வேதனை யாதெனில், கொள்கைக்கு முக்கியத்துவம் தராமல் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவர்களை மிதமிஞ்சிப் புகழ்தல், இவர்களின் கருத்தும் முடிவும் மாற்றமுடியாதெனக் கருதல் இவ்வாறான தனிநபர் பூஜை அண்மையிற்தான் தப்லீக்கில் தொற்றிக்கொண்ட நோயெனலாம்.
பிரபலங்களின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுபவர்கள் ‘ஜமாஅத் விரோதி’ என ஒதுக்கப்படுகின்றனர். இது மௌலானாவின் தூய்மையான ஏகத்துவ கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டது. தனிநபர் பூசையும் கண்மூடித்தனமான பின்பற்றதலும் இஸ்லாத்தின் தௌஹீத் கொள்கைக்கே வேட்டுவைக்ககூடிய அம்சங்களாகும்.
இது குறித்து மௌலானா அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை நோக்குங்கள்.
”நமது வேலை தீனுடைய அடிப்படை வேலை நமது இயக்கம் உண்மையில் ஈமானுடைய இயக்கம் தற்சமயம் பொதுப்படையாக கூட்டு முயற்சியுடன் நடைபெறும் வேலைகளில் எல்லாம் அவைகளைச் செய்யக் கூடியவர்கள் ஈமானுடைய அஸ்த்திவாரம் உறுதியாக இருப்பதாகக் கட்டடம் கட்டுகின்றார்கள்.” (மழ்பூஜாத் : 92)
சிந்தனைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எல்லாவகை சுதந்திரங்களையும் மார்க்கம் அனுமதிக்கின்றது. மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட எதுவும் விமர்சனத்துக்குட்பட்டவைதான். குதர்க்கவாதம் பேசமுற்படும் இயக்க உறுப்பினர்களை நோக்கி மௌலானா இவ்வாறு சொல்கின்றார்கள்.
”மார்க்க மேதைகள் ஏதேனும் உங்களிடம் கேட்டால் மட்டும் பதில் கூறுங்கள். நீங்களாகவே, அவர்களிடம் பேச்சை வளர்த்து தர்க்கித்துக் கொள்ளாதீர்கள்.” (தப்லீக் தோன்றிய வரலாறு பக்கம் : 76)
உண்மையில் தப்லீக்கின் உன்னதம் குறித்து மௌலானா அவர்களினதும் அவர்களைப் பின் பற்றி இயக்கத்தை வழி நடத்திச் சென்ற மேதைகளினதும் இலட்சிய வேட்கையை முற்றாகப் புறக்கணித்து, ஒரு சடங்கு வாத தப்லீக் அமைப்பைத்தான் இன்று நாம் தரிசிக்க முடிகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டுவந்த சட்டதிட்டங்களை மக்களிடத்தில் கூறுவதும் அதை எடுத்து நடப்பதும் தான் தப்லீக் ஜமாஅத்தின் வேலையின் நோக்கமென மௌலானா கூறுவதை தப்லீக் சிந்திக்க வேண்டும்.
இந்த உம்மத்தை எந்த நிலையில் நபிகளார் விட்டுப் போனார்களோ, அந்த நிலைக்கு இந்த உம்மத்தை உயர்த்துவதற்கு உழைப்பது தான் இப்பணியின் இலட்சியம் என்றார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக இச்சித்தாந்தத்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஓர் இயக்கமாகவே தற்கால தப்லீக் மதிப்பிடப்படுகிறது.
தீன்பணி செய்யும் பிற இயக்க சகோதரகளை இழிவாக நோக்கல், காழ்ப்புணர்வு, இறுக்கமான கருத்துப் போக்கு அத்தஹிய்யாத்தில் விரலசைத்து, நெஞ்சின் மீது தக்பீர் கட்டுகின்ற சகோதரர்களை பள்ளயை விட்டே விரட்டல், அல்லது நோவினை செய்தல், தன் இயக்கத்திற்கு ஒவ்வாத நபர்களை ‘வஹ்ஹாபி பூச்சாண்டி காட்டி மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளில் இருந்து தப்லீக் ஜமாஅத் விடுபடுவதென்பது கடின முயற்சியுமல்ல.
மௌலானா கூறுவதைப் போல ”தப்லீக் வேலையின் நோக்கம் வக்து கொடுப்பது அல்ல” (மல்பூஜாத்: 49) என்பதிலிருந்து இதன் நோக்கம் மனிதனை ஒழுக்க மாண்பு, தூய சிந்தனை, தாராள வாதம், இங்கிதம், அடக்கம், தயாள குணம் போன்ற உயர்நெறயாளனாக பயிற்றுவிப்பதே என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, ‘வக்து’ செல்வதால் ஒருவன் பண்பாளனாக மாறிவிடுகின்றான் எனக் கருத முடியாது. அவன் புறச்சுழலில் ஏற்படுகின்ற தாக்கம் ஈமானியச் சுடர், அகச் சுழலை தூய்மைப்படுத்துகின்றதா என்பதே இங்கு முக்கியம். தப்லீக்கின் இலட்சியம் ‘வக்தல்ல’ மனிதனின் அகமிய எண்ணங்களில், தக்வா வடிவம் கொடுக்க வேண்டும். இதுவே, இந்த வேலையின் குறிக்கோள்.
இஸ்லாம் என்றால் தொழுகை, திக்ர் போன்ற அனுஷ்ட்டானங்களுடன் முற்றுப்பெறுகின்ற மார்க்கம் என்ற தவறான மனப்பிராந்தியை தப்லீக் ஜமாஅத் ஏற்படுத்த முனைகின்றது. இது இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கொள்கைக்கே வேட்டு வைக்கும் முயற்சியாகும். இது இயக்க வழிபாட்டால் ஏற்பட்ட துர்ப்பாக்கியமாகும்.
பொதுவாக மனிதனுடைய பலஹீனம் இரண்டு வகைப்படும்.
1.அடிப்படை விபரங்களை அறியாதிருத்தல்
2. அறிந்திருந்தாலும் அதனைக் குறித்து அலட்சியமாக இருத்தல், அல்லது மறந்து விடுதல் சரியான அறிவு புகட்டாமலும், இயக்கத்தை சரிவர நடத்தாமலும், அழைப்பை சுலபமாக எடுத்துரைக்க முடியும் என்ற அபிப்பிராயத்தாலும் இத்தவறுகள் நடந்து விடுகின்றன.
அத்துடன், இலங்கை தப்லீக், ஜமாஅத், வளைகுடா போன்ற அரபு நாடுகளில், இருந்து வரும், ஜமாஅத்துக்குமிடையே, பெரிய கருத்து முரண்பாட்டை காண முடிகிறது. இந்தியா, பாகிஸ்த்தான், ஜமாஅத்துக்கள், இலங்கை தப்லீக் இயக்கத்தின் தீவிரத்தன்மையிலிருந்து பாதுகாக்கப்பட்ட அமைப்புக்களாக இயங்குகின்றன.
மத்திய கிழக்கிலிருந்து வருகை தரும் ஜமாஅத்தினர், அத்தஹிய்யாத்தில் விரலசைப்பதையும், நெஞ்சின் மீது தக்பீர் கட்டுவதையும் கூட்டுத்துஆ ஓதாமலிருப்பதையும் இங்குள்ள ஜமாஅத்தினர் அலட்டிக்கொள்வதில்லை. அதே நேரம் இலங்கையர் ஒருவர் இதே கிரிகைகளை செய்யும் பட்சத்தில், அதைப் பிரச்சனைக்குரியதாக மாற்றி விடுகின்றனர்.
இவ்வாறான பிணக்குகள் சமூகத்தில் ஏற்படும் போது, மௌலானா நடந்து கொண்ட இங்கிதமான பண்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மௌலானா கூறுகின்றார்கள்.
”….தனி நபர்களுக்கிடையிலும், கூட்டத்தார்க்கிடையிலும் ஏற்படுகின்ற பிணக்குகள் யாவும் அபிப்பிராய பேதங்களாலேயே ஏற்படுகின்றன. அபிவிருத்தியடைகின்றன. முஸ்லீம்களின் சகல கூட்டத்தார்களையும் தீனுடைய வேலையில் ஈடுபடுத்திவும், சன்மார்க்க சேவையே அவர்களின் மேலான நோக்கமாக ஆக்குவதற்கும், அவர்களின் உணர்ச்சிகளும், செயல் முறைகளும் ஒன்று படுமாறு முயற்சி செய்ய நாடுகின்றோம். இந்தக்காரியமே விரோதங்களை அன்பாக மாற்றிட இயலும் இருமனிதரிடையே நேஸபாவத்தை உண்டாக்கி வைப்பதில் எத்துணை பெரிய நற்பயனுண்டு என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (மல்பூஜாத் : 102)
தப்லீக் ஜமாஅத் அவசரமாக புணர் நிர்மானம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகி உள்ளது. அதன் எழுதப்படாத சித்தாந்தங்களை மீள்பார்வைக்குட்படுத்தி, சகோதர இயக்கங்களை அனுசரிக்கும் பண்பினை வளர்ப்பதற்கு உழைப்பதும், அதன் தஃவா வரலாற்றில், புறக்கணிக்க முடியாத அம்சங்களாகும். ஏனெனில் குர்ஆன் கூறுகின்றது. ‘அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளைகளை கொடுக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.’ (அல்குர்ஆன் 2:185)
உடம்பின் தேவைகளைப் பொருட்படுத்தாது அதனைத் துயருறுத்தி ஆன்மாவை தூய்மைப்படுத்தும் முனைவுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் விரும்புவதில்லை. ஆனால் ஏனைய தர்மங்கள், இவற்றைப்போதித்து வருகின்றன. தப்லீக், இஸ்லாம் போதிக்காத இத்தகைய வெற்றுக் கோசங்களையும், உளுத்துப்போன மரபுகளையும் பேணி வருவதுடன், பள்ளியே கதி, அல்லாஹ்வே விதியென ஒரு மந்த வாழ்வை பயிற்றுவிக்கிறது.
குடும்பத்தை ஒழுக்க நெறியில் இட்டுச்செல்ல உழைத்தல், சமூக்கடமை, தார்மீகப்பொறுப்பு, சமூக நலன்களில் பங்கெடுத்தல் போன்ற கடமைகளும் ஓர் ‘இபாதத்’ என்பதை தப்லீக் ஜமாஅத் உணர்ந்து செயற்பட வேண்டும்.
அத்துடன் எந்த ஓர் அமைப்பாயினும் தலைமைத்துவம் என்பது ஒரே அமீரின் கீழ் இயங்கி வருவதுதான் சுன்னாவாகும். உயர்மட்ட ஆலோசனை குழுவுடன் அமீர் தன் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதுதான் மரபு. நபி அவர்கள் காலத்திலும் சரி, பிற்கால கலீபாக்களின் காலமாயினும் சரி இந்த மரபு தான் பேணப்பட்டது. பேணப்பட்டு வருகிறது.
தப்லீக்கின் ஒழுங்கமைப்பில் தற்போது ஐந்துபேர் அமீர்களாக செயற்பட்டு வருகின்றனர். ஏன் விட்டுக்கொடுத்து ஒருவரை தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யக்கூடாது. அத்துடன் ‘அமீர்பதவி’ யில் இருப்பவர்களில் உலமாக்கள், புத்திஜீவிகள் எவரும் நியமனம் பெறவில்லை என்பதும் இங்கு நோக்கற்பாலது. தகுதி வாய்ந்த உலமாக்கள் தப்லீக் ஜமாஅத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து சிலமோட்டுக்குடி, வியாபாரிகளே, அமீர்களாக நியமிக்கப்பட்டு, அம்மரபைத்தான் காலங்காலமாகப் பேணியும் வருகின்றனர்.
இஸ்லாமியப் பிரச்சார இயக்கமொன்றிற்கு தலைமை தாங்கும் ஒருவருக்கு ஷரிஆவின் நுனுக்கமான சட்டதிட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். குர்ஆனுடனும், நபிமொழியுடனும் ஆழமான பரிச்சயம் வேண்டும். கடந்த கால, நிகழ்கால பிக்ஹ் சட்டவாக்கம் வரலாற்று நிகழ்வுகள் தேசிய சர்வதேச, நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் பேராற்றல் இவை எல்லாம் ஒருங்கே பெற்ற ‘தக்வா’ உள்ள ஒருவர் தான் தலைமைக்கு தகுதியானவர் இவ்வனைத்து தகுதியினையும் இழந்த ‘லேபல், அமீர்கள் தான் தப்லீக்கை தற்போது இழுத்துச் செல்கின்றனர்.
குறைந்த பட்சம் மஹல்லாக்களில் அமீராக இருப்பவர், நான்கு மாதம், அல்லது ஒரு ‘சில்லா’ (40 நாள்) முடித்தவராக இருக்க வேண்டுமென தப்லீக்கின் உயர்மட்டம் எதிர் பார்க்கின்றது. இதனால் அதிருப்தியுற்ற உலமாக்கள் தப்லீக்கை விட்டும் நழுவி, அதை விமர்சிக்கக்கூடியவர்களாக மனம் சோர்ந்துள்ளனர்.
அமீர் என்பவர் வெறுமனே இயக்கத்தை வழிநடத்தும் இழுவை மாடல்ல: அவரிடமிருந்து, சமூகத்திற்கு பல அரிய பணிகளை இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. ‘நவீன உலகுடன் ஒன்றி தஃவாவை செப்பனிடவியலா புராதன சிந்தனைப் போக்குடன் தான் தப்லீக்கின் அமீர் சாஹிப்புகள் இவ்வியக்கத்தை வழிநடத்திச் செல்கின்றனர்.
தஃலீத் தொகுப்புத் தவிர்ந்த பிற இஸ்லாமிய அறிஞர்களின் நூற்களைப் படிப்பதைக்கூட தடை விதிக்கும் சில பொறுப்பதிகாரிகள் இங்கு இல்லாமலில்லை. எனினும் ஆரம்ப கால தப்லீக் ஜமாஅத்தினரிடம் தீனை விளங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. 1970 இல் இலங்கை வந்த பெங்களுர் இப்ராஹீம் மௌலானா அவர்கள் ஒரு ரமழானின் ஒவ்வொரு நாளும் சுபுஹுத் தொழுகையின் பின் வேகந்தபள்ளியில் குர்ஆன் விளக்கம் செய்தார்கள். 1962 இல் மக்க் சென்ற ஸஈத்கான் மௌலானா மக்கா ஹரம் சரீபில் பிரதி அஸர் தொழுகையின் பின் குர்ஆன் வியாக்கினம் செய்துவந்தார்கள்.
ஆனால் இன்றைய தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கு குர்ஆன் விளக்கவுரை ஹதீஸ் தெளிவுரை வகுப்புக்கள் என்றாலே அலர்ஜியாக இருக்கின்றது, என்பதுடன் அவ்வாறு செய்பவர்களும் கடுமையாக தாக்கப்படுகின்ற அவலத்தையும் நாம் இலங்கையில் நிதர்சனமாகக் காண்கின்றோம் சகோதர இயக்கமொன்றின் எத்தகைய சொற்பொழிவுகளையும் செவிமடுக்கக் கூடாதென்ற இறுக்கமான விதிகளும் சில தாயிகளிடம் வேரூன்றியுள்ளது. இவற்றின் மூலம் இஸ்லாத்தை சரிவரப்பின்பற்ற முனையும் ஒருவனிடம் ஆர்வத்தை முடக்குவதுடன், மீறிப்போவோர்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தப்லீக் தன்னிடமுள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள், ஆதரவாளர்களை நிரூபித்து தனது தவறான செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முனைவதானது, கண்டிக்கப்பட வேண்டிய அம்சமாகும். குர்ஆன் கூட பெரும்பான்மையை கண்மூடித்தனமாக பின்பற்றுவோரை கண்டித்து எச்சரிக்கை விடுக்கின்றது. 2:243, 7:187, 11:17, 3:110, 5:103, 6:11 போன்ற இன்னும் அனேக வசனங்களிலும் இறை கோபம் தொனிப்பதை படித்துணரலாம்.
உண்மையில் இஸ்லாமிய பண்பாட்டினையும், அதன் கலாச்சார விழுமியங்களையும் ஆத்மீக லௌகீக வரையறைகளையும், இன்னும் தப்லீக் ஜமாஅத் உணராதிருப்பது வேதனைக்குரியது. இஸ்லாம் குறித்த மேலெழுந்த சிந்தனைப் போக்கே இந்நெறி பிறழ்வுக்கு காரணமெனலாம். எனவே தப்லீக் புணரமைக்கப்படுவதற்கு முன், அதன் தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆரோக்கியமான தீர்மானத்திற்கு வரவேண்டும். தலை சிறந்த உலமாக்கள் இஸ்லாமிய தஃவாத்துறையில் அனுபவமும் பாண்டித்தியமும் பெற்ற புத்தி ஜீவிகள், மூலமாக இம்மாற்றம் நிகழவேண்டும்.
இன்னும் தெளிவாகக்கூறின், தூய்மையான தீன் செழிக்க தகுதி வாய்ந்த உலமாக்கள் கொண்ட ‘மஸுராசபை’யே தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். வழி தவறிச் செல்லும் தப்லீக் ஜமாஅத்தை நெறிப்படுத்த இது ஒன்றுதான் உகந்த வழியெனப்படுகின்றது.
மக்களின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி சத்தியத்துடன் அசத்தியத்தைக் கலந்து விற்கும் மட்டரக சரக்காக தப்லீக்கை சில மேட்டுக்குடி உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எதேச்சதிகாரப் போக்கையிட்டு மௌலானா அவர்கள் மனங்குமுறுவதை இவர்கள் கவனிக்க வேண்டும்.
ஆரம்ப விஷயங்களை இறுதியென்றும் வழிவகைகளை குறிக்கோள்கள் என்றும் அந்தஸ்து அளிக்கப்படுகிறது. ஆழ்ந்து நோக்குவார்களாயின் தீனுடைய சர்வகிளைகளிலும் இந்த தவறு நுழைந்து விட்டிருக்கிறது என்பதும் இதுவே ஆயிரக்கணக்கான தீமைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதும் விளங்கும். (மல்பூஜாத்: 104)
இதே தொடரில் மௌலானா கூறுவதைக் கவனிக்க வேண்டும். குர்ஆன், ஹதீதின் கருத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைக்கேற்ப விளங்கிக் கொள்ள முயற்சிக்கப்பட்டால் இன்ஷா அல்லாஹ் ஒருபோதும் தவறான விளக்கம் ஏற்பட்டுவிடாது. (பக்கம்: 105)
இன்று தவறான விளக்கங்களாலேயே தப்லீக் பரிணாமம் பெற்று வளர்கிறது. இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தோற்றுவித்த தூய்மையான தப்லீக்பணி சந்தர்ப்பவாதிகளின் கைபட்டு அதன் பெறுமானத்தை இழந்து நிற்கின்றது. சுயநலமிகளும் வன்முறையாளர்களும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுமாக அதன் சடங்கு ரீதியான வடிவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. இங்கு வலியுறுத்தவிரும்புவதெல்லாம் தப்லீக் பழமைக்குத்திரும்ப வேண்டும் என்பதே!
பழமை என்பது மௌலானாவின் காலத்தில் எந்த உயிர்ப்பு நிலையில் பிரகாசித்ததோ, அந்த இயல்பான நபிவழிக்குத்திரும்ப வேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்க வேண்டும். தஃலீம் தொகுப்பை பரிசீலித்து தூய்மையான நபிமொழிகளும் உணர்வுட்டும் ஸஹாபாக்களின் கலப்பற்ற வரலாறும் இணைக்கப்பட வேண்டும். பிற அறிஞர்களின் நூற்களை படிப்பதுடன் அது பற்றிய விவாதம் கருத்துப் பரிமாற்றம் என்பனவும் நிகழவேண்டும். தஃலீம் தொகுப்புக்கு குர்ஆனிய அந்தஸ்த்து வழங்கப்படுவதை விடுத்து, அதன் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதில் தவறுகள் உள்ளதாக தப்லீக்கின் முக்கிய உலமாவான ரிஸ்விமுப்தியே ஏற்றுக் கொண்டுள்ளதை, ஜமாஅத்தினர் கவனிக்க வேண்டும்.
”Jazaakallaahu khairan” – வான்சுடர்
வாசகர் ஒருவரின் கருத்து:
‘தப்லீக்’ சேவையின் நன்மைகள்; சீர்திருத்தங்கள் பற்றி யாரும் மறக்கவும் இல்லை- மறுக்கவும் இல்லை. ஆனல், தற்பொழுது ‘பயான்களில்’ த அலீம்’ களில் துறவறம் தூண்டப்படுகின்றது.
அதற்கு காரணம்: ‘பக்குவமற்றவர்கள்’ ‘உலகப் பொது அறிவுப் பற்றாக்குறையுள்ளவர்கள்’ ஆகியோரின் பயான்களின் பின்விளைவுகளே. இவற்றை களைய வேண்டும் என்பதாலே அபூஅப்துல்லாஹ், ‘பீஜே’ போன்றோரெல்லாம் அமீர்களாக இருந்து இருந்தும் அதிலிருந்து விலகி அங்கு காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டத் தலைப்பட்டனர். இங்கு வெளியாகியுள்ள ‘தப்லீக் அன்றும் இன்றும்’கட்டுரை ஆசிரியரும் ஓர் இமாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்களைத் தாங்கும் ‘பக்குவம்’ இல்லாதவர்கள் ‘தப்லீக்’ இயக்கத்தில் நிறைய பேர் உளர் என்பதும் நான் கண்ட உண்மை. அதனால் தான் ஹதீஸ்களின் ஆதாரங்களைக் கூறுவதையோ கேட்பதையோ மறுக்கின்றனர். படிப்பைத் துறந்த மாணவர்கள்; வணிகத்தை மறந்த வியாபாரிகள்; மனைவி மக்களை மறந்து விட்ட குடும்பத் தலைவர்கள்- இப்ப்டியாக ‘மூளைச் சலவைக்கு’ப் பலியாக்கப்பட்டு பின்னர் உண்மையான ‘தீன்’ எது வென்று உணர்ந்து அவர்களே அனுபவத்தால் திருந்தி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களாகவும்; அதிகம் செல்வம் ஈட்டி தான தர்மம் செய்யும் வியாபாரிகளாகவும்; மனைவிக்கு உரிய மகத்தான சுகத்தைத் தரும் கணவாணகவும்- மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகப்பனாகவும் வாழ்த் துவங்கிவிட்டனர் என்பதும் ஊர் தோறும் நாம் காணும் உண்மைச் சம்பவங்கள்.