”என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே நான் கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விடுவேன் என்று கூறினார்.” (அல்குர்ஆன் 11:42-47)
மேற்கூறிய இறைமறை வசனங்கள் அல்லாஹ்வின் தூதரும் நபியுமான நூஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் இணைவைப்பாளனாகிய தம் மகனை விசுவாசம் கொள்ள அழைத்து வெள்ளப்பெருக்கில் இருந்து தப்புவதற்கு கப்பலிலேற வேண்டுகிறார், மறுத்த மகனை வெள்ளப் பேரலை வாரிச்சுருட்டிச் செல்கிறது,
அவன் தன் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் கூற இணைவைப்பாளனான அவன் நபியின் குடும்பத்தைச் சார்ந்தவனல்ல என்று அல்லாஹ் அவருக்கு உணர்த்தியதுடன் அவன் செய்யும் இணைவைப்பு ஒரு ஒழுக்கமற்ற செயல் என்பதைத் தெளிவு படுத்துவதுடன்,
நபிக்கு அறியாததை தன்னிடம் கேட்டு அறியாதவர்களில் ஒருவராக ஆகிவிட வேண்டாம் என்று இம்மையில் அறியாது செய்த ஒரு பரிந்துரைக்கு படைத்தவன் அல்லாஹ் கொண்ட கோபத்தை நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கியாம நாளில் மக்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கு வேண்டி அணுகும் போது பக்குவமாகக் கூறுவதைப் பாருங்கள்.
”… மக்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்களிடம் சென்று நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பார்கள்.
அதற்கு நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை.
இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஆக, அறியாமல் செய்யும் பரிந்துரைகள் அபாயமானவை என்பதுடன் அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாகும் என்பதை மேற்கூறிய குர்ஆன் வசனங்களும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றன. அபுல் அன்பியா என்று அழகுபட அழைக்கப்படும் நபிமார்களின் தந்தை இபுராஹீம் (அலை) அவர்கள் இணைவைப்பை எதிர்த்து ஏகத்துவத்தை நிலைநாட்ட சந்தித்த சோதனைகள் மிக அதிகம். சுடும் தன்மையுள்ள நெருப்புக் கூட அதன் குணத்தை மாற்றி தேகத்துக்கு இதமாகத் திரும்பியது. அல்லாஹ்வின் சோதனையில் சகிப்புத்தன்மை காட்டிய அந்த இறைத்தூதருக்கு இறைவன் வழங்கிய அற்புதமாகும். அந்த நபிகளாரின் தந்தையோ இணைவைப்புக்குத் தூபம் போடும் அல்லாஹ்வின் எதிரி. நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தந்தையிடம் காட்டிய பரிவு மறுமைப் பரிந்துரை வரை சென்றது. இணைவைப்போர்க்கு இறைவனிடம் செய்யும் பரிந்துரைகள் எப்படியிருக்கும்? என்பதனை வல்லோன் அல்லாஹ் வான்மறையில்
”மேலும் (நபி) இப்றாஹீம் தன் தந்தைக்காக மன்னிப்பு கோரியது ஒரு வாக்குறுதியே தவிர வேறு இல்லை, அதை அவருக்கு இப்றாஹீம் வாக்களித்திருந்தார், பின்னர் நிச்சயமாக அவர் தந்தை அல்லாஹ்வுக்கு விரோதி எனத் தெளிவாகிவிட்டபின் அதிலிருந்து அவர் விலகிக்கொண்டார். (அல்குர்ஆன் 9:114)
மேலும் ஸஹீஸுல் புஹாரியில் இடம்பெறும் நபிமொழியொன்று கூறுவதைப் பாருங்கள்:
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும்.
அப்போது அவரிடம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, இன்று உனக்கு நான் மாறு செய்யமாட்டேன் என்று கூறுவார்.
அப்போது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது? என்று கேட்பார்கள்.
அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்) என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள்.
அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும், பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள் (ஹதீஸ் எண் 3350).
சுவனத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்பவர்கள் அவ்லியாக்கள், நாதாக்கள், இமாம்கள், பெரியார்கள் என்று அர்த்தமில்லாமலும் ஆதாரமில்லாமலும் சொல்பவர்களுக்கு பரிந்துரை பெறுவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அலசுவோம்.
உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இளமையிலேயே தந்தை-தாயை இழந்து பாட்டனாரின் பரிவு பாசத்தில் வளர்ந்த காலமோ மிகமிக குறைவு. பாட்டனாரின் மறைவுக்குப்பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை எடுத்து வளர்த்து அன்பைச் சொரிந்தவர் பெரிய தந்தை அபுதாலிப் அவர்கள். சிறு வயதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று வாணிபத்துடன் உள்ள தொடர்பைக் கற்றுக் கொடுத்த ஆரம்ப ஆசான்.
ஏகத்துவப் பிரச்சாரத்துக்கு ஈடு கொடுக்க முடியாத குறைஷிய கொடுமையாளர்கள் அபுதாலிபிடம் நபிகளாரை அடக்கி வையுங்கள் என்று அன்புடன் சொல்லிப் பார்த்தனர், குலம் கோத்திரம் போன்ற பெருமைகளைச் சொல்லி மிரட்டியும் பார்த்தனர். ஒரு கையில் சந்திரனையும் மறு கையில் சூரியனைக் கொடுத்தாலும், தான் கொண்ட கொள்கையில் மாறாத உறுதியுடன் திகழ்ந்த நபிகளாரை சமூகப்பகிஸ்காரம் என்னும் ஊர் நீக்க உத்தரவைக் கொண்டு குறைஷிய கொடுமையாளர்கள் துன்புறுத்திய போதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு அந்த நேரத்திலும் அன்புடன் அரவணைத்து ஆதரவு நல்கியவர் அபுதாலிப் ஆவார்.மொத்தத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் முடங்கி விடாமல் முழு மூச்சுடன் நடக்க மிகவும் ஒத்துழைப்பு நல்கியவர் அபுதாலிப்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை அபுதாலிப் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலிருக்கும் போது உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தமது பெரிய தந்தையார் ஈமான் கொண்டு ஈடேற்றம் பெற்று சுவன வாழ்வை சுவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவரை அணுகியதை விளக்கும் நபிமொழியைப் பாருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணவேளை வந்தபோது அவரருகில் அபூ ஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் இருக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் வந்து, என் பெரிய தந்தையே! “லாஇலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன் என்று கூறினார்கள்.
அப்போது அபூ ஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு உமய்யாவும், அபூ தாலிபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், (பெரிய தந்தையே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் (உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன் என்று கூறினார்கள். அப்போதுதான், “இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் – அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை” எனும் (திருக்குர்ஆன் 9:113 வது) இறைவசனம் அருளப்பட்டது. (ஸஹீஹ் புகாரி 4675, அறிவிப்பாளர்: முஸய்யப் இப்னு ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு.)
இணைவைக்கும் எவருக்கும் பாவமன்னிப்போ பரிகாரமோயில்லை என்பதை உறுதியாக விளக்குகிறது மேற்கூறிய ஹதீஸ். படைத்த இறைவனின் பரோபகாரம், பரிவு கிட்டாது என்பது ஒருபுறமிருக்க இணைவைப்பவருக்குப் பாவ மன்னிப்பு கோருவதைக்கூட தடை செய்கிறான் படைத்த வல்லோன். அபுதாலிப் சம்மந்தமான மற்றொரு நபிமொழியைப் பாருங்கள். அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள் நான், இறைத்தூதர் அவர்களே! அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (தங்கள் எதிரிகளின் மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே! என்று கேட்டேன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், ஆம்; அவர் இப்போது (கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார் என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி – 6208)
மற்றொரு நபிமொழியை அபூ ஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும் என்று சொல்ல நான் கேட்டேன். (ஸஹீஹ் புகாரி – 6564).நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் பரிந்துரைக்குப் பின்னரும் கூட அபுதாலிப் தண்டிக்கப்பட்ட செய்தியை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன. இணைவைப்பின் நிழல் பட்டுவிட்டால் பரிந்துரை கிட்டாது என்பது ஒருபுறமிருக்கட்டும் பாவமன்னிப்பு கேட்பதைகூட அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான், இப்படியிருக்க இணைவைப்பையே பழக்கமாகக் கொண்டிருக்கும் எம் சமுதாய அறியாத மக்களுக்கு யார் எடுத்துச்சொல்வது? குர்ஆன் ஹதீஸைப் பேசுகிறோம் என்று சொல்லக்கூடிய நாமும் பிறரை விமர்சிக்க எடுத்துக்கொள்ளும் எள்முனை அக்கறையை இவ்விஷயத்தில் செலுத்தினால் வழிகேட்டில் செல்லும் மக்களைத் தடுத்து நன்மையை ஏவித் தீமையைத் தடுத்த பாக்கியம் பெற்றவராவோம். அல்லாஹ்வின் அனுமதியின்றி ஆதாரமில்லாமல் இன்னாரின் பரிந்துரையால் நான் சுவனம் போவேன் என்ற வாதத்தை எவராலும் வைக்கமுடியாது, ஏனென்றால் உத்தம திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைக் காட்டிலும் உயரிய தன்மைகள் இந்த அவ்லியாக்களுக்கு இருப்பதாக உசுப்பி விடுவார்கள் சிலர்.
நபிகளாரின் தாய்-தந்தை பற்றிய சில நபிமொழிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் ஒருவர் என் தந்தை எங்கே? என்று வினவ “நரகில்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பதிலளிக்க நிராசையுடன் திரும்பிய அவரை அழைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் “நிச்சயமாக என் தந்தையும் நரகில்தான்” என்று கூறினார்கள். (முஸ்லீம் – 398).
மற்றொரு நபிமொழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என் தாயின் அடக்கஸ்தலத்திற்கு சென்று கண்டுவிட்டு அவருக்கு பாவமன்னிப்பு கோர அல்லாஹ்விடம் அனுமதி கோரினேன், அல்லாஹ் என் தாயின் மண்ணறையைச் சென்று காண மட்டும் இசைவு தந்துவிட்டு அவருக்கு பாவமன்னிப்பு கேட்க தடை விதித்து விட்டான்” எனக் கூறினார்கள்.
உத்தம திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தம் உம்மத்தாருக்கெல்லாம் பரிந்துரை செய்தாலும் தன் தாய், தந்தை, பெரியதந்தை விஷயத்தில் படைத்தவனின் அனுமதியை நாட வேண்டிய நிலையிலிருப்பதையும் பரிந்துரை செய்யத் அவனின் அனுமதி தேவை என்பதுடன் இணைவைப்போர்க்காக செய்யும் பரிந்துரை விழலுக்கிறைத்த நீராகும் போன்ற உண்மைகள் இதுவரை தந்த ஆதாரங்களில் கண்டோம், இனி பரிந்துரை யாருக்கு என்று பார்ப்போம்?.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.