[ மூன்று விஷயங்களை அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கிறான். அவை:
1. (இன்னார்) சொன்னார், (இப்படி) சொல்லப்பட்டது, என்று சொல்வதையும்,
2. பணத்தை வீணாக அழிப்பதையும்,
3. அதிகமாகக் கேள்வி கேட்பதையும், என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இதில் வெறுக்கப்பட்ட, முதலாவது விஷயம் தப்லீக் ஜமாஅத்தினரால் போற்றப்படும் பண்பெனக் கொள்ளலாம். அவர் சொன்னார், இவர் சொன்னார், ஒரு பெரியார் கூறினார், சொல்லப்பட்டது என்ற இறை வெறுப்பு வாசகங்களை தமது பயான்களில் ஒரு விதியாகவும், நழுவல் போக்காவும், தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். நபிவழியே நம் வழி என்ற சித்தாந்தத்தில் உழைக்கும் ஓர் இயக்கம், அந்த நபியை இழிவுப்படுத்துமாற் போல், அவர் சொல்லாத செய்யாத விடயங்களை, ‘பிரபல்யமான’ பெயரில் செய்து வருவதை சர்வசாதாரணமாக அவதானிக்கலாம்.
உண்மையில் தப்லீக்கின் உன்னதம் குறித்து மௌலானா அவர்களினதும் அவர்களைப் பின் பற்றி இயக்கத்தை வழி நடத்திச் சென்ற மேதைகளினதும் இலட்சிய வேட்கையை முற்றாகப் புறக்கணித்து, ஒரு சடங்கு வாத தப்லீக் அமைப்பைத்தான் இன்று நாம் தரிசிக்க முடிகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டுவந்த சட்டதிட்டங்களை மக்களிடத்தில் கூறுவதும் அதை எடுத்து நடப்பதும் தான் தப்லீக் ஜமாஅத்தின் வேலையின் நோக்கமென மௌலானா கூறுவதை தப்லீக் சிந்திக்க வேண்டும்.
இந்த உம்மத்தை எந்த நிலையில் நபிகளார் விட்டுப் போனார்களோ, அந்த நிலைக்கு இந்த உம்மத்தை உயர்த்துவதற்கு உழைப்பது தான் இப்பணியின் இலட்சியம் என்றார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக இச்சித்தாந்தத்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஓர் இயக்கமாகவே தற்கால தப்லீக் மதிப்பிடப்படுகிறது.]
[‘தப்லீக் சகோதரர்களே! ஆறு நம்பருக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் படியுங்கள்’ என்றார்கள். இந்த அறிவுரையை அமுல் படுத்த தப்லீக்கின் உறுப்பினர்கள் தயாரில்லை என்பதுடன் ஆறு நம்பர் என்ற பங்கருக்குள் விழுந்து, மூர்ச்சையுறும் ‘லேபல் தீன் தவளைகளாகவே இறுதிவரை இருப்போம் என பிடிவாதமாகவும் இருக்கின்றனர். அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமை இரவு தோறும் பிரதேச ரீதியான ‘ஜுமேராத்’ இரவுகளில் அங்கு குழுமியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு எத்தகைய செய்தி சொல்லப்படுகின்றது என்பதையும் நோக்குவது சிறந்தது. உண்மையில் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட கப்சாக்களும் கீறல் விழுந்த ஒலிப்பேழையாய் தூசிதட்டிய ஆதிகாலப் புராணங்களுமே, அங்கு மீட்டப்படுகின்றது. (சில உலமாக்களின் சொற்பொழிவு தவிர) அந்த இரவுகளில் வந்து கூடும் சமூகத்திற்கு தப்லீக் புதிதாக எத்தகைய அறிவையும் தேடலையும் கொடுப்பதில்லை என்பதுடன் அத்தகைய ஒன்று கூடலில் தான் சகோதர இயக்கங்களுக்கெதிராக சதியாலோசனைகளும் சிலரால் தீட்டப்படுகின்றது.
சுன்னத் என்றவுடன் குறிப்பிட்ட நடை, உடை, பழக்கவழக்கங்கள்தான் என்ற மாயையிலிருந்து விடுபட வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.]
(நபியே) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக! அன்றி அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். நேரான வழியிலிருப்போர் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான் (16:125)
தஃவாப் பணி என்பது இஸ்லாத்திற்கு புதிதல்ல. இது அண்மைக்காலமாக ஆரம்பிக்கப்பட்ட வேலையுமல்ல. நபிமார்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட பரியந்தம் தனிநபராகவும், ஜமாஅத்தாகவும் இப்பணி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மறந்துபோன இத்தூதுத்துவச் செய்தியை மனித சமூகத்திற்கு நினைவூட்டி, இறைவழியில் நெறிப்படுத்த, காலத்திற்கு காலம் தனிநபர்களும் இயக்கங்களும் நிறுவன ரீதியாக தோன்றி செயற்பட்டு வருகின்றன.
தற்போது தஃவாப்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள இயக்கங்களும் எதிர்காலத்தில் தோன்றவிருக்கின்ற அமைப்புக்களும் முஸ்லிம் உம்மத்திற்கு புதியதுமல்ல. சிறிய கருத்து வேறுபாடுகள், சந்தர்ப்ப சூழல் என்பன காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் காலத்துக்கு காலம் பல இயக்கங்களும், அமைப்புக்களும் தோன்றுவதுண்டு. இவற்றில் அல்லாஹ்வுக்காக தோற்றுவிக்கப்பட்டவை மட்டுமே நின்று பிடிக்கும். ஏனையவை அல்குர்ஆன் கூறுவது போல் களங்கம் ஏற்படுத்திவிட்டு மறைந்து விடும்.
அழகான ”தங்கள் இதயங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களின் இதயங்கள் துண்டு துண்டாகும் வரை அவற்றை உறுத்திக் கொண்டே இருக்கும்”’.
இப்பணியில் மனத்தூய்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வெற்றிகண்ட மேதைகளின் வரலாறு தற்கால தாயிகளின் மன வலிமைக்கும் உத்வேகத்திற்கும் உரமூட்டுவதாய் உள்ளது. அவர்களின் தூய சிந்தனை, விடா முயற்சி, தாராள மனப்போக்கு, மென்மையான அணுகுமுறை, அக புறவாழ்வின் மாசுவறுவற்ற தொழிற்பாடு, இறையச்சம் போன்ற உயர் குணங்கள் அவர்களின் வெற்றிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டது.
சமூகத்தில் கொள்கை ரீதியாக ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மிகச்சில. ஏனையவை தனிப்பட்ட நோக்கங்கள் உடையன. ஆனால் ஆரம்பத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் நாளடைவில் அவற்றுக்கென்று சில கொள்கைகளை வளர்த்துக் கொள்வதுண்டு. இதனால் சில சந்தர்ப்பங்களில் அவற்றால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கவும் முனைவதுண்டு. உண்மையில் இவ்வித கருத்து வேறுபாடுகளும் அமைப்புக்களும் அடிப்படையிலேயே கொள்கை ரீதியானவைகளாக அமைந்திருக்குமானால் அவை ஒவ்வொன்றும் தனித்துச் செயற்பட துணிந்திருக்காது. மாறாக ஏற்கனவே உள்ள இயக்கங்கள் அமைப்புக்கள் என்பவற்றில் மிகவும் பொருத்தமான ஒன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கும்.
கடந்த நூற்றாண்டில் சத்திய இஸ்லாத்தை சரிவரப்புரிந்து செயல்வடிவம் கொடுத்து உழைத்தவர்கள் பலர். அவர்களில் மௌலானா இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி, மௌலானா அபுல்அஃலா மௌதூதி, ஹஸனுல் பன்னாஹ் போன்ற மேதைகளை குறிப்பிடலாம். எனினும் பாமர மக்களை நெறிப்படுத்தி அவர்களிடத்தில் இஸ்லாத்தின் அடிப்படை விழுமியங்களை பயிற்றுவித்ததில் மௌலானா இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் (ஹி 1303௧363) முதன்மை பெறுகின்றார்கள். தப்லீக்கின் வளர்ச்சியை ஆய்வுசெய்வோர் இவ்வுண்மையை புரிந்து கொள்ள முடியும்.
‘தரீகே ஈமான்’ என்ற பெயரில் இவ்வியக்கத்தை ஆரம்பித்த மௌலானா 1939 இல் தப்லீக் ஜமாஅத் என்ற பெயர் மாற்றத்தோடு மேவாத் பகுதியில் அத்தீவிர ஈடுபாட்டுடன் உழைக்கலானார்கள். இதுபற்றி மௌலானா இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடும் போது…..
….’இஸ்லாமிய சேவையில் பொதுமக்களையும் ஈடுபடுத்தி, அவர்களையும் இப்பணியில் பக்குவப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்ட இப்புதிய திட்டத்திற்குத்தான் ‘தப்லீக்’ என்று பெயர். இத்திட்டத்தை ஆதரித்து அமுல்படுத்துவதற்காக முன் வரக்கூடிய சகோதரர்களுக்கு தப்லீக் ஜமாஅத் என்றும் சொல்லப்படுகிறது.’
நூல்: மௌலானா இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி, பக்கம்: 24 பதிப்பு: 1955
இப்பணியில் முதற்கட்ட நடவடிக்கைகளை காந்தலா என்ற பின் தங்கிய கிராமத்தில் இருந்து ஆரம்பித்து நெறிப்படுத்திய பின் அயற்கிராமங்களுக்கும் பிராச்சாரப் பணியை விஸ்த்தாரமாக்கினார்கள்.
தனது இருபது வருடகாலப் பணியில் இதன் வெற்றிக்கு துணையாக உலமாக்களையும் கற்றறிந்த அறிஞர்களையும் அரவணைத்து அவர்களின் வழிகாட்டலின் கீழ், இப்பணியை செய்ததாக மௌலானா அவர்களே வாக்குமூலம் தருகிறார்கள்.
”….மதக்கல்வி கற்ற உலமாக்களை இவ்வியக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளச் செய்தால் தான் இவ்வியக்கம், பொது மக்களிடையே பரவி முன்னேற்றமடையும்…” (நூல்: மௌலானா இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி, பக்கம் : 64)
மௌலாவின் இந்த அபிலாஷை, இலட்சிய வேட்கை, ஆகியவற்றை தற்கால தப்லீக் ஜமாஅத்தினர் அலட்சியப் படுத்துவதுடன், உலமாக்கள், தூய்மையான தீனை முன்வைக்கும் போது, அவற்றைப் புறக்கணிப்பதுடன், எதிராக செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இயக்கத்தின் உயர் வெற்றிக்குத் தகுதிவாய்ந்த உலமாக்களின் அணுசரணை கவனத்திற் கொள்ளப்படாமையும் பிரதான காரணமெனலாம்.
இயக்கத்திற்குள் தற்போது இருக்கும் சில உலமாக்கள் மேட்டுக்குடியினரின் தீர்மானங்களுக்கு தலையாட்டுபவர்களாகவும், தப்லீக் ஜமாஅத்தின் தவறுகளையும் வன்முறைசார் பண்புகளையும் அனுமதித்து, தார்மீக அங்கீகாரத்தை வழங்கக் கூடியவர்களாகவுமே இருக்கின்றனர். இவ்வுயர் இயக்கத்தின் இலட்சியக் கொள்கையை மௌலானா அவர்கள் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்.
”…தப்லீக் இயக்கமானது மக்களை தொழுகைக்கு மாத்திரம் அழைக்கக் கூடிய இயக்கமென்று சிலர் நினைக்கிறார்கள். அறியாமை, அந்தகாரம், மௌடீகம், பிற்போக்கு, முதலியவைகளால் சீரழிந்து கிடக்கும் முஸ்லீம் சமுதாயத்தை தட்டி எழுப்பி, இஸ்லாத்தின் உணர்ச்சியும் ஈமானின் ஜோதியும் ஆத்மீக சக்தியும் நிறைந்த வளங்கள் கூடிய ஒரு சிறந்த சமுதாயமாக சிருஷ்டிப்பதே தப்லீக் இயக்கத்தின் உயர்ந்த இலட்சியமாகும்” (மௌலானா இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி, பக்கம் : 83)
தப்லீக் இயக்கத்தின் அதிஉயர் சாசனமாக இப்பிரகடனம் முழங்குகின்றது. எனினும் ஜமாஅத்தினரால் மேற்கூறிய எந்தப் பணியும் பிரச்சாரப்படுத்தப்படுவதில்லை. தொழுகைக்கு அழைப்பது, இன்னும் பிற ஆத்மீக பயிற்சி என்பதுடன் தஃவாவை மட்டுப்படுத்தி வருகின்றனர்.
தப்லீக் ஜமாஅத்தின் மூலவேர் பாமரர்கள் தான். பள்ளிவாயிலை பிரதான தளமாகக் கொண்டியங்கும் இவர்களால் மூடிக்கிடந்த பள்ளிகள் அமல்களால் அலங்கரிக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மனந்திருந்தி வாழ தப்லீக் அரிய பங்களிப்பை நல்கியது. நல்கி வருகின்றது. ஐங்கால தொழுகை உட்பட, இன்னும் பிற மங்கிப் போன சுன்னத்துக்களும் உயிர் பெற்றன. தனது சொந்தப் பணத்தில் பாகுபாடின்றி கிராமந்தோறும் அலைந்து திரிந்து மக்களை இறை இல்லத்தின்பால் அழைத்து, தக்வாவையும் பக்குவத்தையும் ஊட்டியது.
படிப்பறிவே இல்லாத பலர் சிறந்த இஸ்லாமிய தாயிகளாக உருவாக்கியதில் அபரித வெற்றி கண்டது தப்லீக், இவற்றை எவரும் மறுத்து விடமுடியாது. எனினும் இப்பணிகள் மட்டும் தான் இஸ்லாம் என்ற மாயையில் தஃவாவை சுருக்கிக் கொண்டது தான் வேதனைக்குரியது.
தப்லீக் சரியான விதத்தில் பரவவேண்டுமானால் கீழ் கண்ட திட்டங்களை அமுல் நடத்த வேண்டியது அவசியமென மௌலானாவே வாக்கு மூலம் தருகின்றார்கள்.
1. தப்லீக் இயக்கத்தின் திட்டங்களை பிரச்சாரம் செய்வதற்கு சிறந்த பேச்சாளர்களை, உலமாக்களை தயார் செய்து அவர்கள் மூலம் தப்லீக் பிரச்சாரம் செய்தல்.
2. தப்லீக் இயக்கத்தின் நோக்கங்களை அறிவிப்பதற்காக குறைந்த பட்சம் ஒரு சிறந்த வாரப்பத்திரிகையை நடத்துதல். (பக்கம் : 128)
இந்த இலட்சியத்துடன் இன்றைய தப்லீக் முரண்பட்டு நிற்கிறது. சஞ்சிகை, புத்தகம், பத்திரிகை மூலமாக தஃவாச் செய்வோரை தமது பயான்களில் சிலர் பரிகஷிப்பதும், அவற்றினால் பயனில்லை என்பதுடன் நின்று விடாமல், அவற்றை படிக்க தடை விதிப்பதையும் சில பிரதேசங்களில் அவதானிக்க முடிகின்றது.
ஓர் இயக்கமோ அமைப்போ நீண்ட காலம் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் போது அதன் இலக்கு நோக்குடன் மற்றவையும் கலந்து விடுகின்றன.
பல்வேறு நோக்கங்கள், எண்ணங்கள் அதனுள் புகுந்து விடுகின்றன. எனவே இயக்கத்தின் உடல் எஞ்சி நிற்க, அதன் உயிரோட்டம் காணாமல் போய்விடுகின்றது.
அதன் அமைப்பு விதிகளில் குறிக்கோளும் இலகும் தெளிவான வார்த்தைகளில் காணப்படும். அதேவேளை நடைமுறை வாழ்விலிருந்து அது அழிந்து விடுவதை அவதானிக்கலாம். இத்தகைய பாரிய அழிவை நோக்கியே தப்லீக் ஜமாஅத் சென்று கொண்டிருக்கிறது.
வெறும் கொள்கை முழக்கம், புறத்தோற்றம் மாற்றம், ‘வக்தில்’ செல்லுதல், தினசரி அமல்களில் ஈடுபடல் மட்டும் தான் தப்லீக் என்ற பிரமை அதன் அடிமட்ட, ஏன் சில உயர் மட்ட உறுப்பினர்களிடம் கூட, வேரூன்றி உள்ளது.
ஒரு கருத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட சொல்லை, மிக அதிகமான மக்கள் கையாளும் போது அந்த சொல்லின் கருத்துக்கள் நாளடைவில் தேய்ந்து போகின்றன. தப்லீக்கிற்கும் இவ்வபாயம் தான் ஏற்பட்டிருக்கின்றது. நீண்ட கால உழைப்பில் கட்டியெழுப்பப் பட்ட, இஸ்லாமிய இயக்கமொன்று வெறும் சடங்கு வாத சிந்தனைகளால் சிக்குண்டு, திணறுகின்றது. தனிப்பட்ட மனிதர்கள் தப்லீகில் தம் தனித்தன்மையை வளர்த்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தப்லீக் ஏகாதிபத்திய வாதிகளாகவும், தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள, தமது செயற்பாடுகளை நியாயப்படுத்த கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
மேலும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தில் வேரூன்றி வருகின்ற அபாயகரமான வியாதியாக ‘ஜமாஅத்துவாதத்தை’ குறிப்பிடலாம். சகோதர தஃவா இயக்கங்களை அடக்கி ஒடுக்க நினைப்பதும், அவர்களின் தஃவா நடவடிக்கைகள் பள்ளிவாயலை மையமாகக் கொண்டு செயற்பட தடை விதிப்பதும் வெள்ளிடை மலை. (சில இடங்களில் விதிவிலக்கு) சகோதர இயக்கமொன்றின் அனுகூலங்களை விடுத்து, குறைபாடுகளை மட்டும் விமர்சிக்கும் பண்பு தப்லீக் தவிர்ந்த பிற இயக்க உறுப்பினர்களிடமும் காணப்படுகின்ற பொதுக்குணமென்பதையும் ஈண்டு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இது இயக்கத்தை வணங்குவதன் உச்சக்கட்ட எதிர்வினையாகும். நாங்களே சரி, எங்கள் ஜமாஅத்தே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டதென்றமுடிவுக்கு ஜமாஅத்துவாதிகள் வருவதற்குக் காரணம் மேல் மட்ட தலைமைத்துவம். இது குறித்து சரியான அறிவுறுத்தல்கள் கலந்துரையாடல்களை ஏற்படுத்தாமையே! சகோதர இயக்கமொன்றுடன் கருத்துப் பரிமாற்றம் அல்லது அவர்களுடன் இணைந்து இஸ்லாத்தின் பொது விரோதிகளை எதிர்ப்பதில் ஒத்துழையாமை போன்ற இன்ன பிற செயற்பாடுகளால், தப்லீக் பிற இயக்கங்களுடன் தனக்குள்ள ஒவ்வாமையை வெளிப்படுத்துகின்றது.
இவ்வராஜரகப் போக்கு மௌலானா இல்யாஸ் அவர்களின் காலப்பிரிவில் வாழ்ந்து பாமர ‘ஜமாஅத்து வணங்கி’களிடமும் ஏற்பட்டது. எனினும் மௌலானா அவர்கள் அவற்றை எங்கனம் எதிர்கொண்டார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
”தப்லீக் இயக்கத்திற்கும் ஜமா அத்து இஸ்லாமிய இயக்க அங்கத்தினர்களுக்குமிடையே ஒரு பிளவு ஏற்ப்பட்ட போது, மௌலானா அவர்கள் ஒழுங்குபடுத்தி ஒருவர் மீது ஒருவர் பாஸத்தோடும் பரிவோடும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள்”. (பார்க்க: மௌலானா இல் பக்கம்: 101)
மௌலானாவிற்குப் பின் தப்லீக் பணிசெய்த புரிந்துணர்வற்ற பாமரரும் சில இயக்க எழுத்தாளரும் இப்பணியின் மகிமையையும் தாற்பரியத்தையும் சிதைக்க முற்பட்டதுடன் இயக்க வேறுபாட்டையும் தோற்றுவித்தனர்.
”இப்பணியில் ஈடுபடாதவர்கள் மிகவும் கேவலமாகக் கருதப்பட்டார்கள். சுருங்கக் கூறுமிடத்து, அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப்படாது போய் விட்டார்கள்”. மேற்படி நூல் பக்கம்: 89.
என்றெல்லாம் எழுதி ஜமாஅத்துவாதம் வேரூன்றி வித்திட்டனர். இவ்வன்முறை சிந்தனைப் போக்குக் குறித்து மௌலானா அவர்கள் கூறுவதை நோக்கற்பாலது.
”…..எங்கு மக்களின் ஒத்துழையாமையும், வெறுப்பும் தெரிய வருமோ அங்கு அவர்களை நிரபராதிகள் என்று ருசுப்படுத்துவதற்காக அவர்களைப்பற்றி நல்ல வார்த்தை கூற வேண்டும். இன்னும் சன்மார்க்கம் பயனடையவும், அனுகூலங்களை அடையவும் எண்ணங்கொண்டு அவர்கள் சமூகத்திலே செல்ல வேண்டும்”. (மணிமொழிகள் பக்கம்: 91)
எந்த ஓர் இயக்கமாயினும் அதன் ஸ்தாபகரையும் அவருடன் தோள்நின்று உழைத்தோரையும் புகழ்வதென்பது தவிர்க்க முடியாதது. எனினும் துரதிஷ்ட வசமாக தப்லீக் ஜமாஅத்தினுள் குருபூசை ஊடுருவி, அவர்கள் அறியாமலேயே, ஈமானின் கோட்பாடு அம்சங்களை சிதைத்துக் கொண்டிருக்கின்றது. மகான்கள், பெரியோர்கள் என்ற மாயைக்குள் அகப்பட்டு அவர்களின் மூலம் நடைபெற்றதாக இட்டுக்கட்டப்பட்ட சித்து விளையாட்டுக்களையும் கதை கப்ஸாக்களையும், அவிழ்த்து விட்டு, பயான்களில் ஹக்குடன், ‘பாதிலை’ இரண்டறக்கலந்து, வெறும் ஊகங்களுக்கும், வெளிக்கலாச்சார கப்பாஸ்களுக்கும், இஸ்லாமிய வடிவம் கற்பிக்க முயல்கின்ற தான் தோன்றித்தனமான, தீவிர போக்கையிட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிந்திக்க வேண்டும்.
மார்க்கத்தை பிரச்சாரப்படுத்த பொய்யும், புரட்டும் கற்பனைக் கதைகளும் தேவையில்லை. எண்ணிலடங்கா தூய்மையான வரலாறும், நபிமொழிகளும் நம் வசமுண்டு. நபிகளார் கூறுவதை பாருங்கள்.
”உங்களை நான் மிக வெண்மையான வழியில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்று வெளிச்சம் நிறைந்தது. எனக்குப் பின் நான் விட்டுச் சென்ற அந்த வழியை விட்டும் வழி தவறுகிறவன் தான் நாசமாகக் கூடியவன் என்கிறார்கள்”. (இர்பான் இப்னுஸாரியா, இப்னுமாஜா)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் சொல்லாததைச் சொன்னதாக எவன் சொல்லுகிறானோ அவன் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.’ என்று நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
”நபியவர்கள் சொன்னார்கள், இது ஸஹீஹானரிவாயத்’, என்று அப்பட்டமான போலி ஹதீதுகளையும், ‘மௌலுஆன’, நபிமொழிகளையும் மிக அழுத்திப் பிரசங்கம் செய்து வரும், தப்லீக் ஜமாத் நபிகளாரின் இன்னொரு எச்சரிக்கையையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
மூன்று விஷயங்களை அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கிறான். அவை
1. (இன்னார்) சொன்னார், (இப்படி) சொல்லப்பட்டது, என்று சொல்வதையும்,
2. பணத்தை வீணாக அழிப்பதையும்,
3. அதிகமாகக் கேள்வி கேட்பதையும், என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இதில் வெறுக்கப்பட்ட, முதலாவது விஷயம் தப்லீக் ஜமாஅத்தினரால் போற்றப்படும் பண்பெனக் கொள்ளலாம். அவர் சொன்னார், இவர் சொன்னார், ஒரு பெரியார் கூறினார், சொல்லப்பட்டது என்ற இறை வெறுப்பு வாசகங்களை தமது பயான்களில் ஒரு விதியாகவும், நழுவல் போக்காவும், தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். நபிவழியே நம் வழி என்ற சித்தாந்தத்தில் உழைக்கும் ஓர் இயக்கம், அந்த நபியை இழிவுப்படுத்துமாற் போல், அவர் சொல்லாத செய்யாத விடயங்களை, ‘பிரபல்யமான’ பெயரில் செய்து வருவதை சர்வசாதாரணமாக அவதானிக்கலாம்.
இதில் வேடிக்கை என்னெவென்றால் விற்காத சரக்கிற்கு விளம்பரம் தேடமுனைவது போல், நியாஸ் மௌலவி, ரிஸ்விமுப்தி போன்ற பிரபலங்களை சொல்லி கப்சாக்களை அவிழ்த்து விடுவதுடன், இந்த இயக்கத்தில் டொக்டர், என்ஜினியர் போன்றோரும் இணைந்துள்ளனர் எனத்தனிநபர் துதிபாடி ஆள் சேர்ப்பதும், ஓர் அம்சமாகி விட்டது. இல்யாஸ் ரஹ் அவர்களின் தஃவாப்பணியை நுணுகிப்படிக்கும் எவரும் இத்தகைய இழிபண்பினையையும், விளம்பரத்தையும் கண்டு கொள்ளல் சிரமமென்பதையும் காணலாம்.
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ‘‘கிளிக்” செய்யவும்