இல்லற வாழ்வும் இன்னல்களும்…
மௌலவி S.L.M. நஷ்மல் பலாஹி
”பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2912,2913)
இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்.
சில சமயங்களில் கணவன் மனைவியின் நல்ல பண்புகளை மறந்து தவறுகளைப் பெரிதாகக் கருதுகின்றவனாக இருந்து விடுகின்றான். நபியவர்கள் கோணலும் குறையும் பெண்ணின் இயற்கையோடு ஒட்டியது என்று கூறிச் சென்று விட்டார்கள். எனவே அவளோடு நடந்து கொள்ளும் போது இயற்கைத்தன்மையை மறந்துவிடக்கூடாது. இதனையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு நல்லதையே நாடுங்கள்..என்ற முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பிலே கூறுகிறார்கள்.
”இப்லீஸ் தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கின்றான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்த்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து ”நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், ”(சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, ”நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைது, ”நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5419)
மணவாழ்வை ஒரு வெறும் கேளிக்கையாக கருதாமல் அது ஒரு உயர்ந்த ஸுன்னா என்ற பார்வையில் இஸ்லாம் கற்றுத் தந்த வழிமுறைகளினூடாக அதை அணுகியவர்களுக்கு என்றும் சந்தோஷமே. ”தீனுள்ளவனைக் கொண்டு வெற்றியடைந்து கொள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-5090) என்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி பல அம்சங்கள் மொத்தமாக நற்பண்புகளையே குறித்து நிற்பதைக் காணலாம். இவ்வாறாக, இஸ்லாமிய அணுகுமுறையில் திருமணத்தை மேற்கொண்ட போதிலும் ஒரு சில தினங்களிலேயே அல்லது ஒரு சில மாதங்களிலேயே சில இன்னல்களுக்கு மணமக்கள் முகங்கொடுக்கவும் செய்கின்றனர்.
நாம் எதிர்பார்த்தது என்ன? ஆனால் திருமணம் என்பது இவ்வளவு இன்னல்கள் நிறைந்ததா? என தலையில் கைவைக்கும் நமது இளசுகளுக்கு இவ்விதழிலிருந்து சில ஆலோசனைகளை முன் வைக்கலாம் என விரும்புகின்றோம். நாம் ஏலவே கூறியது போன்று பொறுமையும், கழாகத்ரை பொருந்திக் கொள்ளும் தன்மையும் உள்ளவர்கள் நிச்சயமாக இவ்விதமாக எழும் சிரமங்களுக்கு இலகுவாக முகங்கொடுப்பார்கள்.
சங்கடங்களும், சிரமங்களும் இல்லா மணவாழ்வென்பது சாத்தியமேயில்லை என்றாலும் மார்க்கம் கூறுகின்ற விடயங்களை கடைப்பிடித்தால் பெருமளவிலான இன்னல்களைக் குறைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவியரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நிரந்தரமானதோ அல்லது மணவாழ்விற்கு உலை வைப்பதோ அன்று. இஸ்லாமிய அடிப்படையிலும் உளவியல் அணுகு முறையிலும் நோக்குவோமாயின் ஆங்காங்கே ஏற்படும் சிற்சில கருத்து வேறுபாடுகளை பிரச்சினையின் அடித்தளமாக எடுத்துக் கொள்வதே பிரச்சினையாகும்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள முஸ்லிம் கிரந்த நபிமொழியை அவதானித்துப் பார்த்தால், இன்பமான இல்லறங்களைப் பிரித்து விடுவதையே ஷைத்தான் இலக்காக வைத்திருப்பதைப் பார்க்கின்றோம். தனது மணவாழ்வில் வேளைக்கு தொழுகையின்றி, சினிமா, அந்நியக் கலாசார பழக்கவழக்கங்களோடு அல்குர்ஆன் கற்றல், இஸ்லாமிய பாடங்களைப் பெறல் போன்ற விடயங்களையும் கவனத்திற் கொள்ளாத ஷைத்தானின் தோழர்களான தம்பதிகள் இலகுவில் ஷைத்தானின் இந்த இலக்குக்கு ஆளாகிவிடுவார்கள்.
இறைத்தூதரின் இல்லங்களில் எழுந்த கருத்து வேறுபாடுகள்
இல்லற வாழ்வின் இன்னல்களால் துவண்டு போயுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இத் தலைப்பினைக் கண்டதும் சில நேரங்களில் ஒரு தெம்பு வரக்கூடும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் மனைவியர்களோடு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளனவா? ஆமாம். வஹி அருளப்பெற்ற அவ்வில்லங்களிலும் சிற்சில கருத்து வேறுபாடுகள் எழாமல் இல்லை. பின்வரும் சம்பவத்தைப் படித்து பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான மனைவிதான் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
இப்பாசமிகு மனைவியைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை பின்வருமாறு கூறுகிறார்கள். ”என்னிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய், எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள்.
அதற்கு நான், எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று கேட்டேன்.
அதற்கவர்கள், என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக என்று கூறுவாய் என்று சொன்னார்கள்.
நான் அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்) அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன் (தங்கள் மீதன்று) என்று கூறினேன்’ (அ.றிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: ஸஹீஹுல் புகாரி-5228)
இது தவிர அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அன்னாரது அருமை மனைவியர்கள் வாழ்க்கைச் செலவுகள் குறித்து சர்ச்சைப்பட்டுக் கொண்ட போது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மாத காலம் அம்மனைவியர்களை விட்டும் விலகியிருந்த வரலாறும் பிரபலமானதாகும்.
”(ஒரு முறை) அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (அவர்களது வீட்டுக்கு) வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்கள் பலர், தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
அனுமதி கிடைத்ததும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. (அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர் இருக்க, பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சிரிக்க வைக்க எதையேனும் நான் சொல்லப் போகிறேன்.” என்று (மனதிற்குள்) சொல்லிக் கொண்டு, ”அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்தித் தருமாறு) கேட்க, நான் அவரை நோக்கி எழுந்து அவரது கழுத்தில் அடித்து விட்டேன் என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள்.
”இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர்” என்று கூறினார்கள். உடனே, அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (தம்முடைய புதல்வி) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள்.
அடுத்து உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். ”அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா? என்று அவர்களிருவருமே கூறினர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியர், ”அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இல்லாத எதையும் ஒரு போதும் நாங்கள் கேட்கமாட்டோம்.” என்று கூறினர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி இருந்தார்கள்.
பிறகு ”நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி, ”உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் (33:28,29) இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, ஆயிஷா! ”நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து) விடக் கூடாது என விரும்புகின்றேன்” என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ”அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த (33:28 ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ”நான் கூறியதைத் தாங்கள் மற்றத் துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹ் முஸ்லிம்- 2946)
”Jazaakallaahu khairan”
அல் அதர் மாத இதழ் http://dharulathar.com