டாடாவின் டைட்டானியம் ஆலை முதல் ஹெல்மெட் சட்டம் வரை அனைத்திலும் அரசு மக்களின் மனோநிலையை புரிந்தே செயல்பட்டது என்று சொல்வது மிகையல்ல, ஹெல்மெட் விவகாரத்தில் கட்டாயமாக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, நீதிமன்ற தீர்ப்புக்கு பணிய வேண்டிய (அ) கட்டுபடவேண்டிய நிர்பந்தம் தான்.
சட்டம் என்பது மக்களுக்குதான். மக்கள் சட்டத்துக்கு அல்ல என்பதை ஒவ்வொரு அரசும் புரிந்து நடந்து கொண்டாலே அரசு – மக்கள் என்ற இணைப்பு எப்போதும் உடையாமல் பாதுகாக்கலாம். இது அரசுக்கு மட்டும் தானா பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட ஒவ்வொருவரும் மக்களின் மனோநிலையை புரிந்து நடக்கும் இங்கிதத்தை கடைப்பிடிப்பது இன்றியமையாதது.
மற்றவர்களுக்கு இருக்க வேண்டிய இங்கிதத்தை விட இமாமாக பணிபுரியக் கூடியவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக தேவைப்படுகிறது. காரணம் இமாம்களுக்கு தொழிலே சொந்த வேலை நிமித்தம் போக – அதிகமான நேரங்கள் மக்களோடு கலந்திருப்பது தான். மக்களின் இன்ப – துன்ப அனைத்து காரியங்களிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை இமாமுடைய பங்களிப்பு தவிர்க்க முடியாதது.
மக்களோடு இவ்வளவு நெருக்கமான தொடர்பை வலுப்படுத்தி விடும் இமாம்களில் சிலர் இன்னும் ஏன் இங்கிதத்தை, படிக்காமல் இருக்கிறார்கள். தொழுகை மற்றும் பயான் நிகழ்ச்சிகள் இன்னும் பிற பொதுச் சேவைகள் ஒவ்வொன்றிலும்; இமாம்களின் மீது மக்கள் எவ்வளவு வெறுப்படைகிறார்கள். என்பது தெளிவுபடுத்தப்படுவது சமுதாயக் கடமையே!
ஆலிம்கள் வீட்டுத் திருமணம் என்றாலே செல்வதற்கு பயமாக அருக்கிறது என்று பலர் புலம்புகின்றனர். சரியாக 11 மணியளவில் என்று பத்திரிக்கையில் போட்ட விட்டு லுஹர் நேரம் வரை பயான் என்ற பெயரில் பலரையும் பேசவிட்டு திருமணத்திற்கு வந்த அனைத்து மக்களையும் நோகடித்து விடுகின்றனர். பொதுவாக திருமணத்திற்கு வரக்கூடியவர்கள் காலை உணவை தவிர்த்துவிட்டதான் வருவார்கள். பதினொரு மணி (அ) பனிரெண்டுக்குள் சாப்பிட்டு விடலாம் என்பதற்காக அப்படி தவிர்த்து கொள்கின்றனர்.
திருமணத்திற்கு வருவது எதற்காக? வயிறார சாப்பிட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு செல்லலாம் என்பது தான் பிரதானமானது.
பயானின் மீதுள்ள வெறுப்பால் ஜூம் ஆவுக்கே தாமததாக வரக்கூடிய மக்கள் திருமணத்திற்கு வரக்கூடியவர்களுக்கு அந்த எண்ணம் இருக்குமா?
அரசியல்வாதி வீட்டுத்திருமணத்தில் வாழ்த்துரை என்ற பெயரில் ஏற்பட்ட இத்தவறான நடைமுறைகள் நம் வீட்டுத் திருமணத்திலும் தொற்றிக்கொண்டு விட்டது.
கொஞ்சம் முன்மாதிரியாக இருக்கட்டும் (அ) வித்தியாசமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில், திருமணத்தில் வாழ்துரை என்ற சந்து வழஜயாக பயான் நிகழ்சிகள் கொண்டு வரப்பட்டன.
இப்பொழுது ஆலிம்கள் வீட்டுத் திருமணத்தில் மட்டுமல்ல, ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலுள்ளவர்களுடைய வீட்டுத் திருமணங்களில் பயான் என்ற நோய் பரவி வருகிறது.
இதை விட ஒரு கொடுமை என்னவென்றால்.. திருமண சபை கூடி ஏதாவது தாமதமாக்கப்பட்டிருந்தால் அது வரும் வரை பயான் செய்யுங்கள் என ஆலிம்சாவிடம் பணிவாக கேட்டுக் கொள்வார்கள். அவரும் ஆஹா! நம்ம பயானை கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களே என்ற துடிப்பில் அவர் ”சொற்போரை” நிகழ்த்தத் தொடங்குவார். அ
வரது உரை உச்சகட்டத்தை அடைந்திருக்கும் போது, தாமதமாக்கப்பட்ட அது வந்து விட்டால் அந்த ஆலிம்சாவின் காலை கொஞ்சம் சுரண்டி விடுவர். அவர் அதை கவனிக்காமல் இருந்தால் காதில் ரகசியமாய் சொல்லி விடுவார். பிறகு அவர் ”இத்துடன்” என இடையிலேயே வெறுப்போடு முடிப்பார். அப்போது தான் அவருக்கு உண்மை புரியும் இதுக்குத்தான் பயான் பண்ண சொன்னார்களோ என்று!
மார்க்க சொற்பொழிவுகளுக்கு கிடைக்கும் அவமரியாதைகளை பாருங்கள். இந்த அவமதிப்புகளை ஏற்படுத்துவோர் உலமாக்களே! அதனால் அவர்கள் இளது விஷயத்தில் எது நாகரிகமோ அதை பேணிக் கொள்ளட்டும். வரும் காலங்களில் திருமண சபைகளில் பயான் (அ) வாழ்த்துரைகள் குறைக்கப் பட வேண்டும்.அப்படி ஏதாவது சில திருமணங்களில் பயானுக்காகவே பிரத்யேகமாக அழைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உலமாக்கள் மக்களின் மனோ நிலையை மற்றும் நேரத்தின் அருமை கருதி உரைகளை சுருக்கமாக்கிக் கொள்வது நல்லது.ஒரு பக்ககம் சொற்பொழிவுகளின் நிலைமை அவ்வாறிருக்க! திருமண சபையில் இறுதியாக ஓதப்படும் திருமண துஆ அது தான் உச்சக்கட்ட நோகடிப்பு.
சில உலமாக்கள் தான் இது விஷயத்தில் நாகரீகமாக நடந்து கொள்வர். பெரும் பாலான உலமாக்கள் துஆவுக்காக கையை விரித்து ஓத ஆரம்பித்துவிட்டால் மக்களின் கையை உடைக்காமல் விடமாட்டார்கள். அரபியிலும் தமிழிலும் மாறிமாறி ஓதி பதினைந்து நிம்டத்திற்கு பின் துஆ முடியும் போது கூடியிருப்பவர்களின் முகங்கள் பூக்களைப் போல வாடி வதங்கி போயிருக்கும். சில முன்கோபிகள் அந்த இமாம் தனியாக கிடைத்தால் பின்னி எடுத்து விடலாம் என்று நினைப்பார்கள்.
சில இடங்களில் பயானும், துஆவும் நீளும் பொழுது அங்கு வாழ்த்துரைகள் அனைத்தும் சாப உரைகளாக மாறிக்கொண்டிருக்கும் திருமண சபையில் மட்டுமா! பராஅத், லைலத்துல் கத்ர் போன்ற விசேஷமான இரவுகளிலும் அப்படிதான். சில இமாம்கள் நீண்ட நேரம் துஆ ஓதுவதை சாதனையாக நினைப்பர்.
இனிமேல் பள்ளிக்கே வரக்கூடாது அப்படியே வந்தால் கூட்டுதுஆவில் கலந்து கொள்ளகூடாது என்ற எண்ணத்தைத் தான் நீண்ட நேர பிரார்தனைகள் மக்கள் மனதில் விதைக்கறது.
அந்த நீண்ட துஆக்கள் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற முகஸ்துதிக்காகவே பெரும்பாலும் ஓதப்படுகிறது. ஆது மென்மேலும் மாற்றமான விளைவைத் தான் ஏற்படுத்துகிறது.
தொழவரக்கூடிய எவரும் இந்த நீண்ட துஆக்களை விரும்புவதில்லை. மக்களின் இவ்வளவு கோபத்தையும்,வெறுப்பையும் சம்பாதித்து ஒரு சுன்னத்தான (அ) ஃபர்ளான காரியத்தை நிறைவேற்ற வேண்டும்? மக்களின் விருப்பமறிந்து செயல்படுவது தான் உண்மையான மார்க்கச் சேவை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வரலாற்றில் அதற்கான முன்னுதாரணங்கள் நிறையவே உண்டு:
ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுக்கு கூறுகிறார்கள்.
முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹுக்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுது விட்டுத் தமது குழுவினரிடம் சென்று அவர்களுக்கு இமாமத் தொழுகை நடத்துவது வழக்கம் (ஒருமுறை) இஷாத் தொழுகை நடத்தும் போது அல்பகரா அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையை விட்டும்) விலகிச்சென்றார். (தொழுது முடிந்ததும); முஆத் பின் ஜபல்ரளியல்லாஹு அன்ஹு அவரைக் கண்டித்தார்கள். இந்தச் செய்தி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிய வந்த போது(நீரென்ன) குழக்கவாதியா? என்று மும்முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹுக்கு நோக்கிக் கூறினார்கள். மேலும் நடுத்தரமான இரண்டு அத்தியாயங்களை ஓதித்தொழவைக்குமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
இது முஆத் ரளியல்லாஹு அன்ஹுக்கு மட்டும் தனிப்பட்ட எச்சரிக்கை அல்ல. இமாமத் செய்யும் ஒவ்வொருவருக்கும் தான்.
இது விஷயத்தில் பொதுவான அறிவுரையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கியுள்ளார்கள். – மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும் ஏனெனில் பலவீனர்கள் நோயாளிகள்இ முதியவர்கள் அவர்களில் உள்ளனர் தனித்து தொழும் போது அவர் விரும்பும் அளவுக்கு நீட்டிக் கொள்ளலாம்? (அறிவிப்பவர்.அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 703).
மதரஸாக்களில் முறையான கிராஅத் பயிற்சி பெறாத உலமாக்கள் பெரும் பாலானோர்கள்தான் இன்று இமாமத் செய்கின்றனர். குர்ஆன் வசனங்கள் அதிகம் கொலை செய்யப்படுவது இவர்களாலேயே என்று சொல்வது மிகையாகாது. இன்னும் கொஞ்சம் பச்சையாக சொல்லப்போனால் குர்ஆனை பார்த்து சரளமாக ஓதத் தெரியாத எத்தனையோ இமாமகள் இன்றும் தொடர்ந்து பணி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
மனசாட்சிக்கு விரோதமாக அவர்களுக்கெல்லாம் ”ஸனது” வழங்கி அலங்காரப்படுத்தி பார்த்திருக்கும் மதரஸாக்களை நினைத்தால் வேதனையாகத் தான் உள்ளது. முறையான பயிற்சி பெறாத இவர்கள் எப்படி மக்களின் மனோநிலை புரிந்து மார்க்கச் சேவை புரிவார்கள்?
பள்ளி இமாம்கள் சிந்திக்க வேண்டும்.
நாம் வாழ்வது இயந்திர உலகம்.
மக்களில் எவரும். எதற்கும் நீண்ட நேரம் அமர்வதை விரும்புவதில்லை.
பயான், துஆ, தொழுகை இவைகளில் முக்கியமாக மக்களின் மனோ நிலை அறிந்து செயல்படவேண்டும்.
அதே நேரத்தில் உரிய முறையில், உரியநேரத்தில் மார்க்கத் தகவல்கள் மக்களுக்குப் போய்ச் சேர்வதில் நமது கவனம் தவறிவிடக்கூடாது.
பலவந்தமாக சொல்வதை விட பக்குவமாகச் சொல்வதில் தான் நமது வெற்றி இருக்கிறது.
அதற்கு முறையான பயிற்சிகளை மதரஸாக்கள் கொடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் நாம் தான் பயிற்சிக்களங்களை தேடிப்பிடித்து அமைத்துக் கொள்ள வேண்டும்.
இங்கிதமாய் நடப்போம்: இலக்கணங்கள் பல வகுப்போம்.
”Jazaakallaahu khairan”
சிந்தனை சரம் – இஸ்லாமிய மாத இதழ்
இக்கட்டுரையை எழுதியதும் ஒர் ஆலிமே!