[ அடிப்படையில், காயிதே ஆஸாம் வீண் பேச்சுகள் பேசுவதை வெறுத்தவர் என்பதால், வெறுமனே அவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை முற்றிலுமாக தவிர்த்தார். சுருக்கமான தேவையான உரையாடல்களுக்கு மட்டுமே அவருடைய காதுகள் இருந்தன. அவரைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும் அந்தப் பிரத்தியேக அறையில், ஒரே ஒரு சிறிய சோபாவும் அதற்கு அருகில் ஒரு சிறிய மோடா மட்டுமே இருந்தன.
காயிதே ஆஸாம் எப்போதாவது ”என்னை மன்னித்துக்கொள்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறானா என்று ஆஸாத்திடம் கேட்டேன். ஆசாத் தலையை ஆட்டினான், ”இல்லை. அவரது உதடுகளில் இருந்து தப்பித் தவறியேனும் அந்த வார்த்தைகள் மட்டும் வெளியேறியிருக்கும் பட்சத்தில், அதை அகராதியில் இருந்தே வெட்டியெறிந்திருப்பார் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்” என்றான் ஆஸாத். இந்த குறிப்பு ஒன்றே காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் இயல்பை தெரிவிக்க போதுமானது.]
வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுகளில் காயிதே ஆஸாமுக்கு பிடித்தது பில்லியாட்ஸ் மட்டுமே. விளையாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றும் போதெல்லாம் பில்லியர்ட்ஸ் அறையைத் திறக்கச் சொல்லி உத்தரவிடுவார். ஒவ்வொரு நாளும் அந்த அறை தூசுகள் தட்டப்பட்டு மிகச் சுத்தமாகத் தான் இருக்கும் என்றாலும், பணியாளர்கள் அத்தகைய நாட்களில் மேலும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள்.
அந்த விளையாட்டில் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால், பில்லியர்ட்ஸ் அறையில் நுழைவதற்கு நான் அனுமதிக்கப்படுவேன். பன்னிரெண்டு பந்துகள் சாகிப் முன்பே வைக்கப்பட, அதில் மிகக் கவனமாக மூன்றைத் தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்குவார்.
பல சமயங்களில் மிஸ். ஜின்னாவும் அங்கிருப்பார். சாகிப் தன் உதடுகளுக்கிடையே சிகாரை வைத்துக்கொண்டு, அவர் தாக்கப்போகும் பந்தின் நிலையை உள்வாங்கிக் கொள்வார். பல கோணங்களில் இருந்து அதை ஆராய வேண்டியிருப்பதால் அதற்குப் பல நிமிடங்கள் ஆகும். அவர் கையில் பிடித்திருக்கும் கோலின் கனத்தைப் பரிசோதிப்பது போலவும், ஏதோ தந்தி வாத்தியத்தை வாசிக்க வில்லைப் பிடித்திருப்பது போலும், அவருடைய மெலிந்த நீளமான விரல்களுக்கு இடையே அதை மேலும் கீழும் நகர்த்திக் குறிபார்த்து அடிக்கப்போகும் அந்தத் தருணத்தில் அதை விட மேலும் சிறப்பான கோணம் ஏதோ ஒன்று தோன்றியதால் ஆட்டத்தை நிறுத்திவிடுவார்.
அவருடைய ஆட்டம் மிகச் சரியானது தான் என்று முழுமையான திருப்தி ஏற்பட்ட பிறகே விளையாடுவார். அவர் திட்டமிட்டது போல் ஆட்டம் நிகழ்ந்து விட்டால், அவருடைய சகோதரியைப் பார்த்து பெருமிதத்தோடு புன்னகைப்பார்.
அரசியலிலும், காயிதே ஆஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார். அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே ஆஸாம் அறிந்து தான் இருந்தார்.
ஆஸாத் சொன்னதில் அடிப்படையில், காயிதே ஆஸாம் வீண் பேச்சுகள் பேசுவதை வெறுத்தவர் என்பதால், வெறுமனே அவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை முற்றிலுமாக தவிர்த்தார். சுருக்கமான தேவையான உரையாடல்களுக்கு மட்டுமே அவருடைய காதுகள் இருந்தன.
அவரைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும் அந்தப் பிரத்தியேக அறையில், ஒரே ஒரு சிறிய சோபாவும் அதற்கு அருகில் ஒரு சிறிய மோடா மட்டுமே இருந்தன. அந்த மோடாவில் இருந்த சாம்பல் கிண்ணத்தில், அவருடைய சிகார் சாம்பலைத் தட்டிவிடுவார். எதிரே இருந்த சுவருக்கு முன் கண்ணாடிக் கதவுகள் கொண்ட இரண்டு அலமாரிகளில் அவருடைய ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்ட புனித குர்ஆன் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்களும் அங்குதான் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய பெரும்பாலான நேரம் அந்த அறையில் தான் செலவழிக்கப்பட்டது. எங்களில் யாரேனும் ஒருவர் கூப்பிட்டு அனுப்பப்பட்டால், கதவருகே நின்று கொண்டுதான், அவருடைய உத்தரவுகளைக் கேட்க வேண்டும். பிறகு அங்கிருந்து நகர்ந்து விடவேண்டும்.
அவர் பார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்கள், சோபாவில் தாறுமாறாய் இறைந்துக் கிடக்கும். ஏதேனும் கடிதம் எழுதவேண்டியிருந்தால் மட்லுப் அல்லது சுருக்கெழுத்து எழுதக்கூடியவருக்கு அவர் சொல்லி அனுப்பி, தீர்மானமான குரலில், அதிகாரத்தோடு அவர் சொல்ல வேண்டியதைச் சொல்வார். என்னுடைய ஆங்கில அறிவு மிகக் குறைவானது தான் என்றாலும் அழுத்தம் தேவைப்படாத வார்த்தைகளுக்கு எல்லாம் அவர் அழுத்தம் கொடுத்ததாகவே நான் எப்போதும் நினைப்பது உண்டு.”
ஆஸாத் குறிப்பிட்ட ”அதிகாரத்தோடு” என்பது ஒருவேளை அவருடைய வலுவற்ற உடலைத் தற்காத்துக்கொள்ளும் உள்மன வெளிப்பாடாக இருக்கலாம் அவருடைய வாழ்க்கை ஓடும் தண்ணீரில் குமிழிப்போல் இருந்தாலும், இந்த உலகத்திற்கு பெரும் நீர் சுழற்சி போல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அந்த உடலில் வலு இல்லாதது தான் அத்தனை காலங்களுக்கும் அவரை உயிரோடு வைத்திருக்கிறது. எவ்வித சம்பிரதாயங்களும் இல்லாமல் காயிதே உறவு வைத்திருந்தது அவருடைய மிகச்சிறந்த நண்பரான நவாப் பஹதூர் யார்த் ஜங்குடன் மட்டும் தான் என்று ஆஸாத் சொன்னான். ”அவர் அடிக்கடி சாகிப்பைச் சந்திக்க வருவார். இருவரும் அரசியல் மற்றும் முக்கியமான தேசிய விசயங்களை மணிக்கணக்காயப் பேசிக்கொண்டிருப்பார்கள்.
நவாப்போடு இருக்கும் போது மட்டும் காயிதே முற்றிலும் வேறுபட்ட மனிதராக இருந்தார். மிக அந்நியோனியமான நண்பர் ஒருவரிடம் பேசுவது போல, அவரோடு மட்டுமே பேசுவார். அவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்து நண்பர்கள் போலவே தோன்றினார்கள். இருவரும் அறையில் ஒன்றாக இருக்கும் போது அவர்களின் உரக்கச் சிரிக்கும் சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மஹமூத்பாத் ராஜா சாகிப், ஐ.ஐ.சுந்த்ரிகர், மௌலானா ஸாஹித் ஹ§சைன், நவாப் ஸாதா, லியாகத் அலிகான், நவாப் சர் முஹம்மது இஸ்மாயில், மற்றும் அலி இமாம் போன்றவர்கள் உட்பட மற்றவர்களும் அவரைச் சந்திக்க வருவார்கள். ஆனால் சாகிப் அவர்களை எல்லாம் ஒருவித சம்பிரதாயத்தோடுதான் கையாண்டார். பஹதூர் யார்த் ஜங்கின் வருகையோடு சம்பந்தப்பட்டிருந்த அந்தச் சம்பிரதாயங்கள் அற்ற சுலபமான தன்மை எல்லாம் மற்றவர்கள் வருகையின் போது காணாமல் போய்விடும்” லியாகத் அவரைப் பார்க்க அடிக்கடி வருவாரா என்று அசாத்திடம் கேட்டேன்.
”ஆமாம்” என்று ஆஸாத் பதில் தந்தான். ”மிகவும் திறமை பெற்ற அவருடைய மாணவனைப் போல்தான் காயிதே ஆஸாம் அவரை நடத்தினார். லியாகத் அவர் மீது பெரும் அளவு மரியாதை வைத்து, அவரது கட்டளைகளின் கடைசி வரிகளைக்கூட நிறைவேற்றினார். சில சமயங்களில் அவர் அழைக்கப்படும் போது, உள்ளே போவதற்கு முன் சாகிப் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். நான் எப்போதும் அவருக்குப் பதில் சொல்ல முடிந்ததற்குக் காரணம் காயிதே ஆஸாம்மோசமான மனநிலையில் இருந்தால் அது எல்லோருக்கும், ஏன் மௌண்ட் பிளசன்ட் சுவர்களுக்குச் கூட தெரிந்திருக்கும்.
காயிதே ஆஸாம் அவருக்காக வேலை பார்ப்பவர்கள் மற்றும் பணியாட்களின் நடத்தையிலும், தோற்றத்திலும் ரொம்பவும் குறியாக இருந்தார். சுத்தம் இல்லாத எல்லாவற்றையும் அவர் வெறுத்தார் – மனிதர்களின் நடத்தை உட்பட அவருக்கு மட்லூப்பை ரொம்வும் பிடித்திருந்தது என்றாலும், முஸ்லீம் லீக் பெண் தொண்டரோடு அவர் உறவு வைத்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன், இது போன்ற முறையற்ற நடத்தைகளை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாதவராக அவர் மிகவும் எரிச்சலடைந்தார். மட்லூப் வரவழைக்கப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் காயிதே பிறகு அவரை எப்போது சந்தித்தாலும், பழைய நண்பர் போலவே அவரை நடத்தினார்.
ஒரு முறை நான் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தேன். நகரத்திற்குள் சென்று பாரில் பல மணிநேரங்கள் செலவு செய்துவிட்டு திரும்பி வந்தேன். நான் எவ்வளவு தாமதமாக வந்தேன் என்று சாகிப்புக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு. அடுத்த நாள் என்னை அழைத்து நான் என் நடத்தையைப் பாழ்படுத்திக் கொள்வதாக ஆங்கிலத்தில் தெரிவித்தார்.
பிறகு அரைகுறை உருதுவில், ”இப்போது உனக்குத் திருமணம் செய்து வைத்தாக வேண்டும்” என்று சொன்னார். நான்கு மாதங்கள் கழித்து முஸ்லீம் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் பம்பாயில் இருந்து டெல்லிக்கு வந்த போது அவர் விருப்பப்பட்டது போலவே உரிய காலத்தில் நான் திருமணம் செய்து கொண்டேன். அவரோடு எனக்குத் தொடர்பு இருந்ததினால் மட்டுமே, சையத் குடும்பத்தில் இருந்து வந்தவள் எனக்கு மனைவியாக முடிந்தது. நான் ஷேக் ஜாதியைச் சேர்ந்தவன் என்றாலும் சையது குடும்பத்தினர் என்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளக் காரணம் நான் காயிதே அஸாமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்ததனால்தான்…”
காயிதே ஆஸாம் எப்போதாவது ”என்னை மன்னித்துக்கொள்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறானா என்று ஆஸாத்திடம் கேட்டேன். ஆஸாத் தலையை ஆட்டினான், ”இல்லை. அவரது உதடுகளில் இருந்து தப்பித் தவறியேனும் அந்த வார்த்தைகள் மட்டும் வெளியேறியிருக்கும் பட்சத்தில், அதை அகராதியில் இருந்தே வெட்டியெறிந்திருப்பார் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்” என்றான். இந்த குறிப்பு ஒன்றே காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் இயல்பை தெரிவிக்க போதுமானது.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.