[ பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, ”புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார்.
எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார்.
ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் ”அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார் இது ஒரு வகை.
இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள்.]
எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே.
எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும்.
எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
முன்னோர் தம் அறிவையும் அனுபவத்தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். ”உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” என்கிறார் ஒரு கவிஞர்.
ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல. அவை உண்மைகளின் ஊற்றுக்கண். புத்துலகு நோக்கி மனிதனை வழி நடத்துபவை. புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறான்.
சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிற கருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிற நூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது. நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்களே. ”நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களே” என்றார் இன்னொருகவிஞர்.
”வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் ஒரு பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும். படையெடுப்பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்க தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோராகவும் விளங்கினார்.
நூல் படிக்கும் பழக்கம்
பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, ”புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் ”அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும்.
புத்தகம் படிக்கிற நல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்ற சிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். ”மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”.
நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.
நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.
இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு. சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந்துணையாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை வாசிப்பு வழங்கும்.
நம்மவர்க்கு நூல்களை விலைபோட்டு வாங்கிப் படிக்கிற பழக்கம் மிகமிகக் குறைவு. படிப்பவர்களிலும் இரவல் வாங்கிப் படிப்பவர்களே மிகுதி. அப்படி இரவல் வாங்கிச் செல்கிற பலர் நூல்களைத் திருப்பித் தருவதே இல்லை. ஒருமுறை ஆங்கில நாடக நூலாசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் பேசும்போது ”புத்தகங்களை இரவலாக வாங்கிச் செல்வோரில் சிலர் திருப்பித் தருவதே இல்லை. என்னிடம் பெரிய நூலகமே உள்ளது. அதில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அப்படி வந்தவையே” என்றாராம்.
தாங்கள் வாங்கிய நூலை மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்கிற தாராள மனம் கொண்டவர்கள் கூட, நாணயமற்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறவர்கள் இரவல் கேட்கும் போது மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அப்படியே நூல்களை இரவல் வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தாலும் அது உருக்குலைந்து கிழிந்து அழுக்காகி வந்து சேரும்.
புற்றீசல் போல புதுப்புது நூல்களும் பத்திரிகைகளும் தினந்தினம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் நமது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வேண்டியவை எவையெவை என்று தேர்ந்தெடுத்து உப்புச் சப்பில்லாத குப்பைகளை ஒதுக்கி விடுகிறதெளிவு வேண்டும். நல்ல நூல்களை மட்டும் வாங்கிப்படிக்க வேண்டும்.
உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார்.
வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை.
எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம்.
புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கிறநிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். என்னைப் பொறுத்த வரை புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை அவ்வப்போது அனுபவிக்கிறேன். ஆழ்ந்து படிக்கிற அத்தனைப் பேருக்கும் இத்தகு அனுபவம் இருக்கும். இதுவும் ஒரு வகைத் தியானம் என்பதில் தவறேதுமில்லை.
புத்தகப் பிரியர்களுக்கு நெஞ்சம் கவர்ந்த நூல்கள் கிடைத்து விட்டால் போதும், எதைப் பற்றியும் இலட்சியம் செய்யாமல் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். பேருந்துகளில், தொடர் வண்டிகளில், பூங்காவின் இருக்கைகளில் இப்படி அமர்ந்து படிக்க இடம் கிடைக்கும் இட மெங்கும் வாசித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடியும்.
source: from டாக்டர். பெரு. மதியழகன், தன்னம்பிக்கை.நெட்