டெஹ்ரான்: ஈரான் இஸ்லாமியக் குடியரசு உருவான தினம் நேற்று தலைநகர் டெஹ்ரானில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு ”முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டோம். இனி நமது நாடும் அணு ஆயுத நாடுதான். இஸ்ரேல் நம்மிடம் வாலாட்ட முயன்றால் அதை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம்” என்று ஈரான் அதிபர் மஹமூத் அஹமதி நிஜாத் அறிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், ஈரான் இப்போது ஒரு அணு ஆயுத நாடாகும். 20 சதவீத எரிபொருளில், முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டதாகவும் அதை தற்போது விஞ்ஞானிகளிடம் கொடுத்துள்ளதாகவும், 2 நாட்களில் இதைச் செய்து முடித்துள்ளதாகவும் மஹமூத் அஹமதி நிஜாத் தெரிவித்தார்.
தன்னிடம் உள்ள யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தொடங்கியிருப்பதாக செவ்வாய்க்கிழமைதான் அறிவித்தது ஈரான். இந்த நிலையில் முதல் தொகுதி செறிவூட்டும் பணியை இரண்டு நாட்களில் அது முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்துவார்கள். அதேசமயம், இதை வைத்து அணுகுண்டுகளையும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுரேனியம் செறிவூட்டும் பணியை நிறுத்துமாறும், அதைத் தொடரக் கூடாது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எச்சரித்துள்ளன. ஆனால் அதை ஈரான் நிராகரித்து விட்டது.
தடை விதிப்போம் என்று ஐ.நா. விடுத்த மிரட்டலையும் அது புறக்கணித்து விட்டது. ”எங்களிடம் உள்ள அனைத்து யுரேனியத்தையும் செறிவூட்டும் பணியை தொடருவோம்” என்றும் ஈரான் கூறி விட்டது.
விஞ்ஞானிகளுடன் ஈரான் அதிபர் மஹமூத் அஹமதி நிஜாத்
செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிக்கப்பட்ட செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவித்த கையோடு சிரிய அதிபர் பாஷர் அல் அஸாத்தைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள், காஸா மக்களிடமும், லெபனானின் ஹிஸ்புல்லாவிடமும் பட்ட தோல்விக்குப் பழி வாங்க ஈரான் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்தார்.
அப்படி இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகவே அமையும். அதுபோல ஒரு தாக்குதல் நடந்தால், அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். நீங்களும் எதிர்க்க வேண்டும் என்று சிரிய அதிபர் பாஷர் அல் அஸாத்தை கேட்டுக்கொண்டார்.
அவர்கள் வைத்துள்ள இஸ்ரேல் என்ற பெயரிலான நாடே இல்லாத அளவுக்கு, அடையாளம் தெரியாத அளவுக்கு அதை அழித்து உருக்குலைத்து விடுவோம். அத்தோடு ஜியோனிஸ்டுகளின் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு கட்டி விடுவோம் என்றார் அவர்.
சிரியா, லெபனானன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் பக்கம் எப்போதும் ஈரான் துணை நிற்கும். விரைவில் ஜியோனிஸ்டுகள் அழிவது உறுதி என்றார் மஹமூத் அஹமதி நிஜாத்.
இஸ்ரேல் என்ற நாட்டை ஈரான் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டை ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதான் இதுவரை ஈரான் அழைத்து வருகிறது.