அறியாமல் உண்ட ஹராமான உணவை வாந்தி எடுத்த வாய்மையாளர்!
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்; ”அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான்.
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு சிறிது உண்டார்கள்.
அப்போது அந்த அடிமை அவர்களிடம், ‘இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டான். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, ‘இது என்ன?’ என்று கேட்டார்கள்.
அவன், ‘நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்” என்று சொன்னான்.
உடனே அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.” (ஆதாரம்: புகாரி எண் 3842)
இந்த செய்தியில் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது அடிமை மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய வேண்டிய அடிமை தொகையை உண்கிறார்கள். பின்பு அந்த அடிமை ஹராமான வழியில் பொருளீட்டியதைத்தான் நம்மிடத்தில் தந்துள்ளான். அதைத்தான் நாம் சாப்பிட்டுவிட்டோம் என்பதை அறிந்தவுடன் தனது வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கிறார்கள் என்றால், அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாய்மையை எண்ணிப்பாருங்கள்.
சமீபத்தில் ஒரு அறிஞர் இடம், என் தந்தை வட்டியின் மூலம் சம்பாதித்த சொத்து எனக்கு வாரிசு அடிப்படையில் கிடைத்துள்ளது. இது எனக்கு ஆகுமானதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அது உங்களுக்கு ஆகுமானதுதான்; ஏனெனில் தவறான வழியில் பொருளீட்டியது உங்கள் தந்தைதான். அந்த பாவத்திற்கு அவர்தான் பொறுப்பாளி. உங்களுக்கு அதில் சம்மந்தமில்லை. எனவே வாரிசு அடிப்படையில் கிடைத்த அந்த சொத்து உங்களுக்கு ஆகுமானதே! என்று அந்த அறிஞர் பதிலளித்தார்.
நன்றாக கவனிக்கவேண்டும் கொடிய வட்டியின் மூலம் சேர்த்த பொருள் ஆள் மாறும்போது ஆகுமாகிவிடுகிறது என்று ஃபத்வா வழங்கும் அறிஞர்கள் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், தனது அடிமை தவறான வழியில் பொருளீட்டிய தொகையில் உண்பதை வெறுத்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்கே! வரதட்சனை உணவு வீட்டு தேடி வந்தால் அது அன்பளிப்பு; ஆள்மாறி விட்டால் (அது எந்த வழியில் சம்பாதித்ததாக இருந்தாலும்) ஆகுமானது என்று ஃபத்வா வழங்கும் மேதைகள் எங்கே!
யார் மேன்மக்கள்..? அந்த சத்திய ஸகாபாக்கள் அல்லவா!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அடுத்த வழிகாட்டியாக அடையாளம் காட்டப்பட்டவர்!
ஜுபைர் இப்னு முத்யிம் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, ‘நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்…?’ என்று, – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி எண் 3659)
இந்த பொன்மொழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு பின்னால் தகுதியுடைய வழிகாட்டியாக அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அடையாளம் காட்டியதன் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்தில் எட்டிப்பிடிக்க முடியாத சிறப்புக்குரியவர் அபூபக்கர்[ரலி] அவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளதை புரிந்து கொள்ளலாம்.
அருமை மகள் மீது ‘அவதூறு’ சொன்னவருக்கும் அள்ளித்தந்த வள்ளல்!
அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்ற நயவஞ்சகன் பரப்பிய அவதூறை நம்பி, அதை மக்கள் மத்தியில் பரப்பியவர்களில் மிஸ்தஹ் இப்னு உஸாஸா ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழரும் ஒருவர்.
இவர் பத்ர் போரில் பங்கெடுத்த வீரர்களில் ஒருவர். மேலும் இவர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உறவினர் என்பதால், அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவருக்கு [இவர் அவதூறு பரப்புவதற்கு முன்னர்] பல்வேறு உதவிகளை செய்து வந்தார்கள்.
இந்நிலையில், தன் அருமை மகள் ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் மீது தன்னிடத்தில் உதவி பெற்று வாழும் மிஸ்தஹ் அவதூறு பரப்புவதை அறிந்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதையும் பின்னர் நடந்தவைகளையும் கீழ்கண்ட ஹதீஸில் பாருங்கள்;
அபூபக்ர் அஸ்ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்’ என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செலவிட்டு வந்தார்கள்.
அப்போது அல்லாஹ், ‘‘உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்‘‘ எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான்.
அப்போது அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள்.
மேலும், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்’ என்றும் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, எண் 6679)
தன் மகள் விஷயத்தில் அவதூறு கூறியவர் என்ற அடிப்படையில், ஒரு தந்தை என்ற ரீதியில் கோபம் கொண்டாலும், அல்லாஹ்வின் கட்டளை இறங்கியவுடன் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக மீண்டும் மிஸ்தஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அரவணைத்த அபூபக்கர்[ரலி] அவர்கள், பிறரை மன்னிப்பதிலும், இறைவன் தன்னை மன்னிக்கவேண்டும் என்று விரும்புவதிலும் தனது இறையச்சத்தை வெளிப்படுத்திய விதத்தை வர்ணிக்க வார்த்தைகளும் உண்டோ..?
அடைக்கப்படாத அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கான வாசல்!
அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், ‘அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது – இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான்.
அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்” என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுய அதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?’ என்று நாங்கள் வியப்படைந்தோம்.
இறைத்தூதர் தாம் அந்த சுயஅதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் (ரளியல்லாஹு அன்ஹு) அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூபக்ர் (ரளியல்லாஹு அன்ஹு) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள்.
அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராகஇருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன்.
ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர” என்று கூறினார்கள். (ஆதாரம்; புகாரி, எண் 3654)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரண நேர்க்கத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது யாரையும் சந்திப்பதை தவிர்க்கும் வகையில் வாசல்களை அடைக்குமாறு பணித்தபோது அதில் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வருகைக்கான வாசலை அடைக்கவேண்டாம் என கூறி, தனக்கும்-அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தை பறைசாற்றுகிறார்கள் எனில், இறைத்தூதரின் இதயம் கவர்ந்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் எத்துனை மகத்தானவர்கள்!