நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை யாருக்கு?
சுவனத்தின் சுவையை நுகர என்றென்றும் நிலைத்து மரணமற்ற நித்திய சுக வாழ்வையடைய படைத்தவனின் அருளும் கருணையும் பெற்ற உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையைப் பெற ஈமான் கொண்ட விசுவாசிகள் என்ன செய்ய வேண்டும்?. குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆராய்ந்தால் அதற்குரிய பதில் கிடைக்கிறது.
வல்ல அல்லாஹ் அருள்மறையில் ”எவர்கள் (இம்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான் ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது – இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.” (அல்குர்ஆன் 47:1-2).
ஆக ஈமான் கொண்ட விசுவாசி ஆற்ற வேண்டிய பணி எப்படி இருந்தால் என்ன பலன் என்பதை இறைவன் இரத்தினச் சுருக்கமாக கூறியதைக் கண்டோம். இனி இறைவிசுவாசியின் இலக்கணத்தை மற்றொரு அருள்மறை வசனம் கூறுவதைப் பார்ப்போம்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்கள் அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையில் இரக்கமிக்கவர்களாகவும்
ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்;
அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப் பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்;
அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்,
இன்ஜீலிலுள்ள அவர்களது உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது
இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் – ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் வாக்களிக்கின்றான். (அல்குர்ஆன் 48:29).
ஒரு இறை விசுவாசியின் தன்மை, அவனின் செயல்கள், அவனின் இலக்கணம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற நியதியை நிர்ணயித்த இறைவன் விசுவாசிகளுக்கு கூலியாக சுவனத்தை தருவதுடன் நிராகரிப்போர் (அவனின் மேற்கூறிய இலக்கணங்களுக்கு மாறாகச்) செய்யும் அமல்களை அங்கீகரிக்காமல் அவர்களை கோபமூமட்டுவதை மேற்கூறிய அருள்மறை வசனம் விளக்குகிறது.
மறுமையில் பாவ மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பைத் தவிர்ந்து கொள்ள இறைவன் கூறும் மற்றொரு விளக்கத்தைப் பாருங்கள்.
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. தம் சமூகத்தாரிடம் அவர்கள், உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றை விட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள். (ஆனால்) இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்) எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது. (அல்குர்ஆன் 60:4)
முன்மாதிரிகளைச் சுட்டிக்காட்டிய அல்லாஹ் முஷ்ரிக் (இணைவைப்பாளர்) தந்தைக்கு பாவ மன்னிப்புத் தேடக்கூறியதைத் தவிர என்று பரிந்துரைக்கு பெற வேண்டிய படிப்பினையை பக்குவமாக நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வு மூலம் நமக்கு கற்றுத்தருகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் பணிவிடை புரிந்த நபித்தோழர் ரபிஆபின் கஹ்ப் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நீங்கள் விரும்புவதை என்னிடம் கேளுங்கள் என்று கூற
நபித்தோழரோ அல்லாஹ்வின் தூதரே மறுமையிலும் சுவனத்தில் உங்களுடன் இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை முன் வைக்கிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அந்நபித் தோழரை நோக்கி நீர் உமது விருப்பம் நிறைவேற ஸஜ்தாக்களை (சிரம்பணிதலை நஃபிலான தொழுகைகளை) அதிகமாக்கி உதவி புரிவீராக என்று கேட்டுக்கொண்ட செய்திகளை ஹதீஸில் காண முடிகிறது. மற்றொரு நபிமொழியில் கலப்பற்ற தூய உள்ளத்துடன் கலிமா ஷஹாதாவை மொழிந்து அதில் உறுதியாய் நிற்பவர் என் பரிந்துரைக்குரியவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியதையும் பார்க்கிறோம்.
ஸஹீஹ் புகாரியில் இடம்பெறும் நபிமொழியொன்று கூறுவதைப் பாருங்கள்.
பாங்கு முடிந்த பின் கூறும் துஆ
பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக! என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள். (புகாரி – 614)
மற்றொரு அறிவிப்பில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள், மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்பார்கள். (ஒவ்வொருவராகத் தம்மால் இயலாதென்று மறுத்துக்கொண்டே வர) இறுதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள் நபியவர்களை அல்லாஹ் (மகாமு மஹ்மூத் எனும்) உயர் அந்தஸ்திற்கு அனுப்பும் நாளில் இது நடக்கும், என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.
(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும் போது இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சுவர்க்;கத்தின்) உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அன்னாருக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை அனுப்பி வைப்பாயாக! என்று பிரார்த்திக்கிறவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும், இதை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள் (புகாரி – 4718-4719).
பாங்கோசை கேட்டபின் நாம் செய்யும் பிரார்த்தனைக்குரிய மிகப்பெரும் பலனை மேற்கூறிய நபிமொழிகள் நமக்குணர்த்தின. உத்தம திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கியாம நாளின் பயங்கரத்தைப் பற்றி இணைவைக்கும் குறைஷியக் குடும்பத்தாரை எச்சரித்தது எப்படி என்பதை கீழ் காணும் நபிமொழி விளக்குகிறது.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள் (நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அதாவது,) தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!) எனும் (திருக்குர்ஆன் 26:214-வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் புறப்பட்டுச் சென்று ஸஃபா (மலை) மீதேறி உரத்த குரலில்,
யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், யார் இவர்? என்று கூறியவாறு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் ஒன்று கூடினர்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார்கள்.
மக்கள், உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?) என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், அப்படியென்றால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன் என்றார்கள்.
(அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூ லஹப், உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்று கூட்டினாயா? என்று கேட்டான். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் எழுந்தார்கள். அப்போது அழியட்டும் அபூ லஹபின் இரண்டு கரங்கள்; அவனுமே அழியட்டும் எனும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது (புகாரி – 4719).
அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் காட்டித் தந்த வழிமுறையில் வாழ்ந்து ஏவியதைச் செய்து விலக்கியதைத் தவிர்ந்து, மறுமை வாழ்வைச் செம்மைப்படுத்தவே இப்புவியுக வாழ்க்கையை நாம் பயன்படுத்தி நிரந்தர மறுமை வாழ்வின் சிறப்பை உணர்ந்து உத்தம திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் பரிந்துரை பெறும் பாக்கியம் பெற்றவர்களாகத் திகழ நம் அமல்களை நாம் ஆக்கிக் கொள்வோமாக.
”Jazaakallaahu khairan” www.islamkalvi.com