வாழ்க்கையைச் செதுக்கிச் செப்பனிடு
ஊன், வினையற்று உருமாறு.
ஊருலகம் உனக்கு ஊன்று கோலன்று..
உண்மையே உனை உறுதியாக்கும்!
டீவியும், டிஷ் வாழ்க்கையும்
நீ உறவாடும் புதிய உறவுகள்!
உன் நிஜ உறவுகளை அவை சிதைக்காமலிருக்கட்டும்!
சிந்தித்து செயலாற்றும் திறன் உன் முடிவிலே!
நேற்றைய பொழுதுகள் வீணாக..
நாளைய பொழுதுகள் தேனாக..
இரண்டுக்கும் நடுவிலே போராட்டத்தைத் துவங்கு!
என் உள்ளம் பேசுகிறது:
விடியுமா என் பொழுதுகள் ?!
விடை தேடி அலைகிறேன்.
சுகமானதோர் போராட்டம் துவங்குகிறது!
நான் திருந்த வேண்டும்..
மரணிக்குமுன் மனிதனாக வேண்டாமா?!
கடந்த காலத்தை வீணாக்கிவிட்டு
நறைத்த உணர்வுகள் என் வாழ்க்கையை ஏப்பம் விடுகின்றன!
நாளைய விடியலைத் தேடி ஒரு ஓயாப் பயணம்.
கடந்துவிட்ட இருள்களுக்கு வெள்ளையடிக்கின்றேன்.
நாளையாவது பளிச்சென்று விடியட்டும்.
சத்தியத்தைத் தேடி அலைகிறேன்
கடமையை உணர்த்துகிறது என் உள்ளம்.
தேடுகிறேன் சத்தியத்தை! தேளிவோடு ஏற்றுக்கொள்ள!
எதை ஏற்றுக் கொள்வது?
ஏக தெய்வமா? இல்லை யாவும் தெய்வமா?
அல்லது தெய்வமே இல்லையா?
எனக்குக் குழப்பமாயிருந்தது நேற்று!
என் பகுத்தறிவு எனக்கு விருந்தானது!
எதிலும் நடு நிலமை கொள்!
என்ற சான்றோர் வாக்கு எனை அழைத்தது.
சிந்தித்தேன்.. யதார்த்தத்தை சந்தித்தேன்!
இறைவனொன்றில்லை என்பதும் வேண்டாம்,
எல்லாமிறைவனென்பதும் வேண்டாம்.
நீதியின் தராசில் ஏக தெய்வத்திற்கே கணம் கூடிற்று!
ஏற்றுக் கொண்டேன் சத்தியமதை!
சத்தியத்தோடு என் வாழ்க்கை சங்கமமானது.
சாதிக்க வேண்டும் எனும் உணர்வு எனை உந்தியது.
இப்போது..
இம்மையின் இன்னல்கள் துரும்பாக
சத்தியத்தில் என் பயணம் கரும்பாக
இதோ! நிம்மதியின் சுகம் எனை அழுத்த
மறுமைக்காய் செதுக்குகிறேன் நாளையை!
சுகமான சுமைகளோடு
சவீகரித்துக் கொண்டேன் சத்தியத்தை.
இப்போதுதான் சுவாசம் கூட இலகுவாக இருக்கிறது!