வெளிநாடு வாழ் இந்தியருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும்: அமீரக தொழிலதிபர் செய்யது எம். ஸலாஹுத்தீன் கோரிக்கை
[வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் களையப்பட வேண்டும். இதற்காக ஒற்றைச்சாளர முறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் அந்நியச் செலவானி மூலம் அரசுக்கு முக்கிய வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வாறு பணம் அனுப்பும் போது எக்ஸ்ஜேஞ்சில் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் நீக்கப்பட வேண்டும்.]
துபாய் : வெளிநாடு வாழ் இந்தியருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற எட்டாவது வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்திய அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹூத்தீன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் தனது உரையில் கூறியதாவது இந்தியர்கள் உலகின் எப்பகுதிகளில் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் உலகின் எப்பகுதிகளில் சந்தித்துக் கொண்டாலும் அது தொப்புள் கொடி உறவைப் போன்றது என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியதை மேற்கோள் காட்டினார்.இந்தியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் பண்டைக் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் தாங்கள் மேலைநாடுகளில் வாழ்வது போலல்லாது தங்களது தாயகத்தில் வாழ்ந்து வருவது போல் அதே மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய சிந்தாந்தம் மாறாமல் வாழ்ந்து வருவதிலிருந்து இதனை அறியலாம் என்றார்.
வளைகுடா நாடுகளில் வரும் காலங்களில் பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகள் இருக்கின்றன என தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் களையப்பட வேண்டும். இதற்காக ஒற்றைச்சாளர முறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பிய பின்னர் அரசுப் பணிக்காக விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது போல் இட ஒதுக்கீடு, வயது உச்சவரம்பு தளர்வு உள்ளிட்டவற்றில் சலுகை வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் வருகை மற்றும் புறப்பாட்டின் போது விண்ணப்படிவத்தை நிரப்பி இமிக்ரேஷன் அலுவலர்களிடம் கொடுப்பதற்காக காத்திருக்கும் முறையினை நீக்கி அவர்களது பாஸ்போர்ட்டில் இருந்தே தேவையான விபரங்களை எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய முறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் இருப்பது போல் ஈ கேட் (E-Gate) முறையினை அமுல்படுத்த வேண்டும். இது அடிக்கடி பயணம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் நீதி மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு தனி நீதித்துறையினை ஏற்படுத்த வேண்டும். மேலும் இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென சிறப்பு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தினை ஏற்படுத்தி விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் அந்நியச் செலவானி மூலம் அரசுக்கு முக்கிய வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வாறு பணம் அனுப்பும் போது எக்ஸ்ஜேஞ்சில் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் நீக்கப்பட வேண்டும்.
இந்திய கல்வி நிறுவனங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்காக வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய நிறுவனங்களால் துவக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் 73,000 பேரை ஊழியர்களாக்க் கொண்ட நிறுவனம். இதில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள் இதில் 25,000 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு வெளியே அதிக இந்தியர்களை பணிக்கமர்த்திய நிறுவனம் ETA அஸ்கான் ஸ்டார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வண்ணம் தமிழகத்தில் மூன்று பயிற்சி மையங்களும், மத்திய பிரதேசத்தில் ஒரு பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. விரைவில் ஐந்து பயிற்சி மையங்கள் துவங்கப்பட இருக்கின்றன. மேலும் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்.பி.ஏ, சி.ஏ. உள்ளிட்ட படிப்பினை முடித்தவர்களும் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.
இவ்விவாதாத்தின் போது நடுவர்களாக வெளிநாடு இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசிதரூர், ரயில்வே இணையமைச்சர் இ. அஹமது, தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வளைகுடாப் பகுதியிலிருந்து இந்திய அரசு அழைப்பின் பேரில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஒரே தமிழர் செய்யது எம் ஸலாஹூத்தீன் என்பது குறிப்பிடத்தக்கது.
source: http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=959
posted by: Muduvai Hidayath