பர்தாவை தடை செய்யலாமா?
முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு பெயரே பர்தா தடை. பிரான்ஸ் சொல்வது வெறும் சப்பை காரணம்: மதசார்பின்மை. உண்மையில் இத்தகைய ஒரு தடைச்சட்டம் மதசகிப்பின்மைக்கே வழிவகுக்கும்.
அடுத்து ஜனாதிபதி சர்கோஸி பர்தாவை பெண்ணடிமைத்தனமாக அடையாளம் காண்கிறார். பர்தா ஒரு நகரும் சிறை என்கிறது பிரான்ஸ் பாராளுமன்ற அறிக்கை.
பிரான்ஸில் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆறு மில்லியன் பேர் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்.
இத்தனை முஸ்லீகளையும் உள்ளிட்ட புலம்பெயர் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு வேலை, வீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வாய்ப்புகள் உருவாக்க பிரான்ஸ் அரசால் முடியவில்லை.
இந்த வலுவான குற்றச்சாட்டை மறைக்கும் ஒரு முயற்சியாக அரசியல் நிபுணர்களால் இந்த தடைச்சட்டம் நோக்கப்படுகிறது.
அடுத்து, பிரஞ்சுக்காரர்களிடம் உள்ளதாக பாராளுமன்ற அறிக்கை சுட்டிக்காட்டும் இச்லமொப்கொபிஅ எனும் இஸ்லாமிய பீதி.இந்த மதவெறுப்பு முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனும் பொதுப்புத்தியில் இருந்து கிளைப்பது. குறிப்பாக மேற்கத்திய சமூகங்களிடம் இது ஒரு ஆழ்பிம்பமாகவே உறைந்து போய் உள்ளது.
இத்தாலியில் ஏற்கனவே இத்தகைய தடைச்சட்டம் உள்ளது. ஆஸ்திரிய, பெல்ஜிய, டச்சு மற்றும் 3..6 சதவீதம் முஸ்லீம்களைக் கொண்டுள்ள ஜெர்மனி அரசும் தற்போது இதேவித தடையை கொண்டு வர உத்தேசிக்கின்றன. 2.4 மில்லியன் இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் முஸ்லீம் மாணவர்கள் மீது கண்காணிப்பை தீவிரமாக்கவும் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை தடை செய்யவும் அரசு மீது நெருக்கடி இறுகி வருகிறது.
டோனி பிளேர் பர்தாவை பெண்கள் இங்கிலாந்தில் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க மண்ணில் நுழையும் ஒவ்வொரு முஸ்லீமையும் ஒரு ஏவுகணையாகத்தான ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
சென்னையில் உள்ள அமெரிக்கன் கவுன்ஸில் நூலகத்தில் ஒரு அலமாரி முழுக்க இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த நூல்களே. குறிப்பாக, ஒரு முஸ்லீம் ஏன் மெனக்கட்டு தீவிரவாதி ஆகிறான் என்பதே இப்புத்தகங்களின் ஆசிரியர்கள் விளக்க முயன்றுள்ள கேள்வி. இது இன்று மொத்த அமெரிக்க சமூகத்தின் முன்னுள்ள புதிர்தான்.
Terrorists, Victims and Society என்ற நூலில் ஆண்டிரூ சில்கே என்பவர் இஸ்லாமிய தீவிரவாதிகள் பைத்தியக்காரர்கள் என்ற கருத்துருவை நிறுவ மனவியல் ஆய்வாளர்கள் பல தில்லுமுல்லுகளை கையாண்டுள்ளதை விளக்குகிறார். பாலஸ்தீன தீவிரவாதிகள் மனநலம் கொண்ட சகஜர்களே என்கிறார் சில்கே. பெரும்பான்மையினரின் மனக்கிலேசத்தை அகற்ற சிறுபான்மை சமூகத்தின் மத–அடையாளங்களை தடை செய்வது என்ற பிரான்ஸின் முடிவு விசித்திரமானது.
பர்தா ஒரு ஆணாதிக்கவாத உடை என்ற விவாதத்துக்கு சமகால முக்கியத்துவம் இல்லை. உலகம் முழுக்க ஒடுக்கப்படும் முஸ்லீம்களுக்கு தமது மத, பண்பாட்டு அடையாளங்கள் அழிந்து போவதான அச்சம் உண்டு. மேலும், இதற்கு காரணம் தங்களது மதஈடுபாடின்மையே என்ற குற்றமனப்பான்மையும் ஏற்படுகிறது. தீவிர மத–ஈடுபாடு மற்றும் அடிப்படைவாத சாய்வு சகமனித வெறுப்போ சமூக வன்மத்தின் வெளிப்பாடோ அல்ல. இது ஒரு சமூக பண்பாட்டு மற்றும் இருப்பு தொடர்பான பிரச்சினை.
இதை சமகால இந்தியாவின் இஸ்லாமியச் சமூக வரலாற்றை நோக்கியே நாம் புரிந்து கொள்ளலாம். குமரிமாவட்டத்தில் என் சொந்த ஊரான தக்கலையில் அரசு உயர்மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு அருகிலே முஸ்லீம்கள் பெருமளவில் வசிக்கும் பகுதி இருந்தது. ஏராளமான முஸ்லீம்கள் அப்பள்ளியில் படித்தார்கள். 98 வரை ஒரு பர்தா கூட தென்படவில்லை. விடுங்கள், தலையில் முக்காடு கூட அந்த முஸ்லீம் மாணவிகள் அணிந்ததில்லை.
ஆனால் அப்பகுதியில் எப்போதுமே காவிப்படையினருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பூசல் மெலிதாக புகைந்து வந்திருந்தது. 99-க்கு பிறகு நான் படித்த ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் ஹமீதா மற்றும் கதீஜா எனும் இரண்டு இஸ்லாமிய பெண்கள் படித்தார்கள். அவர்கள் தாம் அணிந்த பர்தா காரணமாக தனித்து தெரிந்தார்கள். அடிக்கடி பர்தாவுக்கான காரணத்தை நண்பர்களிடம் விளக்கி ஓய்ந்து போனார்கள். ஹமீதா ஒரு தீவிர பெண்ணியவாதி. மத ஈடுபாடும் குறைவே. 98க்கு பிறகே அவர் பர்தா அணிய ஆரம்பித்தார். என்ன காரணம்? பர்தா மூலம் தம்மைச் சூழ்ந்த பிற சமூகத்தினருக்கு ஒரு சேதி விடுக்க விரும்பினார்.
பாபர் மசூதி இடிப்பின் பிறகு பா.ஜ.க ஆட்சி அதிகாரம் பெற்று முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறை வெளிப்படையான ஆதரவு பெற்ற கட்டம் அது. 99-இல் மட்டும் தினமும் ஏழு பேர் மதக்கலவரத்தால் பாதிக்கபட்டனர் என்றார் பிரிந்தா காரத். மகராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேசம் என்று பல்வேறு மாநிலங்களில் 600-க்கு மேற்பட்ட கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக கார்கில் போர் மற்றும் பா.ஜ.காவின் ரதயாத்திரையின் போது இது உச்சம் அடைந்தது. இந்தியா முழுக்க இஸ்லாமியர் கடுமையான சமூக பண்பாட்டு நெருக்கடியை, தனிமைப்படுத்தலை நேரிட்டனர்.
இந்த நெருக்கடியை இந்த இருப்பெண்களும் குறியீட்டு ரீதியாக சந்தித்ததன் விளைவே கிறித்துவ கல்லூரியில் தெரிந்த பர்தா. பெண்ணியவாத, மத ஈடுபாடற்ற தனிநபரைக் கூட பா.ஜ.க போன்ற அடிப்படைவாத இயக்கத்தின் வன்முறை தங்கள் அடையாளங்களை தேடி எடுத்து முன்னிறுத்த தூண்டியது. இஸ்லாமியருக்கு எதிரான சர்வதேச வணிக மற்றும் பண்பாட்டு போர் நிகழும் இன்றைய சூழலில் பர்தா சர்வ சாதாரணமாகி விட்டது..
பர்தா திணிக்கப்படுகிறதா? சிந்திக்கும்,பெண்ணிய முஸ்லீம் பெண்கள் கூட தங்கள் மதஅபிமானத்துக்காக விருப்பப்பட்டே அணிகின்றனர்.
– ஆர்.அபிலாஷ்