மும்பாயிலுள்ள முஹம்மது அலீ ஜின்னா சாகிபின் வீடு
[ ஒரு பக்கம் அன்னிபெஸ்ண்ட் அம்மையார். மறுபுறம் பால கங்காதர திலக். ஃபெரோஸ்ஷா மேத்தா, தாதாபாய் நவ்ரோஜி போன்ற ஜாம்பவான்களால் அவர் ஏற்கனவே கவரப்பட்டிருந்தார். அப்போதெல்லாம் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனால் வலுக்கட்டாயமாக, ஓடும் இரயிலிருந்து இறக்கிவிடப்பட்ட காலக்கட்டம். வெள்ளைக்காரர்களின் கொட்டத்தை இந்தியாவுக்குச் சென்று அடக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த சமயம்.
காந்திஜியின் இந்தியப் பிரவேசம் ஜின்னாவுக்கு மிகுந்த பலத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர வழங்கிற்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜின்னாவுக்கும் காந்திஜிக்குமிடையே எவ்வளவு இறுக்கமான உறவு மலர்ந்திருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். மத அடிப்படைவாத அமைப்பில், அசல் ராம ராஜ்ஜியம்அமைக்க விரும்பியவர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டவர் ஜின்னாதான். தேசப்பிதா காந்திஜி ஜின்னாமீது கொண்டிருந்த ஆழமான பாசப்பிணைப்பைக் கண்டு முகம் சுளித்த காங்கிரஸாரில் ஒரு சிலர் வெட்டிய படுகுழியில் ஆணானப்பட்ட காந்திஜியும் நேருவும்கூட விழுந்தார்கள்.
”தாய் மண்ணுக்கு விடுதலை கேட்பது ராஜ துரோகமா?” என்று வெள்ளைய நீதிபதியைப் பார்த்து வெடித்தார் ஜின்னா.
”வாழ்நாளில் நான் செய்த தவறெல்லாம் இங்கிலாந்தில் லின்கன்ஸ் இன்னில் படித்ததுதான். போகட்டும். திலக் தேசத்துரோகி இல்லை. நாட்டுக்காகப் போராடுவது ராஜத்துரோகமென்று உங்கள் சட்டத்தில் எங்குமில்லை” என்று முஹம்மத் அலி ஜின்னாசாமர்த்தியமாக வாதாடினார். அன்றையிலிருந்து திலகருக்கும் ஜின்னாவுக்குமிடையே ஆழமான நட்பு மலர்ந்தது. நேசத்திற்குரிய அத்தனை பேரையும் உதறிவிட்டு முஸ்லிம் லீக்கிற்குள் அவர் அடியெடுத்து வைத்ததற்குக் காரணம் நெருக்கடி மட்டுமல்ல; காங்கிரஸுக்கும் லீக்குக்குமிடையே ஒரு பலமான பாலத்தை நிறுவவேண்டுமென்ற தணியாத ஆசையும்கூட என்பது அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளிலிருந்து தெளிவாயிற்று.]
தேச விடுதலை என்பது ஒரு மதத்தின் சொத்தோ அல்லது ஓரினச் சொந்தமோ அல்ல. நெடுநாளைய சுதந்திரப் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கவிருந்த சமயத்திலே காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களில் சிலர் தங்களுக்குள்ளே ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்பாட்டின் பின்னணியில் நிறைய பிணக்குகள் உண்டு. பிரிட்டிஷ் பேரரசியின் பேரன் மவுண்ட்பாட்டன் இந்தியாவில் காலடி பதித்தபோதே ”சுதந்திரம் உறுதி” என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது.
கடுமையான சோதனைகள் மிகுந்த ஆறாண்டுகள், அதாவது மூன்று தடவை அகில இந்திய காங்கிரசின் தலைவராக வீற்றிருந்த மௌலனா அபுல் கலாம் ஆஸாத்தைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு, நேருவை அக்ராசனர் நாற்காலியில் அமர வைத்த இருட்டறைச்சதியில்கூட நிச்சயமாக பட்டேல் போன்றவர்களின் இரும்புக்கரச்சேவை உண்டு என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன.
சுதந்திரம் ஈட்டித் தந்த ஒரு கட்சியின் தலைமைப் பீடத்தில், அந்த அரிய பொக்கிஷம் கிடைக்க இருந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் வீற்றிருந்தார் என்பதே அவலம் என்றோ அபசகுனம் என்றோ நினைத்த காங்கிரஸாருக்கு அப்போது பஞ்சமில்லை. ”வெள்ளையனுக்கு எதிராக பொங்கியெழு” என்று காந்திஜி அறைகூவல் விடுத்ததும் உயிரையும் மதிக்காது களத்தில் குதித்தது பட்டேலும் ராஜாஜியும் மட்டுமல்ல; அபுல் கலாம் அஸாத், கான் அப்துல் கப்பார் கான்,மௌலனா முஹம்மத் அலி சகோதரர்கள், டாக்டர் அன்சாரி, ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் அபுல் அலா மௌதூதி போன்ற மென்மையான தலைவர்களும் அவர்களின் எண்ணற்ற ஆதரவாளர்களும்
கூடத்தான். இன்னும் சொல்லப் போனால் முஹம்மத் அலி ஜின்னா இந்திய விடுதலைக்காகக் களம் கண்டவர் என்பது ஒளிக்க முடியாத வரலாற்று நிஜம். இந்திய வெகுஜனத்துக்கு இந்த உண்மை தெரியாமல் போக வேண்டும் என்பதற்காக சில துஷ்ட அறிவுஜீவிகள் செய்த சாகசத்தில் ஜின்னா என்ற ஒப்பற்ற ஒரு தேசபக்தனுக்கு ”இராவணன்” வேஷம் அணிவிக்கப்பட்ட சமாச்சாரம், உப்பரிகையில் நின்றுகொண்டு விடுதலைப்போரை நடத்திய மேல்வர்க்கத்துக் காங்கிரஸ்காரர்களுக்கு வேண்டுமானால் புரியாமல் போகலாம். ஆனால் நடுநிலை மக்களுக்குத் தெரியும். பத்துக்கோடி முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவனாக விளக்கிய ஜின்னாவை மிகச்சாதுர்யமாக ஓரம் கட்டிய ஓரவஞ்சனையில் பிறந்ததுதான் ”இரு நாடுகள் கொள்கை”. பிரிவினைக்காக ஜின்னாமீது மட்டும் சேற்றை வாரி இறைப்பது வக்கிரம் நிறைந்த சரித்திர ஆய்வாளர்களின் துர்ச்சேட்டைகள்.
ஒரு பக்கம் அன்னிபெஸ்ண்ட் அம்மையார். மறுபுறம் பால கங்காதர திலக். ஃபெரோஸ்ஷா மேத்தா, தாதாபாய் நவ்ரோஜி போன்ற ஜாம்பவான்களால் அவர் ஏற்கனவே கவரப்பட்டிருந்தார். அப்போதெல்லாம் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனால் வலுக்கட்டாயமாக, ஓடும் இரயிலிருந்து இறக்கிவிடப்பட்ட காலக்கட்டம். வெள்ளைக்காரர்களின் கொட்டத்தை இந்தியாவுக்குச் சென்று அடக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த சமயம்.
காந்திஜியின் இந்தியப் பிரவேசம் ஜின்னாவுக்கு மிகுந்த பலத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர வழங்கிற்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜின்னாவுக்கும் காந்திஜிக்குமிடையே எவ்வளவு இறுக்கமான உறவு மலர்ந்திருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். மத அடிப்படைவாத அமைப்பில், அசல் ராம ராஜ்ஜியம்அமைக்க விரும்பியவர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டவர் ஜின்னாதான். தேசப்பிதா காந்திஜி ஜின்னாமீது கொண்டிருந்த ஆழமான பாசப்பிணைப்பைக் கண்டு முகம் சுளித்த காங்கிரஸாரில் ஒரு சிலர் வெட்டிய படுகுழியில் ஆணானப்பட்ட காந்திஜியும் நேருவும்கூட விழுந்தார்கள்.
”ஜின்னா இஸ்லாமிய நாடு அமைக்கவில்லையா?” என்ற கேள்வி சிறுபிள்ளைத்தனமானது. அவர் இஸ்லாத்திற்கென்று தனிநாடு கேட்டார்: அமைத்தார். மதச்சார்பற்ற, ஜனநாயக தேசமென்று சொல்லி விட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதை எதிர்காலத்தை அளக்கத் தெரிந்த ஜின்னாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடுகிற உன்னதமான லட்சியங்களோடு அனேக மட்டரகமான குணங்களும் காங்கிரஸில் நிறைந்திருந்தன. தந்தை பெரியாரையும் பெருந்தலைவர் காமராஜையும் வாழ்நாள் முழுவதும் இம்சித்த ராஜகோபாலாச்சாரி போன்ற பல தலைவர்கள் புதுடெல்லியில் குழாம் அமைத்து இருந்தார்கள். ‘கடவுளே இல்லை’ என்றுரைத்த திராவிடர்களும், வர்ணாஸ்ரமத்தில் பிறக்காத இதர மனித ஜாதிகளும் அங்கே வந்துவிடக்கூடாது என்பதில் ராஜாஜி மிகக் கவனமாக இருந்தார். வல்லபாய் பட்டேல்,ஆசார்ய கிருபளானி, ராஜேந்திர பிரசாத் ஆகிய சக்திமிக்க காங்கிரஸார்கள் ராஜாஜியின் குணத்தையும் கொள்கையையும் அப்படியே உள் வாங்கியவர்கள்.
அவர்களைப் போலவே தீவிர மதப்பற்று கொண்ட ஜின்னா, காவிமயக் கொள்கைக்குப் பொருந்தாத ஒரு பொருளாகத் திகழ்ந்ததே இந்தியாவுக்குப் பெரும் சோதனை. இந்து மகாசபையை வீழ்த்தவேண்டும் என்று கூறிக் கொண்டே அடிக்கடி உபநிஷத்து மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்த கதர் மஸ்லின்காரர்களைக் கண்டபோதெல்லாம் காந்திஜியுடன் சேர்ந்து ஜின்னாவும் முகம் வாடிப் போனார். இரண்டாம் நிலை தலைவர்களின் சகிக்க முடியாத வாலாட்டத்திற்கும் வேலாட்டத்திற்கும் ஈடு கொடுக்க இயலாமல் சோர்ந்துபோனார். காந்தியும் நேருவும் முகத்தைச் சுளித்தும்கூட ஜின்னாமீது காங்கிரஸ் நண்பர்கள் காட்டிய அலட்சியமும் அவமானமும் அவரை நிலை குலையச் செய்திருந்த தென்னவோ உண்மை.
அந்தச் சமயத்தில்தான் முஸ்லிம்களுக்கென்று ”முஸ்லிம் லீக்” என்ற தனிக்கட்சியொன்று 1916ம் ஆண்டு துவங்கப்பட்டது. என்றாலும் காங்கிரஸையும் காந்தி, நேரு, திலக் போன்ற உத்தம நண்பர்களையும் விட்டு விலக மனமில்லாமல் முஸ்லிம் லீக்கில் சேர்வதை நீண்டகாலம் தவிர்த்தார் ஜின்னா.அதை நினைவு கூர்ந்தேனும் ஜின்னா ஒரு அப்பழுக்கற்ற தேசியவாதி என்பதை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். ஒரு சமயம், பால கங்காதர திலக்மீது வெள்ளையர் ஆட்சி ராஜ துரோகக் குற்றம் சுமத்தியபோது, நீதிமன்றத்தில் ஜின்னா ஆஜரானார்.
”தாய் மண்ணுக்கு விடுதலை கேட்பது ராஜ துரோகமா?” என்று வெள்ளைய நீதிபதியைப் பார்த்து வெடித்தார் ஜின்னா.
”அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் படிக்காமல் நீதிமன்றம் வந்தது உமது தவறு” என்று பழித்தார் நீதிபதி.
”வாழ்நாளில் நான் செய்த தவறெல்லாம் இங்கிலாந்தில் லின்கன்ஸ் இன்னில் படித்ததுதான். போகட்டும். திலக் தேசத்துரோகி இல்லை. நாட்டுக்காகப் போராடுவது ராஜத்துரோகமென்று உங்கள் சட்டத்தில் எங்குமில்லை” என்று சாமர்த்தியமாக வாதாடினார். அன்றையிலிருந்து திலகருக்கும் ஜின்னாவுக்குமிடையே ஆழமான நட்பு மலர்ந்தது. நேசத்திற்குரிய அத்தனை பேரையும் உதறிவிட்டு முஸ்லிம் லீக்கிற்குள் அவர் அடியெடுத்து வைத்ததற்குக் காரணம் நெருக்கடி மட்டுமல்ல; காங்கிரஸுக்கும் லீக்குக்குமிடையே ஒரு பலமான பாலத்தை நிறுவவேண்டுமென்ற தணியாத ஆசையும்கூட என்பது அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளிலிருந்து தெளிவாயிற்று. அப்படியும்கூட அவர் 1920ம் ஆண்டுதான் லீக்கில் இணைந்தார்.
அப்போதெல்லாம் அவர் உயர்ரக அமைப்பான இம்பீரியல் சட்டமன்றத்தின் உறுப்பினர். ஐரோப்பியர்களும் ராஜபுத்திரர்களும் அங்கம் வகித்த அந்தச் சபைக்குள் அவர் நுழைந்ததன்மூலம் அரசாங்கத்தின் பெரும் மதிப்புக்கும் அன்புக்கும் அருகதையாகி இருந்தார். அதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டுத்தான் அவர் முஸ்லிம் லீக்கில் சேர வேண்டியதாயிற்று. ஜின்னாவின் தலைமையில் செயல்பட்ட லீக்கிற்கும் காங்கிரஸுக்குமிடையே வலுவான உறவு பரிணமித்ததை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக்கும், காங்கிரஸும் பல போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்தின.
நல்லவேளையாக அப்போது மதவாரி இடஒதுக்கீடு அமுலில் இருந்ததோ ஜின்னா தப்பித்தார். இல்லாவிட்டால் அவர்தான் அதற்கும் காரணம் என்று விளாசித் தள்ளியிருப்பார்கள். 1927ல் சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸும் லீக்கும் ஓரணியில் நின்று போராடியதெல்லாம் வரலாறு. தனி இடஒதுக்கீடு இருப்பதைப் போன்று மதவாரி ஓட்டளிப்புமுறையும் வேண்டுமென்ற ஜின்னாவின் கோரிக்கையை நேரு ஆமோதிக்க,காந்திஜி பலமாக எதிர்த்தார். அங்குதான் ஜின்னா என்ற ஒரு தனிமனிதனை நோக்கிப் படுபாதாளப்பள்ளம் வெட்டப்பட்டது. அப்போதும்கூட ஜின்னா பிரிவினையைப்பற்றி யோசிக்கவில்லை.நெருக்கடி மிகுந்த தருணத்தில்கூட இந்தியாவை இழப்பதையோ அல்லது அதைப் பிளப்பதையோ பற்றிச் சற்றும் சிந்திக்காத தேசபக்தர் அவர்.
”தனிநாடு” கோரிக்கை தென்னகத்தில்தான் முதன்முதலில் எழுந்தது. ம.பொ.சி.யும் அண்ணாவும் கேட்ட மாநில சுயாட்சியில் இருந்த தகிப்போ தாக்கமோ இன்றி,தெளிவான சிந்தனையோடு ,ஒன்றுபட்ட இந்தியாவைக் கருத்தில் கொண்டு ஜின்னா கேட்டதெல்லாம் மதவாரி வாக்கெடுப்புமுறை மட்டுமே. ”இந்துக்கள் இந்துகளுக்கு வாக்களிக்கட்டும்; முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு ஓட்டு போடவேண்டும். மற்ற மதத்தினர் அவரவர்களுக்கு வாக்களித்துக் கொள்ளட்டும். எல்லோரும் சேர்ந்து விகிதாச்சார அடிப்படையில் ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். நாடு ஒன்றுபட்டுப் பலமாக இருக்க இதுவே ஒரே வழி” என்பது ஜின்னாவின் திட்டம்.
பல நாட்டிலே இத்தகைய திட்டம் வெற்றிகரமாகச் செயல் பட்டுக்கொண்டிருந்தது. விகிதாச்சார ஆட்சிமுறை தேசத்தைப் பிளக்குமென்றால், மக்களைப் பிரிக்குமென்றால், அமைதியையும் சுபிட்சத்தையும் சீர்குலைக்குமென்றால், பாரதத்தை உடைக்காமல்,சிதைக்காமல் வைக்கக்கூடிய ஓர் உன்னதமான, எல்லோருக்கும் ஏற்புடைய ஒரு மாற்றுத் திட்டத்தை முன் வைக்காதது யாருடைய குற்றம்? யாருடைய சதி?
பெரும்பான்மையோர் மட்டுமே ஆள வேண்டும் என்கிற சாதியச் சதியைப் புரிந்துகொள்வதற்கு ஜின்னாவுக்கு அதிகநேரம் தேவைப்படவில்லை. உளச்சுத்தியோடு இவர்களிடம் பேசிப் புண்ணியமில்லை என்பதை முற்றிலுமாக உணர்ந்ததும் மனம் வெதும்பிப் போனார்.
ஆனால் ஜின்னாவின் எதிரிகளும், காங்கிரஸில் இருந்த அதிகார வெறியர்களும் காந்திக்கும் ஜின்னாவுக்குமிடையே தோன்றிய கருத்து மோதலைச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்டு, மௌலானா அஸாத், பாட்சா கான், அன்ஸாரி போன்ற மிருதுவான காங்கிரஸ்காரர்களுக்கு மதச்சார்பின்மை சாயம் பூசி போர்க்களத்தில் இறக்கிவிட்டதைச் சகிக்காமல் ஜின்னா வெகுண்டெழுந்தது என்னவோ உண்மை. அது ஓர் உண்மையான அரசியல்வாதியின் உயர்க்குணமும்கூட.
காங்கிரஸில் இருந்த காவிக்காரர்கள் ஒரு சதுரங்கம் போட்டார்கள்: அபுல் கலாம் அஸாத் புனித மக்காவில் பிறந்தவர். இஸ்லாமிய மார்க்க மாமேதை.அப்பழுக்கற்ற தேசியவாதி. தியாகம் பல புரிந்த உத்தமர். அத்துடன் கான் அப்துல் கஃப்பார் கான், டாக்டர் அன்சாரி, அலி சகோதரர்கள் ஆகியோர் மார்க்க்ப் பற்றுள்ள மாமனிதர்கள்.
ஜின்னாவோ ஆங்கிலேயர்களைப்போல் உடையணியும் ஒரு மெல்லிய மனிதர். ஒரு தலைமுறைக்கு முன்னால் அவரது தந்தையைப் பெற்ற பாட்டன் ஒரு ரஜபுத்திர ஹிந்து. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ஜின்னா ஆணிவேரில்லாத ஒரு ஷியா முஸ்லிம். ஒரு பணக்கார குஜராத்தி. ஏழை மக்களுக்கும் மதப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கும் தலைமை ஏற்பதற்கு இவருக்கென்ன அருகதை இருக்கிறது என்று காங்கிரஸிலுள்ள மதத்தலைவர்கள் கேள்வி எழுப்பினால், ஜின்னாவை அரசியல் சன்னியாசம் பெற்றுக்கொண்டு ஓட வைத்துவிடலாம் என்பதுதான் அவர்களுடைய கனவு. இதையெல்லாம் கேள்விப்பட்டவுடன் மனவேதனையும் துக்கமும் தாளாமல் அரசியல் துறவரம் ஏற்பதற்கு ஜின்னாவும் தயாராகத்தான் இருந்தார்.
அந்த சமயம் பார்த்துதான் லண்டனில் சட்டம் பயின்று கொண்டிருந்த ரஹ்மத் அலி ஒரு கடிதம் எழுதியிருந்தார். நாலரைப்பக்கத்துக் கையெழுத்துப் பிரதி. ஜின்னாவின் தலையெழுத்தை மட்டுமின்றி தெற்காசியாவின் வரைப்படத்தையே மாற்றியமைத்த வல்லமை பொருந்திய சிறு காகிதங்கள்.
”இந்திய விடுதலையில் ஜின்னா” –ஏ. ஹெச். ஹத்தீப், 2008-ஆம் ஆண்டைய ”சமநிலைச் சமுதாயம்” சுதந்திர தினச் சிறப்பிதலிருந்து.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.