பெண் கல்வியின் முக்கியத்துவம்
சுமைய்யா
[ ஜாஹிலியாக் காலம் என்று அறியப்பட்ட அறியாமைக் காலத்தில் கூட பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகளும், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியுமாகிய அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இஸ்லாமிய ஷரிஅத்தில் அதிகம் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.
அதே போன்று உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவுக்கூர்மை நம்மை வியக்க வைக்கிறது. தனது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றொரு மனைவியான ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தோல்பதனிடும் கைத்தொழில் அறிந்தவர்களாக இருந்தார்கள்.
இதிலிருந்து பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்கக்கூடியவர்கள் அல்லர் மாறாக, அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் ஆனால் இவைகள் அனைத்தும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.]
”அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே” (அல்குர்ஆன் 39:9)
கல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. கல்வி மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. கல்வியென்பது மார்க்கம் மற்றும் உலகம் பற்றிய அறிவைப் பெறுவதாகும்.
நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
இஸ்லாத்தில் பெண்களின் நிலை:
இஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது.
இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள், இல்லை பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததினால்தான்.
இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாமென்று தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது
பெண்களின் மகத்துவம்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்,
அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்,
அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்
ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்
மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)
ஆணும், பெண்ணும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது இறைவன் வகுத்த இயற்கையின் நியதி இத்தகைய பெண்கள் சிறுமை படுத்தப் படக்கூடாது என்பதற்காகவே இறைவன் ஆணிலிருந்து பெண்ணைப் படைத்ததாக மேற்கூறிய வசனத்தின் மூலம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் பெண்ணினத்தை சிறுமைபடுத்துவதும், அறியாமையில் ஆழ்த்துவதும் ஆணினத்தைப் பாதிக்குமென எச்சரிக்கை செய்கிறான்.
ஓடி, ஆடித் திரிந்து தனது அன்றாடத் தேவைகளுக்கென்று சம்பாதிக்கும் ஆண்கள் அலுப்புடன் இல்லம் திரும்புகையில் இன்முகம் காட்டி இனிய சொல் பேசி, பட்ட கஷ்டம் மறந்து சந்தோஷத்தை அள்ளித்தருபவள் பெண் என வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்…
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:21).
ஆணின் அனைத்துக் குறைகளையும் மூடி மறைத்து ஆதரவோடு ஆடையாக இருப்பவளும் பெண்ணே என பெண்ணின் மகத்துவத்தை விவரிக்கின்றான்.
பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்
பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான். ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.
எனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் “தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை” என்கிறார்கள். ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.
அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகின்றான்
நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிவாகவும் நடப்பார்கள். அவர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 4:34)
இல்லத்தரசி எனப் புகழப்படக்கூடியவள் இறைநம்பிக்கை உடையவளாகவும், நல்லொழுக்கம் உடையவளாகவும், தனது கற்பை பாதுகாக்கக் கூடியவளாகவும், தனது கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றக் கூடியவளாகவும், தனது குடும்பத்தின் சொத்து, சுகங்களைப் பேணக்கூயடிவளாகவும் இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற பெண்மணி கற்புநெறி எது? தன்னை எவ்விதம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தன் கணவனின் புகழை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்ற தெளிவான அறிவைப் பெற கல்வி அறிவு வேண்டுமல்லவா?
ஜாஹிலியாக் காலம் என்று அறியப்பட்ட அறியாமைக் காலத்தில் கூட பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அபூபக்ர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகளும், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியுமாகிய அன்னை ஆயிஷாரளியல்லாஹு அன்ஹாஅவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இஸ்லாமிய ஷரிஅத்தில் அதிகம் அன்னை ஆயிஷாரளியல்லாஹு அன்ஹாஅவர்களின் அறிவின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.
அதே போன்று உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகள் ஹப்ஸாரளியல்லாஹு அன்ஹாஅவர்களின் அறிவுக்கூர்மை நம்மை வியக்க வைக்கிறது. தனது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியை உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹப்ஸாரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றொரு மனைவியான ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தோல்பதனிடும் கைத்தொழில் அறிந்தவர்களாக இருந்தார்கள்.
இதிலிருந்து பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்கக்கூடியவர்கள் அல்லர் மாறாக, அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் ஆனால் இவைகள் அனைத்தும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
குர்ஆன் கூறும் கல்வி ஞானம்
நிச்சயமாக தன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும், உண்மையைப் பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், கற்பை பேணும் ஆண்களும், பெண்களும், இறை தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தி வைத்திருக்கிறான் (அல்குர்ஆன் 33:35).
ஆக, ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் பற்றிய அறிவு இருந்தால்தான் மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் இடம்பெற முடியும் என்பதை எவருமே மறுக்க முடியாது. இதனைப் பற்றிய ஞானத்தைப் ஆண்களும், பெண்களும் பெற்று செயல்படுத்தினால்தான் மறுமையில் அல்லாஹ்வுடைய அளப்பெரும் கருணையும், மன்னிப்பும் கிடைக்கும். அதற்கான கல்வியறிவை பெண்களும் நிச்சயம் பெற வேண்டும்.
மேலும், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பெண்கள் நல்ல தெளிந்த அறிவுப் பெற்று திகழ வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒரு நாளை பெண்களுக்கென ஒதுக்கினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)
பெண் கல்வியினால் ஏற்படும் பயன்கள்
1. ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் அவள் தன்னை முதலில் திருத்திக் கொண்டு, மார்க்கம் அனுமதிக்காத அனாச்சாரங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறாள்.
2. தன் கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவள் அறிந்து கொள்வதின் மூலம் குடும்பத்தில் ஏற்படும் அதிகபட்ச பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமான குடும்ப சூழ்நிலைநிலை உருவாகி ஒரு ஆண் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடைமைகளை சிறப்பாக செய்ய பெண் உதவியாக இருப்பாள்.
3. தன் உறவினர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து உறவினர்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலம் சமூகத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
4. தன்னுடைய குழந்தைகளை ஸாலிஹான முறையில் வளர்த்து அதன் மூலம் எதிர்கால சமுதாயம் உருவாகுவதில் அதிக பங்கு வகிக்கின்றார்கள்.
5. பெண்கள் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். பெண்களுக்கே உரிய அச்சம், மடம், ஞானம் ஆகிய சிறப்புக்கள் கல்வி அறிவால் மேலும் பலப்படும்.
பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை அது முழு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக இயம்பிக் கொண்டு இருக்கிறது. இச்செய்தியை அறியாதவர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
இன்று முஸ்லிம் பெண்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்றால் தலாக், வரதட்சணை கொடுமை, அடக்குமுறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ சுமைகளை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளிலிருந்து விடுபட்டு நம் நியாயமான கோரிக்கைகளைப் பெற கல்வி மிக மிக அவசியமானதாக இருக்கிறது.
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் பயன்தரக்சுடிய கல்வியைத் தந்து நம் அனைவரையும் ஈடேற்றம் பெறச் செய்வானாக!
Jazaakallaahu khairan சுமைய்யா (உம்மு வஸீம்) – ஜித்தா
(சுவனப்பாதை நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் ஆறாவது ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை)